‘அருவி’: சினிமா விமரிசனம்

குறிஞ்சிப்பூ போல ஓர் அருமையான முயற்சி...
‘அருவி’: சினிமா விமரிசனம்

வருடக்கடைசியில் வெளிவந்திருக்கும் ‘முதன்மையான’ திரைப்படம் –  ‘அருவி’. முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ‘இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ’ என்கிற முன்தீர்மானங்களும் எதிர்பார்ப்புகளும் துளியும் இல்லாமல் சென்றால் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. ‘குறிஞ்சிப்பூ’ போல ஓர் அருமையான முயற்சி.

குடும்ப வன்முறை. சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் நுகர்வுக்கலாசாரம், குறைந்தபட்ச நுண்ணுணர்வும் அறமும் இன்றி வணிகத்திற்காக ஊடகங்கள் நிகழ்த்தும் அபத்தங்கள், உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளிலிருந்தும் சமூகத்திலிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் போன்ற பல புள்ளிகளை எவ்வித பிரச்சார தொனியும் இன்றி இணைத்து அழகான கோலமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். நல்வரவு.

இந்த அருவி உங்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பாள்; கரைந்துருகி அழ வைப்பாள்; கூடவே ஆத்மார்த்தமாக சிந்திக்கவும் வைப்பாள். அருவியில் மிதக்கும் ஒரு மலர் போல வாழ்க்கை அவளை பல சுழல்பாதைகளுக்குள் அலைக்கழிக்கிறது. அவளின் எதிர்வினை என்னவாக இருந்தது?

**

தீவிரவாதியோ’ என்கிற சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் கடுமையான விசாரணைக்கு ஆளாகும் பெண்ணாகத்தான் நமக்கு ‘அருவி’ அறிமுகமாகிறாள். ‘நான் –லீனியர்’ அடுக்கில் விரியும் காட்சிகள் பல்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன.

யார் இந்த அருவி? 

நம் ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் பிறந்து வளரும் பெண் குழந்தையின் சராசரியான பிரதிநிதிதான் ‘அருவி’. பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் அற்புதமாக சித்தரிக்கப்படுவதைப் போல திறமையான ‘மாண்டேஜ்’ காட்சிகளின் மூலம் ‘அருவி’யின் மழலைப் பருவம் முதல் மங்கைப் பருவம் வரை நம் முன் விவரிக்கப்படுகிறது. மிக இயல்பான இந்த சித்தரிப்புகள் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை தருகின்றன. தந்தைக்கும் மகளுக்குமான அன்பு மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக உணர்த்தப்பட்டு விடுகிறது.

பிரதான பாத்திரம் என்பதால் அவள் நாயகித்தன்மையுடையவளாக சித்தரிக்கப்படும் பம்மாத்தெல்லாம் இல்லை. ‘நாப்கின்’ கொண்டு வர மறந்து கண்ணீருடன் நிற்கும் சக தோழியை கடுமையான அலட்சியத்துடன் கடந்து வரும் ஒரு சராசரிப் பெண்தான் அவள். ஒரு தற்செயல் விபத்தில் அவளுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அவள் தரப்பில் இல்லாத தவறுக்காக குடும்பத்தாரால் வெறுப்புடன் விரட்டப்படுகிறாள்.

பராசக்தி ‘கல்யாணி’யின் அதே கதைதான். பகட்டு அருவியை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் அவளைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி அவளைப் பயமுறுத்தியது.  ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். ஆனால் பழைய கல்யாணியைப் போல தற்கொலைக்கு முயலாமல் புழு புலியாவது போல கயவர்களை ரெளத்ரத்துடன் திரும்பிப் பார்ப்பதுதான் ‘அருவி’யிடமுள்ள வித்தியாசம். இந்தக் கோபத்தில் வெறுப்பு மட்டுமல்லாமல் அன்பும் கரிசனமும் கலந்திருப்பதுதான் ‘அருவி’யை தனித்துக் காட்டுகிறது.

இது தீவிரத்தொனியிலான திரைப்படமோ என்கிற எண்ணத்தை முற்றிலுமாக உடைத்துப் போடுகின்றன, அடுத்து வரும் காட்சிகள். பெரும்பாலும் சிரிப்பும் சிறிது அழுகையும் சிந்தனையுமாக கடக்க வைக்கின்றன.

**

நடிகர் தேர்வின் போது ஏறத்தாழ அறுநூறு நபர்களைக் கடந்து தேர்வு செய்யப்பட்டவராம் அதிதி பாலன். பிரதான பாத்திரமான ‘அருவி’யாக நடித்திருப்பவர். அந்த தேர்விற்கும் இயக்குநர் வைத்த நம்பிக்கைக்கும் முற்றிலும் நியாயம் செய்திருக்கிறார். அறிமுகத் திரைப்படத்திலேயே ‘விதம்விதமான முகபாவங்களை அள்ளித் தந்திருப்பது சிறப்பு. பலரும் ஏற்கத் தயங்கியிருக்கக்கூடிய பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதும் பாராட்டுக்குரியது. ‘எது சந்தோஷம்?’ என்கிற நோக்கில் ஒரு நீளமான வசனத்தை மிக இயல்பான தொனியில் பேசி நடித்திருப்பது பிரமிப்பால் நம்மை மூச்சடைக்க வைக்கிறது. நம்முடைய கற்பித மகிழ்ச்சிகளுக்குப் பின் பெருவணிகர்களின் லாபவெறியும் தந்திரமும் மறைந்திருக்கிறது என்று பேசும் உலகமயமாக்க அரசியல் அபாரம்.

தன்னுடைய குடும்பத்தின் அன்பிற்காக ஏங்கி ‘அருவி’ பேசும் இறுதிக்காட்சிகள் கலங்க வைக்கின்றன. (இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பார்க்கும் நோக்கிலேயே அமைத்திருப்பது சிறப்பு). ‘சேது’ படத்திற்காக விக்ரம் செய்த அதே அர்ப்பணிப்பை தந்திருக்கிறார் அதிதி பாலன்.

ஒரு தனியார் தொலைக்காட்சி அரங்கில் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. தங்களின் வணிகத்திற்காக குறைந்தபட்ச நுண்ணுணர்வுமின்றி மனித உணர்ச்சிகளோடு விளையாடும் ஊடகங்களின் அபத்தச் செயல்களை கிழித்து தோரணம் கட்டியிருக்கிறார்கள். எளிய சமூகத்தினரின் குடும்ப உறவுச் சிக்கல்களை ‘நாட்டாமைத்தனத்தோடு’ பஞ்சாயத்து செய்கிற பாவனையில் வணிகமாக்குகிற அயோக்கியத்தனங்கள் திறமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற நிகழ்ச்சிகள் தயாராகும் விதங்களில் உள்ள நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. மிகையொப்பனையுடன் அலப்பறை செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக லஷ்மி கோபால்சுவாமி, எந்தவொரு அசந்தர்ப்ப சூழலையும் நிகழ்ச்சிக்கு தீனியாக்க முயலும் இயக்குநராக கவிதா பாரதி, உதவி இயக்குநர்கள் படும் பாட்டை திறமையாக சித்தரிக்கும் ப்ரதீப் ஆண்டனி, கடைநிலை உதவியாளனான சுபாஷ் என்கிற சிறுவன் என்று பல துணை பாத்திரங்கள் தங்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே இதுதான் முதல் திரைப்படம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, ‘அருவி’யின் தோழி எமிலியாக நடித்திருக்கும் அஞ்சலி. தமிழ் சினிமா திருநங்கைகளை சித்தரிக்கும் விதம் நாம் அறிந்ததே. அதிலிருந்து முற்றிலும் விலகி, படம் முழுவதும் வரும் பாத்திரமாக இதை உருவாக்கியிருப்பது சிறப்பு. இந்த வாய்ப்பை அஞ்சலி மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மரியாதைக்குரிய வகையில் இந்தப் பாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியிருப்பதற்கு பாராட்டு. (மூணு.. பேரு.. எப்படிண்ணா’ என்று சிறுவன் கேட்பது மட்டும் நெருடல்).

உள்ளரங்க காட்சிகள் நம்பகத்தன்மையை சற்று இழந்திருந்தாலும், தொலைக்காட்சி அலுவலகத்தை காவல்துறை சுற்றி வளைக்கும் காட்சிகள், விசாரணைக் காட்சிகள் போன்றவை நம்பத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. டப்பிங் பட தமிழில் பேசியிருந்தாலும் காவல்துறை உயர்அதிகாரியின் தோற்றமும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ‘அருவி’யின் தந்தையாக வருபவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

**

இதன் பாடல்களையும் பின்னணி இசையையும் பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும். பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். வணிகத் திரைப்படங்களின் பொதுவான பாணியிலிருந்து முற்றிலும் விலகி ‘புது விதமான’ ஆத்மார்த்த அனுபவத்திற்கு உள்ளாக்குகிறது இசையும் பாடல்களும். ஊத்துக்காடு வெங்கடகவி, குட்டி ரேவதியோடு இணைந்து இயக்குநர் அருண்பிரபுவும் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். ஷெல்லே காலிஸ்ட்டின் அற்புதமான ஒளிப்பதிவும், குழப்பம் தராத நேர்த்தியோடு காட்சிகளை ஒழுங்குபடுத்தியிருக்கும் ரேமண்டின் எடிட்டிங்கும் பாராட்டுக்குரியது.

சர்வதேச திரைவிழாக்களில் விருது பெற்ற இத்திரைப்படத்தில் இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் சில குறைகளும் போதாமைகளும் இல்லாமல் இல்லை. ‘அருவி’ எதற்காக அந்தச் ‘சம்பவத்தை’ நிகழ்த்துகிறாள், அவளின் நோக்கம்தான் என்ன என்பதற்கான தெளிவோ கோர்வையோ இல்லை. தனக்கு அநீதியை இழைத்தவர்களிடம் மன்னிப்பைக் கோருவதுதான் அவளது நோக்கம் என்றால் எதற்காக இத்தனை பெரிய நாடகம் என்கிற கேள்வி வியப்புடன் தோன்றுகிறது. இது போன்ற குறைகள் களையப்பட்டிருந்தால் முழுமையான அனுபவத்தைத் தந்திருக்கும்.

தனக்கான அன்பைக் கோரி துப்பாக்கியை நீட்டும் முரட்டுக் குழந்தைதான் – அருவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com