சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’: சினிமா விமரிசனம்

‘பத்மாவத்’ ஓர் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை...
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’: சினிமா விமரிசனம்

மண், பொன், பெண் ஆகிய மூன்றின் மீதான பேராசைதான் பெரும்பாலான போர்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன. சித்தூர் ராணியான ‘பத்மாவதி’யின் பேரழகைக் கேள்விப்பட்டு, அவளைக் காணாமலேயே மோகித்து அவளை அடைவதற்காகப் பெரும்படையையே திரட்டிக்கொண்டு செல்கிறான் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி. கோட்டை முற்றுகையிடப்பட்டதும், வேற்று ஆண்களிடம் அகப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ராஜபுத்ர வழக்கப்படி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்கிறாள் பத்மாவதி. 74,500 ராஜபுத்ர பெண்களும் அவளுடன் மாய்ந்தனர் என்கிறது ஒரு வரலாற்றுத்
தகவல்.

சூஃபி கவியான மாலிக் முஹம்மது ஜெயஸி, பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அவதி மொழியில் எழுதிய ‘பத்மாவத்’ என்கிற காப்பியக் கதையின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதாகப் படத்தின் துவக்கத்தில் கூறப்படுகிறது. சர்ச்சைகளின் காரணமாக ‘பத்மாவதி’ என்றிருந்த தலைப்பு பின்னர் ‘பத்மாவத்’ ஆனது நவீன வரலாற்றின் ஓர் அபத்தத் துளி.

**

கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தானாகிய ஜலாலுதீன் கில்ஜியின் அறிமுகத்துடன் மெல்லத் துவங்குகிற திரைப்படம், அவரை நயவஞ்சமாகக் கொன்று தில்லிப் பேரரசைக் கைப்பற்றும் அலாவுதீன் கில்ஜியின் வருகைக்குப் பிறகு வேகமெடுக்கிறது.

சிங்கள அரசின் இளவரசியான பத்மாவதியைக் கண்டவுடன் காதல் கொள்ளும் சித்தூர் மன்னன் ரத்தன் சிங், அவளை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டு தலைநகரான மேவாருக்கு அழைத்து வருகிறான். தனது மரியாதைக்குரியவராக இருந்தாலும், தங்களின் அந்தரங்கமான தருணத்தை வேவு பார்த்ததின் காரணமாக ராஜகுருவை நாடு கடத்துகிறான்.

‘சித்தூர் சாம்ராஜ்யத்தை அழிப்பேன்’ என்று உறுதி பூணுகிற ராஜகுரு, நேராக அலாவுதின் கில்ஜியிடம் சென்று பத்மாவதியின் பேரழகைப் பற்றி அவனுக்கு ஆசை உண்டாகுமாறு வர்ணிக்கிறார். ‘பத்மாவதியை அடைந்தால் அனைத்து வெற்றிகளும் உன்னிடம் வந்து சேரும்’ என்று பழிதீர்ப்பதற்காகப் போலி ஆரூடம் கூறுகிறார்.

பத்மாவதியைக் காணாமலேயே மோகம் கொள்ளும் அலாவுதீன், ராஜகுருவின் பேச்சை நம்பி சித்தூருக்குப் படை எடுக்கச் செல்கிறான். ஆனால் சித்தூர் கோட்டையை நெருங்குவது எளிதான காரியமாக இல்லை. பல மாதங்கள் அங்கேயே காத்திருக்கும் அவன், பிறகு ஒரு நயவஞ்சகத் திட்டத்தின் மூலம் ரத்தன் சிங்கை தில்லிக்கு கடத்திச் செல்கிறான்.

தன் கணவனை மீட்பதற்காக ஓர் அபாரமான திட்டத்துடன் புறப்படுகிறாள் பத்மாவதி. அவளுடைய நோக்கம் நிறைவேறியதா, அலாவுதீன் ஏன் மறுபடியும் சித்தூர் மீது படையெடுத்தான், ரத்தன் சிங்கிற்கு என்னவாயிற்று, ஆயிரக்கணக்கான ராஜபுத்ர பெண்கள் தீக்குளிக்கும் துர்நிலைமை ஏன் உண்டாயிற்று என்பதையெல்லாம் பரபரப்பும் சுவாரசியமும் இணைந்த காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

**

தேவதாஸ் முதற்கொண்டு பாஜிராவ் மஸ்தானி வரை பல காவியத் திரைப்படங்களைப் பிரத்யேக அழகியலுடன் உருவாக்குவதில் விற்பன்னர் சஞ்சய் லீலா பன்சாலி. ‘பத்மாவத்’ திரைப்படத்திலும் அவருடைய முத்திரை மிக அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. நாம் இதுவரை பார்த்திருந்த பல சரித்திரப் படங்களிலிருந்து பெரும்பாலும் விலகி கதையாடலில் ஒரு புதிய பாணியை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது எனலாம்.

பிரகாசம் நிறைந்திருக்கும் அரண்மனையும் வண்ணமிகு பட்டாடைகளுடன் அமர்ந்திருக்கும் மன்னரும் அமைச்சர்களும் இத்திரைப்படத்தில் இல்லை. உரத்த குரலில் ஆவேசமான, நீண்ட வசனங்கள் பேசும் நாடகத்தனமும் இல்லை. மாறாக தீப்பந்தங்கள், விளக்குகள் வெளிச்சத்தில் பெரும்பான்மையாக இருளும் சிறிய வெளிச்சமுமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் எளிமையான உள்ளரங்கக் காட்சிகள் நம்பகத்தன்மையையும் பரவச உணர்வையும் ஒருங்கே அளிக்கின்றன. கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கூட்டணி தங்களின் அசாதாரணமான உழைப்பைத் தந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நுட்ப விசேஷங்களுக்காகவே இத்திரைப்படம் தேசிய விருது முதற்கொண்டு பல உயர்ந்த விருதுகளை வெல்லக்கூடும்.

இதுவரையிலான சரித்திரத் திரைப்படங்களின் வழக்கமான கதையாடலின்படி நீள நீளமாக நாம் பார்த்த காட்சிகள் எல்லாம் இத்திரைப்படத்தில் மிகச்சுருக்கமாக ஆனால் அழுத்தமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. மங்கோலியர்களை எதிர்த்து புழுதிப்படலத்திற்குள் செல்லும் அலாவுதீன், சில நொடிகளில் எதிரியின் தலையோடு திரும்பும் காட்சியை ஓர் அற்புத உதாரணமாகச் சொல்லலாம். சித்தூர் கோட்டையை மறுபடியும் பெரும்படையுடன் தாக்கக் காத்திருக்கும் அவன், ‘போர் துவங்கட்டும்’ என்று அமைதியான குரலில் கூறுகிறான். அவ்வளவுதான். எவ்விதமான செயற்கையான ஆவேச கூச்சல்களும் படத்தில் இல்லை. இதுபோன்ற காட்சிகள் ‘பத்மாவத்’ திரைப்படத்தைத் தனித்துவமாக வேறுபடுத்திக்காட்டுகின்றன.

சித்தூரின் நிலவெளிக் காட்சிகள், மிகுந்த அழகியலுடன் காட்டப்படும் அதன் அரண்மனைக் காட்சிகள், போர் தொடர்பான காட்சிகள் என்று பெரும்பாலானவை ஆர்ப்பாட்டமில்லாத அழகுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வன்முறைக் காட்சிகள் பெரும்பாலும் நேரடியாகச் சித்தரிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது இயக்குநரின் நுண்ணுணர்வைக் காட்டுகிறது. தில்லி சிறையிலிருந்து ரத்தன் சிங், பத்மாவதியால் மீட்கப்படும்போது அவரது தளபதி அலாவுதீனின் ஆட்களுடன் சண்டையிடுகிறார். அவரது தலை எதிரிகளால் வெட்டப்படும்போது உடல் கீழே விழாமல் தொடர்ந்து போராடி தளர்ந்து பின்னர்தான் வீழ்கிறது. இந்தக் காட்சி அண்மைக்கோணத்தில் அல்லாமல் தூரக்காட்சியாக காட்டப்பட்டிருப்பது ஒரு சிறந்த உதாரணம். போலவே பத்மாவதி தீயில் பாயும் காட்சி. அவள் புன்னகையும் சாந்தமுமாக நெருப்பை நெருங்குவது வரை மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது.

சிறந்த உச்சக்காட்சிகள் அமைந்த இந்தியத் திரைப்படங்களின் வரிசையில் ‘பத்மாவத்’ திரைப்படத்தையும் சேர்க்கலாம் எனுமளவிற்கு மிகுந்த அழகியலுடன் இதன் உச்சக்காட்சி செயலாக்கப்பட்டிருக்கிறது.

ஒருகாலக்கட்டம் வரை அலட்சியமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘டப்பிங்’ படங்கள், வணிகச் சந்தையின் விரிவு காரணமாக மிகுந்த உழைப்பும் மெனக்கெடலும் நிறைந்ததாக மாறியிருக்கிறது.   டங்கல், பாகுபலியைத் தொடர்ந்து பத்மாவத் படமும் மிகுந்த மெனக்கிடலுடன் உருவாக்கப்பட்டிருப்பதை உதாரணமாக பார்க்கலாம். இதுவொரு டப்பிங் திரைப்படம் என்கிற உணர்வே பல இடங்களில் தோன்றவில்லை. அத்தனை கச்சிதம்.

‘வைரத்தை அபகரிக்க முடியும், அதன் பிரகாசத்தை அல்ல’, ‘பயம் எனும் அணிகலனை இந்த பத்மாவதி இதுவரை அணிந்ததில்லை.’ போன்ற அபாரமான வசனங்கள், அந்நியத்தன்மை வராமல் தமிழின் பிரத்யேக ருசியோடு எழுதப்பட்டிருக்கின்றன.

*

‘பத்மாவதி’ பாத்திரத்தில் தீபிகா படுகோனே முற்றிலும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். ரத்தன் சிங் உடனான காதல் காட்சிகள், அலாவுதினீன் சதியை முன்பே யூகித்து கணவரை எச்சரிக்கும் சாமர்த்தியம், சமயோசிதத்துடன் கணவரை மீட்கும் வீரம், வேறு வழியில்லாத சூழலில் மரணத்தை புன்னகையுடன் எதிர்கொள்ளும் தியாகம் என்று ஓர் அசலான ராணியைப் போலவே வாழ்ந்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் அதிகமாக கவர்பவர் என்று ‘அலாவுதீன் கில்ஜி’யாக நடித்திருக்கும் ரன்வீர் சிங்கைச் சொல்லலாம். “இவ்வுலகின் சிறந்த விஷயங்கள் அனைத்துமே அலாவுதீனுக்காக படைக்கப்பட்டிருக்கின்றன” என்கிறான் அவன். “யார் சொன்னது?” என்கிற கேள்விக்கு “அலாவுதீன்” என்று பதில் வருகிறது. சுயமோகத்தின் ஒரு அதிசிறந்த சித்தரிப்பைத் தனது திறமையான நடிப்பின் மூலம் தந்திருக்கிறார் ரன்வீர். தன் வீரர்களுடன் ஆவேசத்துடன் அவர் நடனமாடும் காட்சி அபாரமானது.

சித்தூர் கோட்டையின் முன்னால் பல மாதங்கள் காத்திருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்த, நெகிழ்ச்சியும் மிகையுணர்ச்சியும் கலந்து பேசி பின்னர் தன் தளபதியை நைச்சியமாக ஒரு பார்வை பார்க்கும் காட்சி சிறப்பு. தலைவர்களின் இரட்டைநிலையை இந்த ஒரு காட்சியே அற்புதமாக வெளிப்படுத்திவிடுகிறது.

ரத்தன் சிங்காக ஷாகித் கபூர். எந்தவொரு சிக்கலான சூழலிலும் ராஜபுத்ர மரபை மீறாத கண்ணியமான அரசனின் பாத்திரத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியுடன் பன்மையில் உரையாடுவது அக்காலக்கட்டத்து கலாசாரத்தை ஒரு முன்னுதாரணமாக வெளிப்படுத்துகிறது.

மாலிக்காபூராக நடித்திருக்கும் ஜிம் சர்ப் அசத்தியிருக்கிறார். திருநங்கை பாத்திரமான இதை, ஒருபக்கம் வீரமும் இன்னொரு பக்கம் அலாவுதீனின் மீதான காதலுமாகக் கையாண்டிருப்பது அற்புதம். ‘பத்மாவதியின்’ அழகை அலாவுதீன் புகழ்ந்துவிட்டு நகரும்போது ஏக்கமும் நிராசையுமாக இவர் பார்ப்பது ஒரு நல்ல காட்சி. இருவருக்குமான இந்த உறவு எல்லை மீறாமல் கண்ணியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அலாவுதீன் கில்ஜியின் வலது கரமாக இருந்த மாலிக்காபூர் ஒரு சிறந்த வீரர். அவரின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். ஆனால் இவரை வெறும் அரண்மனை சேவகர் போன்று சித்தரித்திருப்பது பிழையானது. போலவே அலாவுதீன் கில்ஜியும் போர் வெறி பிடித்தவராக, அதீதமான காமாந்தகாரராகக் காட்டப்பட்டிருப்பதும் நெருடல். சித்தூர் வீரர்களின் தாக்குதலினால் தான் வளர்த்த அரிய பறவை இறந்து போனதை துக்கத்துடன் ரத்தன் சிங்கிடம் சொல்லும் காட்சி, அவரின் இன்னொரு பக்கத்தை சிறிதளவு காட்டுவது மட்டுமே ஆறுதல். தங்களின் கூடாரங்கள் பற்றியெரியும்போது ‘பறவைக்கூண்டுகளைப் பத்திரமாக எடுத்து வை’ என்று அவர் உத்தரவிடுவது இன்னொரு உதாரணம்.

இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், போராட்டங்களும், வன்முறைகளும் எத்தனை அபத்தமானவை என்பதைப் படத்தைப் பார்க்கும்போது உணர முடிகிறது. ராஜபுத்திரர்களின் பிரத்யேக வீரமும், கண்ணியமும், தியாகமும் உயர்வான முறையில் சித்தரிக்ப்பட்டிருக்கின்றன. எத்தனை பெரிய எதிரியாக இருந்தாலும் அவன் விருந்தாளியாக வந்திருக்கும்போது கொல்லக்கூடாது என்கிற உயர்ந்த மரபை அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். பல முக்கியமான சந்தர்ப்பங்களில் பத்மாவதி முன்வைக்கும் ஆலோசனையும் அவளது வீரமும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் உண்மையில் அவர்களின் பெருமைகளைத்தான் பிரதானமாக முன்வைத்திருக்கிறது.

இதற்கு மாறாக கில்ஜிக்கள் போர் வெறியர்களாகவும், மரபை மதிக்காத நயவஞசர்களாகவும், பெண் பித்தர்களாகவும், பதவியைக் கைப்பற்ற நெருங்கிய உறவுகளைக் கூட கொல்லத் துணியும் சதிகாரர்களாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். போர் காட்சிகளில் கூட தர்மத்தை மீறி இவர்கள் முதுகில் குத்தி வெற்றியை அடைவதுதான் பல இடங்களில் வருகிறது. அலாவுதீனை வீழ்த்தும் ரத்தன் சிங் நயவஞ்சமாக முதுகில் அம்பு எய்யப்பட்டு சாகடிக்கப்படுவது ஓர் உதாரணக்காட்சி.

**

அந்தக் கால மன்னர்களும் பேரரசர்களும் தங்களைப் பற்றி வருங்காலம் பேசப்போகும் வரலாறு குறித்தான அதீதமான பிரக்ஞையுடன் இருந்திருக்கிறார்கள். அதற்காக எவ்வித இழப்பையும் சந்திக்க தயாராக இருந்திருக்கிறார்கள். அலாவுதீனின் சதியை யூகித்தாலும் ‘வரலாறு தன்னைப் பழிக்கும்’ என்கிற காரணத்திற்காகவே தன்னந்தனியாக செல்கிறான் ரத்தன் சிங். ‘என்னைப் பற்றி எழுதாத வரலாற்றின் பக்கங்களுக்குத் தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று அவற்றை ஏளனமாக தீயில் எரிக்கிறான் அலாவுதீன். ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று இம்சை அரசன் சொன்னது வெறும் கேலியல்ல, வேத வாக்கியம்.

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு சஞ்சய் லீலா பன்சாலி இசையமைத்திருக்கிறார். அத்தனையுமே அருமையான பாடல்கள், அலாவுதீனை ஆற்றுப்படுத்துவதற்காக மாலிக்காபூர் பாடும் "Binte Dil" என்கிற பாடல் அற்புதமான உதாரணம். அர்ஜித் சிங் இதை அருமையாகப் பாடியிருக்கிறார். சஞ்சித் பல்ஹாரா அபாரமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். 3D வடிவத்தில் இதன் காட்சிகளை பார்ப்பது அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

**

வரலாற்றுப் புனைவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் இத்திரைப்படத்தில் சில வரலாற்றுப் பிழைகளும் திரிபுகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ரத்தன் சிங் கொல்லப்படுவது அலாவுதீனால் அல்ல, வேறொரு சண்டையில்தான் என்கிறார்கள். இதைப் போலவே சித்தூர் கோட்டையைக் கைப்பற்றுவதுதான் அலாவுதீனின் நோக்கமே ஒழிய, பத்மாவதி அல்ல என்கிறது ஒரு தரப்பு. பத்மாவதியே ஒரு கற்பனையான பாத்திரம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

‘கூட்டுத் தீக்குளிப்பு’ என்கிற பிற்போக்கான கருத்தாக்கத்தை மீண்டும் இத்திரைப்படம் கவனப்படுத்தியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் வரலாற்றுப் புனைவுகளை அந்தந்த காலக்கட்டத்தின் பின்புலத்தில் வைத்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அடிப்படையானது.

இத்தனை காரணங்களையும் மீறி கதையாடலாகப் பார்க்கும்போது, ‘பத்மாவத்’ ஓர் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com