இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது?: இயக்குநர் பா. இரஞ்சித் கேள்வி!

ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு, கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டதாக...
இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது?: இயக்குநர் பா. இரஞ்சித் கேள்வி!

ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு, கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக, பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் ட்வீட் செய்ததாவது:

இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை... வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே, வாய் பேச முடிந்த நந்தீஸ் சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!

தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்... துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்.. இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம்.

திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!! விழித்துகொள்வோம்! இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!

தமிழக அரசே உடனடியாக, ஆணவ படுகொலைக்கு எதிராக தனிசட்டத்தை ஆவணப்படுத்து என்று ட்வீட் செய்துள்ளார்.

ஒசூர் அருகே உள்ள வெங்கடேஷ்புரம் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஸ் (25),  ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சுவாதி (21), தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.  ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,  அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு,  பின் அது காதலாக மலர்ந்தது.  இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இவர்களிருவரும் கடந்த ஆக. 15-ஆம் தேதி சூளகிரி திம்மராயசாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டு,  ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ராம் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனராம். இந்நிலையில், கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் அருவி அருகில் உள்ள காவிரி ஆற்றில் ஓர் இளைஞரும், இளம்பெண் ஒருவரும் கம்பியால் கட்டப்பட்ட நிலையில், சடலமாகக் கிடப்பதாக பெலகவாடி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை  தகவல் கிடைத்தது.  அதன் பேரில், பெலகவாடி காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸார் அங்கு சென்று 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில்,  அவர்கள் ஒசூரைச் சேர்ந்த நந்தீஸ், சுவாதி எனத் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின் பேரில்,  ஒசூர் டி.எஸ்.பி. மீனாட்சி,  நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், நந்தீஸ்-சுவாதி ஜோடி திருமணத்தை  விரும்பாத பெண்ணின் குடும்பத்தினர்,  அவர்களை கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் வீசியது தெரிய வந்ததாம். இதையடுத்து,  பெண்ணின் தந்தை சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40),  பெண்ணின் பெரியப்பா வெங்கடேஷ் (43), உறவினர் புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரிடம் ஒசூர் போலீஸாரும், பெலகவாடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com