திகிலூட்டுகிறதா? ‘அன்னாபெல் கிரியேஷன்’ - சினிமா விமரிசனம்

2014-ல் வெளிவந்த அன்னாபெல் படத்தில் அனைவரையும் திகிலடைய செய்த அன்னாபெல் பொம்மையின் உருவாக்கம் மற்றும் அதனுள் ஆவி புகுந்ததற்கான காரணம் போன்றவற்றை கூறும் முன்கதையே இந்த அன்னாபெல் கிரியேஷன். 
திகிலூட்டுகிறதா? ‘அன்னாபெல் கிரியேஷன்’ - சினிமா விமரிசனம்

உலகளவில் திகிலூட்டும் பேய் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வசனமே புரியவில்லை என்றாலும், ‘வசனமாடா முக்கியம்? படத்த பாருடானு!’ எந்த மொழியாக இருந்தாலும் பேய் படமாக இருந்தால் பார்த்து விடுவார்கள். அந்த வகையில் உலகம் முழுவதிலும் பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த அன்னாபெல் கிரியேஷன் படத்தில் பிற பேய் படங்களைவிட புதியதாக ரசிகர்களை பயமுறுத்த என்ன செய்திருக்கிறார்கள்? 

கான்ஜூரிங் பட வரிசையில் நான்காவதாக வெளி வந்துள்ள படம் அன்னாபெல் கிரியேஷன். 2014-ல் வெளிவந்த அன்னாபெல் படத்தில் அனைவரையும் திகிலடைய செய்த அன்னாபெல் பொம்மையின் உருவாக்கம் மற்றும் அதனுள் ஆவி புகுந்ததற்கான காரணம் போன்றவற்றை கூறும் முன்கதையே இந்த அன்னாபெல் கிரியேஷன். 

1940 மற்றும் 1950-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற கலை வடிவமைப்புடன் கதை நகர்வது படத்தின் திகிலை இன்னும் அதிகரித்துள்ளது. பொம்மை தயாரிப்பாளராக பணிபுரியும் சாமூவேல் மல்லின்ஸ் என்பவரின் ஐந்து வயது மகளான அன்னாபெல் ஒரு கார் விபத்தில் உயிரிழக்கிறார். சில வருடங்களுக்குப் பின் அவரது மனைவி எஸ்தரும் ஒரு விபத்தில் சிக்கி படுத்தப் படுக்கையாகிவிடுகிறார். இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து கன்னியாஸ்திரீ சார்லெட் என்பவர் ஆறு ஆதரவற்ற குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிக்க வருகிறார்.

எல்லா பேய் படங்களில் வருவது போலவே எங்கெல்லாம் அமானுஷ்யமான சத்தம் கேட்கிறதோ அல்லது உருவம் தெரிகிறதோ, அதைப் பின் தொடர்ந்து கதையில் உள்ள கதாப்பாத்திரங்களும் செல்கிறார்கள். ஆறு குழந்தைகளில் ஒருவரான ஜானிஸ் என்ற குழந்தை செல்லக்கூடாத ஒரு அறைக்குள் செல்வதைத் தொடர்ந்து அன்னாபெல்லின் வடிவத்தில் இருக்கும் சாத்தான் ஜானிஸை குறிவைத்து, வீட்டில் உள்ள அனைவரையும் பயமுறுத்துகிறது. 

சிறுவர்களுள் ஒருவரின் உடலில் ஆவி புகுந்த பிறகு திகிலிற்கு பஞ்சமில்லாமல் கதை வேகமாக நகர்கிறது, இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அன்னாபெல்லின் ஆவி தனது பெற்றோர்களையே கொன்றுவிடுகிறது. ஏன் தன் சொந்த அப்பா, அம்மாவையே அந்த ஆவி கொல்கிறது என்கிற கேள்விக்கு பதிலளிப்பதே மீதிக் கதை.

பாரம்பரியமாகப் பேய் படங்களுக்குத் தேவையான இருட்டு, பாழடைந்த வீடு, பேசும் பொம்மை, அலறும் குழந்தைகள் கடைசியாகப் பேய்க்கு வக்காலத்து வாங்கும் ஒரு சோகமான ஃபிளாஷ்பேக், இவையனைத்தும் இந்தப் படத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிறது.   

இயக்குநர் டேவிட் சேண்ட்பெர்க் முடிந்தளவு கதையை கிளைமேக்ஸ் வரை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களான அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெபானி சிக்மான் ஆகிய அனைவரும் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். குறிப்பாக ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரான ஜானிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தலித்தா பேட்மேன் கவனிக்க வைக்கிறார்.  

பேய் படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பது ஒளிப்பதிவும், பின்னணி இசையும்தான், அந்த வகையில் இவையிரண்டும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் இறுதியில் கன்ஜூரிங் பட வரிசையில் ஐந்தாவதாக 2018-ல் வெளிவரவுள்ள ‘தி நன்’ படத்திற்கான டீஸரையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் ‘கான்ஜூரிங் 2’ படத்தில் கன்னியாஸ்திரீ ரூபத்தில் வந்த சாத்தானின் முன்கதையை சொல்வதாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com