உங்கள் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் மறக்க முடியாத விளம்பரங்கள் இவை! (விடியோ)

சில காமெடி விளம்பரங்களையும் நாம் மறந்திருக்க மாட்டோம் , இந்தச் சுட்டிப் பையனை நினைவிருக்கிறதா?
உங்கள் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் மறக்க முடியாத விளம்பரங்கள் இவை! (விடியோ)

நம்மில் பலருக்கு குழந்தை பருவம் தான் வாழ்வின் பொற்கணங்களை உடையதாக இருந்தது. அதுவும் 80-லிருந்து 90-கள் வரை குழந்தை பருவம் கொண்டவர்கள் பலவிதமான மாற்றங்களை கண்கூடாக தங்களின் வளர்ச்சியினூடே கண்டிருப்பார்கள். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி திரை, திடீரென்று வண்ணமானது முதல் ஒவ்வொரு வீட்டிலும் டீவியும் விளம்பரங்களும் வாழ்வியலுடன் கலக்கத் துவங்கிய காலகட்டத்தின் ஆரம்பம் அது. இப்போது நமக்கு பார்க்கவும் ரசிக்கவும் டிவியில் தொடங்கி இணையம் வரை, ஏன் கையடக்கமாக ஒரு செல்பேசியாக நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நேரமோ மனநிலையோ வாய்ப்பதில்லை. அன்று நம் மனத்தை விட்டு நீங்காத சில பழைய விளம்பரங்களைப் நினைவு கூரத் தோன்றியது.

அப்போதெல்லாம் விளம்பரங்கள் வரும் போது மொழி கூட முக்கியமானதாக இருந்திருக்கவில்லை. இசையும், நடிகர்களும், அந்தக் காட்சியின் அழகுமே பிரதானமாக இருந்தது. அத்தகைய சில விளம்பரங்கள் இவை.  ஐ லவ் யூ ரஸ்னா என்று சொல்லும் இந்தச் சிறுமியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. போலவே கோல்ட் ஸ்பாட் தி ஜிங் திங்க் விளம்பரம் மற்றும் குளிர்பானம் அன்றைய இளசுகள் குளிர்வித்தது. பெப்ஸி அவ்வகையே.

அடுத்து விளம்பரங்கள் ஓரளவு பழக்கமாகி குறிப்பிட்ட ஒருசில விளம்பரங்களுக்கு நாமும் அடிக்ட் ஆகியிருந்த காலகட்டம். தினமும் ஒருமுறையாவது ரேடியோவில் அல்லது டிவியில் அது ஒலித்தால் தான் நிம்மதியாக இருக்கும். அவற்றுள் சில:

சில காமெடி விளம்பரங்களையும் நாம் மறந்திருக்க மாட்டோம் , இந்தச் சுட்டிப் பையனை நினைவிருக்கிறதா?

ஸுசுகி நோ ப்ராப்ளம் விளம்பரமும் காமெடி வகை தான். அதைத் தொடர்ந்து வரும் விளம்பரம் நாம் க்ரிக்கெட் ஒரு மந்திரம் போல் நம் அனைவரையும் கட்டி வைக்கத் தொடங்கிய காலகட்டம். சச்சின் மற்றும் ஷாரூக் நடித்துள்ள அந்த பெப்ஸி விளம்பரத்தையும் அதில் ஷாருக்கானின் நடிப்பையும் மறக்க முடியாது.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போலத்தான் இன்று உலக இசை ரசிகர்களை தன் இசையால் மயக்கி வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த லியோ காபி தமிழர்களின் வாழ்வுடன் ஒன்று கலந்த ஒன்றல்லவா. இந்த விளம்பரத்தின் கூடுதல் சிறப்பு மணி ரத்னம் ஹீரோ அரவிந்த் சாமி என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஒரு சேலை விளம்பரத்தை மெகா பட்ஜெட்டில் எடுத்தவர்கள் இவர்கள். இந்த விளம்பரமும் வந்த புதிதில் அனைவரையும் (முக்கியமாக பெண்களை) மயக்கியது என்றால் மிகையில்லை.

**

நினைவில் எங்கோ மங்கலாகத் தென்படும் இந்த சன்ரைஸ் விளம்பரத்தைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? இதோ மீள் பதிவாக

இப்போது ‘தல’ என்று அவரது ரசிகர்கள் கொண்டாடும் அஜித் பதின்வயதில் நடித்த ஒரு விளம்பரம் இது

இன்னும் எத்தனை எத்தனை விளம்பரங்களோ நினைவின் இடுக்குகளில் தேங்கிக் கிடக்கிறது. அமுல், லிரில், நிர்மா, விக்கோ வஜ்ரதந்தி, கோபால் பல்பொடி (அதில் வரும் வாய்ஸ் ஓவர் இப்போது கூட என்னால் கேட்க முடிகிறது). காலம் கடந்தும் நம் நினைவுகளில் அவற்றைப் பதியச் செய்த அந்த விளம்பரதாரர்களின் கலை அத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தது. இன்றும் விளம்பரங்கள் டிவியில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றன. நாமும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். எப்போதாவது ஒன்றிரண்டு தாளம் போட வைக்கின்றன, சில காட்சிகள் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. 

இப்போது விளம்பரங்கள் நம் புருவத்தை உயர்த்தச் செய்வதில்லை. காரணம் நாம் அதற்கு மிகவும் பழகிப் போய்விட்டோம். நம் மூளையுடன் வாழ்வியலுடன் பிரிக்க முடியாததாகிவிட்டது.  எனவே முன்பு நாம் இருந்த உலகத்தில் விளம்பரங்கள் இருந்தன. இப்போது சிறு வித்யாசம், விளம்பரமயமாகிவிட்ட உலகில் நாமும் ஏதோ இருக்கிறோம். காலக் கொடுமை என்றெல்லாம் பெரிசு போல் பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் செல்ஃபோனில் உங்களுக்குப் பிடித்த விஷுவல்களை ஷூட் செய்து நீங்களே எடிட் செய்து உங்களுக்காக பிரத்யேகமாக நீங்களே ஒரு விளம்பரம் தயாரித்துக் கொள்ளலாம். இது மார்கெட்டிட்ங் காலகட்டம். நம்மை முதலில் நாம் விளம்பரம் செய்து கொள்ளாவிட்டால் காணாமலாகிவிடுவோம். 

நன்றி - யூட்யூப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com