என்ன சொல்கிறார் மிஸ்டர் சந்திரமௌலி?

மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன சொல்கிறார் மிஸ்டர் சந்திரமௌலி?

ராகவ் (கௌதம் கார்த்திக்) அவருடைய காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. தொடக்க காட்சியிலேயே அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்து கண் முழிக்கிறார். 

அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு என படம் பயணிக்க தொடங்குகிறது. 

அழகர் (மகேந்திரன்) என்ற கால் டாக்ஸி நிறுவனர் தொடர்ந்து 7-ஆவது முறையாக ஒரு விருதை பெறுகிறார். அப்போது, மற்றொரு கால் டாக்ஸி நிறுவனரான இளம் விநாயக் கனகசபை (சந்தோஷ் பிரதாப்) அழகரிடம் "சார், இந்த விருதை அடுத்த ஆண்டு நான் உங்கள் கையால் வாங்க வேண்டும்" என்று கூறுகிறார். 

இதை கேட்ட அழகர் தனது கோபத்தை தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் மைம் கோபியிடம் வெளிப்படுத்துகிறார். 

இதற்கு பின், சந்திரமௌலி (கார்த்திக்), ராகவ் (கௌதம் கார்த்திக்), பத்மினி (சதீஷ்), மது (ரெஜினா காஸண்ட்ரா) என வரிசையாக கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன.

முதலில் கார்த்திக் பத்மினி காரில் அறிமுகமாகிறார். அந்த காட்சியில் அந்த கார் பழமை வாய்ந்தது, அதே சமயம் தொல்லை வாய்ந்தது என்பதை பதிவு செய்கிறது. அதன் தொடர்ச்சியாக சந்திரமௌலி மகனான ராகவ் கதாபாத்திரம் குத்துச்சண்டை வீரராக அறிமுகமாகிறது. முந்தைய டிராக்கில் பயணத்தை தொடங்கிய விநாயக் கனகசபை, குத்துச்சண்டை வீரரான ராகவின் ஸ்பான்சராக கதையின் இந்த டிராக்கில் இணைகிறார்.  

அந்த பழைய காருக்கான மெக்கானிக்காக சதீஷ் கதையில் அறிமுகமாகிறார். ராகவின் தந்தை சந்திரமௌலியுடனான சிறிய மோதலில் கதாநாயகி மது அறிமுகமாகிறார். இந்த மோதல் மூலம் மதுவை சந்திக்கும் ராகவ் முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். 30 நாட்களாக ராகவ் மது பின்னால் செல்ல, மதுவும் ராகவ் மீது காதலில் விழுகிறார். 

ராகவ், சந்திரமௌலி, மது, மெக்கானிக் பத்மினி, பத்மினி கார் என ராகவின் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. 

இதற்கிடையில், விநாயக் கனகசபையின் கால் டாக்ஸிக்களில் தொடர் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அதற்கு காரணம் அழகருடன் இருக்கும் மைம் கோபி கதாபாத்திரம். 
இந்த தொடர் குற்றங்களால் பெங்களூருவில் ராகவ் பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டியில் ராகவுக்கு விநாயக்கால் ஸ்பான்சர் செய்ய முடியாமல் போகிறது. 

அதன் பிறகு சந்திரமௌலி உதவியுடன் ராகவ் அழகரிடம் ஸ்பான்சர் பெற்று, பெங்களூரு போட்டியில் வெற்றியும் பெறுகிறார். ராகவ் பெங்களூருக்கு சென்ற இந்த இடைவெளியில் சந்திரமௌலி வாழ்க்கையில் ஏதோ நிகழ அதன் பிறகு சந்திரமௌலி டென்ஷனாக தென்படுகிறார். 

ராகவ், இதை கண்டு சந்தேகம் அடைய, இரவு நேரத்தில் சந்திரமௌலியிடம் பேசுகிறார். மனதில் இருப்பதை மகனுடன் பகிர நினைக்கும் சந்திரமௌலி நள்ளிரவு நேரத்தில் டிரைவ் போலாம் என்று கூற, இருவரும் பழைய பத்மினி காரில் டிரைவ் போகின்றனர். 

சந்திரமௌலி, மனதில் இருப்பதை பகிர நினைக்கும் தருணத்தில், பத்மினி கார் லாரி விபத்தில் சிக்குகிறது. இந்த விபத்தில், மகன் ராகவ் மயக்கம் அடைகிறார். தந்தை சந்திரமௌலி பலத்த காயங்களுடன் ராகவை அழைத்து அவரை நெருங்குகிறார். அப்போது, மைம் கோபி சந்திரமௌலியை அடித்து கொலை செய்கிறார். 

இடைவேளைக்குப் பிறகு படம் ராகவ் மருத்துவமனையில் இருக்கும் தொடக்க காட்சிக்கு வருகிறது. அப்போது மருத்துவர்கள் விபத்தில் சிக்கிய ராகவுக்கு 2 அடி தூரம் மட்டுமே கண் பார்வை இருக்கும் என்ற அதிர்ச்சியை அளிக்கின்றனர். 

அதன்பிறகு, 2-ஆவது அதிர்ச்சியாக விபத்தில் தனது தந்தை இறந்ததை அறிகிறார் ராகவ். 

மகிழ்ச்சியுடன் பயணித்து வந்த ராகவ் வாழ்க்கை முற்றிலுமாக மாறி உடைந்துபோனது. அதன் பிறகு, மதுவின் ஆறுதல் உதவியுடன் வாழ்க்கையில் இருந்து எழ முயற்சிக்கிறார் ராகவ். அப்போது தான் பைரவி என்று ஒரு கதாபாத்திரத்தின் இறப்பு சான்றிதழ் சந்திரமௌலி பெயருக்கு வீட்டுக்கு வருகிறது. கதையில் இந்த கதாபாத்திரம் அப்போது தான் செவி வழியாக அறிமுகமாகிறது. 

இந்த முடிச்சை வைத்து ராகவ், சந்திரமௌலியின் நெருங்கிய நண்பராக அவ்வப்போது வந்துபோன இயக்குநர் அகத்தியன் கதாபாத்திரத்தை சந்திக்கிறார். அந்த கதாபாத்திரம் மூலம் தான் தந்தை விபத்தில் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று தெரிகிறது. அதே சமயம் பைரவி என்ற புதிய கதாபாத்திரமும் அப்போது தான் காட்சி வடிவத்தில் கதையில் அறிமுகமாகிறது. 

இதையடுத்து, தந்தை கொலை செய்யப்பட்டது ஏன்? கொலை செய்தது யார்? என்பதை விறுவிறுப்பாக கண்டுபிடித்து பழி வாங்குகிறார் ராகவ். இது தான் சந்திரமௌலி.

இந்த கதையில், மொத்த கதாபாத்திரங்களையும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனாலேயே, கதையில் வில்லன் யார் என்பதை ரசிகர்கள் எளிதில் கணிக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. இல்லையெனிலும், வில்லன் யார் என்பது வெளிவரும் தருணம்கூட ரசிகர்களிடம் பெரிய அளவில் வித்தியாசத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 

இந்த கதையில், எந்த கதாபாத்திரமும் ஆழமாக விளக்கப்படவில்லை. அதனாலேயே பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டன. 

பைரவி என்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின் அறிமுகமாகிறது. அதுவும் மிகவும் சிறிய காட்சிகளில் மட்டுமே வருகிறது. அந்த கதாபாத்திரமும் ஆழமாக விளக்கவில்லை. அதனால், அந்த கதாபாத்திரம் கதையுடன் பயணிக்கிறது என்ற உணர்வு ரசிகர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியுடன் நிற்கிறது. 

ஆனால், அந்த கதாபாத்திரம் தான் கதையுடைய திருப்பத்துக்கு இருதயமாக இருப்பதால் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் தான் கதையின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. 

2 கால் டாக்ஸி நிறுவனங்களின் போட்டியில், குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கு ஒரு நிறுவனம் செய்யும் குற்றச் செயல் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்க்கும் கார்பிரேட் நிறுவனம் போட்டிக்காக செய்யும் குற்றச் செயல் போல் மிகைப்படுத்தி காண்பித்திருப்பதும் கதையில் அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.    

தொடக்கத்தில் முக்கியமான கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும் அழகர் கதாபாத்திரம், கடைசி கட்டத்தில் முற்றிலும் வேறுபட்ட அழுத்தத்துடன் கதையில் தென்படுகிறது. 

சிறிய ரக கேமிராக்கள் அறிமுகமாகி அவுட்ஃபார்ம் ஆன பிறகு கதையின் வில்லனை கண்டுபிடிப்பதற்கு அந்த சிறிய ரக கேமிராக்களை பயன்படுத்துவது என்பது ரசிகர்களிடம் பெரிய அளவில் கைதட்டல்களை பெறவில்லை. 

அதேசமயம், கண்ணாடி மூலம் தனது 2 அடி தூர கண் பார்வையை பல அடி தூர கண் பார்வையாக ராகவ் நீட்டித்துக் கொள்வது வரவேற்பை பெறுகிறது. 

2-ஆவது பாதியில் வரும் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சற்று விறுவிறுப்பை அதிகரிக்கிறது. 

இரண்டு பாடல்களில் சாம்.சி.எஸ் வெற்றி கண்டுள்ளார். அதேசமயம் பின்னனி இசையில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷுக்கு, இந்த படம் வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மொத்தத்தில், மிஸ்டர் சந்திரமௌலி தமிழ் சினிமாவில் காலதாமதமாக, முதிர்ச்சியற்றவராக தென்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com