ஹிந்தி ‘விஸ்வரூபம் 2’ படத்துக்குத் தணிக்கையில் 17 வெட்டுகள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் ஒரே போல தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியாது....
ஹிந்தி ‘விஸ்வரூபம் 2’ படத்துக்குத் தணிக்கையில் 17 வெட்டுகள்!

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் கடைசிக்கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்கள்.

விஸ்வரூபம் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புகளுக்கும் யு/ஏ கிடைத்த நிலையில் ஹிந்திச் சான்றிதழ் வாங்க தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளார் கமல்.

விஸ்வரூபம் 2 படத்தின் ஹிந்திப் பதிப்பைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 17 வெட்டுகளுடன் சான்றிதழ் வழங்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளில் சிலர் படத்துக்கு 17 வெட்டுகளுடன் யூ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைந்தாலும் இதர உறுப்பினர்கள் யூ/ஏ சான்றிதழ்தான் தரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் ஒரே போல தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியாது. ஒவ்வொரு மொழியின் கலாசாரத்துக்கு உட்பட்டுதான் சான்றிதழ் வழங்கமுடியும். தமிழ், தெலுங்கு மொழிகளில் விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் பிரச்னைகள் ஏற்படாவிட்டாலும் ஹிந்தியில் வெட்டுகளுடன்தான் சான்றிதழ் தரவேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது. எனினும் காட்சிகளுக்கு எதுவும் வெட்டுகள் கிடையாது, அரசியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வசனங்களுக்குத்தான் வெட்டுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com