கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ - சினிமா விமரிசனம்

ரொமான்ஸூம் ஆக்ஷனும் கலந்திருக்காமல் இரண்டும் சரிபாதியாக பிரிந்திருப்பது இத்திரைப்படத்தின்...
கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ - சினிமா விமரிசனம்

நடிகர்களைத் தாண்டி இயக்குநர்களுக்கென்று ரசிகர்கள் பெருகத் தொடங்கியது ஸ்ரீதரின் காலக்கட்டத்துக்குப் பிறகு. கே.பாலச்சந்தரின் காலத்தில் இது அழுத்தமான போக்காக மலர்ந்தது. அது எந்த வகைமையான படமாக இருந்தாலும் இயக்குநரின் சில குறிப்பிட்ட முத்திரைகள், அடையாளங்கள் போன்றவை நிச்சயமாக அந்தத் திரைப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இவையே அந்த இயக்குநர்களின் தனித்தன்மையாகவும் இருந்தது. அந்த வரிசையில் கெளதம் மேனன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்.

பிரத்தியேகமான ரொமான்ஸ் அல்லது ரொமான்ஸ்ஸூம் ஆக்ஷனும் கலந்திருப்பது என்பது அவர் உருவாக்கும் திரைப்படங்களின் வழக்கமான வகைமை. கெளதமின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய கற்பனைகள், பகற்கனவுகள் போன்றவை அவருடைய திரைப்படங்களில் பெரும்பான்மையாகக் கலந்திருக்கும். இயக்குநரின் ஆளுமைப்பண்புகளும் வெளித்தோற்றத்தின் அடையாளங்களும் இவர் உருவாக்கும் பிரதான பாத்திரங்களில் வெளிப்படும். நீலச்சட்டை, கைவளையம் போன்றவை சில உதாரணங்கள். தம்முடைய பாத்திரங்களில், படைப்பில் இயக்குநரின் செல்வாக்கு அதிகமிருப்பது ஒருவகையில் படம் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதைக் காண்பிக்கிறது. இன்னொரு புறம் அவருடைய எல்லையிலிருந்து தேய்வழக்காக மாறும் அபாயத்தையும் கொண்டிருக்கிறது. 

'அச்சம் என்பது மடமையடா' கெளதம் மேனனின் வழக்கமான வகைமையிலிருந்து பெரும்பாலும் பிசகாத திரைப்படம். ஆனால் ரொமான்ஸூம் ஆக்ஷனும் கலந்திருக்காமல் இரண்டும் சரிபாதியாக பிரிந்திருப்பது இத்திரைப்படத்தின் வித்தியாசம். ஆனால் இந்தக் கலவை சரியாக உருவாகியிருக்கிறதா என்றால் இல்லை. முதல் பாதி 'விண்ணைத் தாண்டி வருவாயா'யின் வசீகரமான தொடர்ச்சி போலவே அருமையாக அமைந்திருக்கிறது. இதர ரசிகர்களுக்கு ஒருவேளை சலிப்பூட்டலாம் என்றாலும் கெளதமின் திரைப்படத்தில் என்ன இருக்கும் என்று  உறுதியாக எதிர்பார்த்து வரும் ரசிகர்களை  ஏமாற்றவில்லை. ஆனால் இரண்டாம் பகுதியாக வரும் ஆக்ஷன் காட்சிகளின் பெரும்பான்மையானவற்றில் நம்பகத்தன்மையில்லை. அந்தப் பகுதியின் திரைக்கதை மனம் போன போக்கில் அலைகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் மிகையான நாடகமாக இருக்கிறது. படத்துக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது இரண்டாம் பகுதியே. 

***

'அச்சம் என்பது மடமையடா' எதைப் பற்றிய திரைப்படம்?

ஒரு சாதாரணனின் வாழ்வில் திடீரென அசாதாரண சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள அவன் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறான், அதிலிருந்து மீள எந்த எல்லை வரை செல்வான் என்பது இந்தத் திரைப்படத்தின் மையம். 

இதன் நாயகன் (சிம்பு) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் வெட்டியாக இருக்கிறான். (இந்தக் கதாபாத்திரத்தின் பெயரை படத்தின் இறுதிப்பகுதியில் வரையில் பார்வையாளர்களுக்கும் நாயகிக்கும் வெளிப்படுத்தாமல்  மர்மமாக வைத்திருக்கிறார் இயக்குநர். அது திரைக்கதையில் பெரிய திருப்பமாக இருக்குமென்று பார்த்தால் அதுவொரு சுவாரசியமான கிம்மிக்ஸ்ஸாக மட்டுமே முடிந்திருப்பது பரிதாபம்). படிப்பு தொடர்பாக அவனுடைய தங்கையின் தோழி (மஞ்சிமா மோகன்) இவனுடைய வீட்டில் வந்து தங்குகிறார். நாயகனுக்கு 'நெஞ்சில் வந்து தாக்குகிற' காதல் உற்பத்தியாகிறது. மெல்ல அவளிடம் பழகுகிறான். 

எங்காவது பணிக்குச் சேருவதற்கு முன் தன்னுடைய பைக்கில் தென்னிந்தியா வழியாக சுற்றுலா செல்ல முடிவு செய்கிறான் நாயகன். சரியாக அதே சமயத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்புகிறார் நாயகி. இருவரின் சாலைவழிப் பயணம் இணக்கமானதாகவும் கண்ணியமான நட்பாகவும் ஒளித்து வைத்துக் கொண்ட காதலாகவும் தொடர்கிறது. வழியில் ஒரு விபத்து. நாயகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறான். கொடூரமான ஒரு வன்முறைக் கும்பலில் நாயகியும் அவளது குடும்பத்தாரும் சிக்கிக்கொண்டிருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிகிறது. அவளுக்கு உதவுவதற்காக அவன் இறங்கும் அந்த நிமிடம் அவனைப் பல பயங்கரமான தருணங்களுக்கும் சிக்கல்களுக்கும் இட்டுச் செல்கிறது. 

அந்தச் சிக்கல்களிலிருந்து நாயகனும் நாயகியும் மீண்டார்களா என்பதை துப்பாக்கிச் சத்தங்களுடனும் மிகையான உச்சக்காட்சியுடனும் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் கெளதம் மேனன். 

***

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி படத்தின் முற்பாதியின் பெரும்பான்மையும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சி போலவே உள்ளது. வீடு, கேமராக் கோணங்கள் என்று அதை நினைவுப்படுத்தும் அம்சங்கள் நிறைய. 

மறைத்துக்கொண்ட ஆவலுடன் நாயகியைப் பற்றி தங்கையிடம் விசாரிக்கிறான் நாயகன். 'அவளோட ஊர் அலெப்பி.. கேரளா' என்று அவள் விளையாட்டாக பொய் சொல்லும்போது விதாவ படத்தின் பின்னணி இசை ஒரு சுவாரசியமான கலாட்டாவாக ஒலிக்கிறது. இருவருக்கும் உருவாகும் நட்பும் காதலும் எப்படி மெல்ல மெல்ல அடுத்தக் கட்டத்துக்குப் பரிணமிக்கிறது என்பதைக் கவிதையான காட்சிகளாலும் வசனங்களாலும் விவரிக்கிறார் இயக்குநர். ஓர் அசாதாரண சமயத்தில் தன் காதலைத் தெரிவிக்கிறான் நாயகன். (‘டைமிங் தப்புதான், ஆனா மேட்டர் சரியானது’ என பிற்பாடு இதை சிம்பு விளக்குவது ரகளையான காட்சி).

இடைவேளைக்குப் பிறகு நாம் அரங்கம் மாறி அமர்ந்து விட்டோமா என்கிற சந்தேகம் எழுமளவுக்குப் படத்தின் முற்பகுதியிலிருந்து முற்றிலுமாக விலகி ஆக்ஷன் காட்சிகளுக்குள் திரைப்படம் இறங்கி விடுகிறது. ஆனால் இவை வழக்கமான நாயகனின் அதிசாகசங்களாக அல்லாமல் எப்படி நாயகன் அந்தச் சம்பவங்களால் தன்னிச்சையாக செலுத்தப்படுகிறான், உத்வேகம் கொள்கிறான் என்பதைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்காக அவரைப் பாராட்டலாம் என்றாலும் இந்தக் கலவை சரியாக உருவாகி வரவில்லை. நம்பகத்தன்மையற்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தச் சலிப்பின் உச்சம் இதன் கிளைமாக்ஸ். இயக்குநர் எவ்வாறு இத்தனை நாடகத்தனமான உச்சக்காட்சியை தீர்மானித்தார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவசரம் அவசரமாகப் படத்தை முடித்த மாதிரி இருக்கிறது. 


***

பொதுவாக மற்ற படங்களில் எரிச்சலூட்டும்படி நடித்தாலும் கெளதமின் திரைப்படங்களில் மட்டும் சிம்பு பிரத்யேகமானவராகத் தெரிகிறார். சில பல காட்சிகளில் இவருடைய அடக்கமான நடிப்பும் முகபாவங்களும் அருமை. நாயகியின் மீது காதல் வருவது, அந்த உணர்வுகளால் தவிப்பது, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது, சிக்கலான தருணத்தில் அச்சத்தை வென்று அதை எதிர்கொள்ள எடுக்கும் முடிவு போன்ற பல காட்சிகளில் இவரது நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. என்னவொன்று, குண்டான உடலுடனும் தாடியுடனும் சட்டென்று பார்க்க ‘மினி டி.ஆர்’ மாதிரியே இருக்கிறார். விதாவ படத்தில் இருந்த வசீகரமான இளைஞனின் தோற்றத்தைக் காணவில்லை என்பது நெருடல். ஒரு பெண்ணிடம் கண்ணியமாக நடந்து கொண்டாலே அவளிடமிருந்து சாதகமான எதிர்வினை வரும் என்கிற செய்தி இந்தக் காட்சிகளில் உள்ளுறையாகப் பதிந்திருப்பது சமகால இளைஞர்களுக்கு முக்கியமான செய்தி.

நாயகி மஞ்சிமா மோகன். மலையாளத்திலிருந்து தமிழுக்குப் புதுவரவு. அடிப்படையில் அழகி. ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் சில காட்சிகளில் பேரழகியாகத் தோன்றுகிறார். படத்தின் பிற்பகுதியில், சில தீவிரமான காட்சிகளில் நடிக்கவும் முயன்றிருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு இணையான தோற்றத்தில் இருப்பதுதான் இவர் விஷயத்திலும் நெருடல்.

பாபா சேகல் கெட்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார். சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை. வழக்கமான வில்லன். ஓர் எதிர்பாராத கணத்தில் டேனியல் பாலாஜி வருகிறார். கெளதம் இவரை முன்பு எப்படி திறமையாக உபயோகப்படுத்தியிருந்தார் என்பது நமக்குத் தெரியும் என்பதால் ஆவல் பற்றிக்கொள்கிறது. ஆனால் இவரும் பாபா சேகலின் பின்னால் ஒளிந்து கொண்டு ஏதோ வில்லத்தனம் செய்து விட்டுப் போகிறார். சிம்புவின் நண்பராக வரும் சதீஷ் நடனமாடுவதைத் தாண்டி நடிக்க முயன்றிருக்கிறார். கெளதம் மேனன் வழக்கம் போல் ஒரு கேமியோ காட்சியில் வருகிறார். அரங்கில் அத்தனை ஆரவாரம் செய்கிறார்கள். மற்றபடி விளம்பரப் படங்களில் வருவது போன்ற உயர்வர்க்க முகங்களும் சூழலும் என வழக்கமான 'கெளதம்'தனம் படத்தில் நிரம்பி வழிகிறது. 

***

இத்திரைப்படத்தின் பிரதான சிறப்பம்சங்களுள் ஒன்று ஏ.ஆர். ரஹ்மானின் இசை. பாடல்கள் ஏற்கெனவே தாறுமாறாக 'ஹிட்' ஆகியிருப்பது நமக்குத் தெரியும். பிற்பாதி முழுக்க ஆக்ஷன் தொடர்பான காட்சிகள் என்பதால் அதன் இடையே பாடலைத் திணித்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்காமல் இருப்பதில் கெளதமின் புத்திசாலித்தனம் தெரிகிறது. எனவே முதல் பாதியிலேயே பாகவதர் காலத்து படம் மாதிரி படத்தின் அத்தனை பாடல்களும் தொடர்ச்சியாக வந்து விடுகின்றன. ஆனால் சலிப்பே ஏற்படவில்லை. மாறாக கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. காரணம் ரஹ்மானின் இளமை தீராத இசை. 

இன்னொரு காரணம், பாடல்கள் எங்கே இடம்பெற வேண்டுமென்று கெளதம் தீர்மானித்திருக்கும் விஷயம். பொதுவாக பாடல்களைப் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிப்பது மாதிரியே இடம்பெறச் செய்வது தமிழ் சினிமாவின் வழக்கம். இதிலும் வழக்கமான மரபை கடைப்பிடிப்பார்கள். 

ஆனால் 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் 'என்னோடு வாவாவென்று' பாடல் முடிந்த சில நிமிடங்களிலேயே 'பெண்கள் என்றால்' பாடல் தொடங்கிவிடுவதைக் கவனிக்கலாம். அது முடிந்த சில நிமிடங்களில் அடுத்தப் பாடல் வரும். கதைப் போக்கில் அதன் உணர்ச்சிகளோடு இயைந்து இவை வருவதால் நமக்குச் சலிப்பே வராது. 

இதே மாயாஜாலம்தான் 'அஎம'விலும் நடக்கிறது. படத்தின் முற்பாதியில் காதல் பொங்கி வழிவதற்கும் இளமைக் கொண்டாட்டமாக அமைவதற்கு ரஹ்மானின் இசையும் கெளதமின் மேக்கிங்கும்தான் காரணம். 

இதில் மிக குறிப்பாக 'தள்ளிப் போகாதே' பாடல் அமையும் இடத்தைச் சொல்ல வேண்டும். இதுவரை தமிழ் சினிமாவே கண்டிராத ஓர் அற்புதம் அது. அசாதாரணமான சூழலின் தருணத்தில் இந்தப் பாடலைப் பொருத்துவதற்கு ஓர் இயக்குநருக்கு தனியான துணிச்சலும் கலையுணர்வும் இருக்க வேண்டும். கெளதம் இதை அபாரமாக சாதித்திருக்கிறார். இதைப் போலவே ரஹ்மானின் பின்னணி இசையும் இதில் அற்புதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பான இசைக்கு நடுவே வேறு சில மென்மையான இழைகளும் ஒலிப்பது ரஹ்மானின் பிரத்யேகமான முத்திரை.

படத்தின் பெரும்பான்மையும் பிரதான பாத்திரங்களின் அண்மைக் கோணங்களால் நிறைந்திருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் அதன் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளுமளவுக்கு அபாரமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் Dan Macarthur-ம், தேனீ ஈஸ்வரும். 


***

படத்தின் முற்பாதி முழுக்க ரொமான்ஸ் காட்சிகளால் நிரப்பிவிட்டு அதற்கு எதிர்முரணாக, பிற்பாதியில் ஆக்ஷன் அதிர்ச்சியைத் தர விரும்பியது இயக்குநரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் இந்த பரிசோதனை விளையாட்டு வினையானதுதான் மிச்சம். விபத்தில் சிக்கி கையில் அடிபட்ட சிம்பு எப்படிச் சண்டை போடுவார் என்பது முதற்கொண்டு பல காட்சிகளில் நம்பகத்தன்மை முழுவதுமாக சேதப்பட்டிருக்கிறது. அதுவரையான இயல்பிலிருந்து விலகி 'நீங்கள் பார்ப்பது தமிழ் சினிமா' என்கிற கசப்பான உண்மையை நம் முகத்தின் மீது எறிகிறார் கெளதம். அதிலும் குறிப்பாக உச்சக்காட்சி மிகையான நாடகம். கெளதம் மேனனின் திரைப்படத்தில் நாயகன் காக்கி உடையில் தோன்றியே ஆக வேண்டிய கட்டாயத்தினால் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. அதுவரையான சிக்கல்களுக்கான காரணத்தை படத்தின் இறுதியில் ஒரு சுருக்கமான பிளாஷ்பேக்கில் சொல்லி முடிப்பது திரைக்கதையின் ஒருவகையான வசீகரம் என்றாலும் பிற்பகுதியின் சுவாரசியமின்மையால் இது பொருந்தாமல் அமுங்கிப் போகிறது.

முதற்பாதியின் உற்சாகமெல்லாம் வடிந்து இஞ்சி தின்றது போன்ற முகபாவத்துடன் ரசிகர்கள் அரங்கிலிருந்து வெளியேற வேண்டிய சூழலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 

தம்முடைய வழமைகளிலிருந்து விலகுவது ஒரு படைப்பாளிக்கு முக்கியமானது என்றாலும் அது சரியாக திட்டமிடப்படவில்லையென்றால் பூமராங் போல திருப்பித் தாக்கி விடும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சரியான உதாரணம். முதற்பாதியின் தொனியைச் சேதப்படுத்தியிருக்காமல் அப்படியே நீட்சியடையச் செய்திருந்தால் இது 'விண்ணைத் தாண்டி வருவாயா' மற்றும் 'நீதானே என் பொன் வசந்தம்' வரிசையில் ஓர் அற்புதமான ரொமாண்டிக் மூவியாக ரசிகர்களின் நெஞ்சில் உறைந்திருக்கக்கூடிய சாத்தியத்தை கெளதமே துப்பாக்கியால் சுட்டு சாகடித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ‘உச்சம் என்பது மடமையடா’. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com