தனுஷ் இயக்கியுள்ள 'ப. பாண்டி': சினிமா விமரிசனம்

வருங்காலத்தில் மிகச் சிறப்பான ஒரு திரைப்படத்தை தனுஷால் இயக்கிவிடமுடியும் என்கிற ஆறுதலான...
தனுஷ் இயக்கியுள்ள 'ப. பாண்டி': சினிமா விமரிசனம்

'இந்த மூஞ்சில்லாம் நடிக்க வந்துடுச்சு' என்று தொடக்கக் காலத்தில் கிண்டலடிக்கப்பட்ட தனுஷ், தற்போது இந்தியாவிலுள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இதன் பின்னாலுள்ள அவருடைய அசாதாரணமான உழைப்பும் தேடலும் பிரமிக்கத்தக்கவை. ஒருபுறம் அப்பட்டமான வணிகத் திரைப்படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் 'ஆடுகளம்' போன்ற சிறந்த முயற்சிகளிலும் ஈடுபட அவர் தயங்குவதில்லை.

இதுதவிர,  'விசாரணை' 'காக்கா முட்டை' போன்ற படைப்புகளின் தயாரிப்பாளராக தமிழில் மாற்று ரசனை உருவாவதற்கும் காரணமாக இருக்கிறார். பிரபலமாகி விட்டால் தன்னிச்சையாக வந்துசேரும் அல்லது சேர்த்துக்கொள்ளப்படும் பெருமைகளைப் போல 'பாடகர், பாடலாசிரியர்' போன்ற அவரின் இதர தகுதிகளை ஒரு புன்னகையுடன் சாய்ஸில் விட்டுவிடலாம்.

இப்போது 'இயக்குநர்' அவதாரம். 'பவர் பாண்டி' என்று முதலில் தலைப்பிடப்பட்டு பின்பு வரிவிலக்குக்காக வழக்கம்போல் கடைசி நேரத்தில் தமிழ் ஒப்பனை செய்யப்பட்ட 'ப.பாண்டி'.

ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் தான் இயக்கும் முதல் திரைப்படத்தின் நாயகனாகத் தன்னைப் பிரதானமாகத் திணித்துக்கொள்ளாமல் ஒரு முதிய பாத்திரத்தை வைத்து திரைக்கதை அமைத்த தனுஷின் (மற்றும் சுப்ரமணியம் சிவா) செயல் பாராட்டுக்குரியது. 

ஓர் இயக்குநராக இந்தப் புதிய அவதாரத்தில் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா என்றால் ஆம். ஒரு ஜனரஞ்சகமான சினிமாவில் என்னென்ன கலவைகள் இருக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தச் சமரசங்களே இந்த முயற்சியை ஒரு சிறந்த திரைப்படமாக ஆக்கவிடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.

எழுபதுகளில் வந்த பீம்சிங்கின் குடும்பச் சித்திரத்தை அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற சலிப்பான காட்சிகள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு இடையே சில அபாரமான கவிதைத் தருணங்கள் இருக்கின்றன. இதற்காக தனுஷ் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் உள்பட, பெரும்பாலான படத்தின் சுமையைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


***

படத்தின் மையம் என்ன?

குடும்பம் என்பதின் ஆதாரமான அடித்தளங்களுள் ஒன்று 'தியாகம். சற்று கவனித்துப் பார்த்தால் சமகாலத் தலைமுறை, அடுத்தத் தலைமுறையின் வளர்ச்சிக்காகவே பெரும்பாலும் உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சுழற்சி இந்தியக் குடும்பங்களில் நெடுங்காலமாக நீடித்துக்கொண்டிருக்கும் சமாசாரம்.

எனில் சமகால மனிதர்கள் அதிலும் குறிப்பாக முதியவர்கள் தனக்காக வாழ்கிறார்களா, அப்படி வாழ இந்தச் சமூகம் அனுமதிக்கிறதா என்கிற ஆதாரமான கேள்வியை இந்தத் திரைப்படம் எழுப்புகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் அவர்கள் 'பெரிசு'களாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். அதுவரையான பல விஷயங்களை, விருப்பங்களைத் தியாகம் செய்துவிட்டு வயதானவர்களுக்கான உலகில் ஒதுங்கியிருந்து அடக்கமாக வாழ்ந்தாக வேண்டும். உதாரணமாக ஒரு முதியவர் ஜீன்ஸ் அணிந்தால் 'இந்த வயசுல இது தேவையா' என்கிற கிண்டலுக்கு எளிதாக ஆட்படுவார்.

'மற்றவர்களுக்காக அமைந்தாலும்கூட இறுதிவரைக்கும் உனக்கான வாழ்க்கையை வாழத் தயங்காதே' என்கிற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்கிறது 'ப.பாண்டி'

பாரதிராஜா உருவாக்கிய 'அந்தி மந்தாரை'யில் மெலோடிராமாவாகப் பிழியப் பிழியச் சொல்லப்பட்ட 'முதியோர் காதல்' எனும் விஷயத்தை வெகுஜன சினிமாவுக்கேயுரிய ஜனரஞ்சகமான விஷயங்களுடன் சொல்கிறது.


***

தமிழ் சினிமாவில் பிரபலமான  ஃபைட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜ்கிரண். மனைவியை இழந்தவர். தனது ஒரே மகன் பிரசன்னாவுடன் வசதியாகத் தங்கியிருக்கிறார். அன்பான மருமகள் மற்றும் பிரியமான பேரக்குழந்தைகள். பெரிதாகப் பிரச்னை ஒன்றுமில்லை என்றாலும் தன் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து செயல்பட்டவருக்கு ஓய்வாக அமர்வது நிறைவைத் தருவதில்லை.

தன்னிடம் இயல்பாக உள்ள குணாதிசயத்தின்படி அக்கம்பக்கத்தில் உள்ள அநீதிகளைத் தட்டிக்கேட்கிறார். இதனால் வரும் பிரச்னைகளின் காரணமாக மகனுக்கும் தந்தைக்கும் இடையே உரசல்கள் ஏற்படுகின்றன. ஒருகட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜ்கிரண் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். இலக்கு ஏதுமின்றித் தொடங்கும் அந்தப் பயணத்தின் இடையில் அவர் செல்லவேண்டிய திசையும் சந்திக்கவேண்டிய நபரையும் பற்றிய காரணங்கள் உருவாகின்றன. பல வருடங்களுக்கு முன்பு துளிர்ப்பதற்கு முன்பே வெட்டுப்பட்ட உறவு அது.

அந்த உறவு என்ன? ராஜ்கிரண் தன் தேடலை அடைந்தாரா? தன் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் வந்து இணைந்தாரா என்பதைப் பிற்பாதி காட்சிகள் விவரிக்கின்றன. குறிப்பாக இதன் கடைசிப்பகுதி கவிதையான தருணங்களால் நிரம்பியிருக்கின்றன.


***

தைக்கப்பட்ட சட்டை போல ராஜ்கிரணுக்காகவே உருவாக்கப்பட்ட திரைக்கதை. 'பவர் பாண்டி' என்கிற பாத்திரம் அவருக்கு அத்தனை கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. அவர் ஃபைட் மாஸ்டர் என்பதும் நிஜத்தில் அவர் அடித்தால்கூட இரண்டு பேர் சரிந்து விழுவார்கள் என்பதைக் கூட நம்பி விடலாம். அத்தனை திடகாத்திரமான உருவம். ஆனால் அவர் அடித்தவுடன் எதிராளிகள் இரண்டாக மடிந்து அப்படியே உறைந்து நிற்பதெல்லாம் சினிமா நகைச்சுவை. போலவே அவர் நடனமாடும் மென்கொடுமைகளையெல்லாம்வேறு சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மகனால் திட்டப்படும்போதெல்லாம் குழந்தை போல தலையைக் குனிந்துகொண்டு விழிப்பதும் ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்கமுடியாமல் குடிபோதையில் மகனிடம் சண்டை போடுவதும் என... ராஜ்கிரணின் இதுவரையான பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படம். ஓய்வு பெற்ற பிறகு எந்தப் பணியிலும் நிறைவுறாமல், தான் அதுவரை அத்தனை ஆண்டுகளாக செய்த சண்டை வடிவமைப்புக்கு மறுபடியும் திரும்பச் சென்று அங்குக் கிடைக்கும் பாராட்டில் மனநிறைவும் நெகிழ்ச்சியும் அடையும் காட்சி முக்கியமானது. திரைப்படத்தின் பிற்பாதியில் ரொமான்ஸ் காட்சிகளில் தவிப்பதும், தேடி மீட்டெடுத்த பழைய காதலில் தடுமாறுவதும் என .. இன்னொரு ஜாலியான, சுவாரசியமான பரிமாணம்.

இந்தப் பாத்திரத்தை ராஜ்கிரண் அவருக்குண்டான எல்லையில் திறம்படவே கையாண்டிருக்கிறார்தான் என்றாலும் நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற நடிப்பு விற்பன்னர்கள் ஒருவேளை நடித்திருந்தால் இந்தப் பாத்திரம் இன்னமும் மெருகேறியிருக்குமே என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் இதன் எதிர்முனையில் ரேவதி தானொரு அபாரமான நடிகை என்பதை நிரூபிக்கிறார். இவர் வருவது திரைப்படத்தின் ஏறத்தாழ நிறைவுப்பகுதி என்றாலும் பெரும்பாலானவை அற்புதமான தருணங்கள். உண்மையில் இங்குதான் படத்தின் மையமே தொடங்குகிறது. இந்தக் காட்சிகளை நீட்டித்திருந்தால் படம் இன்னமும் சிறப்பு பெற்றிருக்கும். ரேவதி ஏற்றிருப்பது பெரும்பாலான சீனியர் நடிகைகள் ஒருவேளை ஏற்கத் தயங்கும் பாத்திரம். ஆனால் இந்த உறவை மலினமாகவோ நகைச்சுவையாகவோ ஆக்காமல் கண்ணியமான மதிப்புடன் உருவாக்கியிருப்பதில் இயக்குநர் தனுஷ் வெற்றி பெறுகிறார். தன் கடந்த கால காதலைப் பற்றி மகளிடம் வெட்கத்துடன் கூறிவிட்டு அது இயல்பாக ஏற்கப்பட்ட நிலையில் அவர் மெலிதாக நடனமாடும் காட்சி அபாரமானது.

ராஜ்கிரணின் இளமை வடிவமாக தனுஷ் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் ஓரளவுக்காவது சுவாரசியமாகச் சென்றுகொண்டிருக்கும் திரைக்கதையில் தடையாக அமைந்து சலிப்பூட்டுகிறது. தனுஷ் வளர்ந்த பிறகு ராஜ்கிரண் போல இருப்பார் என்றால், அவரைத் தன் மகன் எனக் கோரி வழக்குப் போட்டிருக்கும் அந்த முதிய தம்பதியினர் கூட நம்பமாட்டார்கள். தனுஷின் இளமைக்காலக் காதலியாக மடோனா. பழைய காலத்துப் பாணியிலான ஆடை வடிவமைப்பு இவருக்குச் சற்றும் பொருந்தாமல் நகைச்சுவையாக தோற்றமளிக்க வைக்கிறது. வழக்கமான பிளாஷ்பேக்தான் என்றாலும் 'ஆடுகளம்' தனுஷ் வெளிப்பட்டு சில காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முதியவர்கள் மீது ஏற்படும் நவீன காலத்து இளைஞனுக்கு ஏற்படும் எரிச்சலை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரசன்னா. தன் தந்தை வீட்டில் இல்லாத வெறுமையைப் பிறகு உணர்ந்து மனம் திருந்தி வருவதும், 'வீட்டுக்கு வந்துடுங்க' என்று தந்தையின் காலைப்பிடித்து அழுவதும் என தன் பங்களிப்பைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். குழந்தைகளின் நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளன.

பக்கத்து வீட்டு இளைஞனாக வருபவனின் நடிப்பு மிக இயல்பு. வெவ்வேறு தலைமுறையைச் சார்ந்தவர்களுக்குள் வெளிப்படும் உரையாடல்கள் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான டிடி (தேவதர்ஷிணி) ஒரெயொரு காட்சியில் வந்திருந்தாலும் தன்னுடைய பங்கைச் சிறப்பாக செய்துள்ளார். தன் தாயான ரேவதியுடன் அவர் உரையாடும் அந்தக் காட்சிதான் படத்தின் ஆதாரமான செய்தியே.

ஸீன் ரோல்டனின் இசை புத்துணர்ச்சியாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஹிட் ஆகி நிலைக்குமா என்பது சந்தேகமே. பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ். ராஜ்கிரண் புல்லட்டில் பயணிக்கும் காட்சிகள் சிரத்தையாகவும் பிரமிக்கத்தக்கதாகவும் பதிவாகியுள்ளன. 

திரைப்படத்தின் நேரம் இரண்டு மணி நேரம்தான் என்றாலும் இன்னமும் கூட சுருக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பழைய காலப்பாணியில் நாடகத்தனமாகவும் சலிப்புறும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகமிக ஆறுதலாக இருப்பது படத்தின் நிறைவுப்பகுதியும் இதன் ஆதாரமான செய்தியும்தான். எந்த தரப்புக்கும் சங்கடம் அளிக்காத முதிர்ச்சியான கிளைமாக்ஸ். ராஜ்கிரணின் பைக்கின் பின்னால் ரேவதி ஏறிச் சென்று விடக்கூடாதா என்று பார்வையாளர்களான நமக்கே தோன்றினாலும்கூட கட்டுப்பாட்டுடன் முடித்திருப்பது ஒரு சமரசம்தான் என்றாலும் இருவரும் பிறகு இணைவார்கள் என்கிற செய்தியுடன் நிறைவு செய்திருப்பது அற்புதம்.

சினிமா வியாபாரி தனுஷை விடவும் 'கலைஞன்' தனுஷ் வெளிப்படுவது இது போன்ற காட்சிகளில்தான். வருங்காலத்தில் மிகச் சிறப்பான ஒரு திரைப்படத்தை தனுஷால் இயக்கிவிடமுடியும் என்கிற ஆறுதலான தடயத்தை இவை அளிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com