அடக்குமுறையை ஏற்க முடியாது! நடிகை கஸ்தூரி ஆவேசம்!

பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய நடிகை கஸ்தூரி கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார்.
அடக்குமுறையை ஏற்க முடியாது! நடிகை கஸ்தூரி ஆவேசம்!

நடிகை கஸ்தூரி அண்மையில் கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யதவர் செய்தியாளர்களிடம் கூறியது, 'தூத்துக்குடியிலுள்ள எனது உறவினர்களை பார்க்க வந்தேன். ஆனால், நிலைமை சரியில்லை என்பதால் தூத்துக்குடிக்கு செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாள்கள் போராட்டம் நடத்தியும் அரசு அதை கண்டு கொள்ளாமல் தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை அங்கு சட்டத்தை மீறி செல்ல விருப்பமில்லை. நான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்ததில்லை. இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட, அரசியல் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றலாம் என தோன்றுகிறது’ என்று நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து தனது ட்விட்டர் மற்றும் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிர்நீத்த என் 11 சொந்தங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

22 மே, 2018 : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் வலுத்து, கலவரமும் கல்வீச்சும் என்றாகிவிட்டது. ஆத்திரத்தில், வன்முறையிலும் பொருட் சேதத்திலும் இறங்கிய கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த கடமை பட்டவர்கள். ஆனால், அதற்கு நரபலியா வழி? பொதுவாக, அத்துமீறும் வன்முறையாளர்களை அடக்க காவல்துறை முறையே லத்திசார்ஜ், கண்ணீர்ப்புகை, கைது போன்ற யுக்திகளை கையாளுவார்கள். வன்முறை கையை மீறினால், வானத்தை நோக்கி சுடுவார்கள், அதிக பட்சமாக முட்டிக்கு கீழே சுடுவார்கள். ஒரு டஜன் உயிர்களை வாங்க வேண்டி இருந்தது என்றால், இன்று நடந்தது போராட்டமா போரா ?

கலகக்காரர்கள் போலீசையும் தாக்கியதாக சொல்கிறார்கள். அதனால்தான் சுடும்படி ஆனதாம். எனக்கு புரியவில்லை. இது என்ன encounter ஆ, தாக்கிவிட்டு ஓடிய கிரிமினலை சுட்டார்களா? சாகும் வரை சுடும் அளவிற்கு போராட்டக்காரர்கள் தீவிரவாதிகளோ, கொலைக்குற்றவாளிகளோ இல்லை. தேசவிரோதிகள் இல்லை. திட்டமிட்டு தாக்க வந்த கூலிபடை இல்லை. தடையை மீறியவர்கள், அவ்வளவே. தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்த போராட்டத்தில், உணர்ச்சிவசப்பட்டு எல்லைமீறியவர்கள்; தப்பான இடத்தில் தப்பான நேரத்தில் மாட்டி கொண்ட பெண் ; மற்றவரின் உயிரை காக்க தன்னுயிர் நீத்த சகோதரர் ; இப்படிப்பட்டவர்கள் மீதுதான் இன்று தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

"கலெக்டர் officeஐ தாக்கினா, அரசையே எதிர்த்ததற்கு சமம். இனி எவனும் அதற்க்கு துணியக்கூடாது. போலீஸ்காரனை தொட்டவனை சும்மா விடக்கூடாது " என்ற மிரட்டலாகத்தான் இன்றைய நிகழ்வை பார்க்கத்தோன்றுகிறது. இன்றைய கலவரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், 11 உயிர்கள் மாய்ந்ததை எப்படி ஜீரணிப்பது ? நிர்பயாவை கற்பழித்தவனெல்லாம் தையல் மிஷின் பெற்று சுதந்திரமாக திரிகிறான், இங்கு மூச்சுக்காற்றுக்கு போராடுறவன் தோட்டாவுக்கு பலியாகுறான் என்ற முரண் தான் நெருடுகிறது.

அனுமதியற்ற அத்துமீறல்களை முறை படுத்த எல்லா உரிமையும் அரசுக்கும் காவல்துறைக்கும் உண்டு. அதில் அரசுக்கும் வரைமுறை உண்டல்லவா? முறையை எதிர்க்கவில்லை. அடக்குமுறையை ஏற்கமுடியாது.’ இவ்வாறு தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் கஸ்தூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com