கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – சினிமா விமரிசனம்

சாதாரண பொதுமக்கள் சாகும்போது அலட்சியமாக இருக்கும் அரசும், அதிகார வர்க்கமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொள்ளையர்களால் சாகடிக்கப்படும்போது...
கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – சினிமா விமரிசனம்

‘நள்ளிரவில் வீடு புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு. வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம். கொள்ளையர்களைப் பிடிக்க தமிழகக் காவல்துறையின் தனிப்படை வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளது’ என்பன போன்ற செய்திகளை ஊடகங்களில் நிறைய கவனித்திருப்போம். இது போன்ற தனிப்படைகள் எவ்வாறு இயங்குகின்றன, கொள்ளையர்களின் சமூகவியல் பின்னணி என்ன ஆகிய விவரங்களின் துல்லியத்துடன், பரபரப்பாக நகரும் திரைப்படம் இது.

கலாசார வேறுபாடுகள், பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருக்கும் அயல் மாநிலங்களில் தமிழகக் காவல்துறையின் தனிப்படை அதிகாரிகள் எவ்வாறெல்லாம் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அந்தச் சிரமங்களுக்கிடையில் குற்றவாளிகளைத் தேடிக் கண்டடைகிறார்கள் என்பதை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் பார்வையிலிருந்து நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார்கள். நாம் பெரிதும் அறிந்திராத குற்றவுலகின் பின்னணியை அபாரமான திரைக்கதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வினோத்.

**

சென்னையின் புறநகர் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள வீடுகளைக் குறிவைத்து அடையாளம் தெரியாத முகமூடிக் கொள்ளையர்கள் தாக்கும் கொடூரமான காட்சிகளுடன் படம் துவங்குகிறது. சாட்சியம் எதுவும் இருக்கக்கூடாது என்கிற கவனத்துடன் பெண்கள், குழந்தைகள் என்று வீட்டில் உள்ள அனைவரையும் ஒரே அடியில் கொல்வது இவர்களின் பாணி.

காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியில் இணையும் தீரன் திருமாறன் மிக நேர்மையான அதிகாரி. அதனாலேயே பல இடங்களுக்குத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் பணிபுரியும் இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசம் நிகழ்கிறது. ஆனால் எத்தனை முயன்றும் அவர்களைப் பற்றி ஒரு துப்பு கூடக் கிடைப்பதில்லை. அலட்சிய மனோபாவத்துடன் இயங்கும் மேலதிகாரிகள் தீரனுக்குப் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை.

சாதாரண பொதுமக்கள் சாகும்போது அலட்சியமாக இருக்கும் அரசும், அதிகார வர்க்கமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொள்ளையர்களால் சாகடிக்கப்படும்போது பதறிக்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை முடுக்குகிறது. தீரன் தலைமையில் தனிப்படையொன்று வடமாநிலங்களுக்கு விரைகிறது.

ஆனால் இந்தத் தேடுதல் படலம் அத்தனை எளிதாக இருப்பதில்லை. கொள்ளையர்களைப் பற்றிய அடிப்படை விவரம் கிடைப்பதற்கே பல மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ இந்தியா முழுவதும் நிகழும் இந்தப் பயணத்தை மிகுந்த நம்பகத்தன்மையோடும் பரபரப்பான திரைக்கதையோடும் விவரித்திருக்கிறார் இயக்குநர்.

**

இத்திரைப்படத்துக்காக கார்த்தி தந்திருக்கும் உழைப்பு மிகப் பெரியது. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான உடல்மொழியும் என ஓர் உண்மையான காவல்அதிகாரியின் தோற்றத்தைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார். இதற்கு மறுபுறம் காதலின் நெகிழ்ச்சியையும் அது சார்ந்த உருக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். கார்த்தியின் கலைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.

கார்த்தியின் காதலி மற்றும் மனைவியாக ரகுல் ப்ரீத் சிங். நன்றாக நடித்துள்ளார். போஸ் வெங்கட் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். கொள்ளைக்கூட்டத் தலைவனாக வரும் அபிமன்யு சிங்கின் தோற்றமும் நடிப்பும் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை உண்டாக்குகிறது.

இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் பரபரப்பான திரைக்கதைக்குத் தடைக்கற்களாக இருப்பவை பாடல்களும், காதல் காட்சிகளும். வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் காட்சிகளுக்கு இடையில் இடையூறாக அமைந்து பொறுமையைச் சோதிக்கின்றன. செயற்கையான திணிப்புகளாக இருக்கும் இது போன்ற அசட்டுச் சம்பிரதாயங்களைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் பாணியைத் தமிழ் இயக்குநர்கள் எப்போது கைவிடுவார்களோ என்று தெரியவில்லை.

ஜிப்ரானின் அபாரமான இசையில் அமைந்துள்ள பாடல்கள், தனியாக கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் படத்தின் வேகத்திற்குத் தடையாக அமைந்திருந்திருப்பது துரதிர்ஷ்டம். ஆனால் தனது அற்புதமான பின்னணி இசையால் காட்சிகளின் பரபரப்பிற்கு அழுத்தம் கூட்டி இதைச் சமன் செய்திருக்கிறார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவு (சத்யன் சூர்யன்), எடிட்டிங் (சிவநந்தீஸ்வரன்), கலை (கதிர்), சண்டை வடிவமைப்பு (திலீப் சுப்பராயன்) என்று  தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இயக்குநரின் அசாதாரணமான உழைப்பிற்குத் துணை நின்றிருக்கிறார்கள்.

**

அதிமுக சட்டமன்ற உறுப்பினர், சுதர்சனம் உள்ளிட்ட பல கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாக இருந்த உத்தரபிரதேசத்தைச் சார்ந்த ‘பவாரியா’ கொள்ளையர்கள் குழுவைப் பிடிப்பதற்காக, 2005-ம் ஆண்டு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அப்போதைய ஐ.ஜி, எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் அமைந்த இந்தத் தனிப்படை மிகத்திறமையாகச் செயல்பட்டு கொள்ளையர்களின் குழுவைத் தேடியது. சில என்கவுண்ட்டர்கள் நடந்தன. விசாரணைகளுக்குப் பிறகு சிலருக்குத் தூக்குத்தண்டனை கிடைத்தது.

இது சார்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் உயர்நிலை காவல்அதிகாரிக்கு இருக்க வேண்டிய நுண்ணறிவு, மனவுறுதி, விடாப்பிடியான தேடுதல் வேட்டை மனோபாவம், அப்பாவி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு என்பன போன்ற பல விஷயங்கள் தீரன் பாத்திரத்தின் மூலமாக நிறுவப்பட்டுள்ளன. கொள்ளையர்களின் பின்னணியைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பல நூல்களை, குற்றத் தரவுகளை சலிப்பின்றி வாசிக்கிறார் தீரன்.

2000-ம் ஆண்டின் பின்னணியில் நிகழும் புனைவு என்பதால் அந்தக் காலக்கட்டம் சார்ந்த அடையாளங்கள் கலை இயக்குநரால் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ரூ. 501 ரிலையன்ஸ் கைப்பேசி,
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உருவம் தாங்கிய பேனர் என்று பல நுணுக்கமான விஷயங்கள் காட்சிகளின் பின்னணியில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்களின் கொடூரத்தனங்களைச் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல் அவர்களைப் பற்றிய வரலாறு, சமூகவியல் பின்னணி போன்றவை அனிமேஷன் வடிவில் சுருக்கமாக விளக்கப்பட்டிருப்பது இயக்குநரின் தேடுதலையும் பொறுப்பையும் சுட்டிக் காட்டுகின்றன. மன்னர் காலக்கட்டத்தில் போர் வீரர்களாக இருந்தவர்கள், தங்கள் பெருமையை இழந்தவுடன் ஆதிக்கச்சாதியினரால் புறக்கணிக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகான நாகரிக உலகாலும் நிராகரிக்கப்பட்டு வேட்டைச் சமூகமாக மாறுவதும் பிறகு அவற்றிலும் தடை ஏற்படும்போது கொள்ளைக்காரர்களாக உருமாறியிருப்பதான வரலாற்றுக் காரணங்கள் பொருத்தமான இடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மையநீரோட்டச் சமூகத்தினரால் அழுத்தப்படும் எளிய சமூகங்கள், பல்வேறு அவமானங்கள், நிராகரிப்பிற்குப் பிறகு குற்றங்களில் ஈடுபடும் பின்னணியைப் பதிவு செய்திருப்பது நன்று.

**

காவல் துறையில் அளிக்கப்படும் பயிற்சிகள், திரைப்படம் மூலமாக மட்டும் நாம் அறிந்திருக்கும் நடைமுறைகளின் போலித்தனம், ஒவ்வொரு கொள்ளைக் குழுவிற்குமான பிரத்யேகப் பாணிகளில் உள்ள வித்தியாசம் போன்ற நுட்பமான தகவல்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

ஆனால் இத்தனை உழைப்பைச் செலுத்தியிருக்கும் இயக்குநர், தமிழ் சினிமாவின் சில சம்பிரதாயங்களைக் கைவிட்டிருந்தால் படத்தின் தரம் இன்னமும் மேம்பட்டிருக்கும். நாயகனின் சாகசத்தை நிலைநாட்டும் காட்சிகள், பொருத்தமற்ற இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் பாடல்கள் போன்றவற்றைத் தவிர்த்து மேலதிக நம்பகத்தன்மையையும் யதார்த்தத்தையும் கூட்டியிருக்கலாம். ராம்கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் போன்ற இயக்குநர்களின் தரத்தை எட்டியிருக்கக்கூடிய வாய்ப்பை இதுபோன்ற அபத்தமான காரணங்களால் தவறவிட்டிருக்கிறார் வினோத்.

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்புகள், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு சிரமங்கள், அதற்குப் பிறகும் மேலதிகாரிகள் தரும் அழுத்தங்கள், எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள், மனித உரிமை ஆணையத்தின் விசாரணைகள், பதவி அரசியலினால் நேர்மையான அதிகாரிகள் அடையும் பின்னடைவுகள் போன்றவை இத்திரைப்படத்தில் வலுவாக
சித்தரிக்கப்பட்டுள்ளன.

‘கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களைக் காக்காமல் கெட்டவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறோம்” என்று தீரன் பேசுவது, ‘உங்க ஊர்ல இருநூறு ரூபாய் கொடுத்தால் லாரி டிரைவர்களை விட்டு விடுவார்கள், உங்க போலீஸ்காரங்ககிட்ட துப்பாக்கியும் இருக்காது’ என்று விசாரணையின் போது வடஇந்திய கொள்ளையன்  தரும் வாக்குமூலம்.

இது போன்ற வசனங்களின் மூலம் காவல்துறையில் உள்ள நடைமுறை அவலங்களையும் திரைப்படம் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

ஊழலும் நேர்மையற்றதனமும் புரையோடிப் போயிருக்கும் அரசு நிறுவனங்களில் விதிவிலக்காக, மிக அரிதாக உள்ள நேர்மையான அதிகாரிகளின் மூலமாகவே அந்த அமைப்புகளின் மீதான நம்பிக்கை
பொதுச் சமூகத்திற்கு எஞ்சியிருக்கிறது. தம்முடைய அதிகாரத்தையும் பொறுப்பையும் சரியாக உணர்ந்திருக்கும் தீரன் போன்ற காவல்அதிகாரிகளினால்தான் சமூகம் தன்னைப் பாதுகாப்பாக உணர்கிறது.

அப்படியொரு அடையாளத்தைச் சரியாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வினோத் பாராட்டப்பட வேண்டியவர். தீரன் போன்ற நேர்மையான அதிகாரிகள் காலத்தால் ஒதுக்கப்பட்டு நிராரிக்கப்படும் நடைமுறைக் கசப்பையும் இத்திரைப்படம் இறுதிக்காட்சியின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆனால் காவல்துறையின் பார்வையிலிருந்து மட்டும் அணுகாமல் எதிர்தரப்புக் கோணங்களையும் படத்தில் இணைத்திருந்தால் இது சமன்நிலையை எட்டியிருக்கும்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ பெருமையையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com