விஜய்யின்-  சர்கார் திரை விமர்சனம்

முருகதாஸின் பாணியில் வந்திருக்கும் இன்னொரு விஜய் திரைப்படம் இது.
விஜய்யின்-  சர்கார் திரை விமர்சனம்

முருகதாஸின் பாணியில் வந்திருக்கும் இன்னொரு விஜய் திரைப்படம் இது. ஆனால் நடிகரின் படமாகவும் இல்லாமல் இயக்குநரின் படைப்பாகவும் அல்லாமல் இரண்டிற்கும் இடையில் தத்தளிப்பதினாலேயே சோர்வூட்டுகிறது. தேர்தலில் வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர வைக்கும் முயலும் வெகுசன திரைப்படம். தேர்தல் கமிஷன் இதற்காக படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி கூறலாம்.

இந்த திரைப்படம் உரையாடும் சில ஆதாரமான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் நம்பகத்தன்மையற்ற திருப்பங்கள், கோர்வையற்ற திரைக்கதை, இடையூறு ஏற்படுத்தும் வணிக அம்சங்கள் போன்றவற்றால் இந்த திரைப்படம் ஒரு சலிப்பான அனுபவமாக மாறியிருக்கிறது. 

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO-வாக இருப்பவர் விஜய். (சுந்தர் ராமசாமி). தமிழ்நாட்டில் நிகழும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார். ஆனால் அவரது வாக்கை எவரோ கள்ள ஓட்டு போட்டிருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாமல் போகிறது.

இதனால் வெகுண்டு எழும் அவர் சட்ட உதவியை நாடுகிறார். குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தாமதம் ஆவதால் ஆளுங்கட்சி எரிச்சல் அடைகிறது. இதனால் விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் இடையே  மோதல் உருவாகிறது. தன்னுடைய ‘கார்ப்பரேட்’ மூளையைக் கொண்டு ஒட்டு மொத்த தேர்தலையே  மீண்டும் நடத்துவதற்கான சூழலை விஜய் உருவாக்குகிறார்.

இதனால் இருதரப்பிற்குமான மோதல் கடுமையாகிறது. இதில் விஜய் எப்படி மீண்டு வருகிறார், நல்லாட்சிக்கான அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறார் என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன. 

இந்த திரைப்படம் உரையாடும் முக்கியமான இரு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, கள்ள ஓட்டு மற்றும் வாக்கின் சதவீதம் குறைவாக இருப்பது போன்றவை ஒரு தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வாக்கின் சதவீதம் பெருகுவதுதான் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வழியாக இருக்கும்.

கள்ள ஓட்டின் மூலம் தம்முடைய ஓட்டை பறிகொடுத்த ஒருவர், தேர்தல் ஆணைய விதிகளின் மூலம் தம் உரிமையைக் கோர முடியும். இதனால் வெற்றி, தோல்வியின் தன்மையே மாற முடியும்.

இரண்டு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு பெரும்பான்மையான கட்சிகளே மாறி மாறி ஆள்கின்றன. ஒரு மாநிலம் முழுவதற்குமான பரவலான கட்டமைப்பும், செல்வாக்கும் அவற்றிற்குத்தான் இருப்பதாக பொதுசமூகம் நம்புகிறது. இதனாலேயே இதர அரசியல் கட்சிகளையோ அல்லது நம்பகத்தன்மையுள்ள, சமூக நோக்கமுள்ள தனிநபர் சுயேட்சைகளையோ அது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ‘எப்படி இருந்தாலும் மெஜாரிட்டியா ரெண்டு பேர்ல ஒருத்தர்தானே வரப்போறாங்க!’ என்பதை நடைமுறை உண்மையாக கருதிக் கொள்வதாலேயே அரசியலில் மாற்றத்தை நிகழ்த்த விரும்புபவர்களுக்கான வாய்ப்பு அடைபடுகிறது. 

ஆனால் – ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் பின்னணியல்லாத, சார்பில்லாத தகுதியுள்ள தனிநபர்களை தேர்வு செய்வதின் மூலம் ஒரு நல்லாட்சியை உருவாக்க முடியும் என்கிற நேர்மறையான விஷயத்தை சுட்டிக் காட்டுவதை இந்த திரைப்படத்தின் ஆதாரமான அம்சம் என்று எடுத்துக் கொள்ளலாம். 


விஜய்யின் வழக்கமான வணிக அம்சங்கள் சற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருவேளை ஏமாற்றமடையக்கூடும் என்றாலும் ஒருவகையில் இது நல்ல மாற்றம். ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO, பாதுகாவலர்களை அனுப்பி விட்டு இறங்கி அதிரடியாக சண்டை போடுவதெல்லாம் வழக்கமான சினிமாத்தனம். 

சர்வதேச நிறுவனங்களை வளைத்துப் போடும், லாபவெறியுள்ள, முதலாளித்துவ நோக்குள்ள ஓர் ஆசாமி, சமூக மாற்றத்தை நிகழ்த்துபவராக உருமாற்றம் அடைவதில் அழுத்தம் ஏதுமில்லை. கீர்த்தி சுரேஷ் ஓரமாக வந்து போகிறார். இவர் எதனால் விஜய்யுடன் பெரும்பான்மையான காட்சிகளில் ஒட்டிக் கொண்டு வருகிறார் என்பதற்கான தர்க்கம் எதுவுமில்லை. 

பழ. கருப்பைய்யா, ராதாரவி ஆகிய இருவரும் நடைமுறை அரசியல்வாதிகளின் குணாதிசயத்தை சிறப்பாக பிரதிபலிக்கின்றனர். அதிக பில்டப் தரப்பட்ட வரலட்சுமி சரத்குமாரின் பாத்திரம் சாதாரணமாக முடிந்து போகிறது. இலவச மிக்ஸியை தெருவில் தூக்கிப் போடுகிற பொது ஜனமாக ஒரு காட்சியில் வந்து போகிறார் இயக்குநர் முருகதாஸ். 

இந்த திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் பங்களிப்பு இருப்பதை சில காட்சிகளில் வெளிப்படும் அழுத்தமான வசனங்களின் மூலம் உணர முடிகிறது. “எங்க தலைவனின் முகத்தை திரும்பத் திரும்ப காட்டி அதை ஒரு வலுவான பிராண்டா மாத்திட்டோம். ஈஸியா அதை அழிச்சிட முடியாது” என்று ராதாரவி சொல்லும் இடம் மற்றும் “மக்களின் பிரச்சினைகளை அப்படியே இருக்க வைத்து வறுமையில் நீடிக்க விட்டால்தான் தேர்தலின் போது அவர்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்க முடியும்” என்று பழ.கருப்பைய்யா சொல்லும் இடம் போன்றவை முக்கியமான வசனங்கள். ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை விளக்கும் இடமும் நன்று. ‘எதிர்ப்பில்லாத ஜனநாயகம் ஆபத்தானது’ என்பதும் வலியுறுத்தப்படுகிறது. 

ஏ,ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ‘ஒருவிரல் புரட்சி’ பாடல் மட்டும் சூழலுடன் பொருந்திப் போகிறது. பரபரப்பான பின்னணி இசையின் இடையே வரும் வீணையின் நாதம் போன்றவை ரஹ்மானின் தனித்துவத்தைக் காட்டுகின்றன. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அவசியமான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ராம் மற்றும் லஷ்மணின் சண்டை வடிவமைப்பில் அமைந்த காட்சிகள் மிரட்டலாக அமைந்திருக்கின்றன. 

ஒரு சமூகப் பிரச்சினையை பிரம்மாண்டமான காட்சிகளின் பின்னணியில் உரையாடுபவர் என்கிற வகையில் ஏ.ஆர். முருகதாஸை, ஷங்கரின் நகல் எனலாம். ஆனால் முருகதாஸ் ஏன் இன்னமும் நகலாகவே இருக்கிறார் என்பதற்கான உதாரணம், சர்கார். பதவிப்பிரமாண நிகழ்ச்சியை கடைசி நிமிடத்தில் நிறுத்துவது, மறு தேர்தலை மிக எளிதாக நிகழ்த்துவது, ஒரு மாநிலத்தின் தேர்தல் நிலவரத்தை சில மணி நேரங்களில் மாற்றுவது போன்றவை நம்பகத்தன்மையற்றும் கோர்வையில்லாமலும் இருக்கின்றன. 

இந்த திரைப்படம் முன்வைக்கும் ஆதாரமான அம்சத்திற்காக, இதர வணிக விஷயங்களையும், சலிப்பூட்டும் காட்சிகளையும் பொறுத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com