சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ – சினிமா விமரிசனம்

‘விசுவாசம்’ என்கிற பெயரில் முதலாளிகள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் தொழிலாளிகள் உடந்தையாக நிற்கத் தேவையில்லை...
சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ – சினிமா விமரிசனம்

பன்னாட்டு நிறுவனங்கள், விதவிதமான வணிகத் தந்திரங்கள் மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் உணவுப் பொருட்களின் சந்தையை ஆக்கிரமித்திருக்கின்றன. அவற்றின் தயாரிப்புகளில் கலந்துள்ள ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்களைப் பற்றி நுகர்வோர் சமூகத்திடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. 

ஒருபக்கம் ஏமாற்றும் முதலாளிகள், இன்னொரு பக்கம் ஏமாறும் நுகர்வோர்கள் இருக்கிற நிலையில், தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்வது முதல் அவற்றைச் சந்தைப்படுத்துவது வரை பல்வேறு நிலைகளில் உழைக்கிற பணியாளர் சமூகம், தார்மீக நோக்கிலும் சுயபொறுப்புடனும் கையாண்டால் உணவுப் பொருள் கலப்பட பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம் என்று சொல்கிறது ‘வேலைக்காரன்’ திரைப்படம். 

‘விசுவாசம்’ என்கிற பெயரில் முதலாளிகள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் தொழிலாளிகள் உடந்தையாக நிற்கத் தேவையில்லை, அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்கிற முறையில் அந்த அநீதிகளைத் தட்டிக் கேட்கலாம்; வணிக அநீதிகளுடன் உடன்படாமலிருக்கலாம் என்பது இதன் மையம்.
 

**

சென்னையில் உள்ள ஒரு குப்பம். ‘கூலிக்கார குப்பம்’ என்கிற அதன் பெயர் மருவி ‘கொலைகார குப்பமாக’ மாறியிருக்கிறது. அங்குள்ள படித்த இளைஞன் சிவகார்த்திகேயன். பிரகாஷ் ராஜின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் குப்பத்து இளைஞர்கள், கூலிப்படைத் தொழிலில் சீரழிவதைக் கண்டு மனம் வருந்துகிறான். தான் நடத்தும் சிறிய அளவிலான வானொலி நிலையம் மூலம் குப்பத்து மக்களை நல்வழிப்படுத்த முயல்கிறான். 

அந்த முயற்சிகளில் தோல்வி ஏற்படும் சூழலில், குடும்ப வறுமை காரணமாக தன் சேவையைக் கைவிட்டு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்கிறான். மிகுந்த ஆர்வத்துடன் உழைத்து முன்னேறிக் கொண்டு வரும் அவனுக்கு, கூலிப்படைத் தொழிலும் கலப்பட உணவுகளைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே அளவிலான சமூக சீர்கேடுகளைத்தான் உற்பத்தி செய்கின்றன என்கிற உண்மை தெரியவருகிறது. 

பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி அவர்களை ஒன்றுபடுத்துவதின் மூலம் இந்தச் சமூக ஆபத்தை தடுப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறான் ஆனால் சில வெற்றிகளையும் பல பின்னடைவுகளையும் அவன் சந்திக்க வேண்டியிருக்கிறது. சில துரோகங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுடன் ‘அறிவாயுதம்’ கொண்டு அவன் நிகழ்த்தும் இந்தப் போரில் வென்றானா என்பதை மீதமுள்ள பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன. 

**

நகைச்சுவை நாயகன் என்கிற நிலையிலிருந்து, இத்திரைப்படத்தின் மூலம் அடுத்த தளத்திற்கு நகர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். என்றாலும் அவருடைய பிம்பத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையமைத்திருப்பது சாமர்த்தியம். பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்த பிறகும் தன்னுடைய பேச்சில் குப்பத்து வாடையை கைவிடாமலிருப்பது பாத்திர வடிவமைப்பிலுள்ள கவனத்தைக் காட்டுகிறது. கூலிப்படையாகச் சீரழியும் குப்பத்து இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர் செய்யும் முயற்சிகள் பாராட்ட வைக்கின்றன. ரெளடியான பிரகாஷ் ராஜைத் தனது சமயோசித புத்தியால் சமாளிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. தன்னுடைய நண்பனின் மரணத்தின் மூலம் தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஆபத்தை உணர்வது நல்ல திருப்பம். 

எதிர்நாயகனாக ஃபகத் பாஸில். ‘யானைக்கு சோளப்பொறி’ போல இது போன்ற அமைதியான வில்லன் பாத்திரங்களையெல்லாம் அவர் மலையாளத்தில் எப்போதோ செய்து முடித்து விட்டார். என்றாலும் லாபவெறி பிடித்த ஒரு நயவஞ்சக முதலாளியின் சித்திரத்தை அற்புதமாக முன்நிறுத்துகிறார்.

ஒரு திரைப்படத்தில் நாயகி இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நாயகனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அவரின் இந்தச் சிறிய பாத்திரம் அநாவசியமானது. ரோபோ சங்கர், சதீஷ், விஜய் வசந்த், தம்பி ராமைய்யா, விநோதினி, அருள்தாஸ், சினேகா போன்ற துணை நடிகர்கள் தங்களின் பங்களிப்பை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்கள். நாயகனின் தந்தை மற்றும் தாயாக வரும் சார்லி, ரோகிணியின் நடிப்பும் சிறப்பு. பிரகாஷ்ராஜ் இது போன்ற ‘தாதா’ பாத்திரத்தை பல படங்களில் செய்து விட்டதால் அவருக்கான சவால் ஏதுமில்லை. 

**

அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பிற்குத் துணை நின்றிருக்கிறது. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்கிற துவக்கப்பாடல் அவருடைய பிரத்யேக பாணியில் ஜனரஞ்சமாக இருக்கிறது. நயன்தாராவுடனான டூயட் பாடல் கேட்க இனிமையாக இருந்தாலும் வேகமாகப் பயணிக்கும் திரைக்கதையில் எரிச்சலூட்டும்படி குறுக்கிடுகிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்பு பாராட்டும்படியாக அமைந்துள்ளன. 

‘தனியொருவன்’ பாணியைப் போலவே ‘பூனை –எலி’ விளையாட்டுப் பாணியை மையப்படுத்தி இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் மோகன் ராஜா. இதர மொழிகளில் வெற்றி பெற்ற திரைக்கதைகளைத் தன் தம்பியான ‘ஜெயம் ரவியை’ வைத்து தமிழ் வடிவம் கொடுக்கத்தான் இவரால் முடியும் என்கிற எதிர்மறையான பிம்பத்தை இத்திரைப்படத்தின் மூலம் அழுத்தமாக துடைத்துள்ளார்.
 
‘வானொலி நிலையத்தை’ வெல்டிங் தொழில் செய்யும் தந்தையின் மூலம் கம்பியை வெட்டச் சொல்லி நாயகன் ‘திறப்பு விழா’ நிகழ்த்துவது, நண்பனைக் கொல்ல வருபவர்களின் மீது கோபம் ஏற்படுவதற்காக சிவகார்த்திகேயன் பிரகாஷ்ராஜை  நினைத்துக் கொள்ளும்போது எதிரே வரும் அத்தனை நபர்களும் பிரகாஷ்ராஜ் போலத் தோன்றுவது.. என்பன போன்ற சின்ன சின்ன ஆச்சரியங்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. சிவகார்த்திகேயனின் பிம்பத்தைக் கருத்தில் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை அதிகம் வைக்காமல் நகைச்சுவை இழையோடு பயணிக்க வைத்திருப்பது சிறப்பு.  புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் கவனிக்கவும் கைத்தட்டவும் வைக்கின்றன. ஒரு ‘சூப்பர் மார்க்கெட்’ திட்டமிட்டு அமைக்கப்படுவதின் பின்னணியில் உள்ள வணிகத்தந்திரங்களை ஃபகத் பாஸில் விளக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தவும் சிந்திக்கவும் வைக்கிறது. 

ஆனால் முதல் பாதியில் அசுர வேகத்தில் பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் நிறைய நொண்டியடிக்கிறது. நம்பகத்தன்மையற்ற காட்சிகளும் சலிப்பையூட்டுகின்றன. சாகிற தறுவாயில் பிரகாஷ்ராஜ் உண்மைகளைக் கொட்டுவது, பிரபலமான கார்ப்பரேட் முதலாளியின் மகனை இதர முதலாளிகள் அறியாமலிருப்பது, சிவகார்த்திகேயனின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு பணியாளர்கள் ஒன்றுகூடுவது போன்றவை சினிமாவின் வழக்கமான நாடகம்.

**

சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தரமற்ற பொருட்கள், பணியாளர்களின் உழைப்பின் மூலம்தான் சந்தைக்கு வருகின்றன. இதன் மூலம் இந்த மோசடிகளில் அவர்களும் பங்குபெறுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியாளர்களையும் இந்த நோக்கில் சிந்திக்க வைப்பதில் இத்திரைப்படம் வெற்றி பெறுகிறது எனலாம். ‘இனி விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன்” என்று இதன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் அறிவித்ததும் இதன் எதிரொலியாக இருக்கலாம். 

படத்தின் உணர்ச்சிகரமான கிளைமாக்ஸின் போது சில பார்வையாளர்கள் தன்னிச்சையாக கைபேசியின் விளக்கை எரியச்செய்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். திரைப்படங்களைக் கேளிக்கையானதாக மட்டும் அணுகுவது முறையானதல்ல. சிறு துளி மாற்றமாவது அவற்றிலிருந்து நம் மனங்களில் பரவுவதில்தான் இது போன்ற திரைப்படங்களின் ‘உண்மையான’ வெற்றி அடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com