திகில் அனுபவம் தரும் அழைப்பு

சுமார் 10 நிமிடங்களே உள்ள இந்தக் குறும்படம், கேமரா, இசை ஆகியவற்றின் மூலம் புது அனுபவத்தை ரசிகர்களுக்குத் தருகிறது.
திகில் அனுபவம் தரும் அழைப்பு

பேய் படங்களுக்கும், திரில்லர் வகைப் படங்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. சமீபகாலமாக தமிழ் திரையுலகை இந்த வகைப் படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

இந்தப் படங்களுக்கு போதிய அளவு லாபமும் ஈட்டித் தருகின்றன. திரையரங்கில் சென்று திகில் படங்களை காண்பது மறக்க முடியாத அனுபவமாக சிலருக்கு அமையும். வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு நிகராக திகில் குறும்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகை படங்களை எடுப்பது சவாலாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வருகையின் வளர்ச்சியால் திகில் குறும்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அப்படி, சமீபத்தில் யூடியூப் தளத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது பார்க்க நேர்ந்த திகில் திரைப்படம் அழைப்பு.

சுமார் 10 நிமிடங்களே உள்ள இந்தக் குறும்படம், கேமரா, இசை ஆகியவற்றின் மூலம் புது அனுபவத்தை ரசிகர்களுக்குத் தருகிறது. கதை என்ன என்று பார்த்தால் வழக்கமான பேய் படங்களில் வரும் கதைக் களம்தான். பூட்டப்பட்ட ஒரு வீடு, அங்கே செல்பவர்களுக்கு மரணம் என்றே படம் தொடங்குகிறது.

வழக்கம்போல் ரசிகர்களை அச்சமூட்டுவதற்காக குறைந்த வெளிச்சத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா படத்தில் விஜய் சேதுபதி ஒரே ஒரு டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு பங்களாவில் சுற்றி வருவதுபோல், ஒரு சிறிய வீட்டில் இந்தப் படத்தின் கதாபாத்திரம் டார்ச் லைட்டை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது.

செய்தியாளரான அவருக்கு, இதுபோன்ற அமானுஷ்ய விஷயங்களை கண்டறிந்து கதை எழுதி எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால் ஆபத்தை தேடி செல்கிறார்.

அந்த வீட்டுக்குள் சென்ற 5 பேர் ஏற்கெனவே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அச்சமில்லாமல் செல்லும் அவருக்கு என்ன நேர்ந்தது? அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் உள்ளதா? என்பதே படம்.

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு போதிய பட்ஜெட் கிடைக்கும். அதனால், திகில் படங்களுக்கு தேவையான இடங்களைத் தேர்வு செய்து, சிறப்பான கேமராக்கள், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சிறப்பு சப்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ரசிகர்களை திகிலடையச் செய்வார்கள்.

ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இதுபோன்ற குறும்படங்களில் பார்வையாளர்களை அச்சம் கொள்ளச் செய்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஆனால், அழைப்பு குறும்படத்தை சிறப்பாக இயக்கி, ரசிகர்களுக்கு அச்ச உணர்வை கடத்தியிருக்கிறார் இயக்குநர் சாந்தினி. 

காலி தண்ணீர் கேன்கள் திடீரென உருண்டு வருவது, யாரோ நிற்பது போன்று இருப்பது, திடீரென மெழுகு வர்த்திகள் எரிவது, டார்ச் லைட் ஒளிர்வது என குறும்படத்தில் எளிமையாகயும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் மிக முக்கியப் பங்காற்றியிருப்பவர் ஒளிப்பதிவாளர் ராஜா மகாதேவன். பின்னணி இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது. பின்னணி இசையை பல இடங்களில் மேலும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

இந்தப் படத்தை உருவாக்கிய இயக்குநர் சாந்தினி கூறியதாவது:

"வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நான், சென்னையில் பிஎஸ்சி விஸ்காம் படித்து முடித்தேன். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உருவானது. திரைப்பட பின்னணி எதுவும் எனக்கு இல்லை. எனினும், விடா முயற்சியின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்கினேன். திரில்லர் கதைகளை விரும்பிப் படிப்பேன். திரில்லர் வகை படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், எனது முதல் குறும்படத்தை இவ்வாறு உருவாக்கினேன். சில குறும்பட விழாக்களில் இந்தப் படத்தை பங்கு பெறச் செய்தேன். சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகளை வென்றது. அடுத்து, டெலிஃபிலிம் எடுப்பதற்காக கதை எழுதி வருகிறேன்” என்று கூறிய சாந்தினி, கனவுகள் ஆயிரம் எனும் குறும்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

வெள்ளித்திரையில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக அவர் விளங்க வாழ்த்துவோம்.

அழைப்பு குறும்படத்தின் யூடியூப் லிங்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com