என் டி ஆர்  பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கவிருக்கும் நடிகை!

ஸ்ரீதேவியை வானத்து தேவதை ரேஞ்சுக்கு கொண்டாடித் தீர்க்கும் இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மாவுக்கு இதில் திருப்தி இருக்குமா என்று தெரியவில்லை.
என் டி ஆர்  பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கவிருக்கும் நடிகை!

பல ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும் அதற்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டாராகவும் கோலோச்சிய என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகி வருவது பழைய செய்தி. அத்திரைப்படத்தில் யாரெல்லாம் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனும் புதிர்கள் ஒவ்வொன்றாக விடுபட்டு வருகின்றன. முதலில் என் டி ஆராக நடித்து அசத்தப் போவது என் டி ஆரின் மகனும் டோலிவுட் சீனியர் ஹீரோவுமான பாலகிருஷ்ணா. என் டி ஆரின் அரசியல் வாழ்வில் மிகப்பெரும் பங்காற்றியவர் அவருடைய மருமகனும் இன்றைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. அவருடைய வேடத்தை ஏற்று நடிக்கப் போகிறார் ராணா டகுபதி. என் டி ஆரின் சம கால சூப்பர் ஸ்டாரான ஏன் என் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது ஏ என் ஆரின் பேரன் சுமந்த். சாவித்ரியாக நடிக்கவிருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ல நடிகை நித்யா மேனன். இப்படி சூப்பர் நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த இந்த பயோபிக்கின் அடுத்த ஆச்சர்யம் இந்தியாவின் கனவுக்கன்னியாக அந்தக் காலத்தில் திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது யார் என்பதாகத் தான் இருந்தது! இப்போது அந்த ஆச்சர்யம் உடைபட்டிருக்கிறது. என் டி ஆர் பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கவிருப்பது நடிகை ரகுல் ப்ரீத் சிங் எனும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதாக ஆந்திர சினிமா பட்சிகள் கூவுகின்றன.

ஆந்திராவில் ரகுலுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். எனவே ஸ்ரீதேவி வேடத்தில் அவர் நடித்தால் ஒருவேளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம் என என் டி ஆர் பயோபிக் இயக்குனர் க்ரிஷ் ஜகர்ல முடி நினைத்திருக்கலாம். அதெல்லாம் சரி... ஆனால், ஸ்ரீதேவியை வானத்து தேவதை ரேஞ்சுக்கு கொண்டாடித் தீர்க்கும் இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மாவுக்கு இதில் திருப்தி இருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரீதேவியை தனது பாவனைகளில் கொண்டு வந்து அவரைப் போலவே நடித்து திரையில் ஸ்ரீதேவியை ரீபிளேஸ்  செய்ய ரகுல் ப்ரீத் சிங்கால் முடியுமா? படம் வெளிவந்தால் தெரியும். மறைந்த நடிகை ஸ்ரீதேவி , என் டி ஆருடன் அவருடைய பல வெற்றிப்படங்களில் இணையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com