ராஜமெளலியின் பாகுபலி 2: சினிமா விமரிசனம்

பல உணர்ச்சிகரமான தருணங்களும் அனல் பறக்கும் காட்சிகளும் இந்தப் படைப்பின் காண்பனுவத்தை உன்னதமாக்கியிருக்கின்றன.
ராஜமெளலியின் பாகுபலி 2: சினிமா விமரிசனம்

தெலுங்கு சினிமாவின் மீது எனக்கிருந்த ஒவ்வாமைகளையும் முன்தீர்மான வெறுப்புகளையும் உடைத்தெறிந்த முக்கியமான காரணங்களுள் ஒருவர் ராஜமெளலி. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த கதைசொல்லிகளுள் ஒருவர். ஈயைப் பிரதானமாக வைத்து ஒரு சாகசப் படத்தை உருவாக்கி அதை வெற்றியும் பெறவைத்ததைச் சிறந்த உதாரணமாகச் சொல்ல முடியும். இன்னமும் ஒரு படி அல்ல, பல படிகள் முன்னே நகர்ந்து பாகுபலி எனும் பிரம்மாண்டமான காவிய முயற்சியைத் தொடங்கி அதன் முதல்பகுதியை வெற்றிகரமாகக் கடந்தும்விட்டார்.

பொதுவாகத் தொடர்ச்சியான திரைப்படங்கள் திட்டமிடப்படும்போது முதல்பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமையும். இதனால் பார்வையாளர்களால் கதையை யூகிக்க முடியாததோடு எதிர்பார்ப்பும் அதிகமிருக்கும். இதை அப்படியே தலைகீழாக்கியிருக்கிறார் ராஜமெளலி. காலவரிசைப்படி முதல் பாகம், இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளால் நிறைந்திருக்கிறது. எனவே கடந்தகாலக் காட்சிகளை பாகுபலி-2 படத்தில்தான் இயக்குநர் சொல்லப் போகிறார். இதிலுள்ள ஆபத்து என்னவெனில் முதல் பாகத்தின் போக்கை வைத்து  இரண்டாம் பாகத்தைப் பெரும்பாலான பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியும். அதற்கான தடயங்கள் பாகம் -1ல் வெளிப்படையாகவே இருந்தன.

ஆனால் இந்தத் தடையை தனது திறமையான திரைக்கதையின் மூலமும் சுவாரசியமான கதையாடல் மூலமும் வியக்கவைக்கும் நுட்பங்களின் வழியான காட்சிகளின் மூலமும் வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறார் ராஜமெளலி. மட்டுமல்லாமல் நம்முடைய சில யூகங்களைப் பொய்யாக்கி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் ஒரு மகத்தான அனுபவம். இதுவரையிலான இந்தியத் திரை வரலாற்றிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் எனும்போது அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். சிறிய சறுக்கல் கூட பெரிய ஆபத்தைச் செய்துவிடும். இந்தச் சோதனையைச் சாதனையாக மாற்றியது ராஜமெளலியின் அசாதாரணமான திறமை எனச் சொல்லலாம். சினிமா எனும் ஊடகத்தின் மீதும் கதை சொல்வதின் மீதும் இப்படியொரு ஆவேசமான பிரியமும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் பாகுபலி போன்ற பிரம்மாண்டமான காவிய முயற்சிகள் சாத்தியம்.

பணம் இருப்பவர் எவர் வேண்டுமானாலும் கோடிகளை இறைத்து பிரம்மாண்டமான படைப்புகளைப் பெருமைக்காக உருவாக்கமுடியும். ஆனால் ஆதாரமான சுவாரசியம் அதில் இருக்கவேண்டும். கடினமான உழைப்பும் கலையார்வமும் திட்டமிடலும் தேவை. இந்த நோக்கில் பெரும்பாலான பார்வையாளர்களின் ஆர்வத்தை உத்தரவாதமாகப் பூர்த்தி செய்கிறது - பாகுபலி 2.

***

முதல் பாகத்தில் என்ன நடந்ததென்று சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ராஜ மாதாவான சிவகாமி தனது உயிர்போகும் சூழலில் ஒரு குழந்தையைத் தலையில் ஏந்தியபடி நீரில் மூழ்குகிறார். குழந்தை காப்பாற்றப்பட்டு பழங்குடிகளால் வளர்க்கப்படுகிறது. தனது பின்னணியைப் பற்றி அறியாத அந்தச் சிறுவனுக்கு மலையின் உச்சியைப் பற்றிய ஆர்வம் உள்ளுணர்வில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. காதல் தரும் உத்வேகம் காரணமாக எப்படியோ சென்றுவிடுகிறான்.

மகிழ்மதி எனும் பேரரசை அடைகிறான். பல்லாளதேவாவின் அரசாங்கத்தை எதிர்த்து ரகசியமாக இயங்கும் புரட்சிக் கூட்டத்தையும் தனது காதலி அவந்திகாவையும் சந்திக்கிறான். தேவசேனா எனும் மகாராணி அரண்மனை வெளியில் பல வருடமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிகிறான். தன் காதலிக்கு வாக்கு தந்தபடி பல சாகசங்களுக்குப் பிறகு தேவசேனாவை மீட்டு வருகிறான்.

ராஜவிசுவாசியான அடிமை கட்டப்பாவின் மூலம் தனது தாய்தான் தேவசேனா என்பதும் தான் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதையும் அறிகிறான். அவனது தந்தையான அமரேந்திர பாகுபலி பற்றிய பின்னணியையும் பெருமையையும் அறிகிறான். வீரம் மற்றும் விவேகத்தின் மூலம் மகிழ்மதி பிரதேசத்தின் வருங்கால அரசனாக முடிசூடப்படவிருந்த அமரேந்திர பாகுபலி துரோகத்தால் கொல்லப்பட்ட அதிர்ச்சியான செய்தியோடும் அதன் ரகசியத்தோடும் முதற்பாகம் நிறைகிறது.

அமரேந்திர பாகுபலி மற்றும் தேவசேனாவின் பின்னணி என்ன? ராஜவிசுவாசியான அடிமை கட்டப்பா ஏன் தான் தூக்கி வளர்த்த பிள்ளையைக் கொல்லவேண்டும்? இந்த துரோகங்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார்? பல்லாளதேவாவின் பிடியில் சிக்கியிருக்கும் மகிழ்மதி தேசத்தை இளைய பாகுபலி எப்படி மீட்டான் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதிலை பாகம் இரண்டில் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சொல்லி அசத்தியிருக்கிறார் ராஜமெளலி. பல உணர்ச்சிகரமான தருணங்களும் அனல் பறக்கும் காட்சிகளும் இந்தப் படைப்பின் காண்பனுவத்தை உன்னதமாக்கியிருக்கின்றன.

***

பாகம் இரண்டில் என்ன நடக்கிறது? தொடக்கப் பகுதியை மட்டும் பார்ப்போம்.

ராஜ மாதா சிவகாமியால் முடிவு செய்யப்பட்டபடி அமரேந்திர பாகுபலிக்கு முடிசூட்டப்பட திட்டமிடப்படுகிறது. அதற்கு முன் மக்களைப் பற்றி அறிவதற்காக திக்விஜயத்துக்கு பாகுபலியை அனுப்புகிறாள் சிவகாமி. கட்டப்பாவுடன் பயணம் மேற்கொள்கிறான் பாகுபலி. குந்தள தேசம் எனும் சிற்றரசுக்குச் செல்லும்போது அதன் இளவரசியான தேவசேனாவின் வீரத்தையும் அழகையும் கண்டு பிரமிக்கிறான். தன்னைப் பற்றிய விவரங்களை மறைத்துக்கொண்டு அங்கு உதவியாளனாகச் சேர்கிறான்.

ஒற்றர்களின் மூலம் இந்த விஷயங்கள் பல்லாளதேவாவுக்குச் செல்கின்றன. தேவசேனாவின் சித்திரத்தைப் பார்த்தவுடன் அவளுடைய அழகைக் கண்டு பல்லாளதேவா திகைத்துப் போகிறான். ஆட்சியைத்தான் பிடிக்க முடியவில்லை, இவளையாவது கைப்பற்றவேண்டும் என்கிற தீர்மானம் அவனுக்குள் பிறக்கிறது. இதன்மூலம் தனது போட்டியாளனான அமரேந்திர பாகுபலியின் காதலையும் பிரிக்க முடியும் என்கிற குரூரமும் தோன்றுகிறது. தனது தந்தையுடன் இணைந்து இதற்கான சூழ்ச்சியை ஆரம்பிக்கிறான்.

தேவசேனாவின் ஓவியத்தைத் தற்செயலாகப் பார்த்ததாகவும் அவளை மணம் புரிய ஆசைப்படுவதாகவும் தனது தாயாரான சிவகாமியிடம் தெரிவிக்கிறான். அதிகாரத்தை தர முடியாத அவனுக்கு இதையாவது தந்து சமன் செய்யலாமே என்கிற பாசத்துடன் சிவகாமியும் முன்பின் யோசிக்காமல் இதற்காக வாக்கு தந்துவிடுகிறாள். இங்குத் தொடங்குகிற சிக்கல்களும் சதிகளும் அமரேந்திர பாகுபலிக்குப் பதிலாக பல்லாளதேவா அரசனாக அமரும் வரை போகிறது.

மகிழ்மதியின் பேரரசுக்கு ஏன் அமரேந்திர பாகுபலியால் அரசனாக முடியவில்லை, விசுவாசியான கட்டப்பா, பாகுபலியைக் கொல்லுமளவுக்கான நெருக்கடி ஏன் ஏற்பட்டது, பல்லாளதேவாவின் அட்டகாசங்களுக்கான முடிவு என்ன போன்ற விவரங்கள் விறுவிறுப்பான காட்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இடைவேளைக்கு முன்பிருந்த சுவாரசியம் பிற்பகுதியில் சற்று தொய்வடைந்திருக்கிறது. போலவே உச்சக்காட்சியும் அத்தனை சுவாரசியத்தைத் தரவில்லை. மிக நீளமான சண்டைக்காட்சியால் அலுப்படைய வைக்கிறது.

***

பாகம் -2ன் பிரதானமான சிறப்புகளுள் அதன் அற்புதமான திரைக்கதையைத் தாண்டி இன்னொரு வசீகரமான, முக்கியமான காரணம் அனுஷ்கா. முதற்பாகத்திலேயே பாகுபலியின் பெரும்பாலான கதாபாத்திரங்களை நாம் கண்டு விட்டோம். காணாமல் இருந்தது தேவசேனா பற்றிய பகுதியையும் பின்னணியையும் மட்டுமே.

முதற்பாகத்தில் சிறைபிடிக்கப்பட்ட முதிய, அலங்கோலமான தோற்றத்தில் அனுஷ்கா சித்தரிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள். ஆனால் வட்டியும் முதலுமாக அதை ஈடு செய்யும் வகையில் பேரழகின் சித்திரமாக அவர் இரண்டாம் பாகத்தில் காட்டப்பட்டிருப்பது நிறைவைத் தருகிறது. ஆனால் வெறுமனே அழகுப் பதுமையாக அல்லாமல் ஓர் இளவரசிக்கான கம்பீரத்துடனும் சுயமரியாதையும் வீரமும் உள்ள பெண்ணாகவும் இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது அதிசிறப்பு.

தன்னுடைய காதலனே அழைத்தாலும் 'கைதியாக ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டேன்' என்று தன்மானத்துடன் மறுப்பது, ராஜமாதா சிவகாமியின் அநீதியைத் துணிச்சலாகத் தட்டிக் கேட்பது, தன்னிடம் தவறு செய்ய முயல்பவனின் விரல்களைத் துண்டிப்பது, இதற்கான விசாரணையை அரச சபையில் கம்பீரமாக எதிர்கொள்வது, தன் கணவனுக்கு இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் 'இந்த ராஜ்ஜியம் எனக்குப் பரிசாக வேண்டும். உங்களால் தர முடியுமா?'  என்று தன் கணவனுக்கு உத்வேகம் தருவது போன்ற காட்சிகள் அதிரடியான சுவாரசியத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சாகச நாயகனுக்கு ஈடான அறிமுகக் காட்சியை அனுஷ்காவுக்கு இயக்குநர் வழங்கியிருப்பது ரசிக்கவைக்கிறது.

மன்னர் காலத்து வீரமிகு இளவரசிகள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்கிற வியப்பான யூகத்தை அனுஷ்காவின் திறமையான பங்களிப்பு ஏற்படுத்துகிறது. அனுஷ்காவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல், பாகுபலி.

இதைப் போலவே அமரேந்திர பாகுபலியின் பாத்திரமும் உன்னதமான நாயகத்தனத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'உனது தன்மானத்துக்கு இழுக்கு வராமல் கடைசி வரை பாதுகாப்பேன்' என்று தேவசேனாவுக்குத் தந்த வாக்கை எந்த நிலையிலும் தவறாமல் இருப்பது, அரச சபையில் தன் மனைவிக்கு இழைக்கப்படும் அநீதியைக் கம்பீரத்துடன் முறியடிப்பது, ராஜமாதாவின் எந்தவொரு ஆணையையும் தலையால் தாங்குவது, அதற்காக அதிகாரத்தையும் உயிரையும் இழப்பது, சாகும் நிலையிலும் தாய்ப்பாசம் காட்டுவது, பாகுபலியின் சாகசங்கள், அதற்கான அவன் திட்டமிடும் பிரமிக்க வைக்கும் போர் தந்திரங்கள் என்று ஓர் அசலான நாயகச் சித்திரம். பிரபாஸ் தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். திடகாத்திரமான அவருடைய உடலின் வடிவமைப்பு அவர் நிகழ்த்தும் சாகசங்களுக்கான நம்பகத்தன்மையை அளிக்கிறது.

அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் ஓர் அற்புதமான அடிமைப் பாத்திரம் கட்டப்பா. இதற்கான நீதியை தன்னுடைய உழைப்பாலும் நடிப்புத்திறனாலும் வழங்கியிருக்கிறார் சத்யராஜ். சுற்றி நடக்கும் ராஜ அநீதிகளை தடுக்க முடியாமல் தன்னுடைய அடிமைநிலை கட்டுப்படுத்தும் தத்தளிப்புகளை திறமையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். அமரேந்திர பாகுபலிக்கும் இவருக்குமான நட்பும் பாசமும் நெகிழ்ச்சியான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாகுபலியைக் கொல்லவேண்டிய நெருக்கடியும் சூழலும் காவிய துயரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. பாகுபலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக தன் அடிமைநிலையை மீறி பொங்கியெழுந்து ராஜமாதா சிவகாமியுடன் இவர் நிகழ்த்தும் ஆவேசமான உரையாடல் அபாரம்.

ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன். இந்தப் பாகத்திலும் தனது கம்பீரமான நடிப்பைத் தொடர்கிறார். பிள்ளைப் பாசத்தால் பல்லாளதேவாவுக்கு வாக்கு தருவதும் தன் உத்தரவை மீறும் பாகுபலியைத் தண்டிப்பதும் பிறகு பாசத்தில் தடுமாறுவதும் உண்மையை அறிந்தவுடன் தீரமான முடிவு எடுப்பதும் எனப் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தன்னுடைய அதுவரையான தவறுகளை சமன் செய்யும் உத்தேசத்துடன் அப்போதுதான் பிறந்த குழந்தையான 'மகேந்திர பாகுபலியை' உயர்த்தி வருங்கால அரசனாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சியில் நமக்கு மெய்சிலிர்ப்பது உண்மை.

மகாபாரத சகுனி போல சதிகளின், நயவஞ்சகங்களின் அடையாளமாகத் தன் நடிப்பைத் திறம்பட கையாண்டுள்ளார் நாசர். ஊனத்தின் காரணமாக தன்னால் மன்னனாக முடியாத கொதிப்பையும், அதை ஈடுசெய்யும் வகையில் தன் மகனை அதிகாரத்தில் அமர்த்த அவர் செய்யும் அநீதிகளும் என சிறப்பான எதிர்மறை பாத்திரம்.

பல்லாளதேவனாக ராணா டகுபதி. முதற்பாகத்தில் பிரபாஸுக்கு ஈடாக சித்தரிக்கப்பட்டிருந்த பாத்திரம் இதில் சற்று சோகையாகத்தான் உள்ளது. என்றாலும் உச்சக்காட்சியில் இளைய பாகுபலியுடன் மோதும் வீரம் பிரமிக்க வைக்கிறது. தன் விருப்பப்படி அதிகாரத்தில் அமர்ந்தாலும் மக்களின் ஆதரவு பாகுபலியின் பக்கமே இருக்கிறது என்பதைக் குமைச்சலுடன் உணரும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தமன்னாவுக்கு இதில் அதிகம் வேலையில்லை.


***

ஒரு குழந்தையின் விழிவிரிந்த கண்களுடனும் திறந்த மனதுடனும் தம்மை ஒப்புக் கொடுத்து விடுவதுதான் திறமையாக உருவாக்கப்பட்ட ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தைக் கச்சிதமாக ரசிப்பதற்கான அடிப்படை. இந்த நிலையில் அமர்ந்து பாகுபலியின் இரண்டாம் பாகத்தை உத்தரவாதமாக ரசிக்க முடியும். இதன் விறுவிறுப்பான திரைக்கதையும், ராஜ்மெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் எழுதிய அபாரமான கதையும் இந்த அனுபவத்தை உறுதியாகத் தருகின்றன.

திரையரங்கில் பார்வையாளர்களின் ஆரவாரமான வரவேற்பை கண்டு வியந்தேன். ஒரு மொழி மாற்ற திரைப்படத்துடன் இத்தனை உணர்ச்சிகரமாக ஒன்றிவிட முடியுமா என்று திகைப்பாகவே இருந்தது. முதற்பாகத்தை தெளிவாக நினைவில் கொண்டு அதன் தொடர்புக் காட்சிகளை உடனே புரிந்து கொண்டு ஆரவாரம் செய்வதும், காட்சிகளின் உணர்ச்சிகரமான சூழலுடன் ஒன்றி ரசிப்பதும் என ஒரு வித்தியாசமான அனுபவம். தாம் உருவாக்கும் காட்சிகளின் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுடன் அழுத்தமாகப் பிணைத்து விட்டால் அது உறுதியாக வெற்றி பெறும் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களை மகிழ்மதி பேரரசின் பிரஜைகளாக உணரச் செய்தது இயக்குநர் ராஜமெளலிக்குக் கிடைத்த வெற்றி. துணைப் பாத்திரங்கள் முதற்கொண்டு போர் சாகசங்கள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகத் திட்டமிட்டிருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்குச் சவால்விடும்படியான வரைகலை நுட்பங்கள், செதுக்கி மேம்படுத்தப்பட்ட மாய்மாலங்கள், திறமையான ஒளிப்பதிவின் பிரமிப்பு, சாகசக் காட்சிகளின் வடிவமைப்பு, அவற்றைத் திறமையாகச் செயல்படுத்திய பாகுபலி குழுவின் அசாதாரணமான உழைப்பு, இதற்கும் மேலாக இத்தனை விஷயங்களையும் அருமையாக ஒருங்கிணைப்பு செய்த இயக்குநரின் திட்டமிடல் என்று பல விஷயங்கள் கவர்கின்றன.

காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு ஏற்ப பின்னணி இசையும் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் என்கிற வாசனை பாடல்களில் பலமாகவே அடிக்கிறது. ஆனால் வசனங்களில் இந்த விபத்து பெருமளவு தவிர்க்கப்பட்டிருப்பது ஆறுதல். (தமிழ் வசனம்: மதன் கார்க்கி) தன்னை எதிர்த்துப் பேசும் தேவசேனாவைக் கண்டு திகைக்கும் சிவகாமி, பிறகு தற்பெருமையுடன் 'இந்த மண்ணின் மருமகளுக்கு சற்று அகந்தை இருப்பதுதான் அழகு' எனக் கூறுவது சுவாரசியம். இதுபோல் பல கவித்துவமான வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

சில குறைகளும் இல்லாமல் இல்லை. புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட ராஜமாதா எவ்வாறு தன்னைச் சுற்றி நிகழும் சதிகளையும் பொய்களையும் எளிதில் நம்பி விடுகிறார் என்பது தர்க்கத்துக்கு ஏற்படையதாக இல்லை. போலவே தான் பாசத்துடன் வளர்த்த அமரேந்திர பாகுபலியைக் கொல்ல கட்டப்பா எப்படி ஒப்புக்கொள்கிறார், பின்பு ஏன் கொதிக்கிறார் என்பதில் நம்பகத்தன்மை வலுவாக இல்லை. இதுபோன்ற பிசிறுகளை இன்னமும் திறமையாகச் சீர்செய்திருக்கலாம். படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பும் சுவாரசியமும் பிற்பகுதியில் தொய்வடைந்திருக்கிறது.

பாகுபலி 1-ல் இருந்த உச்சக்காட்சி சிறப்பானது. அதில் வரும் போர்க்களக்காட்சி அதற்குப் பெருமை சேர்த்த விஷயம். அப்படியொரு விறுவிறுப்பான உச்சக்காட்சி இதிலும் வரும் என ஆவலாக அமர்ந்திருக்கும்போது அதை ஈடுசெய்வது போல் காட்சிகள் இருந்தாலும் சற்று ஏமாற்றமே. அதேசமயம், குந்தள தேசத்தைத் தாக்க வரும் வீரர்களை, அமரேந்திர பாகுபலி தேவசேனாவுடன் இணைந்து எதிர்கொள்ளும் காட்சியும் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாடுகளை வைத்து அமைக்கும் போர் தந்திரமும் சுவாரசியமானது.

மொத்தத்தில் ஒரு மகத்தான காவிய அனுபவத்தை தருகிறது பாகுபலி -2. இதன் மூன்றாம் பாகமும் இருந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கத்தை வரழைக்கிறது. கதை சொல்லும் முறையிலும் சரி, நுட்பங்களைப் பயன்படுத்தும் பிரம்மாண்டத்திலும் சரி, இந்திய வெகுஜன சினிமாவின் பாதையில் தனது அசாதாரண உழைப்பால் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது பாகுபலி குழு.

ராஜமெளலி எனும் திறமையான கதைசொல்லியின் பயணம் மென்மேலும் தொடரட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com