பொங்கலுக்கு வரும் பேட்ட: தள்ளிப் போகுமா அஜித், சிம்பு படங்கள்?

பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் வெளியீடுகளில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது...
பொங்கலுக்கு வரும் பேட்ட: தள்ளிப் போகுமா அஜித், சிம்பு படங்கள்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத்.

இந்நிலையில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். மேலும் ரஜினியும் சிம்ரனும் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படமும் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் பொங்கலுக்கு வெளியாவதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் வெளியீடுகளில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த சர்கார் படத்தின் உதாரணத்தை வைத்து மதிப்பிட்டால் பேட்ட, விஸ்வாசம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் ஒன்று மட்டுமே வெளிவரமுடியும்.

தீபாவளியன்று சர்கார் படம் 800 திரையரங்குகளில் வெளியானதால் எங்களுடைய திமிரு புடிச்சவன் படத்தை விநியோகஸ்தர்கள் திரையிடவில்லை என்று கூறியுள்ளார் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி. சர்கார் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் பேட்ட படத்தையும் தயாரித்துள்ளது. இதனால் பேட்ட படமும் சர்கார் படத்துக்குக் குறையில்லாமல் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த திரையரங்குகளில் திமிரு புடிச்சவன் படத்தையே வெளியிட விரும்பாத விநியோகஸ்தர்கள், அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தையும் வெளியிட விரும்புவார்களா?

800+ திரையரங்குகளில் பேட்ட வெளியாகிவிட்டால் சிறிய படங்களுக்கே திரையரங்குகள் கிடைக்காத நிலைமைதான் ஏற்படும். மேலும் விஸ்வாசம் படம் நிச்சயம் முதல் மூன்று, நான்கு நாள்களுக்கு அதிக வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கிற நிலையில் அதையும் 800 திரையரங்குகளில் வெளியிடவே விநியோகஸ்தர்கள் விரும்புவார்கள். சிம்பு படத்தையும் நூறு திரையரங்குகளில் மட்டும் வெளியிட விரும்பமாட்டார்கள். இந்நிலையில் இந்த மூன்று படங்களும் பொங்கல் சமயத்தில் எப்படி ஒன்றாக வெளிவரமுடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சர்கார் படம் போல பேட்ட படமும் அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாக நேர்ந்தால், விஸ்வாசமும் ராஜாவா தான் வருவேன் படமும் பொங்கலுக்கு வெளிவருவது சாத்தியமில்லை. மூன்று திரையரங்குகளுக்கும் உரிய திரையரங்குகள் வழங்கும் அளவுக்குத் தமிழகத்தில் போதுமான திரையரங்குகள் இல்லை. இதனால் ஜனவரி 25 அன்று இவ்விரு படங்களும் வெளியாக வாய்ப்புண்டு. 

பேட்ட படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டதால் விஸ்வாசம் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் படங்களின் வெளியீட்டுத் தேதிகளில் எதுவும் மாற்றம் உண்டா என்பது வரும் நாள்களில்தான் தெரியவரும். பேட்ட பொங்கல் வெளியீடு என்கிற அறிவிப்புக்குப் பிறகு, பொங்கலுக்கு வர்றோம் என தற்போது சிம்பு அறிவித்துள்ளார். இதேபோல விஸ்வாசம் படம் வெளியீட்டிலும் மாற்றம் இல்லை என்றால் நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு பலத்த போட்டியை பொங்கல் சமயத்தில் காண வாய்ப்பு கிடைக்கும்.

பின்குறிப்பு: ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஜி. படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com