இயற்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்! பத்திரிகையாளர் சந்திப்பில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் நெகிழ்ச்சி!

96 படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்திற்கு அளித்த ஆதரவுக்கு நன்றி கூறினர்.
இயற்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்! பத்திரிகையாளர் சந்திப்பில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் நெகிழ்ச்சி!

96 படக்குழுவினர் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்திற்கு அளித்த ஆதரவுக்கு நன்றி கூறினார்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் 96 ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை விமரிசகர்களையும் அதிகளவு கவர்ந்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையத்துள்ள இப்படத்தில் கெளரி ஜி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராம், ஜானு என்ற இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அவர்களின் பதின் வயதுக் காதலை கவிதையாகச் சொன்ன திரைப்படம் இது. இந்தப் படத்துடன் நோட்டா மற்றும் ராட்சசன் ஆகிய இரண்டு பெரிய படங்களும் வெளியாகின.

96 படக்குழுவினர் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றினை அண்மையில் ஒழுங்கமைத்தனர். அந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பிரேம் குமார் கூறியது, ‘இந்தப் படத்தின் வெற்றிக்காக என்னுடைய படக் குழுவினருக்கு நான் நன்றி சொல்லப் போவதில்லை. காரணம் அவர்களில் பலர் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான். ஆனால் நான் நன்றி கூற விரும்புவது இயற்கைக்கு. 96 மிக அழகாக வெளிவந்ததற்கு இயற்கை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது’ என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில் பரியேறும் பெருமாள், ராட்சசன் போன்ற படங்களுக்காகவும் நன்றி கூறி தனது பேச்சைத் தொடங்கினார். 96 படம் பண நெருக்கடியில் சிக்கியது குறித்தும் படம் வெளியாவதை விஷால் தடுக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியது, ‘படம் வெளியானதில் எனக்கு விஷாலுடன் எவ்வித பிரச்னையும் இல்லை. மீடியாவிடம் வந்து சேர்ந்தது உண்மையில் 5 சதவிகிதம் மட்டுமே. வாழ்க்கையில் பலமுறை இது போன்ற சம்பவங்களை கடந்து வந்துள்ளேன். விஷால் நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷாலுடைய சூழல் என்னவென்று தெரியாது. அவர் எவ்வளவு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன நடந்ததோ? யாருக்கு தெரியும்.

எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது தெரியும். இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான வி‌ஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் பணம் தான் அடையாளம். அதே போல் நடிகர்களான எங்களுக்கு படம் தான் மரியாதை. படம் வெளியாகவேண்டும். அது தான் முக்கியம்.’என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com