ஆந்திராவில் எங்கப்பாவை வில்லனாகத் தான் பார்க்கிறார்கள்: விஜய சாமுண்டேஸ்வரி!

I am sorry to say this... தெலுங்கில் அப்பாவை வில்லனாகத் தான் பார்க்கிறார்கள். ஏனென்றால். அங்கே அப்பாவை, அம்மாவோடு இணைத்துத் தான் அவர்களால் அடையாளம் காண முடிந்திருக்கிறது.
ஆந்திராவில் எங்கப்பாவை வில்லனாகத் தான் பார்க்கிறார்கள்: விஜய சாமுண்டேஸ்வரி!

நடிகையர் திலகம் திரைப்பட சர்ச்சைகள் ஒருவழியாக ஓய்ந்து விட்டன. திரைப்படத்தில் அப்பா ஜெமினி கணேசனை வில்லன் போலச் சித்தரித்து விட்டார் தெலுங்கு இயக்குனர். என் அப்பா அப்படிப்பட்டவரில்லை. மிகவும் கண்ணியமான மனிதர். சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்தது அப்பா ஜெமினி என்பது போலெல்லாம் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், சாவித்ரி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் அப்பா மட்டும் வேலையற்று வெட்டியாக காதலைச் சொல்லிக் கொண்டு சாவித்ரி பின்னால் சுற்றுவதைப் போல காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் கண்டிக்கத்தக்கவை. என ஜெமினியின் மகளும் மகப்பேறு மருத்துவருமான கமலா செல்வராஜ் கொதித்துப்போய் திரைப்படம் குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டேஸ்வரி தனது தரப்பு நியாயமாகப் பகிர்ந்துகொண்டது...

அம்மாவின் வாழ்க்கைச் சித்திரத்தை இயக்கியிருப்பது ஒரு தெலுங்கு இயக்குனர். அம்மா தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஸ்டாராக இருந்த போதும் தெலுங்கில் அம்மாவைக் கொண்டாடுபவர்கள் அதிகம். காரணம் அவர் ஒரு தெலுங்குப் பெண் என்பதால், அங்கிருப்பவர்களுக்கு அப்பாவைப் பற்றி அதிகம் தெரியாது. அம்மாவின் வாழ்வு சீரழிய அப்பா தான் காரணம் என்றொரு மனவோட்டம் அங்கு பலருக்கு உண்டு. I am sorry to say this... தெலுங்கில் அப்பாவை வில்லனாகத் தான் பார்க்கிறார்கள். ஏனென்றால். அங்கே அப்பாவை, அம்மாவோடு இணைத்துத் தான் அவர்களால் அடையாளம் காண முடிந்திருக்கிறது. அப்பாவைப் பற்றி நல்லவிதமாகத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் எண்ணம் அப்படியே நிலைத்து விட்டது. அம்மாவைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் எடுக்க நாக் அஸ்வின் என்னை அணுகிய போது, நான் முதலில் அவரிடம் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால், சாவித்ரி என்றொரு மகாநடிகையை இனிவரும் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் அவசியம் என்று அவர்கள் என்னை கன்வின்ஸ் செய்தார்கள். ஏனென்றால், அம்மாவைப் பற்றிப் பேசும் போது இப்போதும் இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு வரை அவரை ஒரு டிராஜெடி குயினாகத்தான் பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் நிஜத்தில் அம்மா திரைப்படங்களில் வருவதைப் போல அழுது வடிந்து கொண்டு சோகமாக இருப்பவர் அல்ல. அம்மா வெகு ஜோவியலானவர். அம்மாவின் வாழ்வை துக்கமாக நினைத்துப் பார்ப்பதை விட அவரை அவரது அழகியலோடு கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தப் படத்திற்கு நான் ஒப்புக் கொண்டேன். படத்திற்காக நிறைய தகவல்களை நான் அளித்தேன். 
படத்தைப் பொருத்தவரை, அம்மாவோடு இணைந்திருந்த அப்பாவைப் பற்றி மட்டுமே இதில் காட்ட முடியும் என்பதால், அந்த அளவுக்கான காட்சிகளே இதில் இடம்பெற்றுள்ளன. அதிலும் கூட அப்பா ரோலில் நடித்த துல்கர் சல்மான் வெகு நியாயமாக நடித்திருந்தார். அப்பாவை வில்லனாக்கிக் காட்டும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. அக்காவுக்கு ஏன் அப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. அம்மா மிகப்பெரிய நடிகை, அப்பாவை மூன்றாவதாக மணந்து கொண்டார். அப்பாவை மணந்தது முதல் அவருக்கு அப்பா மீது மிகுந்த பொஸசிவ்னெஸ் இருந்தது நிஜம். அதற்கொரு உதாரணம் ‘தேனிலவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருந்தது. விடுமுறை நாட்கள் என்பதால் அப்பா, பெரியம்மா பாப்ஜி குடும்பத்தாருடன் என்னையும், அம்மாவையும் கூட அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்றிருந்தார். அங்கே ஏரியில் இருந்த நீரை கையால் அள்ளி அப்பா மீது விசிறி விளையாடிக் கொண்டிருந்தார் ஒரு நடிகை, கையால் விசிறும் போது சும்மா இருந்த அம்மா, அதையே காலாலும் அள்ளி விசிறிய போது பயங்கரமாக அப்செட் ஆகி பெரிய சண்டையே போட்டார். எனக்கப்போது 2 வயது தான். பிறகு அதைப் பற்றிப் பேசும் போது கமலாக்கா, பார், உங்கம்மாவுக்கு எவ்வளவு பொஸசிவ் என்று, எங்கம்மாவும் இப்படி நினைத்திருந்தார் என்றால் என்ன ஆகும்?! என்றார். எனக்குத் தெரியவில்லை அம்மாவின் இயல்பு அது. பெரியம்மாவின் இயல்பு ஆரம்பம் முதலே கணவருக்காக எல்லாவற்றையும் அக்ஸெப்ட் செய்து கொள்வதாக இருந்திருக்கிறது. ஆனால், அம்மா அப்படி அல்ல. அவருக்கு அப்பா தான் எல்லாமும். அப்பாவுக்கு இணையாக அம்மா கார் ஓட்டுவார், குதிரை ஏற்றம் செய்வார், பேட்மிண்டன் ஆடுவார், சோஷியல் பார்ட்டிகளில், திரை விழாக்களில் பங்கேற்பார், திறமையான நடிகை வேறு. அப்படி இருக்கும் போது அப்பா அதில் திருப்தி அடைந்திருக்க வேண்டும் என அம்மா எதிர்பார்த்திருந்தார். அந்த எதிர்பார்ப்பை அப்பா பொய்த்துப் போகச் செய்ததில் தான் அம்மாவின் தோல்வி ஆரம்பமாகியிருக்கிறது.

அப்போதும் அப்பா, அம்மாவை திருத்தி நல்வழிப்படுத்த முயன்றார். ஆனால் அப்போது எனக்கோ வாழ்க்கையைப் பற்றி புரிந்துக் கொள்ளும் அளவுக்கு பக்குவமான வயதில்லை. அம்மாவுடன் இருந்த நெருங்கிய உறவினர்களுக்கு அம்மாவை விட்டு அப்பா தூரமாக இருப்பதே நல்லது என்ற எண்ணம். அப்போது தானே அவர்கள் நினைப்பதை இங்கே சாதிக்க முடியும். முடிந்தவரை அப்பாவைப் பற்றி எதிர்மறையாக அம்மாவிடம் கிரியேட் செய்யத் தொடங்கினார்கள். கமலாக்கா, அப்பாவுடன் வீட்டுக்கு வந்த போது விரட்டியவர்களும் இதே உறவினர்கள் தான். நாயை விட்டு விரட்டினோம் என்பதெல்லாம் கொஞ்சம் கூடுதல் கற்பனை. வீட்டில் நாய்கள், பூனைகள் என நிறைய வளர்த்துக் கொண்டிருந்தோம் அப்போது. அது வேண்டுமென்று செய்ததாக இருக்காது. அப்பா பற்றியும், எனது மற்ற அம்மாக்கள் பற்றியும் இன்னும் தெளிவாகக் காட்டவெண்டுமென்றால் இன்னொரு 3 மணி நேரத்திரைப்படம் தான் எடுக்க வேண்டியிருக்கும். அப்பாவைப் பற்றி கமலாக்கா ‘காதல் மன்னன்’ என்ற பெயரில் டாக்குமெண்டரி திரைப்படம் எடுத்திருக்கிறார். அதில் அப்பாவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைப் பொருத்தவரை அப்பாவின் முதல் மனைவி பாப்ஜி அம்மாவின் மகள்களான என் அக்காக்களிடம் இன்புட்ஸ் வாங்கவில்லை, அவர்களை அணுகி தகவல்கள் அறியவில்லை என்பது நிஜம். ஆனால், இது அம்மாவைப் பற்றிய படம் என்பதால் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லையே தவிர திரைப்படத்தில் அப்பாவை வில்லனாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com