ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ – சினிமா விமரிசனம்

எவ்வித பிரதிபலனும் இல்லாமல் உதவுவதே மனிதாபிமானம்’ எனும் நீதியை இயக்குநர் சொல்வதற்காக, இத்தனை நீண்ட மசாலா படத்தை... 
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ – சினிமா விமரிசனம்

ஏ.ஆர். முருகதாஸை இயக்குநர் ஷங்கரின் தொடர்ச்சி எனலாம். ஒரு சமூகப் பிரச்னையைத் தீவிரமாக அலசுவது போன்ற பாவனையில் பிரம்மாண்டமான வணிக மசாலா திரைப்படத்தை உருவாக்குவது அந்தப் பாணி. திறமையாகச் சந்தைப்படுத்துவதின் மூலம் வசூலை வாரிக்குவிப்பது மட்டுமே இதன் முதன்மையான நோக்கமாக இருக்குமே ஒழிய, சமூகப் பிரச்னையெல்லாம் அதற்குப் பிறகுதான்.  

இந்தப் பாணியிலிருந்து பெரிதும் விலகாமல் இருக்கிறது ‘ஸ்பைடர்’. சமூகத்துக்கு மிக ஆபத்தாக விளங்கும், மனச்சிதைவு நோயுள்ள ஓர் ஆசாமியை நாயகன் தேடியலைவதே இந்தக் கதையின் மையம். ‘அந்நியனின்’ எதிர்பிம்பம்.

**

சிவா (மகேஷ்பாபு) உளவுத்துறையில் பணிபுரியும் ஒரு கீழ்நிலை அதிகாரி. பொதுமக்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பணி இவருடையது. சந்தேகப்படும்படியான உரையாடல் நடந்தால், அதைப் பதிவு செய்து மேலதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவேண்டும். ஆனால் சிவா அதையும் மீறிய ஒரு காரியத்தை ரகசியமாகச் செய்கிறான். இந்தத் தொலைப்பேசி உரையாடல்களில் பயம், அழுகை, உதவி போன்ற உணர்வுகள் தெரிந்தால் அந்த அழைப்புகள் தனக்குப் பிரத்யேகமாக வருமாறு ஒரு மென்பொருளை உருவாக்கி பயன்படுத்துகிறான்.

எவரேனும் ஆபத்தில் இருப்பதாக அறிந்தால் அந்த இடத்துக்கு தான் நேரடியாகச் சென்று அவற்றைத் தடுக்கிறான். குற்றம் நிகழ்ந்த பிறகு அதை விசாரணை செய்து என்ன உபயோகம், அது நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டும் என்பது சிவாவின் லட்சியம். மேலதிகாரியாக பணிபுரிவதற்கான நுண்ணறிவு இருந்தும் அடிமட்டத்திலேயே பணிபுரிகிறான். முகம் தெரியாத பல மனிதர்களுக்கு உதவுவதின் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியே அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது.

பொதுமக்களுக்கு ஏற்படும் பல ஆபத்துக்களைத் திறமையாக தடுப்பதின் மூலம் அவனுடைய வாழ்க்கை இயல்பாக (?!) நகர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு தொலைப்பேசி அழைப்பு அவனைப் புரட்டிப் போடுகிறது. பயத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் குரலைக் கேட்கிறான். எனவே காவல்துறையில் இருக்கும் தனது தோழியை அனுப்பி பார்க்கச் சொல்கிறான். மறுநாள், அவர்கள் இருவருமே ஒரு மர்ம ஆசாமியால் குரூரமாக வெட்டிக் கொலை செய்யப்படும் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைகிறான்.

இந்தக் கொலைகளின் மீதான விசாரணை அவனைப் பயங்கரமான சூழலுக்கு இட்டுச் செல்கிறது. நடந்திருப்பது இரண்டு கொலைகள் மட்டுமல்ல. பல கொலைகளுக்குக் காரணமாக அந்த மர்ம ஆசாமி இருப்பது தெரிகிறது. மேலும் பல கொலைகளும் நடக்கவிருப்பது தெரிகிறது.

யார் அந்த மர்ம ஆசாமி, எதற்காக அவன் அறிமுகமில்லாத நபர்களைக் கொன்று குவிக்க வேண்டும்? அவனைத் தேடி சிவா அலைவதைப் பரபரப்பும் விறுவிறுப்புமான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார்கள். ஒரு வணிகப்படத்துக்கேயுரிய நம்பகத்தன்மையற்ற சாகசங்களும் நிகழ்வுகளும் இருந்தாலும் அது சார்ந்த தர்க்கங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இந்தப் படத்தைச் சுவாரசியமாக ரசிக்க முடியும்.

**

ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இது உருவாக்கப்பட்டிருந்தாலும் தமிழ் வடிவத்தில் அந்நிய வாசனை பெரிதும் வராமல் பார்த்துக் கொண்டிருப்பதை இயக்குநரின் சாதனையாக சொல்லலாம். கதையின் பின்னணி ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்தாலும் நமக்கு வித்தியாசமாக ஏதும் தோன்றுவதில்லை.

இதுவரை டப்பிங் படங்களின் மூலமாக மட்டுமே நம் முன் தோன்றிக் கொண்டிருந்த மகேஷ்பாபு, முதன்முறையாக தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்கு தானே குரல் தந்திருக்கிறார். சற்று தெலுங்கு வாசனை வீசினாலும் பாராட்டும்படியாகத்தான் இருக்கிறது. மற்றபடி தெலுங்குத் திரைப்படங்களில் நிகழ்த்திய அதே உடல்மொழிதான். சண்டைக்காட்சியாக இருந்தாலும் சரி, டூயட் காட்சியாக இருந்தாலும் சரி, ரோபோத்தனமான முகபாவத்தை வைத்துக்கொண்டு வசீகரமான சிறுபுன்னகையுடன் சமாளிக்கிறார். நடனமாடும் காட்சிகளில் இன்னமும் முன்னேற்றம் தேவை. பால்வடியும் முகத்தை வைத்துக்கொண்டு அதிரடி சாகச நாயகனாக இவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

நாயகியாக ராகுல் ப்ரீத் சிங். துள்ளலும் குறும்பும் கொண்ட வழக்கமான நாயகி. இவரது பாத்திர வடிவமைப்பு மட்டும் சற்று பிரச்னைக்குரியதாக இருக்கிறது. காதலும் அல்லாமல் நட்பும் அல்லாமல் பாலியல் விழைவுக்காக மட்டுமே, இவர் நாயகனைத் தேடுவது போன்ற காட்சிகள் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. வித்தியாசமாக வடிவமைக்கிறேன் பேர்வழி என்று இயக்குநர் இத்தனை தரம் இறங்கியிருக்க வேண்டாம். ‘கஜினி’ திரைப்படத்தில் அசினுக்கு இருந்த முக்கியத்துவம் கூட இவருக்கு இதில் இல்லை. பார்வையாளர்கள் இளைப்பாறுவதற்காக மட்டுமே படைக்கப்பட்ட அநாவசியமான பாத்திரம்.

எதிர்நாயகனாக மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. வலிமையான எதிர்நாயகன். படத்தின் முக்கியமான பலம் இவர்தான். மற்றவர்களின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஆனந்தம் அடையும் குரூரத்தனமான பாத்திரம். இந்த இன்பத்துக்காகவே அறிமுகமில்லாதவர்களைக் கூட கொன்று குவிக்கும் கொடூரனாக இருக்கிறார். விபரீதமான உடல்மொழியின் மூலம் நாயகனுக்கு கடுமையான சவாலாக இருக்கிறார். சில காட்சிகளில் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘டார்க் நைட் (The Dark Knight)’ ஜோக்கர் பாத்திரத்தின் சாயல் தெரிகிறது.

இந்தக் கொடூர ஆசாமியின் சிறிய சாயலாக பரத் நடித்திருக்கிறார். வழக்கமான நாயகன் பாத்திரத்திலிருந்து அவர் நகர்ந்து வருவதற்குப் பாராட்டு. அதிகம் பேசாமல் ஆர்.ஜே.பாலாஜி அடக்கி வாசித்திருப்பது மகிழ்ச்சி. நாயகனின் தந்தையாக ஜெயப்பிரகாஷ், உளவுத்துறை அதிகாரிகளாக ஷாஜி, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

**

‘நம் எல்லோருக்குள்ளும் சிறிய அளவிலான சைக்கோத்தனம் இருக்கிறது. அதை வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு எவ்வித பிரதிபலனும் இல்லாமல் உதவுவதே மனிதாபிமானம்’ எனும் நீதியை இயக்குநர் சொல்வதற்காக, இத்தனை நீண்ட மசாலா படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நம்புவோம்.

முருகதாஸ், காட்சிகளை பிரம்மாண்டமான அளவில் சிந்திக்கிறார். ஆனால் அவற்றை நம்பகத்தன்மையுடன் செயல்படுத்த முடிகிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ரோலர் கோஸ்டர் சண்டை, பிரம்மாண்டமான பாறை (ஆம். பாறையும் பிரம்மாண்டம்தான்) உருண்டு வந்து மக்களை நசுக்குவது, அதை நாயகன் தடுத்து நிறுத்தி காப்பாற்றுவது போன்ற காட்சிகள் திறமையாக உருவாக்கப்பட்டிருந்தாலும் நுட்பக்குறைகளுடன் நம்பகத்தன்மையை இழந்து நகைச்சுவையாகியிருக்கின்றன. மலையின் மீதிருந்து உருண்டு வரும் பாறை ஆவேசமான பிசாசு போல பல மைல் நீளத்துக்கு நகரத்துக்குள் ஓடிவருவதெல்லாம் இயற்பியல் விதிகளுக்கு மீறிய கற்பனையாகத் தோன்றுகிறது. மருத்துவமனை இடிந்து விழும் காட்சிகள் சிரத்தையாகவும் மெனக்கெட்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்பைடர் மேனைப் போன்று உடல் சார்ந்த சாகசங்களாகப் பெரிதும் அல்லாமல், தனது நுண்ணறிவின் மூலமாகவும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் தன் முன்னால் உள்ள சவால்களை நாயகன் எதிர்கொள்வது மட்டுமே ஆறுதல்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு திறமையாக அமைந்திருந்தாலும், இது போன்ற மசாலா திரைப்படங்களுக்காக அவருடைய கலையும் உழைப்பும் வீணாக வேண்டுமா என்கிற ஆதங்கமும் கூடவே தோன்றுகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், அவரது முந்தைய உருவாக்கங்களை நினைவுப்படுத்துவது போல அமைந்திருப்பது பரிதாபம். குறிப்பாக ‘ஆலி… ஆலி’’ என்கிற பாடல், அந்நியன் திரைப்படத்தில் வந்த ‘ரண்டக்க ரண்டக்க’ பாடலை அச்சு அசலாக நினைவுப்படுத்துகிறது.

விறுவிறுப்பான திரைக்கதையின் இடையே தடைக்கற்களாக பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் தனது திறமையான பின்னணி இசையின் மூலம் இந்தக் குறையை ஈடுகட்டியிருக்கிறார் ஹாரிஸ். காட்சிகளின் பரபரப்புத்தன்மையைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது பின்னணி இசை.

**

மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் குரூரத்தனங்களை மட்டுப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் நீதியெல்லாம் சரிதான்.

ஆனால் மனச்சிதைவு நோய் உள்ளவர்களை மிகக் கொடூரமானவர்களாகவும் கொலைகாரர்களாகவும் தொடர்ச்சியாக சித்தரிக்கும் “ஆளவந்தான்’ தன்மையை தமிழ் சினிமா தொடர்ந்து கொண்டேயிருப்பது ஆபத்தான விஷயமாக தெரிகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன்மையாக தேவைப்படுவது சிகிச்சையும் அரவணைப்பும். அவர்களைக் கொல்வது சரியான தீர்வு அல்ல. மனநலப் பிரச்னைகள் உருவாக இந்தச் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

‘பிதாமகன்’ விக்ரமைப் போல, சுடுகாட்டில் வளர்வதாலேயே ஒருவன் குரூரமானவனாக ஆகி விடுவான் என்று சித்தரிப்பதெல்லாம் அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் விஷயம். இந்த நோக்கில் எதிர்நாயகனின் பாத்திர வடிவமைப்பு இன்னமும் கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அண்ணனைப் பார்த்து தம்பியும் அதே போன்ற குரூரத்தன்மையுடன் மாறுகிறான் என்பதெல்லாம் விபரீதமான கற்பனை.

சில காட்சிகளின் திருப்பங்களில் இயக்குநரின் திரைக்கதை உழைப்பை உணர முடிகிறது. ஏறத்தாழ கொலையாளியை நெருங்கி விட்டோம் என்கிற நிலைக்கு வரும் போது ‘அது அவனில்லை’ என்கிற திருப்பம் நல்ல உதாரணம். அவனைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்படும் ‘வாட்ஸ்அப்’ செய்தி நல்ல உத்தி.

ஆனால், பொதுமக்களின் நடுவில் நாயகன் தீயவனைக் கொல்வது, ஒட்டுமொத்த உளவுத்துறையும் நாயகனின் சாகசத்தை மட்டுமே நம்பி பின்னால் வெட்டியாக நிற்பது போன்ற காட்சிகள் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன. நாயகன் ஒருவனே எல்லா தீர்வுகளையும் கண்டுபிடிக்கிறான் என்றால் 30 மாடிகள் கொண்ட உளவுத்துறை அலுவலக கட்டடமே அவசியமில்லை.

கொலையாளிளைப் பிடிப்பதற்காக குடும்பத்தலைவிகளை நாயகன் பயன்படுத்தும் காட்சிகள், பெண்களுக்கு பெருமை தரும் நோக்கில் இருந்தாலும் நம்பகத்தன்மையற்ற உருவாக்க முறையால் நகைச்சுவைக் காட்சிகளாகி விடுகின்றன. பெண்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள் என்று நாயகன் விளக்கும் காட்சியில் ஆண் பார்வையாளர்கள் உட்பட அனைவரும் கைத்தட்டி ரசிக்கிறார்கள். ஆனால் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி சீரியலைக் குறுக்கிடுவது, இலவசப் பரிசு மோகத்தில் இருக்கும் பார்வையாளர்களைப் பயன்படுத்திக் கொள்வது, இதற்காகப் பல அசாதாரணமான நுட்பங்களை நாயகனின் சிறிய குழு பயன்படுத்துவது போன்றவை எல்லாம் நம்பும்படியாகவே இல்லை.

சில பல தர்க்கப்பிழைகளும் இடையூறுகளும் இருந்தாலும் தனது திறமையான திரைக்கதையின் மூலம் படத்தை சுவாரசியமாகப் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குநர். என்னவொன்று, அந்நியப் படங்களின் வாசனை மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு காட்சியில் நாயகன் திரையரங்குக்குள் செல்லும்போது இந்திப்படமான ‘கஜினி’ ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஏதாவதொரு படத்தைக் காண்பித்திருந்தால் ஒரு tribute- ஆகவாவது அமைந்திருக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com