மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை': சினிமா விமரிசனம்

கார்த்தி அடுத்த வருடத்துக்கான தேசிய விருதைப் பெறக்கூடும். அத்தனை அபாரமான நடிப்பு...
மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை': சினிமா விமரிசனம்

ஆண் x பெண் உறவுச் சிக்கலின் வயது என்பது வருடங்களால் கூட அல்ல, யுகங்களால் ஆனது. ஆதாம் - ஏவாள் என்கிற முதற்புள்ளியிலிருந்து இந்த உறவைப் பற்றி நெடுங்காலமாக விதம்விதமாக நாம் உரையாடிக் கொண்டிருந்தாலும் இன்னமும் கூட விளங்கிக் கொள்ள முடியாமலிருக்கும் தன்மையைக் கொண்டது. ஒருபுறம் இந்த விநோதம்தான் இதன் வசீகரமே. எத்தனையோ படைப்பாளிகள் இந்த உறவின் முரண்களைப் பற்றி விதம் விதமாகப் பேசித் தீர்த்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான மணிரத்னமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதல் திரைப்படமான 'பல்லவி அனுபல்லவி'யில் இருந்து தனது பிரத்யேக பாணியில் இதைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். 'மெளனராகம்', 'உயிரே', 'அலைபாயுதே' 'ராவணன்' 'கடல்' போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மதம், தீவிரவாதம், வன்முறை என்று வெவ்வேறு பின்னணிகளில் இந்த விஷயம் அவரது திரைப்படங்களில் பேசப்பட்டிருக்கிறது.

மணிரத்னத்தின் சமீபத்திய திரைப்படமான 'காற்று வெளியிடை’யும் இந்த வரிசையில் வைத்து பார்க்கக்கூடியதுதான். ஒருவகையில் இது அவருடைய முந்தைய திரைப்படமான 'ஓ காதல் கண்மணி'யின் தொடர்ச்சி போலவே அமைந்திருக்கிறது. 


***

இந்திய விமானப் படையில் பணிபுரியும் வருண் என்கிற இளைஞன், 1999-ல் நிகழ்ந்த கார்கில் போரின் போது பாகிஸ்தான் எல்லையில் வீழ்த்தப்பட்டு பிடிபடுகிறான். போர்க் கைதிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படையான உரிமையையும் மதிப்பையும் வலியுறுத்தி உருவாக்கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையின் அம்சங்களை பெரும்பாலான ராணுவங்கள் காற்றில் பறக்க விடுகின்றன. ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்படும் வருண் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறான். அங்கிருந்து உயிருடன் வெளியே செல்வோமோ என்கிற அவநம்பிக்கையின் இருள் அவனைச் சூழ்ந்திருக்கும் நிலைமையில் இருக்கும் ஒரே சிறிய வெளி்ச்சம் அவனுடைய காதல் மட்டுமே. அந்த நினைவுகளைப் பற்றிக் கொண்டு நம்பிக்கையின் நுனியில் தன் துயரத்தைக் கடக்க முயல்கிறான்.

தான் பலமுறை அவமானப்படுத்திய காதலியின் முகத்தை ஒருமுறையாவது பார்த்து விட முடியாதா என்பதே அவனுடைய இறுதி ஆசை. ஆணாதிக்க உணர்வு உள்ள முரடனாகவும் சுயநலம் மிக்கனாகவும் இருந்த அவனைக் காதலின் பிரிவும் உயிர் மீதான ஆசையும் உருமாற்றியிருக்கிறது. காதலுணர்வின் உன்னதம் அவனை மனம் திரும்பவும் பண்படுத்தவும் செய்திருக்கிறது.

அவன் சிறையில் இருந்து தப்பிக்க முயலும் காட்சிகளை ஒருபுறமும் கடந்த கால நினைவுகளை இன்னொருபுறமுமாக விவரிக்கும் திரைக்கதையோடு இந்த திரைப்படம் பயணிக்கிறது.

***

தீவிரவாதம், வன்முறை, மதம், அரசியல் போன்ற பின்னணிகளில் காதல் என்கிற விஷயத்தை முகப்பில் வைத்து திரைக்கதையை உருவாக்குவது மணிரத்னத்தின் வழக்கமான பாணி. 'ரோஜா'வுக்குப்பிறகு அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் இந்த வார்ப்புருவில்தான் அமைந்து வருகின்றன. இந்த வகையில் அமைந்த முந்தைய திரைப்படங்களில் சமூகப் பிரச்னைகள் ஒருபுறமும் காதல் சார்ந்த விளையாட்டுக்களும் சிக்கல்களும் இன்னொரு புறமுமாக பயணித்துக்கொண்டிருக்கும். ஆனால் 'காற்று வெளியிடை'யில்' ஆண்xபெண் உறவின் சிக்கலே மிகப் பிரதானமாக உரையாடப்பட்டிருக்கிறது. இந்தத் தன்மையே இந்தத் திரைப்படத்துக்குப் புதுவிதமான நிறத்தையும் ருசியையும் தந்திருக்கிறது.

ஆனால் இந்தத் திரைப்படத்துக்கு கார்கில் போரின் குறிப்பான பின்னணி ஏன் என்பது புரியவில்லை. 'கார்கில் போர்வீரர்களுக்கு சமர்ப்பணம்' என்று திரைப்படத்துக்கு முன் ஒளிர்கிற வரி தொடர்பேயில்லாத அபத்தம். ஏனெனில் இந்தத் திரைப்படம் பிரதானமாகக் காதலைப் பற்றித்தான் பேசுகிறது. இதர விஷயங்கள் எல்லாம் ஒரு பாவனையே. நாயகன் தன்னுடைய உடல் மீதான வலிமையின் சுயபெருமிதத்தில் உலாவுகிற முரட்டுத்தனமானவன் என்றால் அது சார்ந்த ஏதோவொரு பணியொன்றில் ஈடுபட்டிருப்பவனாக அவனைச் சித்தரித்திருந்தாலே போதும். அது ராணுவ வீரனாகவே இருந்தாலும் ஏன் குறிப்பாக 1999-ன் காலக்கட்டம் என்பது திரைக்கதையுடன் அழுத்தமாகப் பொருந்தவில்லை. படைப்புக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதாகத்தான் இதைப் புரிந்துகொண்டு சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது.

ஆண்மையின் பெருமிதத்துடனும் தன்னலத் திமிருடனும் வாழ்கிற ஒரு போர்வீரன். அவனால் தூண்டப்பட்டுக் காதலில் வந்து வீழ்கிறவள், மருத்துவராக இருக்கிறாள். தன்மானம் உள்ளவள். எதிரிகளின் உயிரை அழிக்கும் பணியுள்ளவனுக்கும் அதைப் போராடிக் காக்கும் உன்னதமான சேவையில் உள்ளவருக்கும் நிகழ்கிற காதல். அழித்தல் x காத்தல் என்கிற முரணியக்கத்தின் மீது நிகழ்கிற இந்தப் பயணம் எப்படிச் சிக்கல் இல்லாமல் இருக்கும்?

தன்னுடைய மையத்தை நோக்கி மிகச் சோம்பலாக நீந்திக் கரையேறுகிற திரைக்கதை. இதனால் சில காட்சிகள் சலிப்பை உண்டாக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதன் இடையே சில பல அபாரமான கணங்களும் தருணங்களும் உள்ளன. அவையே இந்தத் திரைப்படத்துக்கு ஒரு பிரத்யேகமான மதிப்பை அளிக்கின்றன. இதை அற்புதமாகக் கையாண்ட மணிரத்னத்தின் நிதானமும் முதிர்ச்சியும்  வியப்படைய வைக்கின்றன. 

ஆனால் மணிரத்னம் திரைப்படங்களுக்கேயுரிய பொதுவான சிக்கல்களும் இருக்கின்றன.

தனது 'ரோஜா' திரைப்படத்தில் இருந்து 'தமிழ் சினிமா' இயக்குநர் என்கிற நிலையில் இருந்து இந்தி(ய) சினிமா இயக்குநராகப் பதவி உயர்வு பெற்ற தற்செயலான விபத்து மணிரத்னத்துக்கு அங்கீகார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல பெருமிதங்களையும் ஆதாயங்களையும் அளித்திருக்கலாம். ஆனால் அங்கிருந்துதான் அவருடைய சறுக்கல் தொடங்கி விட்டதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. பன்மைத்துவ கலாசாரத்தின் மீது அமைந்திருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் எல்லாப் பிராந்தியங்களுக்கும் சென்று சேரும்படியான வணிகப்பண்டமாக அவர் தனது திரைப்படங்களைக்  கலாசாரக் கலவையுடனும் குழப்பத்துடனும் உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அவருடைய திரைப்படங்களில் இருந்த ஆன்மாவும் உயிர்ப்பும் கழன்று போய்விட்டதைக் கவனிக்கலாம்.

பாரதியாரின் கவிதைகளை மனப்பாடமாக உச்சரிக்கிற பிள்ளைமார் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனின் இதர குடும்ப உறுப்பினர்கள் இவனுக்குத் தொடர்பேயின்றி விளம்பரப் படங்களில் வருகிறவர்களைப் போல இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களில் இருக்கும் இது போன்ற பொதுவான சிக்கலும் பிளாஸ்டிக் தன்மையும் தமிழக மனங்களுக்கு அந்நியமாக இருக்கின்றன. பல்வேறு கலாசாரங்களுக்கான பொதுத்தன்மையை ஒரு திரைப்படத்தில் இணைக்கும் முயற்சியால் ஏற்படும் விபத்து இது. தனது தேசியப் பாதையில் இருந்து திரும்பி மணிரத்னம் இடையில் உருவாக்கிய 'அலைபாயுதே' நமக்கு எத்தனை நெருக்கமாக அமைந்தது என்பதைக் கவனிக்கலாம். காஷ்மீர் பின்னணியில் இயங்கும் இந்தத் திரைப்படத்தில் எதிர்ப்படும் எந்தவொரு நபரும் தமிழ் பேசுவது மாதிரியான செயற்கைத்தனங்கள் படத்தின் நம்பகத்தன்மையைக் கேலியாக்குகின்றன.

பிரதான பாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையேயான உணர்ச்சிகளின் பிணைப்பு வலுவாக நிறுவப்படாமலிருப்பதும் இந்தத் திரைப்படத்துக்கு ஒரு பின்னடவை ஏற்படுத்துகிறது.


***

கார்த்தி அடுத்த வருடத்துக்கான தேசிய விருதைப் பெறக்கூடும். அத்தனை அபாரமான நடிப்பு. ஆணாதிக்கமும் தன்முனைப்பும் மிகுந்திருக்கிற அதே சமயத்தில் கவிமனத்தின் மென்மையும் சிறிது கலந்திருக்கிற பாத்திரத்தின் சிக்கலான தன்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பருத்தி வீரனுக்குப் பிறகு அவருடைய பங்களிப்பு மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிற படமாக காற்று வெளியிடையைச் சொல்லலாம். முற்றிலும் வேறு பரிமாணம். புதிதாக வேறொரு நபரை பார்ப்பது போல இருக்கிறது. மணிரத்னம் கார்த்தியை ஒரு புதிய சித்திரமாகத் தீட்டி உருமாற்றிவிட்டார். 

மூக்கு நுனியும் காது மடல்களும் சிவந்திருக்கிற அதிதி ராவ் ஹைதரியின் புறத்தோற்றத்தை தமிழக மனங்கள் அந்நியமாக உணரக்கூடும். ஆனால் கார்த்திக்குக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவரை முந்திச் செல்கிறார். அதிதி அடிப்படையில் நாட்டியக் கலைஞர் என்பதால் கண்களும் முகபாவங்களும் அற்புதமாக உரையாடுகின்றன. ஆர்.ஜே.பாலாஜி, ருக்மணி, டெல்லி கணேஷ், லலிதா போன்றவர்கள் படத்தின் இடையே வந்து செல்கிறார்கள். லொட லொட பாலாஜியை அடக்கி வாசிக்க வைத்ததை மணியின் சாதனையாகச் சொல்லலாம்.

வழக்கம் போல் மணிரத்னத்தின் தொழில்நுட்பக் கூட்டணி அபாரமாகப் பங்காற்றியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் தொடக்கத்தில் சித்தரிக்கப்படும் போர்க்காட்சிகள், ஸ்பீல்பெர்க்கின் போர்த் திரைப்படங்களின் துல்லியத்தை நினைவுப்படுத்துகின்றன. காஷ்மீர், ஆஃப்கானிஸ்தான் போன்ற பிரதேசங்களின் நிலவெளிக்காட்சிகள் அபாரமாகப் பதிவாகியிருக்கின்றன. காதைக் கிழித்துக்கொண்டு பறக்கும் விமானங்களின் ஒலிகளை அவற்றின் சிறப்பான வடிவமைப்புத் தன்மையை அரங்கத்தில்தான் கச்சிதமாக உணர முடியும். துக்கிணியூண்டு செல்போனில் இவற்றைப் பார்ப்பதை விடவும் அநீதி வேறெதுவும் இருக்கமுடியாது.

மணிரத்னம் + ரஹ்மான் கூட்டணியின் வழக்கமான வசீகரம் இதிலும் சாத்தியமாகியிருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. சமீபத்திய வழக்கம் போல் இந்தப் பாடல்களின் ஒரு பகுதியை மட்டுமே உபயோகித்துக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இது திரைக்கதைக்கு நியாயம் செய்யும் விஷயம்தான் என்றாலும் ரஹ்மானின் அசாதாரணமான உழைப்பை விரயம் செய்வது அநியாயம். தமிழ் சினிமாவில் பாடல்களை முற்றிலுமாகக் கைவிடுவது என்கிற விஷயத்தில் மணிரத்னம் ஒரு முன்னோடியாக இருந்து காண்பிக்கலாம். பாடல்களின் இசை வடிவங்களே பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. ரஹ்மானின் இசைப்பள்ளி மாணவர்களான Qutub-E-Kripa பின்னணி இசைக்கு உடன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சாகசக் காட்சிகளில் ஒலிக்கும் துள்ளலான இசை அவற்றுக்கு வேறொரு நிறத்தை அளிக்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில சலிப்பான தருணங்களைத் தியாகம் செய்து இன்னமும் கறாராகச் செயல்பட்டிருக்கலாம்.

**

மெளனராகம் திரைப்படத்தில் இருந்தே பதிவுத் திருமண ஏற்பாட்டுக்கு மணிரத்னத்தின் நாயகர்களால் வரமுடியாமல் போவது, திருமணத்துக்கு முன்பான உறவு, கருவுறுதல், காதல் பிரிவின் மீதான துயரம் போன்ற பொதுத்தன்மைகள் இந்தத் திரைப்படத்திலும் நீடித்தாலும் அவருடைய இதுவரையான படைப்புலகத்திலிருந்து சற்று வித்தியாசப்பட்டு மேலெழுந்து நிற்கும் திரைப்படமாக 'காற்று வெளியிடை'யைச் சொல்ல முடியும். இதர விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது ஒரு பாவனையாக உபயோகப்படுத்தப்பட்டு இதன் திரைக்கதையில் ஆண்xபெண் உறவுச்சிக்கலுக்கே பிரதானம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் எந்தத் திசையில் நகர்கிறது என்கிற குழப்பத்தையும் சலிப்பையும் பார்வையாளர்களுக்கு அளித்துக்கொண்டிருக்கும்போது வரும் ஒரு காட்சியின் மூலம் பிடி கிடைக்கிறது. பனிப்பிரதேசத்தில் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போது 'சிறிது நேரத்தில் பனிமழை தொடங்கிவிடும். அது ஆபத்தானது' என்கிறான் நாயகன். அதன் நடைமுறைச் சிக்கலை அவன் அறிவான். ஆனால் குழந்தைத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாயகி 'இன்னும் சிறிது நேரம்' என்று அடம்பிடிக்கிறாள். எனவே வலுக்கட்டாயமாக அவளைத் தள்ளிச் செல்ல முயல்கிறான். திகைப்புறும் நாயகி 'நான் வரலைன்னா என்ன செய்வீங்க?' என்கிறாள். 'அடித்தாவது இழுத்துச் செல்வேன்' என்கிறான். தன்மான உணர்வு உசுப்பப்படும் நாயகி 'ஆம்பளைன்னா என்ன வேணா செய்வீங்களா?" என்று வர மறுக்கிறாள். கோபம் தணியும் நாயகன் 'உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருந்தது. அதான்' என்கிறான்.

இப்படியான அகங்காரச்சிக்கல்களும் மோதல்களும் நிகழும் காட்சிகள் மிகுந்த நுண்ணுணர்வுத்தன்மையோடும் இயல்பாகவும் உருவாகியிருக்கின்றன. நாயகனின் ஆளுமை எதனால் இப்படிச் சிக்கலாக அமைந்திருக்கிறது என்பதை அவனுடைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழும் சிறிய மோதலில், குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்திருக்கும் அவனுடைய தந்தையைக் காண்பிக்கும் சுருக்கமான காட்சியிலேயே உணர்த்தியிருப்பது சிறப்பு.

இன்னொரு காட்சி. போர்ச் சூழல் பற்றி ராணுவப் படையின் ஆண்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது அதில் தலையிடும் நாயகியை அடக்கும் நாயகன், பின்பு மனம் வருந்தி அவளை மீட்டுக்கொண்டு சென்று நண்பர்களிடம் மறுபடியும் ஆண் என்கிற பெருமிதத்தைக் காட்டும் காட்சியையும் உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படிஸ் சட்சட்டென்று மாறும் அவனுடைய கோணல் புத்தி மனம் திரும்பி பெண்ணிடமும் குடும்பம் என்கிற நிறுவனத்திடமும் இறுதியில் சரணாகதி அடையும் அந்த உருமாற்றக் காட்சிகள் படத்தின் பிற்பகுதியில் அபாரமாகப் பதிவாகியிருக்கின்றன. பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் நம்பகத்தன்மையற்ற காட்சிகளை புன்னகையோடும் சில சலிப்பான காட்சிகளை தியாக மனப்பான்மையோடும்  ஒதுக்கிவிட்டு இந்த மையத்தை கவனமாகப் பற்றிக் கொண்டால் 'காற்று வெளியிடை'யை நிச்சயம் ரசிக்கமுடியும்.

சக்தியில்லையேல் சிவமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com