விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' - சினிமா விமரிசனம்

அந்த வரிசையில் சுஜாதாவின் படைப்பைக் கைமா செய்த இன்னொரு படம்தான் 'சைத்தான்'
விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' - சினிமா விமரிசனம்

தமிழ் சினிமாவினால் தனது படைப்புகள் தொடர்ந்து கொத்து பரோட்டா போடப்பட்டதைப் பற்றிப் பலமுறை புலம்பியிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. அந்த வரிசையில் அவருடைய படைப்பைக் கைமா செய்த இன்னொரு படம்தான் 'சைத்தான்'. இதுகுறித்த சலிப்புடன் நரகத்திலிருந்து சுஜாதா ஏதாவது எழுதிக் கொண்டிருக்கக்கூடும். (அவர் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை).

கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷின் மண்டையில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்யச் சொல்லி கட்டளையிடுகின்றன. தினேஷ் தனது நண்பனின் சாவுக்குக் காரணமாகிறான். அதுகுறித்த குற்றவுணர்வும் அசரிரீகள் ஏற்படுத்தும் மனநெருக்கடியும் என உளைச்சலுக்கு ஆளாகிறான். அந்தக் குரல் அவனை தஞ்சாவூர் என்கிற அந்நியப் பிரதேசத்துக்கும் வேறுபல சிக்கல்களுக்கும் இட்டுச் செல்கின்றன. கடந்த ஜென்மத்தின் நிழலுருவங்கள் அதன் பின்னணியில் அசைகின்றன.

தினேஷின் இந்த விநோதமான பிரச்னைக்குக் காரணமும் பின்னணியும் என்ன, அவற்றில் இருந்து விடுபட்டானா?  என்பதையெல்லாம் முதல் பாதியில் சுஜாதாவின் 'ஆ' நாவலுக்கு சற்று விசுவாசமாகவும் பிற்பாதியில் நாவலில் இருந்து மொத்தமாக விலகி தமிழ் சினிமாவின் வழக்கமான 'உட்டாலக்கடி' பாணியில் சலிப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். 


***

'சைத்தான்' திரைப்படம் சுஜாதாவின் 'ஆ' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்கிற தகவலை 'spoilers' காரணமாக திரைப்படக்குழு அடக்கி வாசிக்க விரும்பியது ஒருவகையில் நியாயமான விஷயம். ஆனால், படம் பார்த்த பிறகு, நாவலை இத்தனை மேலோட்டமாகவா கையாள்வார்கள் என்று பயங்கரமான எரிச்சல் தோன்றியது. 

ஒரு புகழ்பெற்ற நாவலைச் சுருக்கி, திரைப்பட மொழியில் மாற்றுவது சவாலான விஷயம்தான். நிச்சயம் அத்தனை பெரிய வாசகப் பரப்பை திருப்திப்படுத்த முடியாது. நாவலுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாத விஷயம் என்றாலும்கூட அதைச் சற்று நேரம் மறந்துவிட்டு சினிமாவாக மட்டும் பார்த்தால் கூட 'சைத்தான்' மிகச் சாதாரணமான உருவாக்கம். வெகுஜனப் பார்வையாளர்களுக்காக நிறைய விஷயங்களை மாற்றி எளிமைப்படுத்தியதற்குப் பின்னால் உள்ள உழைப்பையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், நாவலின் ஆன்மாவைச் சாகடித்த அந்த விஷயத்தை சகிக்கவே முடியாது.

Reincarnation, Schizophrenia, Auditory hallucination, ஹிப்னாடிசம், யோகா, திருச்சி, பகவதியம்மன் கோயில், மனநிலைப் பிறழ்ந்தவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்பான சட்டச்சிக்கல்கள், அதிலுள்ள ஓட்டைகள் என்று தன் நாவலில் கலந்து கட்டி அசத்தியிருப்பார் சுஜாதா. வெகுஜன வாசகர்களுக்காக இந்த விஷயங்களை சுஜாதாவும் கொத்து பரோட்டா போட்டிருப்பார் என்றாலும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலில் மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்களின் அரிய தகவல்கள் போகிற போக்கில் குவிந்திருக்கும். மேலும் சுஜாதா எனும் திறமையான கதைசொல்லியின் மூலம் நம்பகத்தன்மை மிகுந்த உலகம் நம் முன் நிற்கும். சமயங்களில் நம் மண்டைக்குள்ளே குரல் கேட்கக்கூடிய ஒரு சாத்தியத்தை அந்த வாசிப்பனுபவத்தின் மூலம் நமக்கு ஏற்படுத்தியிருப்பார் சுஜாதா.


***

சைத்தான் திரைப்படத்தில் இந்த மாயாஜாலம் எதுவுமே நிகழவில்லை. திரும்பத் திரும்ப சொல்வதுதான். திரைக்கதையுடன் பார்வையாளனை உணர்வுபூர்வமாகக் கட்டிப் போடாத சினிமா எத்தனை தொழில்நுட்ப ஜிகினாக்களை இறைத்தாலும் எடுபடாது. அழுத்தமான, சுவாரசியமான திரைக்கதைதான் அதன் ஆதாரம். 'பாசமலர்' திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சிவாஜி அழும் காட்சியை மட்டும் துண்டாகப் பார்த்தால் இன்று சிரிப்பு வரக்கூடும். ஆனால் முழுப்படத்தின் தொடர்ச்சியோடு, அந்த உணர்வுக்கடத்தலோடு பார்த்தால் இன்றைய தலைமுறைப் பார்வையாளன் கூடத் தன்னிச்சையாகக் கண்கலங்குவான். அதுதான் அந்தத் திரைக்கதையின் மாயாஜாலம். சினிமாவின் வெற்றி. 

வெகுஜனப் பார்வையாளர்களுக்குப் புரியும்படி நாவலை எளிமைப்படுத்தியது வரையில் கூட சரி. ஆனால் நாவலின் மிக ஆதாரமான விஷயமே தினேஷின் மண்டையில் ஒலிக்கும் குரல்தான். தன் வாசகர்களைப் பல வழிகளில் திசை திருப்புவதற்காகப் பல்வேறு சுவாரசியமான மீறல்களை சுஜாதா செய்திருந்தாலும் அவனுடைய மனச்சிதைவே அவனுடைய சிக்கலின் ஆதாரமான காரணம் என்கிற மையத்திலிருந்து விலகியிருக்கமாட்டார்.

ஆனால் சைத்தான் திரைப்படம் படத்தின் பிற்பாதியில் இந்த விஷயத்தை அப்படியே கை விட்டு விட்டு மனைவியைத் தேடும் நாயகனின் சாகசம், மனித உடல்மீது சட்டவிரோதமாகச் செய்யப்படும் பரிசோதனை என்று லாஜிக்கே இல்லாமல் ஜல்லியடித்துக் குழம்பி விட்டது. எழுத்திலிருந்து உருவாகும் சினிமா, அதிலிருந்து மீறலாம் என்றாலும் எழுத்தை விட சிறப்பாக அமைந்திருக்கவேண்டும் என்பது ஆதாரமான விதி. சைத்தானில் இது நிகழவில்லை.


***

சினிமாவின் இதர துறைகளில் பிரபலமானவர்கள், அந்தப் புகழ் மீதான அடிப்படையில் நடிக்க வருவதும் அது நமக்குச் சகிக்க முடியாமல் போவதும் மோசமான விஷயம். விஜய் ஆண்டனியின் நிலைமையும் அதுவே. விருந்தில் அதிகம் சாப்பிட்டு விட்டு ஆசை அடங்காமல் அதன் மீது ஒரு ஐஸ்கிரீமையும் விழுங்கி விட்டு பிறகு ஒருமாதிரியாக அவஸ்தையுடன் முழிப்போம் அல்லவா? விஜய் ஆண்டனியின் முகபாவங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. 'ஏன் இந்த மூஞ்சுல ரொமான்ஸ்ஸூம் நடிப்பும் வரமாட்டேங்குது' என்று நம் மண்டைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. 

நாயகி அருந்ததி நாயர் நிறையவே புஷ்டியாக இருந்தாலும் சில காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார். சில காட்சிகளில் களையாக இருக்கிறார். தொடக்கக் காட்சிகளில் இவர் இலைமறையாக ஏதோ பேசுவதைக் கேட்டவுடன் இவர் நாயகனின் மனைவியா அல்லது வேறு ஏதாவதா என்று நமக்குச் சந்தேகமே வந்து விடுகிறது. அத்தனை இரட்டை அர்த்தம். 'ஆடுகளம்' முருகதாஸை ஐடி ஊழியராக நடிக்க வைத்திருப்பதெல்லாம் casting அபத்தம். டெடரான வில்லனாகக் காட்டும் மருத்துவரைப் பின்பு காமெடியாகச் சித்தரிப்பதெல்லாம் character assassination.

நாவலில் சிறுவன் கோபாலனின் மறுபிறவிதான் சமகால தினேஷ் என்று சுஜாதா எழுதியதில் ஒரு காரணம் இருந்தது. விஜய் ஆண்டனி டபுள் ரோலில் வருவதற்காகவோ என்னவோ இதை சினிமாவில் மாற்றியிருக்கிறார்கள். செய்து விட்டுப் போகட்டும். ஆனால் தஞ்சாவூரில் இருக்கும், ஜெயலஷ்மியின் பின்னணி விவரங்களை அறிந்த பெரியவரான சாருஹாசனுக்கு சர்மாவின் அச்சான ஜாடையில் இருக்கும் தினேஷைப் பார்த்ததும் அந்தக் கேள்வி எழுந்திருக்க வேண்டுமே? இல்லை. சாருஹாசன் விநோதமாக விழித்துப் பார்ப்பதோடு இது முடிந்துவிடுகிறது. இது மட்டுமல்ல, படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நாயகனை எவராவது பூடகமாக முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதுதான் சஸ்பென்ஸ் என்று இயக்குநர் சித்தரிக்க முயன்றால், இதெல்லாம் பழைய 'அதே கண்கள்' காலக்கட்டத்திலேயே முடிந்துவிட்டது என்பதை அவருக்கு யாராவது சொல்ல வேண்டும். 

பின்னணி இசை சில சமயங்களில் காட்சிக்குப் பொருத்தமாக வசீகரமான ஓலத்துடன் ஒலிக்கிறது. ஆனால் என்ன புண்ணியம்? வயிற்று வலி உபாதையுடனான குரலில் விஜய் ஆண்டனியே பாடுவதெல்லாம் ஓவர். இரண்டுப் பாடல்கள் தவறான இடத்தில் வந்து சலிப்பூட்டுகின்றன.

***

இத்திரைப்படத்தின் விளம்பரங்களில் சுஜாதாவின் வாசகனாக அவரின் பெயரைப் பிரதானப்படுத்தவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்த பிறகு அவரின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் அதுவே சிறந்த அஞ்சலியாக இருந்திருக்கும் எனத் தோன்றிற்று. 

சுஜாதாவின் நாவலைச் சிதைத்த காரணமாக அந்த வலியில் படத்தின் முற்பகுதியில் ஏற்பட்ட 'ஆ' என்கிற சத்தம், பிற்பகுதியின் சலிப்பால் 'ஆவ்'.. என்று கொட்டாவி விடும்படியாகி விட்டது.  

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 'அப்பாலே போ.. சைத்தானே'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com