பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’- சினிமா விமரிசனம்

சமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள், செல்வாக்கான குற்றவாளிகளுக்குச் சாதகமாக இயங்கும்போது எளிய மக்களுக்கான நீதியை எவரால் தர முடியும்...
பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’- சினிமா விமரிசனம்


இதுவரையிலான பாலாவின் திரைப்படங்களையொட்டி, பொதுவாக இருவகையான பார்வையாளர்கள் வட்டம் உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. அவருடைய படங்களில் சித்தரிக்கப்படும் விளிம்புநிலைச் சமூகம், இருண்மை, வன்முறை போன்றவற்றின் மீதான அச்சமும் ஒவ்வாமையும் கொண்ட பார்வையாளர்கள் ஒருபுறம். இந்தப் பிரத்யேக காரணங்களுக்காகவே கொண்டாடும் பார்வையாளர்கள் இன்னொருபுறம்.

பாலாவின் சமீபத்திய திரைப்படமான ‘நாச்சியாரிலும்’ அவருடைய பிரத்யேகமான பாணியும் சாயலும் உண்டு என்றாலும் இந்த இரு தரப்புப் பார்வையாளர்களையும் கவரும் வண்ணம், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு சமநிலையை அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் நிராகரிக்க முடியாத படைப்பாளி என்கிற தகுதியை இத்திரைப்படத்தின் மூலம் அவர் மேலும் அழுத்தமாக்கியிருக்கிறார். இதன் சாட்சியமாக ‘நாச்சியார்’ அமைந்திருக்கிறது.

நடிகர்களின் ஆதிக்கமும் இடையூறும் மிகுந்திருக்கும் சூழலில் ‘சினிமா’ என்பது இயக்குநரின் ஊடகம் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்கும் படைப்பாளிகளின் வரிசையில் பாலா உறுதியாக நிற்பது சிறப்பு. அதுவரை அறியப்பட்ட ஒரு நடிகரின் பிம்பத்தைத் தனது பாணியில் முற்றிலும் வேறுவகையில் வார்த்தெடுக்கும் அவரது திறமை, இந்தத் திரைப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் வழியாக நீண்டிருப்பது மிக சுவாரசியமானது. அதிலும் ஜோதிகாவின் அதிரடியான மறுவருகை இத்திரைப்படத்தின் மிக முக்கியமான, சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. 

**

எளிய சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும் (இவானா) ஒரு பையனையும் (ஜி.வி.பிரகாஷ்) காவல்துறை துரத்திப் பிடிக்கும் பரபரப்பான காட்சிகளோடு படம் துவங்குகிறது. இன்னமும் பதினெட்டு வயது நிரம்பாத பெண்ணை, அந்தப் பையன் வன்கலவி செய்து விட்டான் என்பது வழக்கு.

நாச்சியார் ஐபிஎஸ் (ஜோதிகா) நேர்மையான, துணிச்சலான காவல்துறை அதிகாரி. உண்மையை வரவழைப்பதற்காக அவர் எடுக்கும் அதிரடியான அணுகுமுறைகளின் மீது துறை சார்ந்த புகார்கள் உண்டு. ஆனால் அவருடைய இன்னொரு பக்கம் மென்மையானது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை அவர் மெல்ல விசாரிக்கிறார். ‘இருவரின் ஒப்புதலோடும்தான் உறவு நிகழ்ந்தது, அவன் அப்பாவி’ என்று கண்ணீர் மல்குகிறாள் இளம்பெண்.

இது சார்ந்து தொடரும் விசாரணையில் ‘பையன் குற்றவாளியல்ல’ என்றொரு சிக்கலான கோணம் புலப்படுகிறது. எனில் ‘உண்மையான குற்றவாளி யார்” என்கிற கேள்விக்கான பதிலைத் தேடி நாச்சியார் பயணிக்கும் காட்சிகளோடு படம் தொடர்கிறது. இதில் பல தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாலாவின் திரைப்படங்களின் வழக்கமாக வெளிப்படும் வன்முறையாக அல்லாமல் மென்மையும் நுண்ணுணர்வாக அமைந்திருக்கும் உச்சக்காட்சி சிறப்பானது.

*

இத்திரைப்படத்தின் பிரதான சுவாரசியம் ‘ஜோதிகா’தான். திரைப்படத்தின் தலைப்பு தன்னுடைய பாத்திரத்தின் பெயரில் அமைந்திருப்பதற்கான முழு நியாயத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். இவர் தோன்றும் முதற்காட்சி துவங்கி படம் முழுமையும் முற்றிலும் வேறுவகையிலான உடல்மொழியையும் தோரணையையும் ஜோதிகா கடைப்பிடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. இதுவரையான பாத்திரங்களின் மூலம் அவருக்கு உருவாகியிருக்கும் ‘குழந்தைத்தனமான’ பிம்பத்தை தூள்தூளாக்கியிருக்கிறார். அதிரடியான காவல்துறை அதிகாரி என்கிற முகம் ஒருபுறமும், அந்தக் கம்பீரம் துளியும் குறையாத, அன்பான இல்லத்தரசி என்கிற முகம் இன்னொருபுறமுமாக அசத்தியிருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரியின் மிடுக்கு அவருக்குக் கைகூடியிருந்தாலும் அதிலொரு மெலிதான செயற்கைத்தனம் கலந்திருப்பதையும் காண முடிகிறது.

ஜி.வி. பிரகாஷ் ‘நடிக்கத்’ துவங்கியிருக்கும் முதல் திரைப்படம் இதுதான். ‘காத்து’ என்கிற காத்தவராயனாக, ஒரு வளரிளம் சிறுவனின் உடல்மொழியையும் அதன் தன்மையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய காதலியைக் காணத் துடிக்கும் உருக்கம் ஒருபுறமும், மிகையின்றி அமைந்த இளமைக் குறும்புகள் இன்னொரு புறமும் எனத் தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்.

புதுவரவான இவானாவிற்கு நல்ல வடிவான, தமிழ் சாயல் நிறைந்திருக்கும் லட்சணமான முகம். அப்பாவித்தனம் இன்னமும் மாறதிருக்கும் இவரும் ஜி.வி.பிரகாஷைப் போலவே இயக்குநரால் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். தன்னைத் துரத்தும் பையனைச் செல்லக் கோபத்துடன் விரட்டுவதும், பிறகு அவனைக் காணத்துடிக்கும் தவிப்பையும் குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்.

ஜோதிகாவின் சக காவல்துறை அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷ் அபாரமாக நடித்துள்ளார். ஆதாரமான நேர்மைக்கும் காவல்துறையில் உள்ள நடைமுறை ஊழல்களுக்கும் இடையேயான தத்தளிப்பை நன்றாக வெளிக்காட்டியுள்ளார். பணத்தின் மூலம் குற்றங்கள் மூடி மறைக்கப்படும் அவலத்தையும் உயர்மட்ட அதிகாரிகள் இவற்றிற்கு உடந்தையாக நிற்கும் கொடுமையையும் இவர் விளக்கும் காட்சி சிறப்பானது. இதுதவிர ஜி.வி.பிரகாஷின் பாட்டி, முதலாளி, கூர்நோக்கு மையத்தின் காவல்காரர், அங்குள்ள சிறுவர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் என ஒவ்வொரு சிறிய பாத்திரமும் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறையிலுள்ள ஊழல்கள் ஒருபுறம் சித்தரிக்கப்பட்டாலும், இன்னொரு புறம், நேர்மையான காவல்அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அத்துறையின் நடைமுறைச்சிக்கல்கள் போன்றவை சமநிலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வயதுக்கு வராதவர்கள் தொடர்பான வழக்கு என்பதால் ஊடகங்கள் அறியாமல் ரகசிய விசாரணையை மேற்கொள்ளச் சொல்கிறார் ஜோதிகா. இதனால் தனிப்பட்ட சில இழப்புகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாததால் மகளின் கோபத்தையும், ‘இளம் மனங்களில் தவறான நம்பிக்கையை விதைக்காதே’ என்று சூசகமாக உபதேசிக்கும் கணவனையும்.

விசாரணைக்கு வந்த ஒரு பெரியவரை திருப்பியனுப்ப ஆட்டோ செலவிற்குக் காசில்லாமல் ஒரு காவல்துறை பணியாளர் தடுமாறும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் அங்குள்ள நடைமுறைப் பிரச்னைகளையும் நம்மால் உணர முடிகிறது.

பெரும்பாலும் பயங்கரவாதிகளாகவே இஸ்லாமிய சமூகம்  தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் அபத்தமான சூழலில் இதில் வரும் ஒரு திருமணக்காட்சியும், ஒரு பந்தா பேர்வழியால் எளிய மக்கள் பிரியாணி பெற முடியாமல் தடுக்கப்படும்போது, அவர் தண்டிக்கப்படும் காட்சியும், நடைமுறையில் நாம் அன்றாடம் காணும் மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திரைப்படத்தின் முதற்பாதி பிரகாஷ் மற்றும் இவானாவின் காதல் காட்சிகள் மூலம் சுவாரசியமாக நகரும்போது, இரண்டாம் பாதி ஜோதிகாவின் அதிரடி விசாரணைக் காட்சிகளின் மூலம் பரபரப்பாகச் செல்கிறது. ஆங்கிலத் திரைப்படங்களைப் போன்று இந்தப்படத்தின் நீளம் சுமார் தொன்னூறு நிமிடங்கள் என்பதால் தேவையற்ற காட்சிகள் இன்றி ரத்தினச் சுருக்கமாக படம் முடிந்து விடுகிறது. இனி தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு இதுவொரு நல்ல முன்னுதாரணமாக இருக்கலாம்.

**

‘இன்று காலை பொழுது விடிந்தது’ என்கிற வாக்கியம் எத்தனை சம்பிரதாயமாக இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் ‘ராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது’ என்று சொல்வதுவும். காட்சிகளின் தன்மைக்கேற்ப இசை மிகப் பொருத்தமாகவே ஒலிக்கிறது. ஆனால் பாலா படங்களுக்கு என ராஜா வழங்கும் கூடுதல் சிறப்பு ஏதுமில்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயங்களுள் ஒன்று. படத்தின் ஒரே ‘மாண்டேஜ்’ பாடலும் ரசிக்கும்படி உள்ளது.

ஈஸ்வரின் ஒளிப்பதிவு அபாரம். துவக்கக் காட்சியின் துரத்தல்களை ஹெலிகாம் கோணத்திலும் சாலைப் பயணத்தின் வழியாகவும் விறுவிறுப்பாக்கியிருப்பது ஓர் உதாரணம். படத்தின் பிற்பாதியில் திரைக்கதை, ஆங்காங்கே தொடர்பற்றுப் பயணிப்பது நெருடல்.

பொதுவாக பாலாவின் திரைப்படங்களில் சட்டம், நீதி, காவல், மதம் போன்ற நிறுவனங்கள் மீதான நையாண்டியும் பகடியும் பல காட்சிகளில் தென்படும். இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. “நமக்கு கஷ்டம் கொடுத்தாதானே சாமிக்கு போரடிக்காம இருக்கும். ஒரு சாமி மன்னிக்கச் சொல்லுது, இன்னொரு சாமி தண்டிக்கச் சொல்லுது. எதைக் கேக்கறது. நாமே புதுசா ஒரு சாமியை உருவாக்கினாத்தான் சரிவரும்” என்பது முதற்கொண்டு, நீதிமன்றத்தில் உளறிக் கொட்டும் அரசு வழக்கறிஞரின் சமூகம் குறித்து நீதிபதி கேட்க, ‘அப்பா வடகலை, அம்மா தென்கலை” என்று அவர் பதில் சொல்வது போன்ற ரகளையான நகைச்சுவை வசனங்கள் படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

‘எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும்’ என்கிறது திருக்குறள். தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்பது பாலாவின் நம்பிக்கை. இது தொடர்பான காட்சிகளை ‘நந்தா’ திரைப்படத்திலும் நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ‘மேலே இருந்து தனியா குதிச்சு வருமா” என்று சூர்யாவிற்கு உபதேசிப்பார் ராஜ்கிரண். நீதி, சட்டம் என்று சமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள், செல்வாக்கான குற்றவாளிகளுக்குச் சாதகமாக இயங்கும்போது எளிய மக்களுக்கான நீதியை எவரால் தர முடியும் என்கிற கேள்வியைப் படம் மிக அழுத்தமாக முன்வைக்கிறது.

சமூகத்தின் பார்வையில் அது சட்டப்பூர்வமற்றதாகத் தெரிந்தாலும் இம்மாதிரியான குற்றங்களைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதற்கான அவதாரங்கள் சமூகத்திலிருந்தே உருவாவார்கள். இந்து மத நம்பிக்கையின் படி, அரக்கர்களைக் கொன்றொழிக்கும் பெண் தெய்வங்களின் வழிமுறையும் இதுவே. அப்படியொரு அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார் ‘நாச்சியார்’.

வயதுக்கு வராதவர்களின் இடையே நிகழும் பாலுறவை பாலா நியாயப்படுத்த முனைகிறாரா? காவல்துறை அதிகாரிகளே தங்களின் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் குறித்து கேட்க நமக்கு ஆயிரம் கேள்விகள் உண்டு. ஆனால் எளியோர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்போது அவர்களைக் காக்கப் புறப்படும் மனித தெய்வங்களின் வழிமுறைகளைக் கேள்வி கேட்கும் தகுதி நமக்கிருக்கிறதா என்கிற பதிலை மிக அழுத்தமாக முன்வைக்கிறது இந்தத் திரைப்படம்.

பாலா படங்களின் வழக்கமான தாக்கமும் அழுத்தமும் இத்திரைப்படத்தில் சற்று மட்டுப்பட்டிருந்தாலும் அவருடைய மிகச்சிறந்த படங்களில் ‘நாச்சியார்’ முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com