விஜய் சேதுபதி - மாதவன் நடித்துள்ள 'விக்ரம் வேதா': சினிமா விமரிசனம்

விஜய் சேதுபதி - மாதவன் நடித்துள்ள 'விக்ரம் வேதா': சினிமா விமரிசனம்

எலியைப் பிடிப்பதற்காகப் பொறிக்குள் வடை வைப்பார்கள். ஆனால் ஓர் எலியே கையில் வடையுடன் பொறியை நோக்கி வந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும்?

பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவைத் திரைப்படங்கள் தமிழில் உருவாவதற்கான முன்னோடிகள் என்று இயக்குநர் புஷ்கர் - காயத்ரி தம்பதியினரைச் சொல்ல முடியும். 'ஓரம் போ' மற்றும் 'வ' ஆகிய திரைப்படங்களின் மூலம் இதற்கான பாதையை அவர்கள் தமிழில் திறந்து வைத்தனர். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது மறுவருகை 'விக்ரம் வேதா'வின் மூலம் அதிரடியாகவும் சுவாரசியமாகவும் அமைந்துள்ளது. 'பூனை - எலி விளையாட்டு' என்கிற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் தங்களின் அபாரமான திரைக்கதையினால் இந்தத் திரைப்படத்தைச் சுவாரசியமான அனுபவமாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் கடுமையான உழைப்பும் புத்திசாலித்தனமும் பிரதிபலிக்கின்றன. சில பிசிறுகள் இருக்கிறதென்றாலும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படைப்புகளில் ஒன்றாக 'விக்ரம் வேதா' ஆகியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

விக்கிரமாதித்தன் கதை என்கிற தொன்மையான கதையாடலை, ஆடு, புலி ஆட்டத்தின் விளையாட்டுப் பாணியில் கலந்து நவீனமாக வார்த்து எடுத்த இயக்குநர்களின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பார்வையாளர்களின் புத்திசாலித்தனங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் நுண்ணறிவையும் மதிப்பது போல் படத்தை உருவாக்கியுள்ளார்கள். 

**

விக்ரம் (மாதவன்) ஒரு நேர்மையான, திறமையான காவல் அதிகாரி. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டும் கூட. வேதா (விஜய் சேதுபதி) என்கிற முக்கியமான ரெளடியைப் பிடிப்பதற்காக விக்ரமின் குழு பல ஆண்டுகளாக முயல்கிறது. இதற்கான ஒரு சாகச நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடும்போது வேதாவின் முக்கியமான சில அடியாள்கள் கொல்லப்படுகிறார்கள். யாரென்று தெரியாத ஓர் அப்பாவியின் சடலமும் இதில் கிடக்கிறது. போகிற போக்கில் காட்டப்படும் இதுதான் இந்தக்கதையின் வலுவான முடிச்சு.

எவர் கண்ணிலும் படாமல் திறமையுடன் மறைந்து வாழும் வேதா, தன் ஆள்களின் சாவுக்கு வந்து சென்றதாகத் தகவல் கிடைக்கிறது. தன் திறமைக்கு விடப்பட்ட சவாலாக இதை உணரும் விக்ரம், காவல்துறையின் படைபலத்துடன் வேதாவைக் கைது செய்ய ஆவேசமாக புறப்படுகிறார். ஆனால் ஓர் அதிர்ச்சி திருப்பமாக, வேதாவே காவல்துறையிடம் வந்து சரண் அடைகிறார். பல வருடங்களாக காவல்துறைக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த வேதா, ஏன் தன்னிச்சையாக வந்து சரணடையவேண்டும்?

இந்தக் குழப்பமான கேள்வி பிரம்மாண்டமாக விக்ரமின் முன் நிற்கிறது. இதற்கான விடையைத் தேடி புறப்படுகிறார். இதற்குப் பின்னால் பல துணைக்கதைகளும் அதிரடியான திருப்பங்களும் ஒளிந்துள்ளன. ஒரு முழு வட்டம் போல புறப்பட்ட இடத்துக்கே விக்ரம் வந்து சேரும் அந்த உச்சக்காட்சி அற்புதமான கதைப்பின்னலைக் கொண்டிருக்கிறது.


***

நம்பிக்கையான துப்பு ஒன்றின் மூலம் வேதாவின் அடியாள்களை என்கவுண்ட்டரில் கொல்வதற்காகச் செயல்படும் முதல் காட்சிக் கோர்வையிலேயே மாதவன் நம்மை அபாரமாக ஈர்த்துவிடுகிறார். தன்னம்பிக்கை பொங்கி வழியும் அவருடைய உடல்மொழியும் அற்புதமான நடிப்பும் அசலான காவல்துறை அதிகாரியாக நிலைநிறுத்துகிறது. காதல் காட்சிகளிலும் இயல்பாக நடித்து 'அலைபாயுதே' தருணங்களை மீட்டிருக்கிறார். தன்னுடைய சக அதிகாரியின் மரணச் செய்தியை அவரது மனைவியிடம் கண்ணீர் வழியும் துயரத்துடன் வசனமில்லாமலே சொல்லியிருக்கும் காட்சி அபாரம்.

எலியைப் பிடிப்பதற்காகப் பொறிக்குள் வடை வைப்பார்கள். ஆனால் ஓர் எலியே கையில் வடையுடன் பொறியை நோக்கி வந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும்? இப்படியொரு ரகளையான அறிமுகத்துடன் விஜய் சேதுபதியின் நுழைவு. வெறித்தனமான கூச்சலில் அதிர்கிறது அரங்கம்.

விஜய் சேதுபதி, வழக்கம்போல் தனது அநாயசமான நடிப்பினாலும் வசன உச்சரிப்புகளினாலும் கவர்கிறார். இந்தப் பாணி இன்னமும் சலிப்படைய வைக்கவில்லை என்றாலும் வருங்காலத் திரைப்படங்களில் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. மாதவன் என்கிற இன்னொரு வலுவான பிம்பம், இந்தத் திரைப்படத்தில் இருந்தாலும், திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடன் இந்தத் திரைப்படத்தில் அவர் பங்கேற்றிருப்பது வரவேற்புக்கு உரியது.

கன்னடத் திரைப்படமான 'யூ டர்னில்' தனது அற்புதமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவர்ந்த 'ஷ்ரத்தா ஸ்ரீநாத்' இதிலும் ஈர்க்கிறார். கணவனுக்காகத் தனது வழக்கறிஞர் பணியை விட்டுத்தராத அவரது பிடிவாதம் ரசிக்க வைக்கிறது. தனித்தன்மையுடன் கூடிய பெண் பாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர்களுக்குப் பாராட்டு. கணவன் - மனைவி பணிபுரியும் துறைகள் ஒரே இடத்தில் வந்து முட்டும்போது அதன் மூலம் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் சிக்கல்களையும் முரண்களையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். (இத்திரைப்படத்தின் இயக்குநர்களும் தம்பதியினர்தான் என்பதை இங்கு நினைவுகூர்வது சுவாரசியமான பொருத்தம்).

***

இரு நாயகர்களின் திரைப்படம் என்றாலும் இருவருக்குமே ரகளையான சமவாய்ப்பு இருப்பது போன்ற திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.

'இவன் ஏன் தானாக வந்து சரணடைந்தான்? என்று ரகசியமாக மாதவன் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது 'ஒரு கதை சொல்லட்டுமா சார்?' என்று விஜய்சேதுபதி அதற்கான பின்னணியை பூடகத்துடன் தொடங்குவது ரகளையான காட்சி. ஒவ்வொரு முறை கைதாகிற போதும் அவர் மாதவனைக் குழப்பிவிட்டுத் தப்பிப்பது சுவாரசியம்.

பழுதடைந்திருக்கும் மாதவனின் புல்லட் அதற்கான உதிரி பாகங்களோடு மெல்ல மெல்ல ஒன்று சேர்ந்து முழுமையாகும்போது, இந்தச் சம்பவத்துக்குப் பின் உள்ள பல மர்மங்களுக்கான உண்மைகளும் விடைகளும் முழுமையை நோக்கி நகர்வது திரைக்கதையின் வடிவமைப்பின் திறமைக்கு ஒரு நல்ல உதாரணம்.

கெளதம் மேனனின் வசனத்தை நினைவுப்படுத்தினாலும் 'கெட்டதுக்கும் நல்லதுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருக்கு. கோட்டுக்கு இந்தப்பக்கம் நான், அந்தப்பக்கம் நீ' என்று மாதவன் சொல்வது வெறும் வசனமாக இல்லாமல் காட்சிகளின் வழியாகவும் இடம் பெறுவது சுவாரசியம். உண்மை என்பது கருப்பு - வெள்ளையால் ஆனது அல்ல, அது பல பரிமாணங்களும் பக்கங்களும் உள்ள பிரமிடு வடிவம் போன்றது' என்கிற அடிப்படையை விஜய் சேதுபதி, மாதவனுக்கு உணர்த்தும் காட்சியமைப்புகள் அற்புதம்.

தாம் கடந்து சென்ற சம்பவங்களின் ஒவ்வொரு நுண்ணிய விஷயங்களை நினைவு கூர்வதின் மூலம் இந்த வழக்கின் சிக்கலான பின்னணிகளை ஒன்று சேர்த்து மாதவன் புரிந்து கொள்ள முயலும் காட்சிகளும் அதற்கான திட்டமிடலும் சிறப்பானவை.

'பூனைக்கும்தான் வால் இருக்கு, எலிக்கும்தான் வால் இருக்கு. ரெண்டும் ஒண்ணாயிடுமா?' என்பது போன்ற புத்திசாலித்தனமான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 'போலீஸ்காரனா இருந்து ஹீரோவாறது ரொம்ப ஈஸி சார். என்னை மாதிரி ஆளுங்க ஹீரோ ஆவறதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று விஜய் சேதுபதி சொல்வது போன்ற வசனங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றன. 'முட்டை உடைஞ்சு போச்சுன்னா அதுக்காக வருத்தப்படறதை விட உடனே ஆம்லேட் போட்டு சாப்பிடறதுதான் புத்திசாலித்தனம்' என்பது போன்ற குறும்பான வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.

உண்மை என்பது கருப்பு - வெள்ளையானதல்ல என்பதை போஸ்டர்கள் முதல் பல விஷயங்களில் கவனித்துச் செயல்படுத்தியிருக்கும் இயக்குநர்களின் திட்டமிடல் பாராட்ட வைக்கிறது.

***

மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் குழுக்களில் உள்ள ஒவ்வொரு சிறுபாத்திரங்களும் அதற்கான தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் தொடக்கம் முதலே பயணிக்கும் அவனது சகோதரன் புள்ளி, அவனது தோழி சந்திரா, தலைவனாகும் கனவுடன் காத்திருக்கும் சங்கின் பிரதான அடியாள் ரவி என்று பல பாத்திரங்கள் சுவாரசியமான கலவையுடன் அமைந்துள்ளன. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வரலட்சுமி சரத்குமார், கதிர், பிரேம், ராஜ்குமார் (நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்) போன்றவர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இடது கையால் உணவு சாப்பிட்டுக் கொண்டே, வேதாவின் பிம்பத்தை 'ஆங்....' என்று வடசென்னையின் பிரத்யேமான பாணியில் வரலட்சுமி சிலாகிப்பது ரகளையான காட்சி. 'சேட்டாவாக' வரும் ஹரீஷ் பரேடி பிரத்யேகமாக கவனிக்க வைக்கிறார்.

கடப்பதே தெரியாமல் முதற்பாதி பரபரப்பாக முடியும் போது, அதற்கு ஈடுகொடுக்காமல் இரண்டாம் பகுதி பின்னணிக் கதைகளுடன் நகர்வது சற்று இழுவையாக உள்ளது.. என்றாலும் உச்சக்காட்சியில் அனைத்து புள்ளிகளையும் புத்திசாலித்தனமாக இணைத்திருப்பதின் மூலம் நிமர்ந்து அமர வைத்திருக்கிறார்கள். 'டசக்கு டசக்கு' என்கிற பாடல், வடசென்னைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலாட்டாவாக இருந்தாலும் தவறான இடத்தில் அமர்ந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. அப்பாவித்தனமாக அறிமுகமாகும் ஓர் இளம் காவல்அதிகாரி, பின்வரும் காட்சிகளில் திடுக்கிடும் வகையில் எதிர்பாராத விதமாக செயல்படுவார் என்பது வழக்கமான கிளிஷே என்பது இயக்குநர்களுக்குத் தெரியாதா?

தீயவர்களை அழித்த நிம்மதியுடன் குற்றவுணர்வின்றித் தூங்கும் மாதவன், மிகத் திறமையான காவல்அதிகாரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வகையில், தன்னுடைய சக பணியாளர்களின் நேர்மையின்மையைக் கவனிக்காமலிருக்கும் அளவுக்காக கடிவாளம் அணிந்திருப்பார் போன்ற பல சந்தேகங்கள் சில காட்சிகளில் எழுகின்றன. போலவே விஜய் சேதுபதியும் தன்னுடைய சகாக்களின் துரோகங்களை யூகிக்காமல் இருப்பது.

ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிபருக்கு ஆஜராகும் தோரணையுடன் வேதாவின் சார்பில் வழக்கறிஞர்கள் வருகிறார்கள். அது சார்ந்த பின்னணியோ, நம்பகத்தன்மையோ காட்சிகளில் அமையவில்லை. 'அவரவர்களுக்கான சுதந்தரத்துடன் தத்தம் துறைகளின் பணிகளில் செயல்பட வேண்டும்' என்று கோரும் மாதவனின் மனைவி, காவல்துறை அதிகாரி என்கிற காரணத்துடன் தம்மை மாதவன் பின்தொடர்ந்ததற்காக ஏன் அத்தனை கோபப்படுகிறார் என்கிற முரணில் பாத்திரத்தின் வடிவமைப்பு சிதைந்து போகிறது. அத்தனை புத்திசாலித்தனமான அதிகாரியான மாதவன், ரெளடியான விஜய் சேதுபதி எழுப்பும் விநோதமான கேள்விகளால் குழம்பி நிற்பதும் வீழ்வதும் சற்று செயற்கை. வடசென்னை கலாச்சாரத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி, தமிழ் சினிமாவின் வழக்கப்படி அதைக் குற்றவாளிகளின் ஒட்டுமொத்தக் கூடாரமாகச் சித்தரிப்பது ஏமாற்றம் மட்டுமல்ல, எரிச்சலும் கூட.

என்றாலும் தங்களின் அற்புதமான கதையாடலின் மூலம் இந்தக் குறைகளையெல்லாம் மறந்து திரைப்படத்தை ரசிக்க வைத்திருப்பது இயக்குநர்களின் திறமைக்குச் சான்று. சிறப்பான திரைக்கதை அமைவதற்காகப் பல மாதங்களை இயக்குநர்கள் பொறுமையுடனும் கவனத்துடன் செலவழித்திருக்கிறார்கள் என்பது இளம் இயக்குநர்களுக்கான பாடம்.

சாமின் இசையில் பாடல்கள் புத்துணர்ச்சியுடன் அமைந்திருக்கின்றன. குறிப்பாக 'தனனதனனனா..' என்று அதிரடியாக வரும் கருப்பொருள் இசை படத்தின் முதுகெலும்புகளில் ஒன்று. பல காட்சிகளில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. வித்தியாசமான, இயல்பான பின்னணி நிறங்களின் மூலம் ஒளிப்பதிவாளர் வினோத் கவனிக்க வைக்கிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்கின் மூலம் சுவாரசியமாக கதை சொல்லியிருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின்.

***

எது உண்மை, எது தர்மம் போன்ற பல தத்துவார்த்தமான கேள்விகளையும் விசாரணைகளையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது. குற்றத்தில் ஈடுபடுவர்களும் சரி, அதைத் தடுப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்களும் சரி, ஒரு நுண்ணிய கோட்டுக்கு இடையில் நிற்கிறார்கள். பின்னவர்கள் கோட்டைத் தாண்டி அநீதியின் பக்கத்தில் விழுவதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகம் உள்ளன. எனில் இரு தரப்பும் சமம்தானே, என்ன வித்தியாசம் என்கிற ஆழமான முரணை இந்த திரைப்படம் கேள்வி கேட்கிறது.

ஒருவகையில் குற்றவாளிகளின் பின்னணிகளை விடவும், காவல்துறையின் மோசடிகளை, அதிலுள்ள அழுகல்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. குற்றத்தைத் தடுப்பவர்களே, குற்றத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும்போது குற்றங்கள் எப்படிக் குறையும்? எனில் குற்றவாளிகளின் உலகுக்கும் காவல்துறைக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்பன போன்ற சங்கடமான கேள்விகள் கிளம்புகின்றன.

தமிழ் சினிமாவின் சமீபத்திய வரவுகளில் அடிக்கோடிட்டுக் கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம் 'விக்ரம் வேதா'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com