விஜய் சேதுபதியின் ‘றெக்க’: சினிமா விமரிசனம்

உலகத்தில் உள்ள அத்தனை ராணுவமும் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையுடன் நாயகன் இருப்பதே...
விஜய் சேதுபதியின் ‘றெக்க’: சினிமா விமரிசனம்

இயல்பானதொரு திரைக்கதைக்குள் தம்முடைய எளிய நடிப்பை சிறப்பாக பொருத்திக் கொள்வதுதான் விஜய் சேதுபதியின் பொதுவான அடையாளமாக பெரும்பாலும் இதுவரை இருந்தது. அதுதான் அவருடைய மிகப் பெரிய பலமும் கூட. ஆனால் விக்ரமின் 'சாமி'  திரைப்படத்தை மோசமாக நகலெடுத்தது போல அமைந்த 'சேதுபதி'யில் அவரை காக்கி உடைக்குள் ஆக்‌ஷன் நாயகராகப் பார்த்தபோது சற்று திகிலாகத்தான் இருந்தது. மறுபடியும் அவர் தனக்கு இணக்கமான பாதைக்குத் திரும்பியபோது ஆசுவாசம் ஏற்பட்டது. தமிழ் சினிமாவுக்குள் பலகாலமாகப் பெருகி நிற்கும் 'அதிநாயகத்தன்மையை' உடைத்து சாமானிய நாயகர்களுக்கான சினிமாவாக ஆக்கிக்கொண்டிருப்பதில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கியமான பங்குண்டு.

2016-ம் வருடத்தில் இதுவரை வெளியாகியிருக்கும் அவரது ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவில் பழுதில்லை. அவரது இதர இரு திரைப்படங்கள் அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அதே சமயத்திலேயே  மூன்றாவது திரைப்படமான 'றெக்க' வெளியாகியிருக்கிறது. சமகால தமிழ் சினிமா போக்கின் படி  வேறெந்த நாயகருக்கும் கிடைக்காத பெருமை இது. கடந்த கால நாயகர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான விஷயம் இது.  

'றெக்க'யின் மூலம் தமது சாமானிய முகத்திலிருந்து விலகி மறுபடியும் 'ஆக்ஷன் பார்முலாவில்' இறங்கத் துணிந்திருக்கிறார் விஜய் சேதுபதி. உலகமெங்கிலும் சாகச நாயகர்களுக்கான வரவேற்பு பொதுவாக அதிகமிருக்கும் சூழலில் இந்தப் பரிசோதனையில் அவர் ஈடுபட்டது பெரிய குற்றமில்லைதான். ஆனால் அதுவரை தமக்கு வெற்றியைத் தேடித் தந்துகொண்டிருந்த ஒரு பாதுகாப்பான குகையில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற நினைக்கும்போது அதற்கான திட்டமும் முன்தயாரிப்பும் வலுவானதாகவும் சுவாரசியமானதாகவும்  இருக்க வேண்டும். அந்த மாற்றம் நியாயமானதுதான் என்று பார்வையாளர்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். அந்தளவுக்கான ஒரு திரைக்கதையை தேர்வு செய்திருக்க வேண்டும்.

விஜய்சேதுபதியின் இந்த மாற்றத்துக்கு 'றெக்க' உதவிகரமாக இருந்ததா என்றால் துரதிர்ஷ்டமாக இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறது. தேய்வழக்கு மசாலா திரைக்கதையை 'கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து பிடித்த கதையாக' அசுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.


***

தமிழ் சினிமாவின் நாயகர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ள விநோதமான நோய்களுள்  ஒன்று, 'றெக்க' நாயகனான சிவாவிற்கும் இருக்கிறது. காதலர்களின் திருமணத்தில் தடையேற்பட்டால் அதில் நுழைந்து அவர்களை இணைத்து வைப்பது. இதற்கு முன்னர் விஜய், சசிகுமார் போன்றவர்களுக்கும் இந்த நோய் இருந்ததை நினைவுகூரலாம். இந்த வகையில் இத்திரைப்படத்தில் முக்கியமான வித்தியாசத்தை இயக்குநர் யோசித்திருக்கிறார். ஆம்.  எண்பது வயது முதியவர்களுக்கான  'சதாபிஷேக திருமணத்தில்' ஏற்படும் தடையையும் முறியடித்து அவர்களின் திருமணத்தை  நாயகனான விஜய்சேதுபதி நடத்தி வைக்கிறார். நகைச்சுவையெல்லாம் இல்லை. சீரியஸான காட்சிதான்.

சமூகநீதியின் அடிப்படையில் இயங்கும் இந்த  நோய்க்கூறுத் தன்மையின் வழக்கத்தின்படி வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண்ணையும்  நாயகன் சிவா கடத்தி வந்து விட, வில்லன் பழிவாங்குவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் நாயகனின் தங்கைக்குத் திருமணம் நிச்சயமாகிறது. இதை அறிந்து கொள்ளும் வில்லன், திருமணத்தில் இடையூறு ஏற்படுத்த முயல, நாயகர்களுக்கு இருக்கும் இன்னொரு அடிப்படைத் தகுதியான பாசமிகு அண்ணனாக செயல்படுகிறான் சிவா. 'உனக்காக நான் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று  வில்லனிடம் வாக்குறுதி தருகிறான்.

'நான் சொல்லும் பெண்ணைக் கடத்தி வர வேண்டும்' என்கிறான் வில்லன். அது வில்லனின் பகையாளி ஒருவனுக்காக நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண். இதன் மூலம் நாயகனைச் சிக்கலில் தள்ளி விட்டு பழிவாங்கலாம், தனது பகையாளியையும் பழிவாங்கி விடலாம் என்பது வில்லனின் திட்டம். ஒரு கல்லில் இரண்டு Mangoes. 

ஏற்கெனவே  இருக்கும் இந்த மங்கூஸ் வில்லனோடு, நாயகனுக்கு கூடுதலாக மேலும் இரண்டு பயங்கர வில்லன்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டிய சவால் அமைகிறது. 

***

தனது தங்கையின் திருமணம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெற, சில மணி நேரங்களுக்குள் தம்மிடம் தரப்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சூழல் நாயகனுக்கு. 

ஒரு கச்சிதமான ஆக்ஷன் மசாலா திரைக்கதையின் அடிப்படையான கட்டுமானத்துக்குள் அமைந்ததுதான். பரபரவென்று நகர்த்தியிருக்க  வேண்டிய திரைக்கதையை 'அதுல பார்த்தீங்கன்னா' என்று விகே ராமசாமி, சாவகாசமாக இழுத்து வசனம் பேசுவாரே, அப்படிக் கொட்டாவி வரும்படி, நம்பகத்தன்மை என்பது துளியுமில்லாமல் இழுத்திருக்கிறார்கள்.

'கில்லி' திரைப்படத்தின் சில தீற்றல்களை இயக்குநர் பின்பற்றியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 'சாமி' படத்தின் மோசமான நகலாக 'சேதுபதி' அமைந்ததைப் போல 'கில்லி'யின் அபத்தமான நகலாக  'றெக்க' முறிந்து போனதுதான் பரிதாபம்.

அது சாகசத் திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறு வகைமையில் அமைந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, பாத்திரத்தின் உணர்வுகளோடும் சிக்கல்களோடும் பார்வையாளர்கள் ஒத்திசைவுடன் இணையவேண்டும். பிரதான பாத்திரம் எதிர்கொள்ளும் சிக்கலை தன்னுடைய சிக்கலாக உணர வேண்டும். அவ்வாறான பிணைப்பை முதலிலேயே நிறுவும் திரைக்கதைதான் பெரும்பாலும் வெற்றி பெறும். இந்த மாயத்தை நிகழ்த்தாமல் எவ்வித பிரம்மாண்டமான நுட்பத்தைக் கொட்டினாலும் அது எடுபடாது. 'றெக்க'யில் நிகழ்ந்திருக்கும் பரிதாபமான தோல்வி இதுதான்.

தனது பால்ய கால தோழியான 'மாலா அக்காவை' பல வருடம் கழித்து ஒரு சிக்கலான நேரத்தில் லிஃப்ட் ஒன்றினுள் நாயகன் சந்திப்பதாக ஒரு காட்சி வருகிறது. பார்வையாளன் சற்று நெகிழ்வுபூர்வமாக உணரும் காட்சி இது ஒன்று மட்டுமாகத்தான் இருக்கும். இதுவும் நாடகீயத்தனம் கொண்டதுதான் என்றாலும் இதர மொண்ணைத் தனமான காட்சிகளோடு ஒப்பிடும்போது 'இரு கோடுகள் '  தத்துவம் போன்று இது சிறந்ததாக தோன்றி விடுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை.


***

"ஒரு அட்வைஸ் சொல்றேன், கேக்கறியா.. பில்டப்பை குறைச்சுட்டு நேரா மேட்டருக்கு வா'.. என்று ஒரு காட்சியில் வில்லனிடம் நாயகன் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. இதை இயக்குநர் தமக்கே நிறைய முறை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு வில்லன்கள் குறித்தான மிகையான சித்திரங்கள் முதலில் சொல்லப்படுகின்றன. நாயகன் கடத்தவிருக்கும் பெண்ணின் தந்தை, மதுரையில் எத்தனை பெரிய அரசியல்வாதி  என்பதும் அவர் வீட்டு வாசலில் காலை வைத்தாலே வெட்டிவிடுவார்கள் என்றெல்லாம் மிரட்டலாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகன் அங்கே செல்லும்போது வீட்டு வாசலில் வாட்ச்மேன் கூட இருப்பதில்லை. 

ஆனால் நாயகியுடன் கிளம்பும்போது மட்டும் எங்கிருந்தோ வந்த சுமார் நூறு  அடியாட்கள் நாயகனைத் துரத்துகிறார்கள். 'சர்ஜிக்கல் தாக்குதல்' மூலம் அவன் ஒவ்வொருவராக வீழ்த்திக்கொண்டே முன்னகர்கிறான். அந்தப் பகுதியில் மின்தடை உள்ள நேரத்தை முன்னே அறிந்துகொண்டு அதன் மூலம் அவன் தப்பிப்பதை நாம் சமயோசித சாகசம் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது  நகைச்சுவை என்று பார்ப்பதா என்று நீண்ட நேரம் குழம்ப வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது, மின்மிகை மாநிலம் என்று அரசு தரப்பில் சொல்லப்படும் தமிழகத்தில் 'மின்தடை'யுள்ளதாக ஒரு காட்சியில் சித்தரிப்பதின்  மூலம் இத்திரைப்படத்தை ஓர் அரசியல் விமரிசனப் பிரதியாகவும் கருதலாம் என்று இதை வலிந்து பாராட்ட விரும்புபவர்கள் ஒரு காரணம் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகத்தில் உள்ள அத்தனை ராணுவமும் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையுடன் நாயகன் இருப்பதே, 'இது சினிமா, இது சினிமா' என்கிற செய்தியை நம் முகத்தில் அறைந்து சொல்லிபடியே இருக்கிறது. இந்தச் சிக்கல்களை சற்றாவது யதார்த்தத்துடன் எதிர்கொள்ளும் பரபரப்போ திட்டமோ என்று எதுவுமே அவனிடம் இருப்பதில்லை. பூனை - எலி போன்று புத்திசாலித்தனமாக நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தை, செயற்கையான, மிகை சாகச சித்தரிப்புகளின்  மூலம் 'எப்படியும் நாயகன்தானே ஜெயிக்கப் போகிறான்' என்று விட்டேத்தியான சோர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

இதில் ஆறுதலாக இருக்கிற ஒரேயொரு விஷயம் என்னவெனில், நாயகனின் சண்டைக்காட்சிகள் மசாலா திரைப்படங்களுக்கு இணையானதாக இருந்தாலும், இதர காட்சிகளின் வசனங்களில், உடல்மொழியில் விஜய்சேதுபதி தன்னுடைய இயல்பான நடிப்பை பெருமளவில் விட்டுத்தராமல் இருப்பதுதான். 'பஞ்ச் டயலாக் பேச மாட்டேன். பஞ்சு மாதிரி பேசுவேன்' என்று ஒரு காட்சியில் அவர் சொல்வதை  பெரும்பாலும் பிடிவாதமாக பின்பற்றுவது மட்டுமே இந்தச் சத்தங்களுக்கு இடையில் சற்று ஆறுதல்.

***

அதேதான். சமீபகால தமிழ் சினிமாவின் நாயகிகளைப் போலவே இதன் நாயகியும் புத்தி பேதலித்த மாதிரியே செயற்படுகிறார். பின்னர் வரும் காட்சிகளின் மூலம் இயக்குநர் மொண்ணையாக சமாதானம் சொல்ல முயன்றாலும், நாயகனைப் பார்த்தவுடனேயே அவன் மீது உலகளவுக்கு நம்பிக்கை வைத்து ஓர் இளம்பெண் கிளம்பி விடுவதும் காதலிக்கத் தொடங்கிவிடுவதும் அத்தனை அசட்டுத்தனமான சித்தரிப்புகளாக இருக்கின்றன. 

ஹீரோக்கள் ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கான இடம் அவர்களுக்கான இளமைப் பொலிவில் மட்டுமே அமைந்திருப்பது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். லஷ்மி மேனன், தனது முந்தைய திரைப்படங்களின் தோற்றத்தில் இருந்த  வசீகரத்தைப் பெருமளவு இழந்திருக்கிறார். விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியில் தன் உடம்பெங்கும் காற்று ஏற்றிக் கொண்டு தோற்றமளிப்பது போல இவர் ஆகிவிட்டிருப்பதைக் காண நெருடலாக இருக்கிறது. 

நாயகியைப் போலவே அவரது அம்மா, பாட்டி, வில்லன்கள், நாயகனின் தந்தை என்று ஏறத்தாழ எல்லோருமே புத்தி பேதலித்தவர்கள் போலவே இருக்கிறார்கள். 

நாயகன் ஏன் காதலர்களை இணைத்து வைப்பதில் இத்தனை ஆர்வம் காட்டுகிறான் என்பதற்கு ஒரு கொடுமையான பிளாஷ்பேக் வருகிறது. அசோகன், நம்பியார் காலத்து பிளாஷ்பேக். அதிலும் வில்லன் துரத்திக் கொண்டிருக்கும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் நிதானமாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நாயகன் இளம் வயதில் தன்னுடைய ஆசிரியையிடம் காதலைச் சொல்ல முற்படுவதாக வேறு சில காட்சிகள் வருகின்றன.. இளைஞர்களை கெடுத்தது போதாதென்று 'பாக்யராஜ்தனமான' சிறுவர்களைச் சித்தரிப்பதின் மூலம் அவர்களையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் பாழ்படுத்தி விடுவார்கள் போலிருக்கிறது. 'திருநாள்' என்கிற காவியத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி இதிலும் வந்து விடுமோ என்று கூட பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, அந்த விபத்தெல்லாம் நடக்காமல் 'லவ்' என்பது 'அன்பு' என்று சிறுவன் தாமதமாகப் புரிந்து கொள்வதால் நாம் தப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

மற்ற சாதாரண பாத்திரங்கள் மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருக்கும்போது, திறமையான நடிகரான கிஷோரை 'பைத்தியக்கார' பாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர். இதன் மூலம் கிஷோரின் திறமை பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். 'மாலா அக்காவாக' நடிப்பவர் சற்று தேவலை. ஆனால் இவரை தொலைக்காட்சி சீரியல்கள் விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். அத்தனை டிராமா. நகைச்சுவை செய்ய வாய்ப்பில்லாமல் ஓரமாக நிற்க வேண்டிய அவலம் சதீஷுக்கு.

***

'கும்கி' என்கிற ரெடிமேட் மாவில் இன்னமும் பிடிவாதமாக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் டி.இமான். வேக தாளயிசைப் பாடலாக 'விர்ரு விர்ரு' என்று வரும் பாடலைக் கேட்டாலே நமக்கு 'சுர்'ரென்று கோபம் வருகிறது. 'டால்பி' நுட்பத்தில் இவருடைய பின்னணி இசையின் அலறலைக் கேட்க கேட்க நமக்கு 'றெக்க' முளைத்து வெளியில் பறந்து விட்டால் கூட தேவலை என்றாகி விடுகிறது. அசந்தர்ப்பமான நேரத்தில் தடைக்கற்களாக  வரும் 'டூயட்'கள் எரிச்சலையூட்டுகின்றன. 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், சண்டைக்காட்சி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சில நுட்பக் கலைஞர்களின் உழைப்பெல்லாம் அபாரம்தான். ஆனால் அத்தனை உழைப்பும் எதற்காக பயன்படுகிறது என்பதில்தான் அதன் பொருள் அர்த்தமாகிறது. 

விஜய் சேதுபதி தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தை சுயபரிசீலனையோடும் தெளிவான திட்டங்களோடும் தீர்மானிக்க வேண்டிய எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது 'றெக்க'. அவரது தொடர்ச்சியான, வெற்றிகரமான மைல் கல்களில் ஒரு தடைக்கல்லாக நிற்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com