‘மீடூ’ பற்றி நதியா என்ன சொல்கிறார் கேளுங்கள்!

யார் அதிகாரத்தில் இருந்தாலும் சரி அவர்கள் அடுத்தவர்கள் மேல் அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு அவர்களைத் தவறாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது. அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தர வேண்டும்.
‘மீடூ’ பற்றி நதியா என்ன சொல்கிறார் கேளுங்கள்!

இணைய ஊடகமொன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார் நதியா. நதியா என்ற பெயருக்கு முன்னுரைகள் எதுவும் தேவையில்லை. நதியா, தமிழ் திரைப்பட ஃபேஷன் ஐகான்களில் ஒருவர். இன்று வரையிலும் கூட நதியா கொண்டை, நதியா கம்மல் என்று எங்கேனும் யாரேனும் சொல்லிக் கொண்டிருப்பது வாடிக்கையாகத்தான் இருக்கிறது. அவர் குறும்புத் தனம் நிறைந்த பேத்தியாக, அன்பான மகளாக, சுறுசுறுப்பும் சற்றே விஷமத்தனமும் நிறைந்த காதலியாக, பொறுப்பான மனைவியாக, ஐந்து வயதுக் குழந்தைக்கு அம்மாவாக என நடிப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டு நடித்து முடித்து அப்புறம் ஒருநாள் திருமணம் செய்து கொண்டு தென்னிந்தியத் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி லண்டன் சென்று செட்டிலாகி விட்டார்.  மீண்டும் இயக்குனர் ஜெயம் ராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்கி எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் மன உறுதி நிறைந்த ஃப்ரெஷ் ஆன அம்மாவாக ரிட்டர்ன் ஆனார். எம் குமரன் விசிட்டிங் கார்டுக்குப் பின் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இளம் ஹீரோக்கள் சிலருக்கு அம்மாவாகவும் நடித்து முடித்து விட்டார். இப்போதும் நதியா என்றால் தமிழ் ரசிகர்களுக்கு அபிமானம் தான். 

ஒரு படத்தில் அவர் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கிறார் என்றால் சும்மா வெறுமனே செட் பிராப்பர்ட்டியாக வந்து போவதில்லை. அதற்கு தமிழ், தெலுங்கில் சண்டை, தாமிரபரணி, மிர்ச்சி, அத்தாரிண்டிகி தாரேதி என்று சில உதாரணங்களைச் சொல்லலாம். ஆக மொத்தத்தில் தான் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடிக்க வேண்டும்? மீடியாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் மிகத்தெளிவு கொண்ட நடிகையாகவே இன்று வரையில் நதியா திகழ்ந்து வருகிறார். அவரிடம், சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது இன்று தமிழகத்தைக் கலக்கி வரும் மீடூ பிரளயம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நதியா அளித்த பதில்...

யார் அதிகாரத்தில் இருந்தாலும் சரி அவர்கள் அடுத்தவர்கள் மேல் அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு அவர்களைத் தவறாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது. அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தர வேண்டும். இது தான் அடிப்படை. மீ டூ மூவ்மெண்ட்டைப் பொறுத்தவரை இப்போதாவது இப்படி ஒரு அமைப்பு வந்ததே அதுவரையில் நல்லது. இந்த முயற்சி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளைப் பற்றி வெளியில் பேசுவதற்கான தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கிறது. நமது சட்டங்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மீடூ மூவ்மெண்ட் தற்போது சமூகத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பெண்களது பிரச்னைகளை மட்டுமே வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அது இன்னும் மேம்பட வேண்டும். சமுதாயத்தின் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாலியல் ரீதியிலான தங்களது உரிமைகளைப் பற்றிப் பேச, தங்களுக்கு நேர்ந்த அநியாயங்களை தயங்காமல் பேசி தங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசும் தளமாக இது மேலும் விரிவடைய வேண்டும். மீடூ எப்போதோ வந்திருக்க வேண்டிய இயக்கம். இப்போதாவது வந்ததே அதுவரையிலும் நல்லது என்று தான் தோன்றுகிறது. இது பெண்களுக்கான பாலியல் அநீதிகளைப் பற்றி மேம்போக்காக அல்லாமல் ஆழமாகப் பேசப்படக்கூடிய இயக்கமாக வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

என்று மீடூ குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் நதியா.

Concept courtesy: galatta.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com