பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி!

இது வழக்கமான ரஜினி படக் கதையாகத் தோன்றினாலும் கதை நடக்கிற களமும் பாசவலையில் அவரைப் பிண்ணுகிற மனைவி, மகள் தொடர்புடைய காட்சிகளும் மிகமுக்கியமாக குஷி உண்டாக்கும் ரஜினி நடிப்பும் ரசிகர்களுக்கு நிரம்ப மகிழ
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி!

மில்லினியம் பிறந்தபிறகு ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு ஆகியோரின் இயக்கத்தில் மட்டுமே திரும்பத் திரும்ப நடித்துவந்திருக்கிறார் ரஜினி (இடையில் மகளின் இயக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் படம்). அவர்கள் இயக்கிய படங்களுக்கும் பா. இரஞ்சித்தின் இந்த கபாலிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு - நெகிழ வைக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள். அவைதான் கபாலி என்கிற பக்கா மசாலா படத்தை அதே வகையிலான இதர படங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

மனைவி உயிருடன் இருப்பதும் தெரியாதது மட்டுமல்ல, மகள் பிறந்ததே தெரியாமல் வாழ்கிற ரஜினி பிறகு உண்மைகளை அறிந்துகொண்டு அதன் வழியே செல்கிற ஒரு பாசப்போராட்டம்; தன்னை ஒவ்வொரு நொடியும் அழிக்கத் துடிக்கும் வில்லனுக்கு எதிரான தொடர்வன்முறைப் போராட்டம். இந்த இரு போராட்டங்களின் கலவையே கபாலி படம்.

மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிற கபாலி நாளடைவில் டான் ஆகிறார். ஆனால், தமிழர்களை கூடவே வைத்துக்கொண்டு கலகம் செய்யும் சீன வில்லனை வாழ்நாள் முழுக்க எதிர்த்துப் போராடவேண்டிய நிலைமை. தமிழ் நண்டுகளின் சூழ்ச்சியால் பலவருடங்கள் சிறையில் கழிக்க நேர்கிறது. சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து வில்லனை ஒரு கை பார்க்கிறார்.

இது வழக்கமான ரஜினி படக் கதையாகத் தோன்றினாலும் கதை நடக்கிற களமும் பாசவலையில் அவரைப் பிண்ணுகிற மனைவி, மகள் தொடர்புடைய காட்சிகளும் மிகமுக்கியமாக குஷி உண்டாக்கும் ரஜினி நடிப்பும் ரசிகர்களுக்கு நிரம்ப மகிழ்ச்சியை அளித்துவிடுகின்றன. திரையரங்கில் நிசப்தத்தை உண்டுபண்ணும் அந்த இறுதிக்காட்சி ரஞ்சித் முத்திரை.

ரஜினி ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்டமான படம்தான். மாணவர்களுக்கு மத்தியில் தன்னுடைய பிளாஷ்பேக்கைச் சொல்கிற காட்சியிலும் பாண்டிச்சேரியில் ஏற்படுகிற அந்த நெகிழ்ச்சியான தருணமும், பலரும் ஏங்கும் ரஜினியின் நடிப்புத் திறமையை மீட்டுக்கொண்டு வருகிறது. பாராட்டுகள் இரஞ்சித்.

ராதிகா ஆப்தே, வழக்கமான வட இந்திய இறக்குமதி அல்ல. மிகப் பொருத்தமான தேர்வு. நடிப்பைக் கோரும் காட்சிகளைச் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் சாவடி அடிக்கும் தன்ஷிகாவுக்கு கபாலி நிச்சயம் ஒரு பெரிய திருப்புமுனை. படத்தில் சிரிப்பை ஏற்படுத்துவது தினேஷ் தான். வசனமே இல்லாமல் பரபரப்பான செய்கைகள் மூலமாக ரசிகர்களைக் குதூகலப்படுத்திவிடுகிறார். வில்லன் வேடத்தில் ஆரம்பித்து தினேஷ், கலையரசன், ரித்விகா என சின்னக் சின்னக் கதாபாத்திரங்கள் வரைக் கவனமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரஜினி படத்துக்கு அவசியமான உணர்ச்சியைக் கொந்தளிக்கச் செய்யும் இசை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது. பலமுனைகளைத் தொட்டுச் செல்லும் காட்சிகளுக்குத் தொய்வு ஏற்படுத்தாத எடிட்டிங் (பிரவீன்). முரளியின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் பரபரவைக்க வைக்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகளில் வெளிப்படும் டோனும் மலேசிய கான்க்ரீட் அடுக்குகளை ஒளிவெள்ளத்தில் காண்பித்திருப்பதும் படத்துக்குத் தேவையான பிரமாண்டத்தை அளித்துள்ளன.
சிறையிலிருந்து வருகிற ரஜினி, கனக்கச்சிதமாகத் திட்டங்கள் போடுவதும், கூடவே மனைவிக்காக ஏங்குவதும்... சரியான திருப்பங்களுடன் படம் செல்ல உதவுகின்றன. ரஜினி  நடத்துகிற அந்தக் கருணை இல்லம் தொடர்புடைய காட்சிகளை இப்படியொரு மசாலா படத்தில் பார்ப்பது அரிது. இதுபோன்ற இடங்களில் பா.இரஞ்சித் திறமையாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். இதனால் முதல் பாதியில் அப்படியொரு நிறைவு ஏற்படுகிறது. காந்தி-அம்பேத்கர், அடிமையாக வாழ்கிற தமிழன் என வசனங்களிலும் வழக்கமான இயக்குநர் டச்.

இடைவேளைக்குப் பிறகு பாண்டிச்சேரி காட்சிகளைத் தவிர மற்றதெல்லாம் வழக்கமான கரகர மசாலா. இங்குதான் பா.இரஞ்சித் ஏமாற்றம் அளித்துவிடுகிறார். படம் முழுக்க ரஜினியும் வில்லனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடியாட்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் கூட ரத்தக்களறி நிற்கவில்லை. ஆனால் எங்குமே காவல்துறைக்கு வேலை இருப்பதில்லை என்பது திரைக்கதையின் பலவீனம்.

வில்லனின் தொழிலுக்குக் கட்டக்கடைசியில் தான் உலை வைக்கிறார் ரஜினி. ஆனால், ஆரம்பத்திலிருந்தே ரஜினியால் வில்லனின் போதை மருந்துக் கடத்தல் தொழில் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது உறுத்துகிறது. ரஜினி - வில்லன் மோதலில் எந்தவொரு திருப்பமோ புது உத்திகளோ இல்லை. திரும்பத் திரும்பச் சுடுவதுதான் இரு தரப்பினரும் செய்கிற உருப்படியான வேலை. இடையில் ரஜினி ஆட்களைக் கைக்குள் போட வில்லன் கோஷ்டி நினைப்பதும் திரைக்கதைக்கு உதவவில்லை. திடீரென இறுதிக்காட்சியில் மலேசியாவில் வாழ்கிற தமிழ் இனத்தைக் கேவலமாகத் திட்டித் தீர்க்கிறார் வில்லன். அதற்கு ரஜினி கொடுக்கும் பதிலடி உற்சாகம் ஊட்டினாலும், இந்தக் கோணத்தில் இருவருக்கும் இடையேயான பகை அழுத்தமாக வெளிப்பட்டிருந்தால் மோதலுக்கான காரணமும் காட்சிகளும் வலுவாக இருந்திருக்கும். பதிலாக இரண்டு டான்கள் தொழிலை முன்வைத்து மோதிக்கொள்கிறார்கள் என்கிற தட்டையான காரணத்துடன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இரண்டாம் பாதியில் முழுத் திருப்தி கிடைக்காமல் போய்விடுகிறது.

கபாலி - ரஞ்சித் ஸ்டைலில் ஒரு ரஜினி படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com