ஜெயம் ரவியின் வனமகன்: சினிமா விமரிசனம்

சில நிமிடங்களிலேயே 'இது வழக்கமான தமிழ் சினிமாதான்' என்று அந்த ஆவலின் மீது ஒரு லாரி தண்ணீரை ஊற்றி...
ஜெயம் ரவியின் வனமகன்: சினிமா விமரிசனம்

வெகுஜன ரசனையின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் இணக்கமாக, கல்லா மட்டும் பிரதானமான நோக்கத்துடன்  'தாம் எடுப்பது பொழுதுபோக்கு மசாலாத் திரைப்படம்' என்கிற வெளிப்படைத்தனத்துடன் திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள் ஒருபக்கம். எஸ்.பி.முத்துராமன், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால் ஒரு சமூகப் பிரச்னையை உரையாடுவதான பாவனையுடன் அதை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தும் வணிக இயக்குநர்கள் இன்னொரு பக்கம். மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்கள் உதாரணம். ஒருபுறம் வெளிநாட்டு குளிர்பான பிராண்டுக்கான விளம்பரத்தில் நடித்துவிட்டு, அதே நடிகர் இன்னொருபுறம் விவசாயிகளின் பிரச்னைகளை திரையில் தீவிரமாகப் பேசுவதாக பாவனை செய்யும் வணிக மாய்மாலங்களே இங்கு அதிகம்.

இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் 'வனமகன்' இதில் இரண்டாம் வகையாகத் திகழ்கிறது. வனத்தின் பழங்குடிகளைக் காவல்துறையின் அராஜக வன்முறையுடன் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயற்கை வளங்களைச் சுரண்டி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிப் பேசுவதாகப் பாவனை செய்யும் 'வனமகன்' பழங்குடிகளின் பிரச்னைகளின் மையத்தைப் பற்றி துளி கூட அக்கறை கொள்ளவில்லை. அதைத் தவிர்த்து தமிழ் சினிமாவின் வழக்கமான வணிக அபத்தங்களே இதில் பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன.

***

'வனமகன்' திரைப்படம் எதைப் பற்றியது?

ஒரு தீவின் பழங்குடி மக்கள் காவல்துறையால் மிருகங்களைப் போல பிடிபடுவதோடு படம் தொடங்குகிறது. மனச்சாட்சியுள்ள காவலர் ஒருவரின் மூலம் ஜெயம் ரவி மட்டும் தப்பிக்கிறார். கார்ப்பரேட் நிறுவன முதலாளியான நாயகி  (சாயிஷா), நண்பர்களுடன் அந்தத் தீவுக்கு உல்லாசப் பயணம் வருகிறார். அவருடைய வாகனத்தில் மோதி மயங்கிச் சரியும் ஜெயம் ரவியை, சட்டத்துக்குப் பயந்து எவரும் அறியாமல் சென்னைக்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஓடி விடுகிறார். அவருடைய வீட்டுக்கே ஜெயம் ரவி வருவதான சூழல் அமைகிறது.

நவீன நாகரிகங்களின் சாயல் துளிகூட படாத பழங்குடி மனிதன், நாகரிகச் சூழலுக்குள் பொருந்த மிகவும் சிரமப்படுகிறான். முதலில் அவனுடைய முரட்டுத்தனத்தைக் கண்டு அஞ்சும் நாயகி, பிறகு அவனுடைய நல்லியல்புகளால் கவரப்படுகிறாள். தன்னுடைய உதவியாளனாக வைத்துக்கொள்கிறார்.

ஒருபக்கம், காணாமற்போன ஜெயம்ரவியை வனக்காவலர்கள் ஆவேசமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்களால் சாகடிக்கப்பட்ட பழங்குடி மனிதர்கள் தவிர இதர நபர்கள் தீவின் வேறொரு பக்கம் ஆதரவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். விபத்தின் காரணமாக ஜெயம் ரவிக்குத் தன்னைப் பற்றிய நினைவுகள் பெரிதும் வருவதில்லை.

இந்தச் சூழலில் ஜெயம் ரவி மறுபடியும் வனத்துக்குள் செல்லும் நிலைமை உருவாகிறது. நாயகியும் அவனுடன் செல்கிறார்.

ஜெயம் ரவிக்கும் சாயிஷாவுக்கும் வனத்துக்குள் என்ன ஆகிறது, அவர்களை பெரும்படையுடன் துரத்திச் செல்லும் வனக்காவலர்களிடமிருந்து தப்பித்தார்களா, இதரப் பழங்குடிகள், மற்றும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களின் நிலைமை என்ன, என்பதையெல்லாம் பரபரப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***

நூற்றாண்டுகளைக் கடந்தாலும் இன்னமும் நவீன உலகின் நஞ்சுகள் கலக்காத, நாகரிகத்தின் தடங்களே படாத மனிதர்களின் கதை என்கிற நாசரின் குரலுடன் படம் தொடங்கும்போது நமக்கு எதிர்பார்ப்பு  உண்டாகிறது. வனக்காவலர்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் பரிதாபக் குரல்கள் ஒலிக்கின்றன. பழங்குடி மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழில் பேசும் நகைச்சுவையைத் தவிர்த்துவிட்டு அவர்களுக்கான பிரத்யேக மொழியில் உரையாடும்போது நமக்கு ஆவல் இன்னமும் அதிகமாகி 'அட பரவாயில்லையே' என்று நிமிர்ந்து உட்கார்கிறோம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே 'இது வழக்கமான தமிழ் சினிமாதான்' என்று அந்த ஆவலின் மீது ஒரு லாரி தண்ணீரை ஊற்றி அணைத்துவிடுகிறார் இயக்குநர். பழங்குடி மனிதன் நகரத்தின் சூழலில் படும் பாடுகளை வேடிக்கைப் பொருள் போல காட்டுகிறார். சமகால நாகரிகமே அப்படியொரு பழமையில் இருந்துதான் பரிணமித்து வந்தது என்பதை மறந்துவிட்ட தமிழ்ப் பார்வையாளர்கள், அந்தப் பழங்குடி மனிதனின் வேடிக்கைகளைக் கண்டு சிரித்து மகிழ்கிறார்கள். இவ்வாறான குரங்கு வித்தைகள் படம் பூராவும் நிறைந்திருக்கின்றன.

சிலபல சாகசங்களுக்குப் பிறகு பழங்குடி மனிதர்களின் நலன் கருதி நாயகியே வனத்தை விட்டு வெளியே வந்து காவலர்களிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்கிறார். தான் எந்த நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாத புத்திசாலியான அவர், 'தன்னுடைய நிறுவனம்தான் வனநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது' என்பதை இறுதியில் அறிந்தவுடன் பழங்குடி மனிதர்களின் காவலனாகவும் ஜெயம் ரவியின் காதலியாகவும் நிற்கிற நாடகத்தனத்தோடு படம் நிறைவடைகிறது.

***

கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசின் கூட்டுக்கொள்ளையோடு வனமக்களின் மீது நிகழ்த்தும் யுத்தம் பற்றி உரையாடும் திரைப்படம் என்கிற பாவனையை மட்டும் கருணையோடு மன்னித்துவிட்டு, 'இது தமிழ் சினிமா' என்கிற பிரக்ஞையோடு பார்த்தால் இத்திரைப்படத்தில் சில சுவாரசியங்கள் தட்டுப்படத்தான் செய்கின்றன.

நாயகன் ஜெயம் ரவிக்கு இந்தத் திரைப்படத்தில் வசனங்களே இல்லை. அதுவொரு குறையாக தெரியாதபடிக்கு முழுப்படத்தையும் சுவாரசியமாக நகர்த்த முயன்றிருக்கும் திரைக்கதைக்கு ஒரு பாராட்டை தெரிவித்துவிடலாம். போலவே பழங்குடி மனிதர்களை, சினிமாத்தனமாக தமிழ் பேச வைக்காமலிருந்த புதுமையையும் பாராட்டலாம்.

நாகரிகம் என்கிற பெயரில் இயற்கையை விட்டு நாம் எவ்வளவு தூரம் நகர்ந்துவந்துவிட்டோம் என்பதைப் பழங்குடி மனிதர்களோடு ஒப்பிட்டு நாமே உணரும் வகையில் பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. சினிமாத்தனம்தான் என்றாலும் இயக்குநரின் கைவண்ணம் வெளிப்படும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. ஏஸியைக் கைவிட்டு விட்டு, இயற்கைக் காற்றை நாடும் நாயகனை, நாயகியும் பின்பற்றுவது சுவாரசியம்.

அதுவரை நாயகியின் கையைப்பிடித்து ஓடிக்கொண்டிருந்த நாயகன், வனப்பகுதிக்குள் நுழைந்தவுடன் தன்னுடைய பழைய வாசனையை உணர்ந்து நாயகியின் கையைப் பற்றிக்கொண்டு ஓடும் அந்த தருணம் நன்றாக இருந்தது. போலவே நாயகனின் நற்செயல்களை, அவனுடைய தோளைத் தடவிக் கொடுப்பதின் மூலம் பாராட்டுகிறாள் நாயகி. இறுதிக்காட்சியில் அவள் பழங்குடிகளுக்கு ஆதரவாக பேசும் போது, ஜெயம் ரவியின் தன்னுடைய கற்றலின் மூலம் அவளைத் தடவித் தரும் காட்சியும் 'அட' போடவைக்கிறது.

***

இதுபோன்ற சில அரிதான வசீகரங்களைத் தவிர படம் முழுவதும் செயற்கைத்தனம் நிறைந்துள்ளது. ஜெயம் ரவியால் காப்பாற்றப்பட்ட புலி, அவர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது வந்து தப்பிக்க வைப்பதெல்லாம் சின்னப்பா தேவர் காலத்திலேயே முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பழங்குடி மனிதர்களை விலங்குகளைப் பழக்குவதுபோல்தான் கையாள வேண்டியிருக்கும் என்பதும் தொலைக்காட்சியில் வரும் புலியைக்கூட நிஜம் என்று நம்பி அவர்கள் வில்லெடுத்து அடிப்பார்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வேடிக்கை மனோபாவம்தான்.

உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தி நடிக்கவேண்டிய காட்சி என்றாலும்கூட ஜெயம்ரவியின் முகபாவங்களும் நடிப்பும் பொதுவாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதில் பழங்குடி மனிதனாக அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், இறுக்கமாக நடிக்க வேண்டியிருப்பதால் தன்னுடைய 'இயல்பான' நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி சயீஷா தமிழ் சினிமாவுக்குப் புதுவரவு. இந்தி நடிகர் திலீப்குமார் குடும்பத்தின் வாரிசு. அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயன்றிருக்கிறார் என்பது ஆறுதல். வனத்துக்குள் எத்தனை கிலோமீட்டர்கள் சுற்றினாலும் எப்படி ஒப்பனை கலையாமல் இருக்கிறார் என்கிற ரகசியம் மட்டும் புரியவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் ஐம்பதாவது திரைப்படமாம். அதிநவீனமான, சொந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இழைத்து இழைத்து உருவாக்கினாலும் பாடல்கள் அதே வழக்கமான பாணியில்தான் உருவாகியிருக்கின்றன. 'எம்மா.. ஏ அழகம்மா' பாடல் மட்டுமே கேட்கும்படியாக உள்ளது. எல்லாப் பாடல்களுமே திரைக்கதையின் அசந்தர்ப்பமான நேரத்தில் நுழைந்து எரிச்சல்படுத்துகின்றன. ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பில் அந்தமான் தீவு, நாயகியின் நவீன வீடு, அலுவலகம் என்று எல்லாமே பணக்காரத்தனமாக தோன்றுகின்றன.

ஏறத்தாழ, கமல்ஹாசனின் 'குணா' திரைப்படத்தின் திரைக்கதையை மாற்றி மசாலா அதிகம் தூவி உருவாக்கப்பட்ட முயற்சியாக 'வனமகன்' தோற்றமளிக்கிறது. ஆனால் அதிலிருந்த கலைத்தன்மையோ மெனக்கெடலோ துளிகூட இல்லை. 'அபிராமி.. அபிராமி' என்று குணா அரற்ற, 'காவ்யா..காவ்யா..' என்று ஜெயம் ரவி குழறுவது மட்டுமே ஒற்றுமை.

அந்நிய திரைக்கதைகளைச் சாமர்த்தியமாக நகலெடுத்து உள்ளூர் வாசனையோடு தந்துவிடுபவர் என்கிற பொதுவான குற்றச்சாட்டு இயக்குநர் விஜய் மீது உண்டு. இந்த சினிமாவும் அப்படியே பல 'டார்ஜான்' வகைத் திரைப்படங்களின் மோசமான நகலாகத் தோற்றமளிக்கிறது. பழங்குடி மக்களின் பிரச்னையைப் பேசுவது என்பதெல்லாம் ஒரு பாவனையாகவே எஞ்சியிருக்கிறது. இயக்குநர் தம்முடைய வேடத்தைக் கலைத்துவிட்டு நேரடி மசாலாத் திரைப்படங்களாவே இனி இயக்கத் தொடங்கலாம். 'வனமகன்' போன்ற இரண்டும் கெட்டான் திரைப்படங்களாவது வெளிவராமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com