நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ - சினிமா விமரிசனம்

கோலம் சரியாக உருவாகததால் அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்... 
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ - சினிமா விமரிசனம்

இத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப் பிடித்த கதை’. ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு பூனையை பிடித்திருக்கிறார் இயக்குநர். அதுவும் குருட்டுப்பூனை.

‘அவல நகைச்சுவைப்’ பாணியில் சில காட்சிகளும் வசனங்களும் சுவாரசியமாக இருக்கிறது என்றாலும் ஒட்டுமொத்தப் பார்வையில் இந்தத் திரைப்படம் ரசிக்கத்தக்கதாக இல்லை. நம்பகத்தன்மை, தர்க்கம் போன்ற அடிப்படையான விஷயங்கள் திரைக்கதையில் பெரும்பாலும் இல்லை. கதாபாத்திரங்களின் சிக்கலை உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களோடு இணைப்பதில்தான் ஒரு திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது. அது இந்தத் திரைப்படத்தில் நிகழவில்லை.

தாயின் மருத்துவச் செலவிற்காக வேறு வழியின்றி நாயகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது என்பதெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமாச்சாரம். இதில் நாயகி அதைச் செய்கிறார்  என்பது மட்டுமே வித்தியாசம். பெண்மையத் திரைப்படம் என்கிற வகையில் இந்தத் திரைப்படத்தை சற்று வரவேற்கலாம். அவ்வளவே.

**

நயன்தாரா (கோகிலா) நடுத்தர வர்க்கத்தைச் சேர்நத பெண். கோழைத்தனமான தந்தை ஏடிஎம் காவலாளியாக இருக்க (ஆர்.எஸ்.சிவாஜி), தாய் லொக்கு லொக்கென்று இருமிக் கொண்டே சமைக்கும் சாதாரண இல்லத்தரசி (சரண்யா). தங்கை ஷோபி (ஜாக்குலின்) கல்லூரியில் படிக்கும் பெண்.

பெரும்பாலான பணியிடங்களில் நயன்தாரா பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறை யதார்த்தம். தாய்க்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவர அதற்கு மருத்துவச் செலவு பதினைந்து லட்சம் ஆகும் என்றும் அதற்கான அறுவைச் சிகிச்சையை இரண்டு மாதங்களுக்குள் செய்யவேண்டும் என்பதையும் அறியும் நயன்தாரா அதிர்ந்து போகிறார். அந்த எளிய குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது. நயன்தாரா பல இடங்களில் முயன்றும் பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. பணம் தர தயாராக இருக்கிற பணக்காரக் கயவர்கள் படுக்கையறைக்கு அழைக்கிறார்கள்.

தங்களிடம் இருக்கும் சுமாரான நிலத்தை விற்பதற்காக லாட்ஜில் இருக்கும் ஒரு நிலத்தரகரைச் சந்திக்கச் செல்கிறார் நயன்தாரா. தோல்வியுடன் அவர் திரும்பும்போது நிகழும் ஒரு சம்பவம், அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதே லாட்ஜில் போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருக்கும் ஓர் இளைஞன், காவல்துறையின் சோதனைக்குப் பயந்து ஓட, நயன்தாரா செய்யும் எதிர்பாராத காரியத்தால் இளைஞன் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறான்.

‘லாட்ஜினுள் மாட்டியிருக்கும் போதைப் பொருளை நீதான் வெளியே கொண்டுவர வேண்டும்’ என்கிற நிபந்தனையுடன் போதைக் கும்பல் நயன்தாராவை மிரட்டுகிறது. இதற்காக அவரது தங்கையை பணயக் கைதியாக வைத்திருக்கிறது. அவர்கள் சொன்னதைச் செய்யும் நயன்தாரா, தாயின் மருத்துச் செலவிற்கு இப்படியொரு வழி இருப்பதை தற்செயலாக அறிகிறார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண பெண். போதைப் பொருள் கடத்தல் தொழிலில் நுழையும்  சுவாரசியமான முரணைக் கொண்ட இந்த ஆட்டம் ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தையே கடத்தல் கும்பலிடம் விலையாகத் தர வேண்டியிருக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதிலிருந்து நயன்தாராவும் அவரது குடும்பமும் மீண்டார்களா என்பதைச் சுவாரசியமான காட்சிகளின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

கோக்குமாக்கு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள் சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம். நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும் தர இயக்குநர்  மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

கழுத்து வலியால் அவதிப்படும் மெயின் வில்லன், ஆர்வக் கோளாறில் வில்லனையே மிரட்டும் மச்சான், எப்போதும் கண்களில் போதை தெரியும் உலவும் அடியாள், காதலிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஹைபர்-டென்ஷன் இளைஞன், சாலை வணிகர்களை உளவிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் (சரவணன்), அசந்தர்ப்பமான நேரத்திலும் எதுகை மோனையில் பேசி இம்சைப்படுத்தும் மொட்டை ராஜேந்திரன் என்று விதவிதமான பாத்திரங்கள். ஆனால் திறமையான திரைக்கதையின் மூலம் இவர்களை ஒருங்கிணைத்திருந்தால் இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தகுந்ததாக மாறியிருக்கும்.

நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் மளிகைக் கடை ஆசாமியாக யோகி பாபு. சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அந்தக் குடும்பம் செய்வதின் பின்னணி தெரியாமல் ஆர்வமாக உதவப் போவதும், தெரிந்ததும் பதறிப் பின்வாங்குவதுமாக சில காட்சிகளில் புன்னகைக்க வைத்திருக்கிறார். ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று இவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடல் யோகி பாபுவிற்கான பம்பர் பரிசு.

ஒரு கையாலாகாத தந்தையின் பாத்திரத்தை ஆர்.எஸ்.சிவாஜி இயல்பாகக் கையாண்டிருக்கிறார். இயல்பும் நகைச்சுவையும் கலந்த பாத்திரமெல்லாம் சரண்யா பொன்வண்ணனுக்கு கைவந்த கலை. ஆகையால் பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. சீனு, அறந்தாங்கி நிஷா போன்ற சிறிய பாத்திரங்கள் ஆங்காங்கே வருகிறார்கள். ஜாக்குலின், வடிவேல் பாலாஜி உள்ளிட்ட ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள் ஆங்காங்கே வருவதால் விஜய் டிவியை பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை ஏற்படுகிறது. இயக்குநர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் இருந்து உருவாகி வந்தவர் என்பதால் இது நேர்ந்திருக்கிறது போல. யோகி பாபு நடத்தும் மளிகைக்கடையின் உதவியாளாக வரும் சிறுவன் பேசுவதெல்லாம் அதீதமானது என்றாலும் தன் நடிப்பால் கவர்கிறான்.

அனிருத்தின் இசையில் உருவான ‘கல்யாண வயசு’ பாடல், இந்தத் திரைப்படத்திற்கு ஒரு நல்ல விளம்பரமாக நின்று உதவியிருக்கிறது. ஆனால் இதர பாடல்கள் எதுவும் கவரவில்லை. மரண அவஸ்தையில் திடீர் திடீரென்று அனிருத்தின் குரல் உச்சஸ்தாயியில் கதறி வெறுப்பேற்றுகிறது. காட்சிகளுக்கேற்ப ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே கவர்கிறது.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலம். கும்மிடிப்பூண்டி என்கிற சென்னை புறநகரின் பின்னணியை கேமரா சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. நயன்தாராவின் நடுத்தர வர்க்க வீடு உள்ளிட்ட இடங்கள் இயல்பான பின்னணியில் உள்ளன. மைலாப்பூரில் உள்ள ஒரு பிரபலமான சிறு உணவகத்தின் மீது இயக்குநருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதே பெயரையும் பின்னணியையும் உபயோகித்து கடத்தல் தொழில் அங்கு நடைபெறுவதாகச் சித்தரித்திருக்கிறார்.

ஊதிய உயர்வு வேண்டுமென்றால் ‘அந்த’ விஷயத்திற்காக ஒப்புக் கொள்ள மறைமுகமாக வலியுறுத்தும் மேலாளரிடம், ‘அதற்கு’ தயார் என்றால் எம்டியிடமே நேராகப் பேசி விட்டு உங்கள் இடத்தில் அமர்ந்திருப்பேனே’ என்று நயன்தாரா பதில் அளிக்கும் இடம் போன்று, வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

தாயாரின் மருத்துச் செலவிற்காக ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிற முரணைக் கொண்ட ஒரு சுவாரசியமான பின்னணிதான். ஆனால் இதை நம்பகத்தன்மையோடும் தர்க்கத்தோடும் இயக்குநர் காட்சிகளாக உருவாக்கவில்லை. பல இடங்களில் செயற்கையான நாடகம் போலிருக்கிறது. ‘அவனையும் சுட்டாத்தான் நான் போவேன்’ என்று நயன்தாரா சொல்லும் காட்சிகள் எல்லாம் படுசெயற்கை.

மருத்துவச் செலவிற்காக பல இடங்களில் உதவி கேட்கும் நாயகிக்கு, அரசு மருத்துவமனை என்று ஒன்று இருப்பதே தெரியாமல் போனது ஆச்சரியம். சிக்கலான நோய் என்றால் அது தனியார் மருத்துவமனையில், அதிக செலவோடுதான் குணமாகும் என்கிற பொதுப்புத்தியை இயக்குநரும் பிரதிபலிக்கிறார்.

‘ஆரண்ய காண்டம்’ என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை மாதிரியிருக்கிறது ‘கோலமாவு கோகிலா’. கோலம் சரியாக உருவாகததால் அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com