சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்: திரைப்பட விமரிசனம்

சச்சின் என்ற பெயர் ஒரு மந்திரம் போல பல லட்சம் இந்தியர்களுக்கு இருந்தது. கிரிக்கெட் கடவுள்
சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்: திரைப்பட விமரிசனம்

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ள திரைப்படம் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’. ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதிலிருந்து, 2013-ல் ஓய்வு பெற்றது வரை சச்சினின் கிரிக்கெட் பயணத்தை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குனர். இக்காலகட்டத்தில் சச்சின் என்ற பெயர் ஒரு மந்திரம் போல பல லட்சம் இந்தியர்களுக்கு இருந்து வந்தது. தன்னுடைய கனவினைத் தொடர்ந்து சச்சின் மேற்கொண்ட தேடலும், அயராத உழைப்பும், நட்பையும் குடும்பத்தையும் அவர் நேசித்த விதமும் கோர்த்து எடுத்து சச்சினின் வாழ்க்கைத் தருணங்களின் தொகுப்பாக இந்தப் படம் உள்ளது.

சச்சின் சிறுவனாக இருக்கும் போது அவர் செய்த குறும்புகள், சுருள் முடியுடனான அவரது அழகானத் தோற்றம், அனைவரையும் ஒரு சின்னச் சிரிப்பால் மயக்கிவிடும் துறுதுறுப்பு என்று சச்சினின் பால்யத்தை வெகு அழகாகப் படம் பிடித்துள்ளார்கள். சச்சின் பெயர் காரணம் அவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கர் இசைப் பிரியர். அவர் கவிஞரும் கூட. அவர் தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் நினைவாக சச்சின் என்று வைத்து விட்டார்.

சச்சின் சிறுவனாக இருந்தபோது சக வகுப்புப் பிள்ளைகளுக்குத் தொல்லை தந்துள்ளார்.  வகுப்பு பையன்களை கிள்ளுவது, அடிப்பது, பென்சில் பாக்ஸை பிடுங்குவது, அவர்களை பள்ளத்தினுள் விழ வைப்பது என்று ஏகப்பட்ட சேட்டைகள் செய்வார். சச்சினி அம்மா எவ்வளவு சத்தமாக அழைத்தாலும் அதை அவர் கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அண்ணன் அஜித் லேசாக குரல் கொடுத்தால் போதும், பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார். சச்சினின் அண்ணன் அஜீத் டெண்டுல்கர்தான், சச்சினை விளையாட்டின் பக்கம் திசை திருப்ப முடிவு செய்து சச்சினை பிரபலமான கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகரிடம் பயிற்சி பெற அழைத்துச் சென்றார். அதன் பின் சிவாஜி பார்க்கில் பேட்டும் கையுமாக சிறுவன் சச்சின் செய்த பயிற்சிகளால் தான் பின்னாட்களில் இளைஞன் சச்சினின் கரங்களில் பரிசுக் கோப்பைகளும் பதக்கங்களும் வந்து சேர்ந்தன.

பாகிஸ்தானில் கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். 16 வயதே நிரம்பிய சச்சின் அதில் எடுத்த ரன்கள் 15 மட்டுமே. ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினார் சச்சின். சியால்கோட்டில் நடந்த 4 மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்போது வேகப் பந்து வீச்சாளரான இம்ரான்கான் போட்ட பந்து சச்சின் மூக்கைப் பதம் பார்த்து ரத்தம் வர வைத்தது. கடுமையான வலி எடுத்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து ஆடினார் சச்சின். இப்படி தோல்வியிலும் வலியிலும் ஆரம்பித்த சச்சினின் பயணம் கடும் முயற்சிக்கும் போராட்டத்துக்கும் பிறகுதான் வெற்றியின் உச்சத்துக்குப் போனது என்பது உலகறிந்த விஷயம்.  

இந்த இளம் கிரிக்கெட் மேதையின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள், சச்சின் அஞ்சலி காதல் திருமண வீடியோ, குழந்தைகளுடன் சச்சின் இருக்கும் பெர்சனல் வீடியோக்கள், அவர் ஆடிய கிரிக்கெட் போட்டிகள், மீடியாவுக்கு அவர் தந்த பேட்டிகள், ஆகியவற்றின் நிஜமான ஃபுட்டேஜை இத்திரைப்படத்துக்கான பயன்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்களுடன் சச்சினின் நெருக்கம், 2011-ல் உலகக் கோப்பை வென்ற தருணத்தையும், 2013-ல் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற முடிவு செய்து, கடைசியாக அனைவருக்கும் நன்றி சொல்லி விடைபெற்று கிரிக்கெட் மைதானத்தைத் தொட்டு கண்கலங்கி வெளியேற காட்சியையும் மனம் நெகிழும்படி படம் பிடித்துள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின். இத்திரைக்காட்சிகளின் மூலம் சச்சினுக்கு அவரது ரசிகர்களுக்குமான உறவை மேலும் ஒரு படி அதிகப்படுத்தியிருப்பது உண்மை.

கிரிக்கெட் ரசிகர்களுக்குச் இத்திரைப்படம் பெரும் விருந்தாக நிச்சயம் இருக்கும். காரணம் இது சச்சினே நடிக்கும் அவரது சுயசரிதை இது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியின் போது சச்சினுக்கு நேர்ந்த மனக்கஷ்டம், அழுத்தம் அதை அவர் கையாண்ட விதம், கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது அணியில் ஏற்பட்ட பிரச்னைகள், ஆட்டத்தின் தொடக்க நாயகனாக சச்சின் இருக்கக் கூடாது என்று சேப்பல் போட்ட உத்தரவு, அது வீரர்களுக்குள் எவ்வித பிரிவினைகளை ஏற்படுத்தியது என்பதையெல்லாம் அப்பட்டமான உண்மைத்தன்மையுடன் இப்படத்தில் காண்பித்துள்ளார்கள்.

ஆனால் இத்திரைப்படத்தில் சச்சின் பற்றி தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. எல்லாமே நாம் பார்த்து அல்லது படித்து அல்லது நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத் தான் ஆவணப்படுத்தியது போல் இருக்கிறது. அதுவும் குறிப்பாக  2003-ஆம் ஆண்டு வரை கோர்வையாகவும் அழுத்தமாகவும் சம்பவங்களை அழகியலுடன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு நாடகத்தன்மையுடன் படம் ஒருவித தொய்வு நிலை அடைகிறது.  இதற்குக் காரணம் திரைக்கதையை சுவாரஸ்யமாக சொல்லப்படவில்லை. இத்திரைபப்டம் இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றி பதிவாகவும் இல்லாமல் சச்சினின் ஆவணப்படமாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலையில் தடுமாறுகிறது. படத்தின் வசனங்கள் மிகவும் சாதாரணமாக இருப்பதும் ஏமாற்றத்தை தருகின்றது.   

இத்திரைப்படத்துக்கு பக்கபலமாக இருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. அதிகமான சப்தங்கள் இல்லாமல் தேவைப்படும் இடங்களில் மெல்லியதாக சோகம், மகிழ்ச்சி, துள்ளல் என கதையுடன் இயைந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் அழகாகப் பயணிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தன்னுடைய முதல் இந்திப் பாடலை இப்படத்துக்காக பாடியுள்ளார்.  அஞ்சலி கெய்க்வாடுடன் 14 வயது அமீன் பாடிய பாடலான 'மர்த் மராதா' ரசிகர்களின் கவனத்தைப் பரவலாகப் பெற்றுள்ளது.

தன்னுடைய கனவை நினைவாக்க எந்தக் கட்டத்திலும் சோர்வடைந்துவிடாமல் தொடர்ந்து போராட வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்பவர் சச்சின். சச்சினுக்கு இணை சச்சின் மட்டுமே. லெஜெண்ட் என்ற சொல்லுக்கு மிகையற்ற உதாரணம் சச்சின். இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்திர மணி மகுடமான சச்சினுக்கு ஒரு சிறிய பரிசாக திரைவடிவ மகுடமே ’சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்’ எனும் திரைப்படம். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படமிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com