ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பை ஏற்க மறுத்தது ‘நடிகையர் திலகம்’ தயாரிப்பாளர் குழு!

முதல்வர் தங்களது திரைப்படத்துக்கு அளித்த வரி விலக்கை மாநிலத்தின் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால் தான் மேலும் மகிழ்ச்சியுறுவதாகவும்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பை ஏற்க மறுத்தது ‘நடிகையர் திலகம்’ தயாரிப்பாளர் குழு!

தெலுங்கில் மகாநடீ... தமிழில் நடிகையர் திலகம் எனும் பெயரில் மே 11 ஆம் தேதி வெளியான பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திர திரைப்படத்துக்கு வரிவிலக்கு அறிவித்திருந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! 

நடிகையர் திலகம் படப்பிடிப்புக் குழுவினரை தனது முதல்வர் அலுவலகத்துக்கே வரவழைத்து, திரைப்படத்துறையில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்தவரான நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கி எதிர்வரும்  தலைமுறையினருக்கும் சாவித்ரி குறித்து அறியச் செய்தமைக்காக பாராட்டுகளையும், விருதுகளையும், நன்றியையும் தெரிவித்த சந்திரபாபு நாயுடு தமது பாராட்டின் உச்சகட்டமாக ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார். 

மக்களை இத்திரைப்படத்தை நோக்கி மேலும் தியேட்டருக்கு இழுக்கவே இம்முயற்சி. இதை அறிந்து மகாநடி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத், ப்ரியங்கா தத் இருவரின் தந்தையும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான அஸ்வினி தத், சந்திரபாவு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் அவர் ஊடகங்களில் பேசிய போது, சந்திரபாபு நாயுடு புதிய ஆந்திர மாநிலத்தைத் திறம்பட உருவாக்க எத்தனை கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை இந்த நாடறியும். அவரது பாராட்டுகளும், விருதுகளும் வரி விலக்கு அறிவிப்பும் தனக்கு மிகுந்த பெருமித உணர்வை அளித்தாலும் கூட ஒரு புதிய மாநிலத்தை நிர்மாணிக்கும் கடினமான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு திறமையான முதல்வரைப் பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியே போதுமானது என்றும். முதல்வர் தங்களது திரைப்படத்துக்கு அளித்த வரி விலக்கை மாநிலத்தின் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால் தான் மேலும் மகிழ்ச்சியுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்த வரிவிலக்கு அறிவிப்பை தாழ்மையுடன் மறுத்ததோடு நடிகையர் திலகம் திரைப்படத்தை தயாரித்ததற்காக தனது மகள்களான ஸ்வப்னா தத், ப்ரியங்கா தத் இருவரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியது குறித்து தான் மிகப்பெருமையாக உணர்வதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் அஸ்வினி தத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com