கவிஞர் லீனா மணிமேகலை மன்னிப்பு கோராவிட்டால் வழக்குத் தொடர இயக்குநர் சுசி கணேசன் முடிவு!

அத்தனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது...
கவிஞர் லீனா மணிமேகலை மன்னிப்பு கோராவிட்டால் வழக்குத் தொடர இயக்குநர் சுசி கணேசன் முடிவு!

ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடர இயக்குநர் சுசி கணேசன் முடிவு செய்துள்ளார். 

கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் இந்தப் பதிவு எழுதினார்:

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்துத்தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுகொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. "வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன "இயக்குநரை" நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்த காரின் சென்ட்ரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்குக் கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன். சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்துவிடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரிக் காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலைத் திருப்பித் தர வைத்தது. இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்குக் கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிடச் சொல்வார்கள் என்று அச்சம். "நோ" சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த "இயக்குநர்" என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது.

இன்று நடிகர் பாவனாவுக்கு நிகழ்ந்த அநியாயத்திற்காக திரைத்துறை "ஹீரோக்களும்""இயக்குநர்களும்" "குரல்" கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது. அப்படியே தங்களையும் தங்கள் படைப்புகளில் இருக்கும் பெண் வெறுப்பையும் பரிசீலனை செய்ய வேண்டும். சுட்டு விரலை உள்பக்கமாக இவர்கள் திருப்ப வேண்டும். "ஆண்மை" தானே இந்த ஊரில் "ஹீரோயிஸம்"?

தன் மேல் விழ நேரிடும் நூறாயிரம் கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் அஞ்சாமல், நடந்ததை வெளியில் சொல்லி சட்டத்தை நாடியிருக்கும் பாவனாவின் தோளோடு தோள் நிற்கிறேன் என்று எழுதினார்.

தற்போது மீ 2 இயக்கத்தின் விளைவாக, அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் லீனா மணிமேகலை. ஃபைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுப் பயலே படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன் தான் அந்த இயக்குநர் என லீனா மணிமேகலை கூறியுள்ளார். இதையடுத்து தன் மீது லீனா மணிமேகலை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சுசி கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது:

லீனா மணிமேகலை, உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னைக் கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்குத் தொடர்ந்து, வருகிற தொகையை, உன்னைப் போன்ற metoo-இயக்கத்தைச் சுய பழிவாங்களுக்குப் பயன்படுத்தும் "சமுதாய வைரஸ்களை"களைக் களை எடுப்பதற்குப் பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை. கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com