மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்

உலகம் முழுவதும் வெவ்வேறு வகைமைகளில், வண்ணங்களில் நகைச்சுவை திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்

உலகம் முழுவதும் வெவ்வேறு வகைமைகளில், வண்ணங்களில் நகைச்சுவை திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் ‘இதுதான் நகைச்சுவை’ என்று முத்திரை குத்தப்பட்ட சில தேய்வழக்கு விஷயங்கள் நெடுங்காலமாக நீடிக்கின்றன. இந்த அபத்த மரபைக் கலைத்துக் கொண்டு அரிதாக சில முயற்சிகள் வெளிவரும். அதிலும், உலக சினிமாக்களின் பரிச்சயம் மிகுந்து வரும் சமகாலத்தில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களிடமிருந்து அவ்வாறான முயற்சிகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. சிறந்த உதாரணம், தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’.

இந்த வரிசையில் புதுநிறத்தைச் சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கும் ‘அவல நகைச்சுவை’ திரைப்படம் ‘சவரக்கத்தி’. மிஷ்கினின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அவரது சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தனித்தனியாக சிறந்த பல விஷயங்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பார்வையில் நிறைவைத் தராத, மொண்ணையான முயற்சியாக இது அமைந்தது துரதிர்ஷ்டமானது. 

**

பழம்பெருமை பேசித் திரியும் பிச்சைமூர்த்திக்கு (ராம்) அவரது வாயே பிரதான எதிரி. ‘தவளையும் தன் வாயால் கெடும்’ எனும் பழமொழக்கு மிகச்சிறந்த உதாரணம் பிச்சை. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள, காது கேளாத மனைவியும் (பூர்ணா), மகனும் மகளும் இவருக்கு உண்டு. இவர்களின் பயணம் ஒருபுறம்.

பரோலில் வெளியே வந்திருக்கும் ரவுடியான மங்கேஸ்வரன் (அ) மங்கா (மிஷ்கின்) அன்றைய நாளின் மாலைக்குள் காவல்துறையிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். இன்னமும் மூன்று வருடங்களால் அவரால் வெளியுலகத்தைப் பார்க்க முடியாது. தன்னுடைய ஆட்களுடன் மங்கா செய்யும் பயணம் ஒருபுறம்.

தன்னுடைய மைத்துனனான  ரகு, எதிர்ப்பிற்குப் பயந்து தன் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவல் பிச்சைக்கு கிடைக்கிறது. தன்னுடைய குடும்பத்துடன் வேண்டாவெறுப்பாக இந்த எதிர்பாராத திருமணத்திற்கு கிளம்பும் பிச்சை, உதார் விடும் தன்னுடைய குணாதிசயத்திற்கு ஏற்ப செல்லும் வழியில் ஏற்படும் ஒரு சில்லறைத் தகராறில் ரவுடி மங்காவின் பகையைச் சம்பாதிக்கிறான். 

ஏற்கெனவே சிறைக்குத் திரும்பும் எரிச்சலில் உள்ள மங்கா இதனால் கோபத்தின் உச்சிக்கே செல்கிறான். எப்படியாவது தேடி பிச்சையைக் கொல்வது என சபதம் எடுக்கிறான். ஆத்திரக் கிறுக்கனாக அவன் முடிவெடுத்து விட்டால் எவராலும் தடுக்க முடியாது. எனவே தன் ஆட்களுடன் பிச்சையைத் தேடிக் கிளம்புகிறான். 

வாய்ச்சவடால் உள்ளவன்தான் என்றாலும் அப்பாவியான பிச்சை இவனிடமிருந்து தப்பித்தானா, கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட இவர்களின் குடும்பம் என்னவானது என்கிற அலைச்சலின் ஒருநாள் பயணமே ‘சவரக்கத்தி’ 

**

ரவுடியிடமிருந்து உயிருக்காக மன்றாடும் கதாபாத்திரத்தின் பெயர் ‘பிச்சை’. ஜப்பானிய கலாசாரத்தின் மீது பிரியமுள்ள மிஷ்கினின் பாத்திரத்தின் பெயர் ‘மங்கா’. ஜப்பானிய வரைகதையின் வடிவம் ‘மங்கா’ என்று குறிக்கப்படுவது ஓர் உபதகவல். இப்படி பல நுட்பமான, நுண்மைகளுடன் அமைந்த காட்சிகள் சுவாரசியமாக விரிகின்றன. 

ஒரு கோழையைப் போல படம் முழுவதும் ஓடி ஒளிந்து கொண்டேயிருக்கும் பிச்சை, வாய் பேச முடியாத ஒரு தேநீர்க்கடை மாஸ்டரிடம் உபதேசத்தைப் பெறும் போது துணிச்சல் கொள்கிறான். அந்தக் கடையின் பெயர் ‘பொய்யாமொழி தேநீர் நிலையம்’. தன் குடும்பத்தை மீட்பதற்காக அவன் வேகமாகச் செல்ல ஒரு வாகனம் தேவைப்படுகிறது. வாடகை சைக்கிள் கடையை அணுகுகிறான். அறிமுகமில்லாத இவனுக்கு வண்டி தர கடைக்காரர் மறுக்கிறார். பிறகு ஏதோவோர் அறவுணர்வு கடைக்காரரை உந்த சைக்கிள் தர சம்மதிக்கிறார். அந்தக் கடையின் பெயர் ‘ பரிசுத்தம் மிதிவண்டி நிலையம்’ இப்படியாக பாத்திரங்களும், காட்சிகளின் பின்னணி விவரங்கள் ஒவ்வொன்றும் இந்த திரைப்படத்தில் மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதை ஒருபுறம் ரசிக்க முடிகிறது. 

பிச்சையை பழிவாங்க செல்வதா, அல்லது அன்றைய தினத்தை நிம்மதியாக கழித்து விட்டு சிறைக்குத் திரும்புவதா என்கிற கட்டாயம் மங்காவிற்கு ஏற்படுகிறது. நாணயத்தைச் சுண்டி ‘பூவா,தலையா’ போடுகிறான். ஒரு நாணயத்தின் பக்கம் ஒருவனின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் கமலின் ‘ஆளவந்தான்’ நந்து பாத்திரம் போல, ஒரு நாணயம்தான் பிச்சையின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. படம் முழுவதும் இப்படியான அபத்த நகைச்சுவை தருணங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றில் அரிதான சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றில் அழுத்தமோ, சுவாரசியமோ இல்லாததால் வெறுமனே கடந்து போகின்றன. 

மங்காவிடம் பிச்சை மாட்டும் போதெல்லாம் ஏதோவோர் குருட்டு அதிர்ஷ்டத்தால் தப்பிச் செல்கிறான். இது மங்காவை இன்னமும் கடுப்பேற்றுகிறது. பிச்சையின் குடும்பத்தின் மூலம் அவனைப் பிடிக்கும் வாய்ப்பு வரும் போது மங்கா சொல்கிறான். ‘இல்லை. நீ ஓடு. நான் உன்னைத் துரத்திப் பிடிக்கிறேன்’. இதுவொரு முக்கியமான காட்சி. அவனுடைய அகங்காரம் விழிக்கும் காட்சிகளுள் ஒன்று அது. ஆனால் அதற்கு மாறாக மீண்டும் குடும்பத்தைக் காட்டி மிரட்டுவதின் மூலம் பிச்சையை வரவழைப்பது சுவாரசியமான முரண். 

**

மிஷ்கினின் பாத்திரம் மிக கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. தன் சுயநலத்திற்காக எவரையும் அழிக்கும் குணாதிசயம் உள்ளவன். தனக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யும் தன்னுடைய தாய்மாமனையே எதிர்ப்பவன். ஓர் அற்ப விவகாரத்திற்காக அப்பாவி ஒருவனின் உயிரை எடுப்பதற்காக படம் முழுவதும் பேய் போல் அலைகிறான். ஆனால் அவனுக்குள்ளும் நுண்ணுணர்வும் கருணையும் ஒட்டிக் கொண்டிருப்பது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது. ‘நாலு பேர் பார்க்க கக்கூஸ் போயிருக்கியா?” என்று சிறை வாழ்க்கையின் கொடுமையைப் பற்றி தாய்மாமனிடம் சொல்லும் போது அவனுக்குள் இருக்கும் மானவுணர்வை நாம் அறிய முடிகிறது. படம் முழுவதும் இந்த மனோபாவத்தை விடாமல் கடைப்பிடித்திருக்கும் மிஷ்கினின் பங்களிப்பு அபாரமானதாக உள்ளது. 

வெட்டி வீறாப்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலான தத்தளிப்பை ராம் சிறப்பாகவே கையாண்டுள்ளார். காது கேளாக்குறையுள்ள மனைவியிடம் எரிந்து விழுவது, மங்காவிடம் உயிர்ப்பிச்சை கேட்டுவிட்டு சமயோசிதமாக தப்பிப்பது, தன் தந்தையின் புகைப்படத்தை கிழித்துப் போடும் இன்ஸ்பெக்டரை துணிச்சலாக பழிவாங்குவது (என்னவொரு அற்புதமான காட்சி!) என்று பல காட்சிகளில் பிச்சைமூர்த்தியாகவே வாழ்ந்துள்ளார் ராம். ஆனால் அவருடைய மிகையான உடல்மொழியும் கூச்சலும் சில சமயங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. ராம் மட்டுமல்ல, ஏறத்தாழ அனைத்து பிரதான பாத்திரங்களுமே மிகையாகவே இயங்குவது நம்பகத்தன்மையை பெருமளவு சிதைக்கிறது. 

ஒரு நிறைமாத கர்ப்பிணியின் உடல்மொழியை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார் பூர்ணா. தன் கணவன் வீரன் என்று அப்பாவித்தனமாக நம்புவதும், அதே சமயம் ஒரு வழக்கமான மனைவியாக அவனை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பதும், அசந்தர்ப்பமான சமயங்களில் பழமொழியைச் சொல்லி விட்டு நாக்கைத் துருத்துவதும் என ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இவருடைய பாத்திரத்திற்கு இன்னமும் கூட முக்கியத்துவம் தரப்பட்டிருக்கலாம். தன் கணவரைப் போலவே இவரும் வெட்டி வீறாப்புடன் சிக்கலில் மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகள் செயற்கையாகத் தோன்றுகின்றன. 

‘ஏதோ தப்பா தெரியுது.. வேண்டாம்டா’ என்று மங்காவின் மனச்சாட்சி போல எச்சரித்துக் கொண்டேயிருக்கும் தாய்மாமன், பாராட்டு பெறுவதற்காக முதலில் ஆலோசனை சொல்லி விட்டு பிறகு அவதிப்படும் மங்காவின் அடியாள், ‘அலெக்சாண்டருக்கே பஞ்சாயத்து சொன்ன குடும்பம்டா நம்மளுது’ என்று வீராப்புடன் கிளம்பி அடிவாங்கி தவழ்ந்து வரும் பிச்சையின் தாய்மாமன், வில்லங்கமான உடல்பாகத்தில் தாக்கப்பட்டு அந்த அவஸ்தையோடு படம் முழுக்க வரும் இன்னொரு அடியாள், மங்காவின் நகல் போலவே எல்லாவற்றிற்கும் ஆத்திரப்படும் இளைஞன், ‘அடி தாங்கல முதலாளி’ என்று கதறும் பிச்சையின் உதவியாள், உலகின் தத்துவச் சிக்கல்களை உரக்க விவாதித்தபடி வரும் மனநலம் குன்றிய நபர் (ஷாஜி) என்று ஒவ்வொரு சிறிய பாத்திரமும் சுவாரசியமாகவும் கவனமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

தன் தலையில் கொட்டி கொட்டி முடிவெட்டிய பிச்சையை ‘இன்னிக்கு நீ என்ன பாடுபடப் போற பாரு’ என சாபம் கொடுக்கிறான் ஒரு சிறுவன். தன்னை ஆபாசமாக வெறித்துப் பார்த்து விட்டு தன் கணவன் தர்மஅடி வாங்குவதற்கு காரணமாக இருக்கும் மங்காவை ‘நீ நல்லாவே இருக்க மாட்டே’ என சாபம் விடுகிறாள் ஓர் இளம் குடும்பப்பெண். இந்த இருவரின் சாபங்களும் மங்காவையும் பிச்சையையும் அன்றைய நாள் முழுக்க துரத்துகின்றன. 

**

இந்த திரைப்படத்தின் இருபெரும் பலங்கள் என்று ஒளிப்பதிவையும் பின்னணி இசையையும் சொல்லலாம். ஒருநாளின் காலையில் துவங்கி அன்று மாலைக்குள் நிகழும் திரைக்கதை என்பதால் அதுசார்ந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் வெளிச்சத்தையும் மிக கவனமாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன். நத்தை நகர்ந்து செல்லும் காட்சி முதல் பல காட்சிகளின் அழகியலும் வண்ணமும் மனதை ஈர்க்கிறது. 

‘என்னதான் ராக்கெட் விழுந்தாலும் நம்ம குண்டியை கைவெச்சுதான் கழுவ வேண்டியிருக்கு’ என்கிற முணுமுணுப்பு வசனம் போன்று பல காட்சிகளில் மென்நகைச்சுவை வெடிகளும் பகடிகளும் இருக்கின்றன. 

‘அண்ணாந்து பார்’ பாடல் முதற்கொண்டு காட்சிகளின் பின்னணிக்கேற்ப அற்புதமாக ஒலிக்கும் இசை வரை அரோல் கரோலியின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. வயலின் இசையும் காற்று வாத்தியங்களின் அற்புதமும் படம் முழுக்க மாயாஜாலம் புரிகின்றன. தமிழச்சி தங்கபாண்டியனின் பாடல் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. 

பூனை, எலி விளையாட்டு போல கொலைவெறியுடன் துரத்தும் ஒரு முட்டாள்தனமான கோபக்காரன், அவனிடமிருந்து உயிர்தப்ப அலையும் ஒரு புத்திசாலி கோழையின் கதை சினிமாவிற்கு புதிதானது அல்ல. பல சிறிய கூறுகளுடன் இந்தக் கதையை சுவாரசியப்படுத்தியுள்ள ‘சவரக்கத்தி’, ஒட்டுமொத்த கவனத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. மிஷ்கினின் எழுத்து என்பதால் அது தொடர்பான சாயல்கள் சில இருந்தாலும், தன்னுடைய தனித்தன்மையை இயக்குநர் ஆதித்யா பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. 

திரைக்கதை இன்னமும் சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் உருவாக்கப்பட்டிருந்தால் ‘சவரக்கத்தி’யின் கூர்மையை உணர்ந்திருக்க முடியும். அவை அமையப் பெறாததால் ஒரு மொண்ணைக் கத்தியினால் அறுபடும் வேதனையைப் படம் முழுவதும் உணர வேண்டியிருந்தது துரதிர்ஷ்டமானது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com