பிரம்மன் படைத்தது பெண்களை; படத்தில் பிரம்மா வடித்துள்ளது சரியான பெண்ணியத்தை! - மகளிர் மட்டும் விமரிசனம்

இதில் நீங்கள் பார்க்கப் போவது முற்றிலும் மகளிர் மட்டும் படத்தில் உங்களைக் கவனிக்க வைத்த சில வசனங்களும் அதில் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கும் பெண்மையும், பெண்ணியமும்.
பிரம்மன் படைத்தது பெண்களை; படத்தில் பிரம்மா வடித்துள்ளது சரியான பெண்ணியத்தை! - மகளிர் மட்டும் விமரிசனம்

ஒவ்வொரு வாரமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன, ஆனால் அவற்றில் வெகு சிலதே நமது மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பது மட்டுமின்றி இந்த உலகத்தை நாம் பார்க்கும் பார்வையிலும் ஒரு சிறு தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மகளிர் மட்டும் திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

இது படத்தை பற்றிய விமரிசனமா என்றால், ஆமாம் இது படத்தை பற்றிய விமரிசனம்தான் ஆனால், இதில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு எப்படி என்று சொல்ல போவதில்லை, படத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருந்தியதா என்று ஆராயப் போவதில்லை, படத்தொகுப்பு கதைக்கு பலம் சேர்த்ததா என்று யோசிக்கப் போவதில்லை, நடிகர்களின் ஆடை மற்றும் அலங்காரம் கதாப்பாத்திரங்களை சரியாக வடிவமைத்ததா என்று பேச போவதில்லை, ஒளி மற்றும் ஒலிப் பதிவுகள் எப்படி என்று கூற போவதில்லை, இவை எதுவும் இல்லை என்றால் அப்பறம் என்ன விமரிசனம் என்று கேட்கிறீர்களா? இது உங்களைப் பற்றிய விமரிசம், உங்களது மனப்பான்மையைப் பற்றிய விமரிசனம். உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் கேள்விகளை இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட சில காட்சிகளுடன் ஒப்பிட்டு பதில் தேடும் ஒரு முயற்சி. அதனால் இது பெண்களுக்கான பதிவு என்று கருதி படிக்காமல் விட்டு விடாதீர்கள் ஆண்களே, இதில் உங்களுக்கு சில கேள்விகளும், உங்களது கேள்விகளுக்கு பதில்களும் கூட இருக்கலாம்.


இதில் நீங்கள் பார்க்கப் போவது முற்றிலும் மகளிர் மட்டும் படத்தில் உங்களைக் கவனிக்க வைத்த சில வசனங்களும் அதில் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கும் பெண்மையும், பெண்ணியமும். இறுதியாக மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் கதையின் கதாநாயகன் ஜெயம் ரவி கூறும் ஒரு வசனம் பலரது கவனத்தை ஈர்த்தது, “பெண்ணியம் என்பது ஆண்கள் செய்கின்ற தப்பையெல்லாம் வரிசை கட்டி செய்வது அல்ல! அது வேறு” ஆனால் அந்த வேறு என்பது என்ன? இன்றைய நவீன, முற்போக்கு பெண்கள் பலரும் பெண்ணியத்தை தவறாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, ஆண்கள் சிகரெட் பிடிப்பது உடல்நலக் கேடு என்று கூறும் இந்தச் சமூகம், பெண்கள் சிகரெட் பிடித்தால் ஒழுக்கக் கேடு என்று சொல்வது ஏன்? சிகரெட் பிடிப்பதும், மதுபானம் குடிப்பதும் ஆண்களுக்கு என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்ன? தங்களாலும் அதைச் செய்ய முடியும், ஒரு பெண் இப்படிச் செய்யலாமா என்று கேள்வி கேட்பவர்களை ஆண் ஆதிக்கவாதிகள் என்று முடிவு கட்டி விடுகிறார்கள். 

அது முற்றிலும் தவறு நீங்கள் கூறுவதும் சரிதான் பெண் சிகரெட் பிடித்தால் மட்டும் ஒழுக்கக் கேடு என்று சொல்வது தவறுதான், ஆனால் இந்த விவாதத்தில் நீங்கள் அது உங்களது உடல் நலத்திற்கும் அது கேடு என்பதை மறந்துவிடுகிறீர்கள். ஆரோக்கியமாக இருக்க விரும்பும் எந்தவொரு மனிதனும் சிகரெட் பிடிப்பது தவறுதான், இதில் ஆண் என்ன பெண் என்ன? உங்கள் பெண்ணிய கொள்கைகளைத் தவறான விஷயங்களில் காட்டாதீர்கள். சரி சிகரெட் பிடிப்பதற்கும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது, வட இந்திய படங்களோ அல்லது வெளிநாட்டு ஹாலிவுட் படங்களோ, ஏன் சில தமிழ்ப் படங்களில் கூடச் சமூகத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளைத் தட்டி கேட்கும் பெண்ணிய கொள்கைகளைக் கொண்ட ஒரு பெண் கதாப்பாத்திரம் தான் ஆணுக்குச் சளைத்தவள் அல்ல என்பதை ஆணித்தரமாக ரசிகர்கள் மனதில் பதிவு செய்ய சிகரெட் பிடிப்பதை போல் இயக்குநர்களால் காண்பிக்க படுகிறாள், ஆனால் இயக்குநர் பிரம்மா இந்தப் படத்தில் அதைப் போன்ற எந்த ஒரு அபத்தமான காட்சிகளையும் இடம் பெற செய்யவில்லை. இதுவே பெண்மையுடன் கூடிய பெண்ணியம் ஆகும். பெண்ணியத்திற்காகப் பெண்மைக்குரிய பண்புகளை இழந்துவிடக் கூடாது. 

அடுத்ததாகத் தாய்மை. ஒரு பெண் தாய்மை அடையும்போதுதான் முழு பெண்மையை உணர்கிறாள் என்பது நம்மவர்களின் நம்பிக்கை, அது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனால் தான் தாய்மை அடைய வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது ஒரு பெண்ணும் அவளது கணவனும்தான். பிரம்மாவின் மகளிர் மட்டும் படத்தில் ஒரு காட்சியில் ஜோதிகா தன் மாமியார் ஊர்வசியிடம் “மாமியாரே! நான் குழந்தை பெத்துக்க மாட்டேனு சொன்னா கோச்சிப்பிங்ளா என்ன?” என்று கேள்வி கேட்டிருப்பார், அதற்கு ஊர்வசியோ “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீயாச்சு உன் புருஷனாச்சு, அவனையாவது ஒரு புள்ளைய பெத்துப்போட சொல்லு” என்று எதார்த்தமாகப் பதில் சொல்லியிருப்பார். இதே கேள்வியை திருமணமாகாத இளம் பெண்கள் உங்களது அம்மாவிடம் கேட்டு பாருங்கள், ஏதோ கொலை குற்றம் செய்தது போல உங்களைப் பார்ப்பார்கள், அம்மாவே இப்படியென்றால் மாமியாரின் பார்வையை பற்றிச் சொல்லவா வேண்டும். ஆனால், உண்மையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியவள் பெண், அதே சமயம் அந்த முடிவு அவளது கணவனின் ஒருமித்த முடிவாக இருக்க வெண்டும்.

அதற்காகப் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் பெண்ணியம் என்று மீண்டும் தவறாக புரிந்துகொள்ளாதீர்கள், ஊர்வசி சொல்வதைப் போல ஆண்கள் குழந்தை பெற முடியும் என்றால் அதைப்பற்றி வாதம் செய்யலாம், ஆனால் பிள்ளைப்பேறு என்பது பெண்மைக்கு மட்டுமே உள்ள ஒரு வரம் என்பதையும் பெண்ணியவாதிகள் மறந்துவிடக் கூடாது. கடவுளுக்கு அடுத்து எங்களால் மட்டுமே ஒரு உயிரை உருவாக்க முடியும் என்று பெருமையுடன் சொல்லுங்கள், இதுவும் பெண்மையுடன் கூடிய பெண்ணியமே.

புடவை கட்டும் பெண் மட்டுமே பண்பானவள், துப்பட்டா அணியும் பெண் மட்டுமே அடக்கமானவள், ஆணைப்போல் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்தால் அந்தப் பெண் ஃபிரி டைப் அதாவது தமிழ் கலாச்சாரத்தை மதிக்காத ஒரு பெண் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கிறது இந்தச் சமூகம். ஏன் மேற்கத்திய ஆடை அணிந்த பெண் இந்திய கலாச்சாரத்தை மதிப்பவளாக இருக்கக் கூடாதா? ஆடை என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அணியப்படும் ஒன்று, என்னதான் ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் தன்னுடைய எண்ணங்களுக்குப் பொருந்தும் எந்தவொரு ஆடையை அணிவதும் பெண்ணின் சுதந்திரம், அதை வைத்து பெண்ணை எடை போடுவது உங்களின் முட்டாள்தனம். ஒரு பெண்ணுக்கு தனக்கான பிம்பத்தை இந்தச் சமூகத்தில் எப்படி நிலை நாட்ட வேண்டும் என்று தெரியும் அவரவர் வசதிக்கேற்ப அவர்கள் ஆடை அணிகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஜோதிகா அணிந்த ஆடைகள் அவர் செய்யும் நிரூபர் பணிக்கு வசதியானதாகவும், அதே சமயம் தன்னை மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காத வகையிலும் இருந்தது சிறப்பு. புடவை கட்டும் மருமகள்தான் நம்மையும் குடும்பத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்று சில மாமியார்கள் நம்புவது போல படத்தில் ஊர்வசியும் நினைத்து ஜோதிகாவை வேண்டாம் என்று சொல்லியிருந்தால் பொக்கிஷமான சில விஷயங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்திருக்காது.

இதைத்தவறப் பெண் சுதந்திரம் என்பது எடுக்கப்படுவதும் இல்லை கொடுக்கப்படுவதும் இல்லை, அது ஒவ்வொரு பெண்ணிற்கும் இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஒன்று. ஒரு பெண் இப்படிச் செய்தால், ஒரு பெண்ணாக இருந்து இந்தச் சாதனையை படைத்தால் என்று அதை ஆச்சரியமாகப் பார்ப்பதை நிறுத்தி, அதை மகளிர் மட்டும் படத்தில் பிரம்மா எப்படி மிகைப் படுத்தாமல் எதார்த்தமாகக் கூறியிருக்கிறாரோ அதைப் போல் இயல்பாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். ஆகையால், பெண்ணியத்தில் பெண்மை இல்லாமல் இல்லை அதே போல் பெண்மை இல்லாதது பெண்ணியமும் இல்லை. இதைத் தவற நான் தவறவிட்ட வேறு சில உங்கள் கவனத்தைப் பெற்ற காட்சிகள் உங்களுக்குத் தெரிந்தால் அதை எங்களிடம் மற்றவர்களும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com