அஜித்தின் ‘விவேகம்’ – சினிமா விமரிசனம்

தீவிரத்தன்மையுடனும் சுவாரசியமான திரைக்கதையுடனும் உருவாக்கியிருந்தால், தமிழிலும் ஹாலிவுட் பாணியில் ஒரு நல்ல ‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்படம்...
அஜித்தின் ‘விவேகம்’ – சினிமா விமரிசனம்

ரஜினியின் பழைய திரைப்படங்களான ‘முரட்டுக்காளை’, ‘பாட்ஷா’ போன்றவற்றை மறுஉருவாக்கம் செய்து முறையே ‘வீரம்’ ‘வேதாளம்’ என்கிற அஜித் திரைப்படங்களாக உருவாக்கியவர் இயக்குநர் சிவா. அடுத்ததாக ஜேம்ஸ்பாண்ட் வகையிலான அதே மாதிரியான சாகசத் திரைப்படத்தைத் தமிழில் கொண்டு வந்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதன் அசட்டுத்தனமான விளைவுதான் –விவேகம்.

ஹாலிவுட் பாணியிலான ஆக்‌ஷன் த்ரில்லரை தமிழிலும் உருவாக்க முனைந்ததில் எந்தவிதத் தவறுமில்லை. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். உலக ஆபத்துக்களைக் காப்பாற்றுவதென்பது அமெரிக்க ஜேம்ஸ்பாண்டுக்கு மட்டுமே காப்புரிமை தரப்பட்ட விஷயமில்லை.. நம்மூர் அஜித் குமாரும் அந்தச் சாகசங்களைச் செய்யலாம். தவறொன்றுமில்லை.

ஆனால் இம்மாதிரியான சாகசத் திரைப்படங்கள் தீவிரமான தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் சிறந்த திரைக்கதையுடனும் உருவாக்கப்பட வேண்டும். நாயகன் உயிர் போகிற சிக்கலில் இருக்கும் தருணத்திலும், அன்பு மனைவியின் தொலைப்பேசி அழைப்பை ஏற்று ‘இதோ .. அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்து விடுவேன். இட்லியும் கெட்டி சட்னியும் செஞ்சு வெச்சிடு’ என்று உரையாடுவதற்குப் பெயர் எல்லாம் தன்னம்பிக்கை அல்ல, அவல நகைச்சுவை.

சிறந்த அதிசாகச திரைப்படமாக வந்திருக்க வேண்டிய ‘விவேகத்தை’ இது போன்ற விவேகமற்ற காட்சிகள் பின்னுக்கு இழுத்து அதலபாதாளத்தில் தள்ளியிருக்கின்றன. 

**

‘விவேகம்’ திரைப்படத்தின் கதை என்ன?

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் வரும் அதே வழக்கமான கட்டமைப்புதான். சர்வதேச பயங்கரவாதிகளால் உலகத்துக்கு ஏற்படும் தீவிரமான ஆபத்து ஒன்றைத் தன் அசாதாரணமான துணிச்சலாலும் நவீனரக ஆயுதங்களின் உதவிகொண்டும் நாயகன் தடுப்பான். அதையேதான் அஜித்தும் ஒற்றை ஆளாக இந்தத் திரைப்படத்தில் செய்கிறார். என்னவொன்று சர்வதேச பிட்ஸாவின் மீது உள்ளூர் சென்ட்டிமென்ட் என்கிற காரச் சட்னியை இயக்குநர் ஊற்றி வைத்திருப்பதுதான் பொருத்தமேயில்லாமல் அமைந்து நம்மைக் குமட்ட வைக்கிறது.

AK எனப்படுகிற அஜய்குமார் ஒரு சர்வதேச ஏஜெண்ட். Counter Terrorist Squad-ல் முக்கியமான அதிகாரி. (இதுவொரு கற்பனையான அமைப்பு என்று டைட்டில் கார்டு சொல்கிறது) நவீன ரக ஆயுதங்களைக் கையாள்வதிலும் தனியாளாக எதிரிகளைத் திறம்பட எதிர்கொள்வதிலும் மாஸ்டர். கண்டுபிடிக்கவே முடியாமல் மறைந்து வாழும் தீவிரவாதிகளைத் தேடிக்கண்டுபிடித்து அழிக்கும் திறமையான கருவி. சுருக்கமாகச் சொன்னால் இவர் ஓர் One Man Army (காயத்ரி ரகுராமின் அந்த ட்வீட்டோடு இணைத்துக் குழம்பாதீர்கள்).

செர்பியாவில் உள்ள ஒரு ரகசியமான இடத்தில் இந்தத் திரைப்படம் தொடங்குகிறது. அங்கு நிகழ்வது ஓர் ஆயுத பேரம். நாசகார விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தை ருஷ்ய மாஃபியா கும்பலிடமிருந்து ஈரோபோல் அமைப்பு வாங்குகிறது. அதை வைத்து செயற்கையான பூகம்பங்களை உருவாக்க முடியும். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவு உள்ள பிரதேசத்தை சில நிமிடங்களில் காணாமல் போகச் செய்ய முடியும்.

நவீன நுட்பங்களுடன் பலத்த காவல் ஏற்பாடுகள் உள்ள அந்தப் பகுதியை தனியாளாக ஊடுருவுகிறார் அஜித். தன் சாகசத்தின் மூலம் இரு தரப்பையும் கொன்று ஆயுதத்தைக் கைப்பற்றுகிறார். பிறகு தம்மைத் துரத்தி வரும் ஒரு பெரும் ஆயுதப்படையிடமிருந்து அநாயசமாகத் தப்பிச் செல்கிறார். அதற்கு முன்னால் ‘உலகமெ உன்னை எதிர்த்தாலும்…’ என்கிற பஞ்ச் டயலாக்கை ‘பசங்களா எழுதிக்கோங்க’ என்கிற நிதானத்துடன் அழுத்தம்திருத்தமாக சொல்லி விட்டுத்தான் தப்பிச் செல்கிறார். 

இப்படித் தொடங்கும் சாகசப் பூச்சுற்றல்கள் படம் பூராவும் தொடர்ந்து நம்மை வன்கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றன.

**

இத்திரைப்படம் பிரதானமாக அஜித் ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டது என்பது துல்லியமாகத் தெரிகிறது.  எனவே படத்தில் என்ன நிகழ்கிறது என்பதைக் குத்துமதிப்பாக மட்டும் அவர்கள் புரிந்து கொண்டு அஜித் வரும் காட்சிகளில் எல்லாம் ஆவேசம் அடைந்தது போல் கத்தித் தீர்க்கிறார்கள்.

செர்பியாவில் தமிழ் உணவகமும், ஐரோப்பிய இளம் மாணவர்களுக்கு இசை பயிற்சிப் பள்ளியும் (ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தறீங்க?) நடத்துபவர் அஜித்தின் மனைவி யாழினி (காஜல் அகர்வால்). கணவனுக்கும் மனைவிக்குள் இடையில் உள்ள அன்பும் நேசமும் கவிதைக் கணங்களாக சொல்லப்பட்டுள்ளன. கணவரின் ஆபத்தான சாகசப் பணி பற்றி நன்கு அறிந்திருக்கும் யாழினி அதற்கேற்ற தயாரான மனநிலையில் இருக்கிறார். மனைவியின் அன்பு தரும் உத்வேகம்தான் அஜித்தைக் கடுமையான சிக்கல்களில் இருந்து தப்பி உயிர்பிழைத்துத் திரும்பி வரும் அடிப்படையான விசையாக அமைகிறது.

அணுஆயுதப் பரிசோதனை முயற்சி கணினி ஹேக்கர்களால் களவாடப்படுகிறது. ஆபத்தான அந்த வெப்பன் டிரைவ்களின் பின்னணி தெரியாமல் கணினி நுட்பம் கொண்டு அவற்றைக் களவாடுபவள் நடாஷா. (அக்‌ஷரா ஹாசன்). அந்த ஆயுதத்தின் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை பூகம்பம் பல மனித உயிர்களைப் பலிவாங்கியது என்கிற விவரத்தை பின்னால் அறிந்ததும் மனச்சாட்சி உறுத்த தலைமறைவாகிறாள். அவளால் அந்த ஆயுதத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முடியும். எனவே பல நாட்டின் உளவு அமைப்புகள் ஒருபுறமும் தீவிரவாதிகள் குழு ஒருபுறமும் அவளை வேட்டையாடத் துடிக்கின்றன. தேடியலைகின்றன.

இந்த நிலையில் அந்த ஆயுதத்தைக் கொண்டு இந்தியத் தலைநகரை அழிக்கப் போகிறார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது. இதைத் தடுப்பதற்காக அஜித் தலைமையில் ஒரு குழு இந்த ஆப்ரேஷனில் இயங்குகிறது. ஐவர் கொண்ட அந்தக் குழுவின் அடிப்படை இயங்குசக்தியாக இருப்பது நட்பும் விசுவாசமும். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு பல ஆபத்துக்களை எதிர்கொண்ட முன்அனுபவமுள்ள குழு. இந்தக் குழுவில் உள்ள ஆர்யன் சிங் (விவேக் ஓபராய், தமிழில் அறிமுகம்) அஜித்தின் உயிர்நண்பன்.

பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் தன் முகத்தை மாற்றிக் கொண்ட நடாஷாவை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு கண்டுபிடிக்கிறார் அஜித். விசாரணையில் அவள் அப்பாவி என தெரியவருகிறது. ‘ஆனால் அவளைக் கொன்று விடு’ என்று உத்தரவு வருகிறது.

அவளுடைய உதவியுடன் ஆயுத அழிப்பைத் தடுப்பதற்காக கிளம்புகிறார் அஜித். ஆனால் செல்லும் வழியில், அஜித்தின் சாகசங்களை மீறியும் நடாஷா கொல்லப்படுகிறாள். மட்டுமல்லாமல் அஜித்தும் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரிடமுள்ள ஆயுத டிரைவ்கள் கைப்பற்றப்படுகின்றன. இதைச் செய்தது வேறு எவருமல்ல, அவருடைய நண்பர்கள் குழுதான்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் துரோகிகளைப் பழிவாங்கவும் இந்தியத் தலைநகரை ஆபத்திலிருந்து காப்பாற்றவும் ஆவேசமாக கிளம்புகிறார் அஜித். கடுமையான சவால்களைக் கொண்டிருக்கும் இந்தப் பணியை அவர் எவ்வாறு சாதித்தார் என்பது பரபரப்பான காட்சிகளின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது.

**

அஜித், கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார். இண்டர்நேஷனல் ஸ்பை என்றால் நம்புமளவுக்கான தோற்றத்துடன் இருக்கிறார். 360 டிகிரி திசைகளிலும் பாய்கிறார், துப்பாக்கிகளைத் திறம்பட கையாள்கிறார் என்று எப்படியோ திறமையாக நம்மை நம்ப வைத்து விடுகிறார்கள்.

எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் இறுதிநொடி வரை தன் சமநிலையை இழக்கக்கூடாது என்பது இவரின் அடிப்படையான உணர்வு. ‘வீட்டுக்கு வருவேன்’ என்று இவர் வாக்கு கொடுத்து விட்டால் அண்டார்ட்டிகாவின் ஆழத்தில் கொண்டு போய் இவரைத் தள்ளினாலும் மனைவிக்கு தந்த வாக்குக்காக அரும்பாடுபட்டு 29C பஸ்ஸைப் பிடித்தாவது வீட்டுக்கு வந்து விடுவார்.

ஐரோப்பிய மொழிகளில் பரிச்சயம் உள்ளவராக வரும் மொழிபெயர்ப்பாளர் கருணாகரன் சிறிது நேரம் கிச்சுமூச்சு மூட்டுகிறார். அஜித்தின் பின்னணி தெரியாமல் இவர் முதலில் உளறுவதையும் பிறகு  அவருடைய அதிபயங்கர சாகசங்களைக் கண்டு வாய்பிளப்பதையும் பல படங்களில் பார்த்து விட்டோம். என்றாலும் இது தொடர்பான காட்சிகள் சற்று புன்னகைக்க வைக்கின்றன.

அஜித்தின் அன்பு மனைவி காஜல் அகர்வால். இவர் Morse Code-ன் சங்கேத மொழியில் தேவையற்ற நேரத்தில் கூட கணவருடன் உரையாடும்போதே தெரிந்து விடுகிறது, பிறகு அந்த விஷயம் ஒரு இக்கட்டான நிலையில் உதவப் போகிறது என்று. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் சிக்கிக் கொண்டவுடன் தன்னை மீட்க கணவர் வருவார் என்ற உறுதியுடன் பேசுவதும், மீட்பதற்காகக் கணவர் வந்த பிறகு அசந்தர்ப்பமான நேரத்தில் ஆக்ரோஷமாக ஒரு பாடலைப் பாடுவதும்…   முடியல! 

அக்‌ஷரா ஹாசன் சிறிது நேரமே வருவதால் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதைக் கணிக்க முடியவில்லை. பிரதான வில்லனான விவேக் ஒபராய், ‘நண்பா.. நண்பா’ என்று அழைத்துக் கொண்டே வில்லத்தனம் செய்ய முயற்சிக்கிறார். ஒன்றும் சுவாரசியமில்லை. ‘அவன் சாகவும் மாட்டான், சாடிக்காம விடவும் மாட்டான்’ என்பது போன்று நாயகனின் பிரதாபங்களைப் படம் முழுதும் இவரே சொல்லிக் கொண்டேயிருப்பது விநோதமான நகைச்சுவை.

மற்றபடி பெரும்பாலான நேரத்தையும் பிரேம்களையும் அஜித்தே ஆக்ரமித்திருக்கிறார். அவரின் ரசிகர்களுக்கு இது புல்லரிப்பாக இருக்கலாம். ஆனால் இதர பார்வையாளர்களுக்கும் திரைக்கதைக்கும் செய்யப்பட்ட அநீதியாகவே இதைச் சொல்லலாம்.

‘நண்பன், துரோகம், விடாமுயற்சி’ என்பது போன்ற தொடர்பான பஞ்ச் டயலாக்குகளை சமயசந்தர்ப்பமில்லாமல் யாரிடம் அஜித் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே புரியவில்லை. மொழி புரியாத நபர்களிடமும் இதை அவர் சொல்லிக் கொண்டிருப்பதுதான் விநோதம். ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதோ புரிந்து விடுகிறது போல. ஒவ்வொரு பஞ்ச்சிற்கும் கொண்டாட்டமாகக் கத்துகிறார்கள்.

ஒரு தீவிரமான பைக் சேஸிங் காட்சியின் இடையிலும் அஜித் மனைவியிடம் வரும் தொலைப்பேசி அழைப்பை ஏற்று அன்பாகப் பேசுகிறார். தன் குழந்தையின் இதயத்துடிப்பை மகிழ்வுடன் கேட்கிறார். வழியில் தென்படும் கிறிஸ்துவத் தேவாயலத்தைக் கண்டு சாமி கும்பிடுகிறார். பின்னால் கொலைகாரர்கள் ஆவேசமாகத் துரத்திக் கொண்டு வரும் நேரத்தில் இவையெல்லாம் நிகழ்கின்றன. நல்லவேளை, இந்தத் துரத்தல் காட்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருந்தால், மூலைக்கு மூலை இருக்கும் பிள்ளையார் கோவில்களில் எல்லாம் நாயகன் வண்டியை நிறுத்திக் கும்பிட்டுவிட்டு பிரசாதப் பொங்கல் வாங்கிவருவதையெல்லாம் பார்த்தால் பின்னால் வரும் வில்லன்கள்  ‘அடச்சே’ என்று நொந்து போய் திரும்பியே போயிருப்பார்கள்.

**
புளூட்டோனியம், அணுஆயுதம், ஹேக்கர், இண்டர்போல், சர்வதேச தீவிரவாதம் போன்ற சிக்கலான சொற்கள், நுட்பங்கள் தொடர்பான விஷயங்களில் எல்லாம் நம்முடைய மூளையை அதிகம் செலவிடாமல் ‘இந்தியாவுக்கு ஏதோ ஆபத்து. நாயகன் அதைத் தடுக்கப் போகிறான்’ என்று சுருக்கமான எளிமையுடன் புரிந்து கொண்டால் ஒருவேளை இந்தப் படத்தை ரசிக்க முடியலாம். படம் முழுவதும் பரபரப்பான காட்சிகள் வேகவேகமாக நகர்கின்றன.

அனிருத்தின் அட்டகாசமான மெட்டல் பின்னணி இசை, காட்சிகளின் பரபரப்பை மேலதிகமாகக் கூட்டி சுவாரசியப்படுத்துகிறது. அவசியமான இடங்களில் அதற்கேற்ற தொனியுடன் ஒலிக்கும் பாடல்களும் நன்று. ஆங்கிலப்பாடல்களுக்குத் தமிழ் சப்-டைட்டில் போடுவது புதுமையான முயற்சி.

உண்மையில் இது தொழில் நுட்பர்கள் ஆவேசமாக விளையாடியிருக்கும் திரைப்படம். ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன், அதிநுட்பங்களுடன் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் எதிர்தீவிரவாதக் குழுவின் அலுவலகம் உள்ளிட்டு கலை இயக்குநர் உருவாக்கியிருக்கும் பல ஆச்சரியங்கள், சண்டைக் காட்சி வடிவமைப்பாளரின் மிரட்டலான உழைப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியின் சாதனை படம் முழுக்க மின்னுகின்றன. ஆங்கிலப்படத்துக்கு நிகரான காட்சிகளின் வடிவில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நாயகனின் சாகசத்தை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதைதான் இதன் பெரிய பலவீனம். எத்தனை பிரம்மாண்டமான சிக்கலையும் நாயகன் அநாயசமாக எதிர்கொள்வான் என்று பலமுறை நிறுவப்படுவது எல்லாவற்றையுமே அசுவாரஸ்யமாக்குகிறது. அபத்தமான சென்ட்டிமென்ட் காட்சிகளை அநாவசியமாக இணைத்திருப்பது வேறு சிரிப்பை மட்டுமல்ல எரிச்சலையும் வரவழைக்கிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தீவிரத்தன்மையுடனும் சுவாரசியமான திரைக்கதையுடனும் உருவாக்கியிருந்தால், தமிழிலும் ஹாலிவுட் பாணியில் ஒரு நல்ல ‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்படம் வந்திருக்கிறது என்கிற பெருமையை நாம் அடைந்திருக்க முடியும்.

‘எதிரிகளால் அல்ல, உன் தோல்வியின் ஒப்புதலை உன்னால் மட்டுமே  தீர்மானிக்க முடியும்’ என்பது போன்ற உத்வேக உபதேசங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறதுதான். ஆனால் மூளையைக் கழற்றி விட்டுதான் இந்தப் படத்தை ரசிக்க முடியும் என்கிற அபத்த உணர்வைத்தான் ரசிக்கவே முடியவில்லை.

தேய்வழக்கமாக இருந்தாலும் இதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் வேகம் இருக்கிறது; விவேகம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com