கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ - சினிமா விமரிசனம்

மொழி எல்லையைக் கடந்திருப்பதாலும், சூழலியல் சார்ந்து உலகளாவிய பிரச்னையை உறுத்தாமல் உரையாடியிருப்பதாலும், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது, ‘மெர்க்குரி’.
கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ - சினிமா விமரிசனம்


திரைப்படம் எனும் கலை வடிவத்தின் மீது அதீதமான ஆர்வமும், புதுமையான பரிசோதனைகளை முயற்சிக்கும் தீராத தாகமும் கொண்ட இயக்குநர்களால்தான் சிறந்த திரைப்படங்கள் உருவாகின்றன. அப்படியொரு அபாரமான முயற்சிதான் ‘மெர்க்குரி’. திரைப்படத் துறையில் தன்னை வலுவாக நிறுத்திக்கொண்ட பல வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் முயற்சித்த ‘பேசும்படம்’ எனும் பரிசோதனையை, தனது நான்காவது படைப்பிலேயே சாதிக்க முயன்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் துணிச்சலையும் ஆர்வத்தையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்; ஆதரிக்க வேண்டும்.

கள்ள நகல்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் பெருகிவிட்ட சூழலில், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் என்பது மலினமாகவும் சலிப்பாகவும் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், பார்வையாளர்களை திரையரங்குக்குள் கொண்டுவருவது என்பது ஒவ்வொரு இயக்குநருக்கும் பெரிய சவாலாக உள்ளது. புதுமையான திரைக்கதையினாலும், திறமையான தொழில்நுட்பங்களினாலும் இந்தச் சவாலை அற்புதமாக எதிர்கொண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ‘மெர்க்குரி’ தரும் வித்தியாசமான அனுபவத்துக்காகவே திரையரங்கில் கண்டுகளிக்க வேண்டிய கட்டாயத்தைக் கோரி நிற்கிறது. 

*

ஐந்தே ஐந்து பிரதான பாத்திரங்கள் (இதிலும் பிரபுதேவா மட்டுமே நமக்கு அதிகம் பரிச்சயமானவர்), இரண்டு, மூன்று களங்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, ‘வசனங்கள் ஏதுமற்ற’ ஒரு ஹாரர் மற்றும் திரில்லர் திரைப்படத்தைத் தந்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு பெண் உள்ளிட்டு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத நான்கு இளைஞர்கள், கண் பார்வையற்ற ஓர் இளைஞன் என இரு வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நிகழும் வாழ்வா, சாவா போராட்டம், இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கும் பதற்றத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது. 

வணிக லாபத்துக்காக, மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைப்பதென்பது உலகளாவிய பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த மக்கள் இந்த ஆபத்தை பலகாலமாக எதிர்கொண்டு வருகிறார்கள். 1984-ம் ஆண்டு போபால் நகரத்தில் நிகழ்ந்த கொடூரமான விபத்து போன்று உலகெங்கும் நிகழும் பேரழிவுகள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அவ்வகையான பிரதேசங்களில் பல்வேறு வகை ஊனங்களைக் கொண்ட குழந்தைகள் பிறப்பதும் தொடர்கதையாகிக்கொண்டு வருகிறது. 

சூழலியல் சார்ந்த இந்த தீவிரமான பிரச்னையை, ஒரு ஹாரர்-திரில்லர் திரைப்படத்தில் உறுத்தாமலும் நுட்பமாகவும் இயக்குநர் இணைத்தவிதம் பாராட்டுக்குரியது.

*

கொடடைக்கானலை நினைவுப்படுத்தும், பாதரச தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசம் அது. பல உயிர்களைப் பறித்ததோடு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாக அந்த தொழிற்சாலை இருந்திருப்பது செய்தித்தாள்களின் வழியாக துவக்க காட்சிகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ‘சிறப்பு’ப் பள்ளியில் படித்த நான்கு இளைஞர்கள், சில வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடுகிறார்கள். பள்ளியில் நிகழும் கலை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலிகளுக்குப் பிறகு தங்களின் சந்திப்பைக் கொண்டாடத் துவங்குகிறார்கள். அவர்களில் ஓர் இளைஞன், பல காலமாக தனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைத்துக்கொள்கிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். அவர்களுக்குள் மகிழ்ச்சியும் உற்சாகமும் பீறிடுகிறது. கொண்டாட்ட மனநிலையுடன் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் இடையே, ஒரு விபத்து நேர்வதைக்கூட அவர்கள் கவனிப்பதில்லை. பிறகு அதைப்பற்றி அறிய நேர்ந்ததும், பதற்றத்துடன் மூடி மறைக்கிறார்கள். ஆனால், அது அத்தனை எளிதானதாக முடிவதில்லை. பெரிய ஆபத்தாக அவர்களைத் துரத்தி வருகிறது.

அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பிக்கும் முயற்சிகளையும், தப்பித்தார்களா இல்லையா என்பதயும் திகில் கலந்த விறுவிறுப்புடன் மீதக் காட்சிகள் விவரிக்கின்றன.

*

துள்ளல் மற்றும் அதிவேக நடன அசைவுகளாலும் கோணங்கித்தனமான நகைச்சுவையாலும் இதுவரை நம்மைக் கவர்ந்த பிரபுதேவா, இத்திரைப்படத்தில் முற்றிலும் வேறு மாதிரியான புது அனுபவத்தைத் தருகிறார். அவரது திரைப்பயணத்தில் ‘மெர்க்குரி’ ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். தனக்கு இழப்பை ஏற்படுத்திய அந்த நால்வரையும் இவர் கொலைவெறியுடன் பழிவாங்கத் துடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. அவர்கள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமே என்கிற பதற்றம் நமக்குள் பரவுகிறது. இந்தத் துரத்தலுக்கான காரணத்தை நாம் அறியும் இறுதிக்காட்சி, மிக நெகிழ்வானதாக அமைந்திருக்கிறது. அதுவரையான மிரட்டல் உடல்மொழியிலிருந்து விலகி வேறுவிதமான நடிப்பைத் தந்து நம்மைக் கவர்ந்துவிடுகிறார் பிரபுதேவா. 

மாற்றுத்திறனாளிகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்கள் என்பதால், பார்வையாளர்களிடமிருந்து இரக்கத்தையும் நெகிழ்ச்சியையும் கோரும் எவ்விதமான காட்சியையும் இயக்குநர் உருவாக்காதது பெரிய ஆறுதல். அதிக அளவு சத்தத்துடன் இசையை வைத்து நடனமாடி தங்களின் சமையல்காரரை தொந்தரவு செய்யும் சராசரியான, இயல்பான இளைஞர்களாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு இளைஞர்களுமே தங்களின் பங்கைச் சிறப்பாகத் தந்திருக்கிறார்கள் என்றாலும், இதில் பிரத்யேகமாக தனித்துத் தெரிகிறார் இந்துஜா. சனத்தின் நடிப்பும் அருமையாக உள்ளது. காதலின் ஏக்கத்தையும் அது நிறைவேறிய மகிழ்ச்சியையும் அற்புதமாக பிரதிபலித்துள்ளார்.

இயக்குநரின் புத்திசாலித்தனமான திரைக்கதையைத் தாண்டி, தொழில்நுட்பர்களின் அற்புதமான கூட்டணியும் இத்திரைப்படத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. ‘வசனமில்லாத’ இந்தத் திரைப்படத்தின் மெளன இடைவெளிகளை தனது அபாரமான பின்னணி இசையின் மூலம் நிரப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன். கவித்துமான, திகிலான, நெகிழ்ச்சியான காட்சிகளை தனது இசையின் மூலம் மேலதிக உயரத்துக்கு இட்டுச் சென்றுள்ளார். குணால் ராஜனின் அசத்தலான ஒலி வடிவமைப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். 

எஸ். திருவின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் முக்கியமான பலம். மலைப்பிரதேசத்தின் அழகியலை திகிலுடன் குழைத்துத் தந்துள்ளார். குறிப்பாக, தொழிற்சாலைக்குள் நிகழும் காட்சிகளை பிரத்யேகமான வண்ணத்தில் பதிவு செய்திருப்பது அற்புதமானது. ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் விவேக் ஹர்ஷனின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

அந்த இளைஞர்களை துவக்கக் காட்சியில் பொறியியல் மாணவர்களாகப் போகிறபோக்கில் காட்டிவிட்டு, பிறகு நிகழும் தொழிற்சாலை சம்பவங்களோடு இணைத்திருப்பது முதற்கொண்டு இயக்குநரின் புத்திசாலித்தனமும் கச்சிதமான திட்டமிடலும் திரைக்கதையில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த இளைஞர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ளும் சைகை மொழி தொடர்பான காட்சிகள் பல இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் மிகையான உடல்மொழியுடனும் அமைந்துள்ளன.
*

‘I know what you did last summer’ முதற்கொண்டு, 2016-ல் வெளியான ‘Don’t Breathe’ வரையான பல ஹாலிவுட் திரைக்கதைகளை ‘மெர்க்குரி’ நினைவுப்படுத்தினாலும், தன்னுடைய தனித்தன்மையை படம் முழுவதிலும் இயக்குநர் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. பார்வையாளர்களுக்குத் திகிலையும் சுவாரசியத்தையும் தரும் ஹாரர் மற்றும் திரில்லர் படமாக மட்டும் நின்றுவிடாமல், சமூக அக்கறை சார்ந்த விஷயத்தையும் இதில் உறுத்தாமலும் வலுவாகவும் பின்னியிருப்பதே இத்திரைப்படத்துக்கு பிரத்யேகமான சிறப்பைத் தருகிறது. 

இத்திரைப்படம் ஓர் அபாரமான அனுபவத்தை தந்தாலும், சில நெருடல்களும் பிசிறுகளும் இல்லாமல் இல்லை.

‘ராஜா ஹரிச்சந்திரா முதல் ‘பேசும்படம்’ வரையான பல மெளனத் திரைப்படங்களுக்கான மரியாதை இந்தத் திரைப்படம் என்கிற துவக்க அறிவிப்பு ‘மெர்க்குரியில்’ நியாயமாகப் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று எழுகிற நெருடலை புறக்கணிக்க முடியவில்லை. ‘Silence is the most powerful scream’ என்கிற தலைப்பின் மையத்தை, தொடர்ச்சியாக ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே சிதைத்துவிடும் சோகமும் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் ஆன்மா பழிவாங்குமா, அதுவும் பார்வையற்றதாக இருக்குமா என்பது முதற்கொண்டு எண்ணற்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன.

படத்தின் இறுதிக்காட்சி கவித்துவமான நீதியுடன் அமைந்திருந்தாலும், கூடவே நம்பகத்தன்மையை சிதறடித்திருக்கும் ஆபத்தையும் இயக்குநர் கவனித்திருக்கலாம். ‘We end fighting wrong war’ என்று பிரபுதேவாவின் பாத்திரம் தாமதமாக வருந்தினாலும், தங்களிடமிருந்த குறைபாடு காரணமாக விபத்துக்குக் காரணமாகிவிட்ட அப்பாவி இளைஞர்கள் கொடூரமாக பலியானதில் ஏதோவொரு வகை அநீதியுள்ளது. இதுபோன்ற சூழலியல் பிரச்னைகளில் போராட்டத்தின் கவனம் மையத்தை நோக்கி அல்லாமல் பல்வேறு வகையில் திசை திரும்புவதை இயக்குநர் குறியீடாகச் சொல்ல விரும்பினாரா என்பது தெரியவில்லை. இதுபோன்ற பிசிறுகளைத் தவிர்த்திருந்தால், இத்திரைப்படம் முழுமையை நோக்கி பெரும்பான்மையாக நகர்ந்திருக்கும். பாத்திரங்களின் அறிமுகம் உள்ளிட்ட முதல் பாதியின் பல காட்சிகளை இன்னமும் சுருக்கியிருக்கலாம்.

மொழி எல்லையைக் கடந்திருப்பதாலும், சூழலியல் சார்ந்து உலகளாவிய பிரச்னையை உறுத்தாமல் உரையாடியிருப்பதாலும், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது, ‘மெர்க்குரி’.

- சுரேஷ் கண்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com