‘பேட்ட’ படத்திலும் பாடல் எழுதவில்லை: என்ன ஆனது ரஜினி - வைரமுத்து கூட்டணி?

எம்.ஜி.ஆருக்கு வாலி போல எனக்கு வைரமுத்து என்று ஒருமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ரஜினி. ஆனால் கடந்த சில வருடங்களாக...
‘பேட்ட’ படத்திலும் பாடல் எழுதவில்லை: என்ன ஆனது ரஜினி - வைரமுத்து கூட்டணி?

எம்.ஜி.ஆருக்கு வாலி போல எனக்கு வைரமுத்து என்று ஒருமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டார் ரஜினி. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த வலுவான கூட்டணியைத் திரையுலகில் காணமுடியவில்லை. ரஜினியின் கடந்த 4 படங்களில் தொடர்ந்து வைரமுத்து இடம்பெறாமல் இருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் வைரமுத்துவின் பெயர் இடம்பெறவில்லை. விவேக், பாடலாசிரியராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். அனிருத் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதுவதில்லை என்பதால் இந்தப் படத்தில் வைரமுத்து இல்லை. மேலும் இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய எந்தவொரு படத்திலும் வைரமுத்து பாடல்கள் எழுதியதில்லை. அந்த நிலை இந்தப் படத்திலும் தொடர்கிறது. 

எந்திரன், கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களில் பாடல்கள் எழுதிய வைரமுத்து, அதன்பிறகு பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி, காலா படங்களில் பாடல்கள் எழுதவில்லை. ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்திலும் அவர் பாடல் எழுதவில்லை. மதன் கார்க்கி இரு பாடல்களையும் மறைந்த நா.முத்துக்குமார் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்கள். இப்போது பேட்ட படத்திலும் எழுதவில்லை. இப்படி, ரஜினியின் சமீபத்திய 4 படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இதுபோல 1990களின் ஆரம்பத்திலும் ரஜினி படங்களுக்குத் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியாத நிலைமை வைரமுத்துவுக்கு ஏற்பட்டது. 1992-ல் வெளியான அண்ணாமலைக்குப் பாடல்கள் எழுதியவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 1995ல்தான் பாட்ஷாவுக்கு எழுதினார். நடுவில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா ஆகிய படங்களுக்கு வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. ஆனால் பாட்ஷாவுக்குப் பிறகு வெளிவந்த ரஜினி படங்களில் எல்லாம் வைரமுத்து கோலோச்சினார். இடையில் சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களுக்கு எழுத வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன்பிறகு எந்திரன், கோச்சடையான், லிங்கா என ரஜினி - வைரமுத்து கூட்டணி மீண்டும் தொடர்ந்தது. இப்போது மற்றொரு பெரிய இடைவெளி.

எம்.ஜி.ஆரின் கடைசிப் படத்தில் வாலி பாடல் எழுதினார். அரசியலில் குதிப்பதற்கு முன் ரஜினி நடிக்கும் படத்திலும் வைரமுத்து பாடல் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்.

2000- ம் வருடம் முதல் ரஜினியின் படத்தில் வைரமுத்து

பாபா - ✔ 
சந்திரமுகி - ✖
சிவாஜி - ✔
குசேலன் - ✖
எந்திரன் - ✔
கோச்சடையான் - ✔
லிங்கா - ✔
கபாலி - ✖
காலா - ✖
2.0 - ✖
பேட்ட - ✖

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com