நயன்தாராவின் ‘அறம்’ – சினிமா விமரிசனம்

சகாயம், ககன் தீப் சிங் பேடி போன்ற அரிதான, நேர்மையான மாவட்ட ஆட்சியர்களை மதிவதனியின் பாத்திரம் நினைவுபடுத்துகிறது..
நயன்தாராவின் ‘அறம்’ – சினிமா விமரிசனம்

சமூகப் பிரச்னைகளைப் பற்றி உரையாடும் திரைப்படங்களைப் பொதுவாக இரண்டு வகைகளில் பிரிக்கலாம். வியாபார நோக்கத்தோடு அது சார்ந்த அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டு சமூகச் சிக்கல்களைப் பாவனையாக ‘கத்தி(ப்)’ பேசும் திரைப்படங்கள் ஒருவகை. அவற்றை உண்மையான தீவிரத்துடனும் நேர்மையுடனும் அணுகும் திரைப்படங்கள் இன்னொருவகை.

இதில் ‘அறம்’ இரண்டாவது வகையில் சிறப்பாக உருவாகியிருக்கிறது. பிரசார நெடி இல்லாமல், சலிப்பூட்டாமல் பரபரப்பான திரைக்கதையுடன் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கோபி நயினாரின் சமூகவுணர்வை நிச்சயம் பாராட்டவேண்டும். பிரதான பாத்திரத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர்கள் தந்திருக்கும் ஆதரவும் பாராட்டத்தக்கது.

ஆழ்துளைக் கிணறுக்காகப் போடப்படும் குழியில் ஒரு கிராமத்துச் சிறுமி விழுந்து விடுகிறாள். இந்த விபத்துதான் படத்தின் மையம். இதையொட்டி நீர் அரசியல், அதிகார அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இத்திரைப்படம் தீவிரமாக உரையாடுகிறது.

**

நேர்மையான மாவட்ட ஆட்சியரான மதிவதனி (நயன்தாரா) ஒரு சிக்கலைத் தீர்க்க சர்ச்சையான முடிவை எடுத்ததற்காகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதுகுறித்த விசாரணையின்போது தன்னுடைய மேலதிகாரியிடம் மதிவதனி விளக்கம் அளிக்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. அந்த விளக்கத்தின் வழியாகச் சம்பந்தப்பட்ட பின்னணிக் காட்சிகள் விரிகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவின் பக்கத்தில் அமைந்திருக்கும் எல்லையோரத் தமிழ்நாட்டுக் கிராமம், காட்டூர். (ராக்கெட் விடும் இந்த இடத்தின் பின்னணி எதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த அரசியல் படத்தில் பேசப்படுகிறது.)

தண்ணீர் பஞ்சம் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபடும் கிராமத்து மக்களுக்கு உதவ தானே களத்தில் இறங்குகிறார் மாவட்ட ஆட்சியர். அதன் ஊடே இன்னொரு சிக்கலைப் பற்றிய தகவல் அவருக்கு வருகிறது. ஆழ்துளைக் கிணற்றிற்காகப் போடப்பட்ட குழியில் ஒரு சிறுமி விழுந்த சம்பவம். இது தொடர்பாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்துக்கொண்டே சம்பவ இடத்திற்கு அவர் விரைகிறார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டிய தவிப்பு ஒருபுறம், ஆவேசமடைந்திருக்கும் கிராம மக்களின் கோபம் இன்னொருபுறம், பெற்றோர்களின் பதற்றம், அழுகை. இதற்கு நடுவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று மேலிட அதிகாரங்கள் தரும் இடைஞ்சல்கள், அழுத்தங்கள் என்று அனைத்தையும் சமாளித்து மாவட்ட ஆட்சியர், சிறுமியைக் காப்பாற்றினாரா என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘அரசுக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்?” என்கிற மேலதிகாரியின் கேள்விக்கு ‘மக்கள்தான் அரசாங்கம் என்று நான் நம்புகிறேன்’ என்று அழுத்தம் திருத்தமான பதிலுடன் நயன்தாரா அறிமுகமாகும் இடத்திலேயே படம் களைகட்டிவிடுகிறது. உறுத்தாத நிறத்துடன் கூடிய பருத்திப் புடவையில் கனக்கச்சிதமான கம்பீரத்துடன் தோற்றமளிக்கிறார் நயன்தாரா.

சாமானிய மக்களின் ஆதாரமானப் பிரச்னைகளை அரசு இயந்திரமானது மாற்றாந்தாய் மனோபாவத்துடனும் அலட்சியத்துடனும் அணுகுவதைப் பற்றிய அரசியலை இந்தத் திரைப்படம் துல்லியமான வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் பதிவு செய்கிறது.

பல கோடி ரூபாய் செலவு செய்து மண்ணிலிருந்து விண்ணில் பாயும் ராக்கெட் வசதிகள் இருக்கும் இதே தேசத்தில், அதற்கு நேர்எதிராக மண்ணுக்குள் அமிழ்ந்திருக்கும் ஓர் ஏழைச்சிறுமியின் பிரச்னை தொடர்பான அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் முரண் படத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. (ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தால் பல ஆதாரமான அறிவியல் உபயோகங்களும் இருக்கின்றன. இயக்குநர் இதைத் தொடர்ந்து எதிர்மறையாகச் சித்தரித்திருக்கத் தேவையில்லை.)

துவக்கக்காட்சிகளில் கிராமத்துச் சிறுமியின் குடும்பம் மிக இயல்பான காட்சிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒப்பனையில்லாத எளிய முகங்களைத் திரையில் பார்க்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. நீர் தாகத்துடன் இருப்பவனிடம் ‘கூல்டிரிங்க்ஸ் சாப்பிடறீங்களா’ எனப்படும் உபசாரம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் பெண்கள் பிளாஸ்டிக் உறையில் தேநீர் வாங்கித் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி, மருத்துச் செலவிற்கு அஞ்சி மருந்துக் கடையில் வைத்தியம் தேடும் கிராமத்து அறியாமை, அதற்கு நேர்எதிராக பிறந்த நாள் கேக்கிற்குச் செலவு செய்யும் நாகரிக மோகம் என்று பல சமூக முரண்கள் உறுத்தாத இயல்புடன் காட்சிகளில் சித்தரிக்கப்படுகின்றன.

பலஅடிகள் ஆழமுள்ள குறுகிய குழியில் சிறுமி சிக்கிக் கொள்வதும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீட்புக்குழு செயல்படுவதும்தான் இத்திரைப்படத்தின் மையம். ஆனால் இதன் ஊடாக அதிகார அரசியல் முதற்கொண்டு பல விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மீட்புக் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையுடனும் பரபரப்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் சிறுமி காப்பாற்றப்பட வேண்டுமே என்கிற பதற்றத்தைப் பார்வையாளனுக்கு வலிமையாகக் கடத்தும் வகையாகத் திறமையான சித்தரிப்புகள்.

மீட்பு முயற்சிகள் ஒவ்வொன்றாகத் தோல்வியுறும்போதும் மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுகிறார் மாவட்ட ஆட்சியர். சிறுமி மீட்கப்படாத கோபத்தில் கிராமத்து மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது, காவல்துறை அவர்களை அடக்க முயல்கிறது. ஆனால், மக்களின் அறியாமையின் மீது ஆட்சியர் ஒருபோதும் கோபமோ வருத்தமோ கொள்வதில்லை. ‘மக்களுக்குப் புரிய வைப்பது நமது கடமை’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதற்காக தானே களத்தில் இறங்கி மக்களிடம் நேரடியாக உரையாட முயல்கிறார். மக்களின் தேவைக்காகத்தான் அரசு என்கிற ஆதாரமான விஷயம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

**

சமூகப் பிரச்னைகளைப் பற்றி அடிப்படையான அக்கறையுடன் உரையாடும் திரைப்படம் என்பதைத் தாண்டி ‘அறம்’ ஒரு பெண் மையத் திரைப்படம் என்பதும் கூடுதல் சிறப்பு. வெகுஜன நடிகை என்கிற கவர்ச்சியான பிம்பத்தைத் துறந்து, இந்தப் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து தம்மை ஒப்புக்கொடுத்த நயன்தாராவின் துணிச்சலை மனமாரப் பாராட்டலாம்.

பல திரைப்படங்களில் ரெளடியாக, அடியாளாக வந்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ் இதில் சிறுமியின் பாசமிகுத் தந்தையாக நடித்து நம்மை உருக வைத்துள்ளார். சிறுமியின் உயிர் தன் கண்ணெதிரேயே மெல்ல விலகிக் கொண்டிருப்பதைக் கண்டு பதற்றமுடன் மயக்கமடையும் தாயாக நடித்திருக்கும் சுனுலட்சுமியின் நடிப்பும் அபாரம். ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷின் இயல்பான நடிப்பும் சுவாரசியம் கூட்டுகிறது. கிட்டி, விநோதினி, வேல ராமமூர்த்தி, தொலைக்காட்சி நடிகர் பழனி பட்டாளம் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் காட்சிகளின் பரபரப்பு, உருக்கம் போன்றவற்றிற்கு அழுத்தமான துணையாக நிற்கின்றன. இத்தகையதொரு திரைப்படத்தில் சண்டை வடிவமைப்பாளருக்கு என்ன வேலை இருக்க முடியும் என்று தோன்றலாம். மீட்புக்காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு பீட்டர் ஹெயின் அற்புதமாக உழைத்திருக்கிறார். சிறுமி குழிக்குள் இருக்கும் காட்சி, மீட்புக் காட்சிகள் உள்ளிட்டவற்றிற்கு ஓம் பிரகாஷின் அசாதாரணமான ஒளிப்பதிவு துணை நின்றிருக்கிறது.

சகாயம், ககன் தீப் சிங் பேடி போன்ற அரிதான, நேர்மையான மாவட்ட ஆட்சியர்களை மதிவதனியின் பாத்திரம் நினைவுபடுத்துகிறது. மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்கிற உண்மையான கனவுடன் வருபவர்கள், அதிகார அரசியல், ஊழல் அமைப்பு, சக ஊழியர்களின் எரிச்சல் போன்ற பல தடைச்சுவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சார்ந்த கசப்புகள் படத்தில் நேர்மையாகப் பதிவாகியிருக்கின்றன. தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு அதிகார அரசியலின் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற மதிவதனி முடிவு செய்யும் குறிப்போடு படம் நிறைகிறது. ஆனால் அந்தப் பயணம் மட்டும் அத்தனை எளிதாக இருக்குமா என்ன?

சமூகவுணர்வுடன் ஒரு நேர்மையான திரைப்படத்தைத் தர வேண்டும் என்கிற இயக்குநரின் ‘அறம்’ படம் முழுவதிலும் நேர்மையாகப் பதிவாகியிருக்கிறது. மக்களும் அதே நேர்மையுடன் இத்திரைப்படத்தை ஆதரிக்கவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com