அன்பெனும் சாரல் வீசும் குறும்படம்!

அன்பெனும் சாரல் வீசும் குறும்படம்!

திருக்குறள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப கணவன், மனைவி  பரஸ்பரம் அன்புடனும், சகிப்புத்தன்மையுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை.

எனக்கென பிறந்தவனே

இல்வாழ்க்கை அதிகாரத்தில் இருந்து,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது 

என்ற திருக்குறளுடன் தொடங்குகிறது எனக்கென பிறந்தவனே குறும்படம்.

யூ-டியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்த இந்தப் படத்தை கண்டு ரசித்தேன்.

திருக்குறள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப கணவன், மனைவி  பரஸ்பரம் அன்புடனும், சகிப்புத்தன்மையுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை.

படத்தில் வசனம் இல்லை. பின்னணி இசை மற்றும் கதாபாத்திரங்களின் செயல்கள் அடங்கிய காட்சிகளின் தொகுப்பாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதத்துடன் விடிகிறது ஒரு காலைபொழுது. கணவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க மனைவி வந்து ஜன்னல் திரையை விலக்குகிறாள்.

சூரிய ஒளி அறைக்குள் நுழைந்தும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு நித்திரையைமீண்டும் தொடர்கிறார் கணவர். மணி எட்டு ஆக, மீண்டும் வந்து எழுப்பி, உணவு கொடுத்து கணவரை அலுவலகத்துக்கு வழியனுப்பி வைக்கிறார் அன்பான மனைவி. இதுதானே வழக்கமாகபெரும்பாலான குடும்பங்களில் இல்லதரசிகள் செய்யும் பணி..!

கணவரை அனுப்பி வைத்துவிட்டு, உணவு எடுத்துக் கொள்ளும் இல்லத்தரசி, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே உறக்கம் கொள்கிறார்.  என்ன இது?, படம் இப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று நமக்கு எண்ணத் தோன்றும் வேளையில் திரைக்கதை திசை திரும்புகிறது.

அவள் உறக்கத்தில் இருந்து கலைந்து எழும்போது, அவர் இதுவரை கண்டது அனைத்துமே கனவு என்பது நமக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன என்பதே படத்தின் கதை. 

அதற்கான காரணம்  யாரும் எதிர்பார்க்காத திருப்பம். படம் முடிவடையும்போது ஒரு சிறுகதை படித்த உணர்வு நமக்கு நிச்சயம் தோன்றும். படத்தில் கணவன், மனைவியாக நடித்திருக்கிறார்கள்என்று சொல்வதைவிட இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதுபோன்ற வசனம் இல்லாத படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியப் பங்காற்ற வேண்டும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இசை அமைப்பாளர் நிர்மல் பிரபாகர். இயக்குநர்பிரவீண் குமார் இந்த குறும்படத்தை பல குறும்பட விழாக்களில் பங்கெடுக்கச் செய்து சில விருதுகளையும் அள்ளியிருக்கிறார்.

கவண் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பிரியதர்ஷிணி, தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா ஆகியாரை வைத்து அடுத்த குறும்படத்தை இயக்கி வரும் இயக்குநர் பிரவீண் வெள்ளித்திரையிலும் சாதிக்க வாழ்த்துகள்.

யூ-டியூப் லிங்-  https://www.youtube.com/watch?v=uS1uaZYg3RM

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com