இயக்குநர் மணிகண்டனின் 'ஆண்டவன் கட்டளை': சினிமா விமரிசனம்

பிரதான பாத்திரங்கள் தொடங்கி சிறிய பாத்திரங்கள் வரை மிகப் பொருத்தமாக நடிகர்கள் தேர்வு ...
இயக்குநர் மணிகண்டனின் 'ஆண்டவன் கட்டளை': சினிமா விமரிசனம்

ஒரு திரைப்பட இயக்குநருக்கு இரண்டாவது திரைப்படம் எப்போதுமே ஒரு கண்டம். தன் முதல் திரைப்படத்தில் அத்தனை வருட மெனக்கிடலையும் கவனத்தையும் போட்டுச் செதுக்கியிருப்பார். அதன் வெற்றி இரண்டாவது படத்தின் முன்பாக ஒரு பெரிய சவாலாக நிற்கும். இதையும் வெற்றிகரமாகத் தாண்டிவிட்டால் அவரது படைப்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படக்கூடியதொன்றாக மாறிவிடும். எனவே மூன்றாவதில் இன்னமும் கவனமாக இருக்க வேண்டிய சூழல். (பா.ரஞ்சித் அப்படியொரு கவலையை ஏற்படுத்தினார் என்பதை நினைவுகூரலாம்). 

ஆனால் மணிகண்டன் இந்த எதிர்பார்ப்பை அபாரமாகப் பூர்த்தி செய்திருக்கிறார். 'காக்கா முட்டை' மற்றும் 'குற்றமே தண்டனை'  ஆகிய இரண்டு திரைப்படங்களும் 'பிலிம் பெஸ்டிவல்' பாணியில் அமைந்த படைப்புகள். அதற்கு மாறாக 'ஆண்டவன் கட்டளை' வெகுஜன பாணியில் அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் பாணியிலும் ஓர் இயல்பான திரைப்படத்தை தர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் 'ஆண்டவன் கட்டளை'.  அதிலும் பெரும்பாலான இதர தமிழ் சினிமாக்களின் அபத்தங்களைப் பார்க்கும்போது இம்மாதிரியான முயற்சிகள் மேலதிகமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.  எந்தவொரு ஆபாசமும் மசாலா விஷயங்களும் இல்லாமல் எளிய, சுவாரசியமான காட்சிகளுடன் நகரக்கூடிய திரைப்படத்தை மணிகண்டன் தந்திருக்கிறார். 

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பொதுவாக தங்கள் திரைப்படங்களின் கருப்பொருளுக்காக செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் போய் தேடுவதாக நாடகமாடும்போது, நம்முடைய வாழ்வைச் சுற்றியே ஏராளமான சுவாரசியக் கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பதை நிரூபிக்கும் திரைக்கதை இது. (ஆனால் எதற்காக பழைய திரைப்படத்தின் தலைப்பை அவசியமின்றி மறுபடியும் உபயோகித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை).
 
***
'ஆண்டவன் கட்டளை' எதைப் பற்றியது?

சாதாரண நேரத்தில் அலட்சியமாகச் சொல்லப்படும் ஒரு பொய், அடுக்கடுக்காக வளர்ந்து பெரிய சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் ஆபத்தைப் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. இது ஒரு பக்கம்.

இன்னொன்று, அரசு இயந்திரம் இயங்கும் விதத்தைப் பற்றி நமக்கு பல்வேறு விதமான முன்தீர்மானமான கருத்துகளும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. அரசு அலுவலர்கள் எல்லோருமே லஞ்சம் வாங்குபவர்கள், மெத்தனமாக இயங்குபவர்கள், பொதுமக்களை அலட்சியமாக கையாள்பவர்கள் என்பன போன்று பல விஷயங்கள்.

இது நடைமுறையில் பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், அந்த  ஊழல் அமைப்பிலும் கூட வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாக, நேர்மையாக உழைக்கிற கனவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'ஆண்டவன் கட்டளை' அவ்வாறான நபர்களின் மீது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது. 

எந்தவொரு அரசு அலுவலகத்துக்குள் செல்வதற்கு முன்னாலும் நம்முள் படிந்திருக்கும் அவநம்பிக்கைகள், அதுசார்ந்து பல தயக்கங்களையும் அச்சுறுத்துதல்களையும் ஏற்படுத்துகின்றன.  எனவே நேரடியாக முயற்சி செய்யாமல், இதற்கான குறுக்கு வழி இருக்கிறதா என்று தேட ஆரம்பித்து விடுகிறோம்.  

இந்த மாதிரியான நபர்களுக்காகவே காத்திருக்கும் இடைத்தரகர்கள், அரசு அமைப்பின் பலவீனங்களைப் பூதாகரமாக ஊதிப் பெருக்கி, அதன்மூலம் தங்களின் வருமானத்தை ஈட்டுகிறார்கள். 'இவர்கள் இல்லாமல் அந்தக் காரியம் நடைபெறவே முடியாது' என்கிற மாயையை நமக்குள் விதைப்பார்கள். இப்படிச் சட்டத்தின் ஒட்டைகளில் புகுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எந்தவொரு எச்சரிக்கையையும் தராமல் அப்போதைக்கு தங்களின் வருமானம் குறித்தே சிந்திப்பார்கள். உங்களை எதையும் யோசிக்க விடாமல் 'அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்ல..பார்த்துக்கலாம் ' என்று சட்டத்துக்குப் புறம்பான பல விஷயங்களை எளிதான தொனியில் முன்வைப்பார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களும் பலர் உண்டு. அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் ரகசியக் கூட்டணியும் இருக்கும். இதன்மூலம் இந்த ஊழல் கலாசாரத்தை வளர்ப்பதில் நாமும் ஒரு பங்காக இருக்கிறோம். 

இவர்களின் ஜம்பங்களை நம்பி நாமும் பல ஆவணங்களில் மேம்போக்காக கையெழுத்துப் போட்டு, குறுக்கு வழியில் எளிதாக செல்ல விரும்புகிற அந்தப் பயணம், பல சமயங்களில் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்தச் சமயத்தின் வேதனையுடன் நீங்கள் அவர்களை மறுபடியும் அணுகினால் அதற்கும் கூட பல்வேறு வழிகளை வைத்திருப்பார்கள். அவை உங்களை மேலதிகச் சிக்கலுக்கே இட்டுச் செல்லும். அவர்களுக்கு சட்டரீதியான ஆபத்து ஏற்படும் எனில் சடுதியில் காணாமற் போய் விடுவார்கள். 

இடைத்தரகர்களின் இப்படிப்பட்ட பல்வேறு வகையான மோசடிகளையும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரை நேரடியாகத் தொடர்பு கொண்டால் வேலை எளிதில் முடிந்து விடக்கூடிய சாத்தியத்தையும், பிரசாரத் தொனியில்லாமல் அழுத்தமான இயல்புடன் கூடிய காட்சிகளாக முன்வைக்கிறது 'ஆண்டவன் கட்டளை'.

***

மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருப்பவன் காந்தி (விஜய் சேதுபதி). ஊரைச்சுற்றி கடன். அக்காவின் நகைகளை அடமானம் வைத்திருப்பதால் அது சார்ந்த உறவுச்சிக்கல் வேறு. அந்த ஊரில் உள்ள ஒரு 'டுபாக்கூர்' பேர்வழி பாரின் சென்ட் வாசனையுடன் வந்திறங்குவதைப் பார்த்து தானும் அது போல வெளிநாடு சென்று சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகிறான்.

'டூரிஸ்ட்' விசாவில் செல்ல மனைவியின் பெயர் நிச்சயம் தேவை என்று ஆலோசனை சொல்லப்படுவதால் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தில் 'கார்மேக குழலி' என்று தனக்குப் பிடித்தமான, கற்பனையான பெயரை நிரப்புகிறான். ஆனால் இந்தத் தொடக்கப் பொய் அவனைப் பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது. அந்தப் பெயரில் உள்ள பெண்ணைத் தேடிச் சென்றதில்  செய்தி சானல் நிருபராக இருக்கும் பெண்ணை (ரித்திகா சிங்) சந்திக்கிறான். இவனுக்கு உதவ வருவதால் அவளுக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

காந்தி வெளிநாட்டுக்குச் சென்றானா, அவனுடைய சிக்கல்கள் என்னவாயின, கார்மேக குழலி யார் என்பது தொடர்பான காட்சிகள் மிகவும் இயல்பான நகைச்சுவையுடனும் அதே சமயத்தில் தீவிரத்தை இழக்காமலும் விரிகின்றன.

***
தனக்கு ஏற்றவாறான திரைக்கதையை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதில் விஜய் சேதுபதி வியக்க வைக்கிறார். சில மலையாளத் திரைப்படங்களைப் பார்க்கும்போது 'இப்படி இயல்பாக நடிக்கும் நடிகர்கள் தமிழிலும் இருக்க மாட்டார்களா' என்று தோன்றுகிற ஏக்கம் விஜய் சேதுபதியால் சற்று குறைகிறது. காட்சிக்குத் தேவையான நடிப்பை அளவாக வழங்குவதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பேச முடியாத நபராக நடிக்க சந்தர்ப்பம் ஏற்படும் காட்சிகளில் அந்த நிலைக்கு  மிக அநாயசமாக மாறுகிறார். தன் ஆண்மை சவாலுக்கு உள்ளாக்கப்படும் ஒரு சூழலில் அதைப் 'பேச முடியாத நிலையில்' வலுவாக எதிர்க்க முற்படும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. 

துபாய்க்குச் சென்று பணியாற்றியது, பிறகு 'கூத்துப்பட்டறை' நாடகக்குழுவில் கணக்காளராகப் பணியாற்றியது, அங்கு நடிப்பை கற்றுக் கொண்டது போன்ற விஜய் சேதுபதியின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், இந்தத் திரைக்கதையுடன் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

'கார்மேக குழலியாக' ரித்திகா சிங். முதல் படத்தில் வெளிப்பட்ட இவரின்  அற்புதமான நடிப்பு, தற்செயலானது  அல்ல என்பதை இந்தத் திரைப்படத்திலும் நிரூபிக்கிறார். ஒரு செய்தித் தொலைக்காட்சி நிருபரின் தன்னம்பிக்கையான உடல்மொழி இவரிடமிருந்து நன்கு வெளிப்படுகிறது. பொதுவெளியில் புழங்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காகப் பெரும்பாலும் இறுக்கமாக இருப்பதை  சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி தன் விருப்பத்தைச் சொல்லும் இறுதிக் காட்சியில் அதுவரையிலான இறுக்கம் கலைந்து நாணத்தை வெளிப்படுத்துவது அத்தனை அழகாக இருக்கிறது. சிறப்பான  காட்சியது. 

***
பிரதான பாத்திரங்கள் தொடங்கி சிறிய பாத்திரங்கள் வரை மிகப் பொருத்தமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது வியக்க  வைக்கிறது. இந்த அம்சம் படத்தின் மிகப் பெரிய பலமாக அமைகிறது. நடிப்புப் பட்டறையின் தலைவராக வரும் நாசர், கணக்குவழக்கில் தம்மை ஏமாற்றும் பணியாளரைக் கோபத்துடன் வெளியேற்றும் ஒரு காட்சியில், தான் 'சீனியர்' நடிகர் என்பதை நிரூபிக்கிறார். 

இதுவரை பெரும்பாலான திரைப்படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நடித்த யோகி பாபுவுக்கு இதில் பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது நகைச்சுவை ஒன்லைனர்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. விஜய் சேதுபதியின் விசா மறுக்கப்பட்டு, இவருக்கு கிடைத்து விடுவதையொட்டி 'லண்டன் சிடிஸன் மேல கைய வைக்காதே' என்பது போன்று இவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. படம் முழுவதிலும் இவர் வந்திருக்கலாமே என்று தோன்ற வைத்திருக்கிறார். 

சீனீயர் மற்றும்  ஜூனியர் வக்கீல்களாக முறையே ஜார்ஜும் விநோதினியும் இயல்பாக நடிப்பை வழங்கியிருக்கின்றனர். பொதுவாகவே சீனியர்களுக்கு தங்களின் ஜூனியர்கள் புத்திசாலித்தனமாக இருப்பது குறித்து ஒரு ரகசிய எரிச்சல் இருக்கும். அந்த நுட்பமான விஷயம் இவர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எதிரொலிக்கின்றன. குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக வரும் பெண்மணியின் நடிப்பு, அத்தனை இயல்பாக இருக்கிறது. சுத்தியலை எடுத்துத் தட்டும் செயற்கைத்தனமான நீதிமன்றக்காட்சிகளிலிருந்து  எத்தனை தூரம் தமிழ் சினிமா விலகி யதார்த்தத்தை நோக்கி நகர்கிறது என்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. 

போலி ஏஜெண்ட்டாக நடித்திருக்கும் இயக்குநர் ஸ்டான்லி, திறமையாக போர்ஜரி செய்யும் கிழவர், நேசன் என்கிற பாத்திரத்தில் வரும் இலங்கை அகதி, வீட்டு புரோக்கர் சிங்கம்புலி, ஒரேயொரு சிறிய காட்சியில் வந்தாலும் இடைத்தரகர்களின் உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்திய ரமேஷ் திலக், நாடகக்குழுவில் வரும் விஜய்சேதுபதியின் நண்பர், அவரின் தோழி பூஜா தேவரியா, பாஸ்போர்ட் அதிகாரி, அங்குப் பணிபுரியும் சீனுமோகன், ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு எகிறும் வீட்டு உரிமையாளர் என்று ஏறத்தாழ எல்லோருமே அவரவர் பாத்திரங்களில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும். 

இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஹரீஷ் பெராடி எனும் மலையாள நடிகரின் அட்டகாசமான நடிப்பைப் பற்றி. இத்திரைப்படத்தில் கடைசிப்பகுதியில், விஜிலென்ஸ் ஆபிசராக வருகிறார். அதுவரை இயல்பான நகைச்சுவையுடன் நகர்ந்து கொண்டிருந்த படத்தின் தொனி, சட்டென்று இறுக்கமாக மாறுவது இவருடைய அபாரமான பங்களிப்பினால் சாத்தியமாகிறது. 'சார், என் பிரெண்டுக்கு என்ன ஆச்சு?’ என்று விஜய்சேதுபதி தொடர்ந்து இவரிடம் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும், காவல்துறை அதிகாரிகளுக்கேயுரிய இறுக்கத்துடன் மெளனத்தைக் கடைப்பிடிப்பது திகிலைக் கூட்டுகிறது. இவரைப் போன்ற அபாரமான நடிகர்கள்  தமிழில் அதிகம் பயன்படுத்தப்படவேண்டும். 

***
போலி ஏஜெண்ட்டுகளால் பாஸ்போர்ட், விசா பெறுவதில்  கடைப்பிடிக்கப்படும் மோசடிகள், தகிடுதத்தங்கள் போன்றவை தொடர்பான நடைமுறைக் காட்சிகள் சற்று விரிவாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் மற்றும் போலி டிராவல் ஏஜெண்ட் அலுவலகம், குடும்பநல நீதிமன்றச் சூழல் போன்றவை யதார்த்தத்துக்கு நெருக்கமாகக் காண்பிக்கப்படுகிறது. இவை நிர்மாணிக்கப்பட்ட அரங்குகள் என்பதை நம்பச் சிரமமாயிருக்கிறது. தங்களின் சொந்தக் கிராமங்களில் வீடு, நிலம் வைத்திருப்பவர்கள், நகரத்துக்கு வரும்போது குருவிக்கூடு போன்ற இடத்துக்காக வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு வகையாக அவமானப்படுத்தப்படும் நடைமுறை அலவங்கள் சார்ந்த கொதிப்புகளும் வெளிப்படுகின்றன. அனுதாபம் தேடும் நோக்கில் அல்லாமல் இலங்கை அகதிகளின் துயரங்களும் ஒரு பாத்திரத்தின் வழியாக இயல்பாக வெளிப்படுகிறது. விவாகரத்து என்பது இளையதலைமுறையிடம் மலிந்துவிட்ட கலாசாரத்தையும் இத்திரைப்படம் ஓரமாகச் சொல்கிறது. 

இதன் திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து அருள்செழியன் மற்றும் அனுசரண் எழுதியுள்ளனர். அருள்செழியனின் சுயவாழ்வில் உண்மையாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்தத் திரைக்கதையின் அடிப்படையாக இருப்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.

சந்தோஷ் நாராயணன் பாணியின் சாயலில் பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கியுள்ளார் இதன் இசையமைப்பாளர் ‘கே’. பாடல்கள் காட்சிப்படுத்தப்படும் விதமும் திணிக்கப்பட்டதாக அல்லாமல், கதையின் போக்குடன் 'மாண்டேஜ்' வகையில் இருப்பது திரைக்கதையில் தடங்கலை ஏற்படுத்தாமல் இருக்கிறது. 

விஜய் சேதுபதியின் விசா மறுக்கப்படுவது, யோகி பாபுவின் வெள்ளந்திதனம் உள்ளிட்ட சில காட்சிகளில், இலங்கை எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி எழுதிய 'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்று குறுநாவல் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. புத்திசாலி போல் நடிக்கும் ஒரு அப்பாவி நபர், டிராவல் ஏஜெண்ட்டுகளால் பலவிதமாகத் தயார்ப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டாலும் எதையாவது சொதப்பி மாட்டிக்கொண்டு கரப்பான் பூச்சி போல திரும்பத் திரும்ப வந்துவிடும் நகைச்சுவையை மையப்படுத்தி எழுதப்பட்டது அந்தப் படைப்பு. 

***
பாஸ்போர்ட் சோதனைக்காக வீட்டுக்கு வரும் கான்ஸ்டபிள், பாஸ்போர்ட் அலுவலக உயர் அதிகாரி போன்றவர்களை நேர்மையாகச் சித்தரிப்பதின் மூலம் அரசு இயந்திரம் ஒட்டுமொத்த ஊழலில் மூழ்கிப்  போய்விடவில்லை என்கிற ஆரோக்கியமான  நம்பிக்கையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் இயக்குநர். இடைத்தரகர்களை நம்பிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்கிற  செய்தி அவர்களிடம் வலுவாக சென்று சேரும்படியான படைப்பு - 'ஆண்டவன் கட்டளை'.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிக்கவும் சிந்திக்கவுமான ஒரு சுவாரசியமான திரைப்படம் தமிழில் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மணிகண்டன் மற்றும் அவரது குழுவினருக்குப்  பாராட்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com