என்ன ஆனது சீனு  ராமசாமி - வைரமுத்து கூட்டணி?

தற்போது வெளியிடப்பட்ட பட அறிவிப்பிலும் வைரமுத்துவின் பெயர் இடம்பெறவில்லை...
என்ன ஆனது சீனு  ராமசாமி - வைரமுத்து கூட்டணி?

சீனு ராமசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி. 

தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணையும் நான்காவது படமிது.

இப்படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். மாமனிதன் என்று இப்படத்தின் பெயர் சொல்லப்பட்டாலும் தற்போது அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் புதிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

சீனு ராமசாமியின் முதல் படம் தவிர்த்து அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் கண்ணே கலைமானே படத்திலும் யுவன் இசையில் அனைத்து பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வைரமுத்து. இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்காலிகமாகப் பிரிந்துள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

கமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு இளையராஜாவும் இசையமைப்பதால் இப்படத்துக்குப் பாடலாசிரியர் யார் என்கிற குழப்பம் உருவாகியுள்ளது.

புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுவதில்லை என்பதால் இந்தப் படத்திலும் வைரமுத்து இடம்பெறவில்லை என்று தெரிய வருகிறது. இதற்கு முன்பு இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணைவார்கள் என்கிற ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட பட அறிவிப்பில் வைரமுத்துவின் பெயர் இடம்பெறவில்லை. எனினும் இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, பாடலாசிரியர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சீனு ராமசாமி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com