உங்கள் குழந்தைகளுக்கு முதலில் குட் டச், பேட் டச் கற்றுக் கொடுங்க! பெற்றோர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறும்படம் (விடியோ)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு
உங்கள் குழந்தைகளுக்கு முதலில் குட் டச், பேட் டச் கற்றுக் கொடுங்க! பெற்றோர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறும்படம் (விடியோ)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. சமூக வலைதளங்களிலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குரல்கள் வலிமையாக ஒலித்தன. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாலும், சமூக வலைதளங்களில் விவாதிப்பதனாலும் இதுபோன்ற வன்கொடுமைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுமா? என்று தெரியவில்லை. ஆனால், அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலதரப்புகளிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால், 12 வயதுக்குள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை வரை விதிக்கப்படலாம் என்று அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இதுபோன்ற சட்டத்தால் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்கிறதா? என்றால் இல்லை என்றே வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. கதுவா சம்பவத்துக்கு முன்பும், அதற்கு பிறகும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதை நாளிதழ்களில் வெளியாகும் செய்திகள் மூலம் அறியலாம்.

சரி இதற்கு தீர்வு என்ன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வாசகம் தான் இதற்கும் பொருந்தும். வேறு என்ன தீர்வு இருக்கிறது என்றால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் குட் டச், பேட் டச் குறித்து சொல்லித் தர வேண்டும்.  டச் மி நாட் குறும்படம் அதை செய்கிறது.

ஒரு சிறுமியை உறவினர் ஒருவரும், அக்கம்பக்கத்தில் உள்ளவரும், அந்தச் சிறுமிக்கு சம்பந்தமே இல்லாத வெளியுலகத்தைச் சேர்ந்த ஒருவரும் தங்களுக்கு கிடைக்கும் சந்தர்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்கிறார்கள். இது முதல் பகுதி காட்சிகளாக விரிகிறது.

மொத்தம் 12 நிமிடங்களுக்குள் முடியும் இந்தக் குறும்படத்தில் முதல் 7 நிமிடங்கள் இந்தக் காட்சிகளும், அடுத்த 2 நிமிடங்கள் திலகவதி ஐபிஎஸ் அவர்கள் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எப்படி குட் டச், பேட் டச் குறித்து சொல்லித் தர வேண்டும் என்ற ஆலோசனைகளையும் அளிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, முதல் பகுதியில் இடம்பெற்ற காட்சி அமைப்புகள் மீண்டும் இடம்பெறுகின்றன. ஆனால், இந்த முறை அந்த நபர்களின் காம பார்வையை சிறுமி தனது கோபக் கண்களால் சுட்டெறிக்கிறார். அந்தச் சிறுமி மட்டுமல்ல அதுபோன்ற சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அனைத்து சிறுமிகளுக்கும் அந்தக் காட்சிகள் மூலம் மிக எளிமையாக விளக்கி இருக்கிறார் இயக்குநர் ஹரி பிரகாஷ்.

சிறுமியாக நடித்துள்ள திஷா, அவரது தாயாராக வரும் காயத்ரி, உறவினராக வரும் ராஜ்குமார், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. இரண்டு பகுதிகளையும் வேறு வேறு வகையில் சிறப்பாக காட்சி படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத். சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனித்து ஒலிப்பதிவு செய்துள்ளார் ராம்கி. பின்னணி இசையும் சிறப்பாகவும் ஒத்திசைவாகவும் அமைந்துள்ளது. 

இந்தக் குறும்படம் சமூக வலைதளமான யூ-டியூப், முகநூல் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் முகநூலில் இந்தப் படத்தை பார்த்ததுடன் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முகநூல் கணக்குகளில் படத்தை பகிர்ந்துள்ளனர்.

நல்ல கருத்துகளுடன் வரும் குறும்படங்களுக்கு நிச்சயம் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது.

பெற்றோர்களும், சிறுமிகளும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சிறுமிகள் மட்டுமல்ல, சிறார்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். காட்சிகள் வழியே பார்வையாளர்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் குறும்படத்தை உருவாக்கியதாக கூறிய இயக்குநர் ஹரி பிரகாஷ், பள்ளிகளில் இந்தப் படத்தை திரையிட முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்தார். நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

பெண்களை கடவுளாக வழிபடும் நாட்டில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com