சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: நகைச்சுவைப் போராட்டம்!

'ரெமோ' ஒரு சம்பிரதாயமான கேளிக்கைத் திரைப்படம்...
சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: நகைச்சுவைப் போராட்டம்!

பெண்கள் நடிக்க முன்வரத் துணியாத காலக்கட்டத்தில் ஆண் நடிகர்களே பெண் வேடத்தையும் கையாண்டார்கள். தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இந்த வழக்கம் இருந்தது நமக்குத் தெரியும். 'ஸ்திரிபார்ட்' என்று அழைக்கப்படும் இந்த வேடத்தை சிவாஜி கணேசன் முதற்கொண்டு பல பழைய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். எதிர் பாலினமான  பெண் வேடத்தில் நடிக்கத் துணிவதென்பது ஒவ்வொரு ஆண் நடிகனுக்கும் மிகப் பெரிய சவால். ஆனால் இதை எள்ளி நகையாடுகிறவர்களும் பாலியல் நோக்கி கொச்சையாக கிண்டலடிப்பவர்களும் உண்டு. ரஜினிகாந்த் முதற்கொண்டு தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி நடிகரும் தங்கள் திரைப்படங்களின் சில காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் இதை நிறைய கையாண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அசட்டு நகைச்சுவை அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். தீவிரமான பாத்திரப்படைப்பாக அமைந்திருக்காது. 

ஒரு கதாநாயகன், பெரும்பாலான காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்த திரைப்படங்களாக கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' மற்றும் பிரசாந்தின் 'ஆணழகன்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். மூன்றாம் பாலினத்தவர்களாக பிரகாஷ்ராஜ் (அப்பு), சரத்குமார் (காஞ்சனா 2) போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடிகையாக இருக்கும் இளம்பெண், உண்மையில் பெண்ணல்ல என்பது இறுதியில் வெளிப்படுவது போல அதன் திரைக்கதை அமைந்திருக்கும். சமீபத்தில் வந்த இருமுகன் வரை Cross dressing பாத்திர வடிவமைப்பில் தோராயமாக இந்த உதாரணங்களைச் சொல்லலாம். 

***

தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள், பெண் பாத்திரங்களில் நடிக்கும்போது அதில் பெரும்பாலும் நிகழும் ஒரு முரணைப் பற்றி திருநங்கை ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 'பெண் பாத்திரங்களில் நடிக்கும் ஆண்கள், ஏன் பெண்களைப் போல நடிக்க முயலாமல், திருநங்கைகளைப் போல தங்களின் உடல்மொழியை அமைத்துக் கொள்கிறார்கள்?' என்பதே அந்தக் கருத்து. இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றுகிறது. காவல்துறை அதிகாரி உள்ளிட்ட வேறு எவ்வித பாத்திரமென்றாலும் அதற்காக தங்களின் உடலை வருத்தியும் மெனக்கெட்டும் உருமாற்றிக் கொள்ளும் நாயகர்கள், பெண் வேடத்தில் நடிப்பதென்றால் மட்டும் அதை மிக எளிதாக, தன்னிச்சையாக திருநங்கையின் உடல்மொழியாக மாற்றிக் கொள்ளும் அபத்தத்தை அவர் சரியாக சுட்டிக் காட்டியிருந்தார். இது மட்டுமன்றி, அவ்வாறான உடல்மொழியை ஆபாசமான கொனஷ்டைகளாகக் கையாளும் முறையற்ற போக்கும் கூட மிக அதிகம். 

இந்த நோக்கில் மிக முக்கியமான விதிவிலக்காக, ஒரு நடுத்தர வயது பிராமணப் பெண் பாத்திரத்தை அதன் நளினத்தோடு வெளிப்படுத்தியதில் கமல்ஹாசன் வித்தியாசப்பட்டிருந்தார். 'அவ்வை சண்முகியின்' படப்பிடிப்புத் தளத்திலேயே இவரை அடையாளம் தெரியாத அளவுக்கு இவரது ஒப்பனை சிறப்பாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதிலும் கூட மேற்குறிப்பிட்ட ஆபாச கொனஷ்டைகள் இல்லாமில்லை. 

ஆண்  நடிகர், ஒரு பெண் பாத்திரத்தை மிக தீவிரமாக கையாளும் ஒரு திரைக்கதையை, நடிப்பைப் பற்றி இயக்குநர்களும் நடிகர்களும் ஏன் யோசிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. 

**

இந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் 'ரெமோ'. எல்லா மசாலா திரைக்கதைகளும் சலிக்க சலிக்க சொல்லி முடிக்கப்பட்டிருக்கும் சமகால சூழலில், தங்கள் திரைப்படத்தின் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் திரையரங்குக்கு வரச் செய்வதற்காகவும் பல்வேறு கிம்மிக்ஸ் குட்டிக்கரணங்களை இயக்குநர்களும் நடிகர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. திரைக்கதைக்கு தேவையேயில்லாமல் வித்தியாசமான வேடங்கள் அல்லது அவ்வாறான வித்தியாசமான தோற்றங்களைத் தீர்மானித்து விட்டு பிறகு அதற்காக வலிந்து உருவாக்கப்பட்ட திரைக்கதைகள் என்று பல விபத்துகள் தமிழ்த் திரை வெளியில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

'ரெமோ' திரைப்படத்தில், திரைக்கதை கோரும்படியாக, அதற்கு அவசியமாக சிவகார்த்திகேயனின் 'பெண் வேடம்' அமைந்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்திலும் ஆபாச கொனஷ்டைகள் இருப்பதை இயக்குநரால் தவிர்க்க முடியவில்லை. பெண் வேடத்தில் இருக்கும் ஆணை, அடையாளம் தெரியாமல் காமுறும் இதர ஆண்களின் அபத்தங்கள், 'நகைச்சுவை' என்ற பெயரில்  அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தாண்டி, அவ்வை சண்முகியின் கமல்ஹாசனைப் போலவே, சிவகார்த்திகேயனும் பெண் உடல்மொழியின் நளினத்தை சில காட்சிகளில் சற்று தீவிரமாக பின்பற்ற முயன்றிருப்பதும் ஒப்பனை முதற்கொண்டு உடல்மொழி வரையான மெனக்கிடலும்  பாராட்டப்பட வேண்டியது. இத்திரைப்படத்தின் USP என்று இந்தப் பாத்திரத்தை மட்டுமே சொல்ல முடியும். சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் வணிகச் சந்தையைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சம் இந்த 'பெண்  வேட' கதாபாத்திரமே.

***

எந்தவித வேலை வெட்டியிலும் ஈடுபாடின்றி இருக்கும் இளைஞன் எஸ்கே. (சிவகார்த்திகேயனின் சுருக்கம்). புகழ்பெற்ற நடிகனாக  வேண்டும் என்பதே அவனது கனவும் லட்சியமும். பெண்களைப் பார்த்து பேசுவது அவனுடைய பலவீனம். இதனாலேயே நடிப்பு வாய்ப்பு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. அதுவரை காதல் என்கிற உணர்வே வராத அவனுக்கு காவ்யா (கீர்த்தி சுரேஷ்) என்கிற இளம் பெண்ணைப் பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. தன் மனதினுள் ஏற்படும் இந்த தீவிரமான மாற்றத்தை உணரும் அவன், அதை வெளிப்படுத்துவதற்காக செல்லும் நாள், அந்தப் பெண்ணின் நிச்சயதார்த்த நாளாக அமைந்து விடுகிறது. மனமுடைந்து போகும் அவன் தன் நடிப்பு கனவையாவது அடைவோம் என்று தீர்மானிக்கிறான். ஒரு திரைப்பட வாய்ப்புக்காக 'நர்ஸ்' வேடத்துக்கு மெனக்கெட்டு தன்னை ஒரு பெண் போல் ஒப்பனை செய்து கொள்கிறான். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை என்றாலும், தான் விரும்பிய இளம் பெண் தன்னிடம் வந்து உரையாடும் சந்தர்ப்பம் தற்செயலாக அமைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா என்று அவன் செய்யும் நகைச்சுவைப் போராட்டங்களே 'ரெமோ'.

ஒரு சாகச நாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் சிவகார்த்திகேயனின் இடம். அவர் அதை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற திரைக்கதைகளைத் தொடர்ந்து தேர்வு செய்வதால்தான் முன்னணி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்குப் பிடிக்கும் நாயகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் என்கிற கணக்கு உண்டு. கூடுதலாக இளம் பெண்களுக்கும் பிடித்தமான நடிகராக உள்ளார் சிகே. ரெமோவும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும் திரைக்கதை. வழக்கமான 'வெட்டி இளைஞன்' வேடம், நர்ஸ் வேடம் என்று இரண்டிலுமே நன்றாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்த நோக்கில் ஒரு சராசரியான கேளிக்கை திரைப்படத்தின் தேவையை இந்தத் திரைப்படம் பூர்த்தி செய்கிறது. அதற்கு மேல் இத்திரைப்படத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. 

சில இடங்களில் 'குஷி' ஜோதிகாவை நினைவுப்படுத்தினாலும், நடிப்பு தேவைப்படும் இடங்கள் கீர்த்தி சுரேஷுக்கு அமைந்திருக்கிறது. அதைச் சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கும் காதலனுக்கும் இடையிலான தேர்வில் ஏற்படும் குழப்பத்தை, மனச்சிக்கலை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். சதீஷின் நகைச்சுவை வசனங்கள் நிறைய இடங்களில் வரவேற்பைப் பெறுகின்றன. பெண் வேடமிட்ட சிகேவைச் சுற்றி சுற்றி வரும் யோகி பாபுவின் நகைச்சுவையின் வடிவமைப்பு சற்று எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. 'ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வருவான்' எனும் வசனத்தில் புகழ்பெற்ற சரண்யா இதில் எதிர்மறையாக 'உருப்படவே மாட்டேடா' என்று தன் மகனை சபித்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அதே மாதிரியான நடிப்பு சலிப்பைத் தருகிறது. 

***

நவீன சினிமாவின் ஒளிப்பதிவில் ஓர் அழகியல் புரட்சியையே ஏற்படுத்தியவர் பி.சி. ஸ்ரீராம். தொடக்க கால திரைப்படங்களில் அவரது இருப்பை பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருப்பார். ஆனால் ஒரு நல்ல படைப்பில் எந்தவொரு நுட்ப அம்சமும் அதன் திரைக்கதைக்கு துணையாகத்தான் நிற்க வேண்டுமே ஒழிய, துருத்திக் கொண்டு நிற்கக்கூடாது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் என்பது படம் பார்க்கும் போது நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்குக் காட்சிகள் மிக இயல்பாகவும், காதல் அடிப்படையிலான திரைக்கதை என்பதால் வண்ணமயமான அழகோடு அமைந்திருந்தன. இதில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதால்தான் ஒலி வடிவமைப்பு என்கிற விஷயத்தையெல்லாம் நாம் சம்பிரதாயமாகப் பாராட்டுகிறோம். இதைப் போன்ற பல நுட்பக்கலைஞர்களின் உழைப்பை நாம் அறிவதில்லை. 

பொதுவாக அனிருத்தின் பாடல்களில் இரைச்சல் அதிகமாக இருந்தாலும் காதல் தொடர்பான மெல்லிசைப் பாடல்கள் வசீகரமாக அமையும். அதிலும் சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் நிச்சயம் நல்லதொரு மெலடியை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மாயம் எதுவும் இத்திரைப்படத்தில் சாத்தியமாகவில்லை. எல்லோமே இரைச்சல். பின்னணி இசையும். 

எப்பாடு பட்டேனும் தன் காதலைப் பெற்று விடுவதற்காக ஓர் இளைஞன் செய்யும் நகைச்சுவையை அதன் சாத்தியமான எல்லைக்குள் சுவாரசியமாகவே உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். காதலுக்காக அத்தனை சிரமங்களை எதிர்கொள்ளும் அந்த இளைஞன், தான் விரும்பிய பெண் முதன்முறையாக தன்னிடம் காதலைச் சொல்லும் போது பெண் வேடத்தில் இருக்க வேண்டிய அபத்த துயரமான சூழல் போன்று சில விஷயங்கள் இத்திரைப்படத்தில் நன்றாக அமைந்துள்ளன. போலவே பெண் வேடத்தைக் கலைக்க வேண்டிய சூழல் நாடகத்தனமானதாக இருந்தாலும் பொருத்தமான தொடர்ச்சியோடு அமைந்துள்ளது. 

ஆனால் இளைஞனின் காதல் போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தியதில் இதர பல விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார். எவ்விதப் பயிற்சியும் இல்லாத இளைஞன் எவ்வாறு மருத்துவனையில் பெண் செவிலியாகப் பணிபுரிய முடியும் உள்ளிட்ட நிறைய தர்க்கப் பிழைகள் மலிந்திருக்கின்றன. இதை நியாயப்படுத்தும்படியான காட்சிகளை, வசனங்களை இணைத்திருக்கலாம். போலவே ஒரு பெண்ணைத் துரத்தி துரத்தி காதலைச் சம்பாதிப்பது அல்லது பிடுங்குவது போன்ற நாயகர்களின் தேய்வழக்கு காட்சியமைப்புகளை இயக்குநர்கள் கைவிடலாம். இவை இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் ஆபத்தை சமூக உணர்வோடும் சிந்திக்கலாம். ஓர் ஆண் தனது கம்பீரத்தால், நல்லியல்பால் காதலை அடைவது போன்ற நல்ல உதாரணங்களை முன்வைக்கலாம். காதலைப் பற்றிய சரியான புரிதலோடு அமைந்த திரைக்கதைகளை உருவாக்கலாம். தன்னுடைய காதல் தோல்விக்கு பெண்கள் மீது பழியைப் போட்டு புலம்பும் அபத்தங்களைத் தவிர்க்கலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள், உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இவை நகைச்சுவைப் பூச்சோடு வெளிப்பட்டிருப்பதால் புன்னகையோடு கடக்க வேண்டியிருக்கிறது. பாறாங்கல்லைத் தலைமேல் தூக்கி மிரட்டி காதலைக் கேட்கும் 'சேது' மாதிரியான வன்முறைக் காதலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

**

பல வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு பாரசீக கவிதையின் ஒரு வரியின் கருத்து மட்டும் மங்கலாக நினைவில் இருக்கிறது. தன் காதலியின் அருகாமையில் எப்போதுமே இருக்கவேண்டும் என்கிற தீரா ஆசையில் ஓர் இளம் கவிஞன் சொல்கிறான். 'நான் உன் சகோதரனாக பிறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே. ஊராரின் பார்வைக்கு அஞ்சாமல் உன் வீட்டில், உன் அருகாமையிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே' 

காதலின் பித்து உள்ளுக்குள் நிறைந்திருக்கும் நிலையில், காதலின் பிரிவுத் துயரத்தில், உறவுகளின் பொருள் கூட அவனுக்கு  உறைப்பதில்லை. கலாசாரக் காவலர்கள் ஒருவேளை அறச்சீற்றத்துடன் இதை எதிர்த்தாலும், மனம் முழுக்க காதல் நிறைந்திருப்பவர்களால்தான் இந்த நோக்கில் அந்தக் கவிதை வரியின் உள்ளார்ந்த தன்மையை புரிந்து கொள்ள முடியும். இதில் வரும் இளைஞனும் அம்மாதிரியான ஒரு பித்து நிலையில் பெண் ஒப்பனையுடன் குறுக்கு வழியில் தன் காதலை நிறைவேற்றிக் கொள்வதை தவிர வேறெந்த வன்முறையையும் செய்யவில்லை. 

ஆனால் இத்திரைப்படம் குறித்தான சில எதிர்விமரிசனங்கள், அதீதமான தொனியில் ஒலிக்கும் கண்டனங்களைக் கண்டேன்.

பொறுக்கி நாயகர்கள் தங்களின் காதலைப் பிடுங்கிக் கொள்ளும் பெருமிதத்தோடும் அது நிறைவேறாத பட்சத்தில் அதற்கும் பெண்களையே குறைசொல்லி 'அடிடா அவளை' என்று வன்முறை விதைகளைப் பரப்பும் திரைப்படங்களை கண்டிப்பது தேவையானதே. ஆனால் இந்த சாகசத்தோடு நின்றுவிடும் ஆபத்தான படங்களைப் பிரதானமாகக் கண்டிப்பதை விட்டு ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் அரசியல் சரிநிலைகளைக் கூர்மையாகக் கவனிப்பது வேடிக்கையானது. 

இத்திரைப்படத்திலும் அதுபோன்ற கருத்தியல் அடிப்படைக் காட்சிகள் அமைந்திருந்தாலும், இணைக்கோடாக அதை இயக்குநர் சமன் செய்திருக்கும் காட்சிகளையும் கவனிக்கவேண்டும். காதல் திருமணத்தில் ஏன் வெறுப்பு என்று நாயகன் கேட்பதற்கு காதல் விவகாரத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு மருத்துவனையில் இருக்கும் பெண்ணை ஆவேசமாக உதாரணம் காட்டுகிறாள் நாயகி. சரியான விஷயம். ஆனால் எல்லா ஆண்களுமே இம்மாதிரியான பொறுக்கித்தனங்களில் ஈடுபடுவதில்லை. உண்மையாகவே தன் காதலைப் புரிய வைக்கப் போராடும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அந்தத் தரப்பையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. 

பெண் ஒப்பனையிட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதுடன் இத்திரைப்படம் நின்றுவிடவில்லை. அவன் செய்யும் தவறை நண்பர்கள் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காதல் வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் காதல் நிறைவேறிய செய்தி அறிந்தவுடன் அதுவரையான தவறின் மீது குற்றவுணர்வு எழுகிறது. அதற்காக மனம் வருந்துகிறான். ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் தன் தவறை நாயகியிடம் ஒப்புக் கொள்கிறான். நாயகிக்கும் அவன் ஏமாற்றியது குறித்தான கடுமையான கோபம் இருக்கிறது. அது மெல்ல தணியும் காட்சிகளோடுதான் படம் நிறைகிறது. 

அதுவரை காதலுணர்வே தோன்றாதவன், உள்ளுணர்வு பலமாக உந்த ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்கத் தொடங்கினாலும் அவள் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்ததும் மரபை மீற நினைக்காமல்  ஒதுங்கிப் போகிறான். ஆனால் அதற்குப் பிறகு நிகழும் சில சம்பவங்கள் அவனுக்குள் வேறு விதமான சமிக்ஞையை உணர்த்துகின்றன. இப்படியான திரைக்கதைப் பயணத்தை இயக்குநர் சரியாகவே கையாண்டிருக்கிறார். 'பையன்களை அழ விடறதே பொண்ணுங்க வேலை' என்று பெண்களைக் குற்றம் சொல்லும் வசனங்கள், இன்றைய பெரும்பான்மையான பார்வையாளர்களான முதிராத இளைஞர்களை திருப்தி செய்யும் நோக்கில் எழுதப்பட்டவை என்பது அரங்கில் ஒலிக்கும் பலத்த கைத்தட்டல்கள் மூலம் தெரிகிறது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். 

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் எத்தனை சதவிகிதம் மணமகளுடைய தேர்வின் பங்களிப்பும் மனப்பூர்வமான ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. எத்தனை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்செயலான தேர்வை பாசத்துக்குக் கட்டுப்பட்டு கண்மூடித்தனமான ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமே பெரும்பாலான பெண்களுக்கு அமைகிறது. அவளின் ரசனை, விருப்பம், உள்ளார்ந்த தேர்வு, குழப்பம் ஆகியவை குறித்து அந்தப் பெண் உட்பட எவருமே யோசிக்கிறார்களா என்கிற கேள்வியையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. 

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி 'ரெமோ' ஒரு சம்பிரதாயமான கேளிக்கைத் திரைப்படம். அதற்கு மேல் இதற்கு ஏதும் மதிப்பில்லை. என்னளவில் சில இடங்களில் அமைந்த சலிப்பைத் தவிர ஒட்டுமொத்தமாக, நகைச்சுவையின் மீதான ஒரு காதல் திரைப்படத்தை கண்ட அனுபவமே என்னுள் நிறைந்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com