அறிவியல் உடுப்பணிந்த படத்துக்கு இது அழகல்ல: 2.0 பட விமரிசனம்

தொழில்நுட்பத்தை ஆபத்தாக முன்வைக்கும் இந்தப் படத்தின் முக்கிய பலமும் தொழில் நுட்பம்தான்...
அறிவியல் உடுப்பணிந்த படத்துக்கு இது அழகல்ல: 2.0 பட விமரிசனம்

ஷங்கர் திரைப்படங்களில் நீங்கள் நுணுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. அவருடைய படங்கள் ஒரு விளம்பரப்பலகையில் பதிந்துவிடும் அளவிலான இயல்பான, நேரடியான அறிவுரைகளைக் கொண்டவை என்பதை அறிந்துகொள்ள ஷங்கருடனான இந்த முப்பதாண்டுக் கால பரிச்சயமே போதுமானது (அதற்காக அவர் படங்களினால் திரையரங்குகளில் கிடைக்கும் மகத்தான அனுபவத்தை மறுக்கமுடியாது). 2.0 படத்திலும் பக்‌ஷிராஜன் (அக்ஷய் குமார்) ‘பறவைகளைக் காப்பீர்' என்றொரு பலகையைத்தான்  தூக்கிகொண்டு அலைகிறார்.

‘பறவைகளின் அழிவிற்கு செல்போன் டவர்களே பொறுப்பு’ எனச் செய்தித்தாள்களில் வெளியான கட்டுரைகளைத் தழுவி எடுக்கப்பட்டதென்று படத்தின் ஆரம்பத்தில் பொறுப்புத்துறக்கிறார்கள். இம்முடிவு விவாதத்திற்கு உரியது என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு சிறு ஆராய்ச்சியே போதும். மேலும், இம்முடிவே உறுதியானது என்றே வைத்துக்கொண்டாலும், பறவை இனங்கள்  சுருங்கிக்கொண்டே வருவதற்கு - படிப்படியாகக் குறையும் பசுமை, கூடும் வெப்பநிலை,  சூழலுக்கு அந்நியமான நவீனமயமான கட்டடங்கள்... என இன்னும் சில காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பொதுவாக - லஞ்சம், ஊழல், அலட்சியம் போன்ற வெளிப்படையான கேடுகளைக் கையில் எடுத்துக்கொள்வதில் இயக்குநர் ஷங்கர் பெயரெடுத்தவர். இம்முறை ஆவலைத் தூண்டும் வகையில் அவ்வளவாக  வெளிப்படை இல்லாத ஒரு கேடு - செல்போன் தொழில்நுட்பம்.  பிறகென்ன? ஒரு பாதிக்கப்பட்டவர்,  அவர் ஆவேசமாவதற்கு முன் அவருக்கு ஒரு கதை, அனைத்து கோணல்களையும் நேராக்குவதற்காக அவர் அனைவரையும் வெட்டிச் சாய்ப்பது... என எழுதிக்கொண்டே போகவேண்டியதுதான். இந்தியன், அந்நியன் என்று நாம் பார்த்த கதையைத்தான் மீண்டும் 2.0-விலும் காண்கிறோம். இப்படத்தை நாம் ‘அந்நியன்-சிட்டியின்  'கொல்' லுன்னு ஒரு சந்திப்பு’ என்று கூட  வைத்துக்கொள்ளலாம். முனைப்பும் கடுஞ்சினமும்  கொண்ட ஒரு  பாதிக்கப்பட்டவனின் செயல்களை இவ்வாறு ஒருவரியில் சுருக்கலாம்: 
 சேனாதிபதி: லஞ்சம் தருவதும் பெறுவதும் குற்றம்.
அந்நியன்: அலட்சியவாசிகளை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன்.
பக்‌ஷிராஜன்: பறவைகளைக் காப்பாற்றுங்கள் அல்லது என் கையால் செத்தொழியுங்கள்.

2.0 படத்துக்கு பக்‌ஷிராஜனின் பக்கம் சாய வேண்டுமா வேண்டாமா என்பதில் கூடத் தெளிவில்லை என்றே தோன்றுகிறது. உங்கள் பச்சாதாபத்தைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட பாத்திரமாக முதலில் அவரைச் சித்தரிக்கிறார்கள். பிறகு வீழ்த்தி விடவேண்டிய, வெறுப்புணர்வுள்ள ஒரு கொடூரனாக்கி, பிறகு மேலும் குழப்பமூட்டும் வகையில் அவர் 'ஒரு கும்பலையே வெட்டிச் சாய்ப்பேன்' என்று அச்சுறுத்தும் வேளையில், அவர் செய்வதையெல்லாம் நம்மைக்  கொண்டாடச் சொல்லும் வகையில் ஒரு பின்னணி இசையையும் வழங்குகிறார்கள். அடுத்து உடனே அவருடைய எதிரிக்கு ஆர்ப்பரிக்க நம்மை ஆர்வமூட்டுகிறார்கள். 

பறவைகளின் நிலை... அவற்றுக்காக ஏங்கும் ஒரு மனிதன்... இவர்களைப் பற்றிய ஒரு படம் இது. இப்படத்தில் தூக்கி நிறுத்தப்படும் உயர்வான கதாபாத்திரம், வெறும் ஆணவத்திற்காகவேனும் பறவைகளுக்குக் கடும் தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டுகிறது. இந்நிலையில் நாம் யாருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பது? அப்பாவி மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று சாய்ப்பது தவறென்று போதிக்கும் அதே படம், கைப்பேசி உபயோகிக்கும் ஒருவர் கூட அப்பாவி அல்லர் என்கிறது. நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதான்.

அதுசரி, இம்மாதிரியான படங்களில் நுணுங்கங்களை எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்தான். சிவாஜி ஸ்லோமோஷனில் நாணயத்தைச் சுண்டி 'பூப்பாதையா சிங்கப் பாதையா' என்று முடிவெடுப்பதாகட்டும்... சனா கடந்து போகும்போது, சிட்டியின் தலைமுடி காற்றில்  அசைவதாகட்டும்... படத்தில் ஷங்கர் ஆங்காங்கே வைக்கும் பாடல்கள் ஆகட்டும்...  இம்மாதிரியான பளபளப்பான பொழுதுபோக்கு அம்சங்கள்தான் நம் மனதில் நின்று வசீகரிப்பவை. ஆனால் 2.0 படம், முதல் பாகத்தின் நீங்காத நினைவுகளிலேயே பயணிப்பதாகப் படுகிறது. இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், இந்தப் படத்துக்கென்று சில தனிச் சிறப்பம்சங்கள் இருந்திருக்கலாம். பாவம் நாம், இதிலும் ‘ஒன்னு நீ, இன்னொன்னு நான்’க்கும், சிட்டி 2.0  வசீகரனைப் பார்த்துச்  செய்யும் ‘மே மே’வுக்குமே ஆர்ப்பரிக்க வேண்டியதாக இருக்கிறது.

கடும் பிரயத்தனம் செய்து பாடல்களைக் காட்சிப்படுத்தும் இயக்குநரிடம் இருந்து பாடல் காட்சிகள் இல்லாத ஒரு படம் வியப்புதான். ஆனாலும் இப்படத்தில் பாடல்களுக்கான தேவை இல்லை. 'ராஜாளி' புகழ்பெற்ற பாடல் என்பதால் அதன் படமாக்கம் பார்க்க ஆவலை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், பொருந்தாத இடத்தில் பின்பாடலாக ஒலிக்கிறது.

தொழில்நுட்பத்தை ஆபத்தாக முன்வைக்கும் இந்தப் படத்தின் முக்கிய பலமும் தொழில் நுட்பம்தான். 3டி-க்குள் நம்மை மூழ்கடிக்கிறது. ஆனால், ஷங்கர் சற்று அதிப்படியாகச் செய்து விட்டாரோ என்று அவ்வப்போது தோன்றுகிறது. தொடர்ச்சியாக நம்மை நோக்கிப் பாயும் தோட்டாக்கள், ‘இதென்ன மை  டியர் சிட்டிச்சாத்தான்’ படமோ என்று நினைக்க வைக்கின்றன. கைப்பேசிகள் எல்லாம் வானில் ஒன்றாகத் திரண்டு பறவைகள் செய்வதைப் போன்று ஒரு வடிவமாகப் பறக்கும் அழகியலை ரசித்தேன். தன்னைப் போன்ற பல பிரதிகளை சிட்டி 2.0 உருவாக்கும் காட்சி ஒரு டிஜிட்டல் பிரமிப்பு.

ஆனால் மேலோட்டமான எழுத்தை,  காட்சியமைப்புகளால் சரிசெய்ய மெனக்கெட்டிருக்கிறார்கள். குறிப்பாக வசனங்கள் அதன் இலக்கைச் சென்றடையாமல் உள்ளன. மறுபிறப்பு எடுத்த சிட்டி, இந்த செத்து பொழைக்கறதே தனி சுகம் எனும்போதும், இந்த நெம்பர் 1, நெம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு.... எப்பவும் நான்தான் ஒன்லி ஒன்... எனும்போதும் நீங்கள் உற்சாகமடைகிறீர்கள். ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சர், அன்நோன் நம்பர் என்கிற குறிப்பை உன்னிகிருஷ்ணன் என்று வாசிப்பதும் வட்டவடிவில் வரிசையாகத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ரஜினி, ஐ வில் செட் யுவர் ஸ்கிரீன்ஸ் ஆன் ஃபையர் எனும்போதும் கடுப்பாகிறீர்கள். இதைவிடவும் சிறப்பான வசனங்கள் 2.0-க்கு அமைந்திருக்கவேண்டும். ஜீரோ பேலன்ஸ், நாட் ரீச்சபிள் போன்ற செல்போன் தொடர்புடைய சொல் விளையாட்டுகள் தீவிரமான காட்சிகளில் அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கின்றன. மைக்ரோ ஃபோட்டான், மின்காந்தக் கதிர்வீச்சு, க்ரிப்டோக்ரோம் ப்ரோடீன் என்றெல்லாம் அறிவியலின் நுட்பமான சொற்களை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டியவர்கள், அறிவியலற்ற செய்திகளையும் உண்மை போல் சொல்வது, 2.0 மாதிரியான அறிவியல் உடுப்பணிந்த படத்துக்கு அழகல்ல. அதிலும் இந்த மீம்ஸ் காலத்தில் பகட்டான தகவற்பிழைகளைச் சொல்வதில் மிகுந்த கவனம் தேவை.

ஷங்கரின் முந்தைய படங்கள் சிலவற்றை 2.0 நமக்கு நினைவுபடுத்துகிறது. எந்திரனில் சனாவை சிட்டி விரும்புவதைக் கண்டு வசீகரன் பொறாமைப்படுவதைப் போல இதில் வசீகரனின் ரோபோ காரியதரிசியாக நிலா (எமி ஜாக்சன்) இருப்பதைக் கண்டு சனா பொறாமைப்படுகிறார். எந்திரனின் கொசு தொடர்பான காட்சிகளை வைத்து , இதிலும் ஒரு எதிர்பாராத கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அது சரியாக அமையவில்லை.  ஐ படத்தைப் போலவே இதிலும் வில்லன்கள் கேலிச்சித்திரங்கள்தாம். ஊழல் அரசியல்வாதி, செல்போன் கடை உரிமையாளர், தொலைத்தொடர்புச் சேவை நிறுவனத் தலைவர் போன்ற படத்தின் நிஜ வில்லன்களை முக்கியப்படுத்தாமல், அவர்களை  நாம் முற்றிலும் சீந்தாத வகையில்தான் அவர்களுக்கான வசனங்களையும் அமைத்துள்ளார்கள். ஒருகட்டத்தில் பக்‌ஷிராஜனின் முக்கியத்துவமும் படத்தில் குறைக்கப்பட்டுவிடுகிறது. ரசிகர்களை பக்‌ஷிராஜனைப் போல் செஃல்பி விடியோ எடுக்கச் சொல்லி விளம்பரம் செய்கிற படத்தில், செல்போன்களின் ஆபத்து பற்றி கருத்து சொல்வதையும் கூட நம்மால் பெரிதாக மதிக்க முடியவில்லை. ‘ட்வீட்’ என்பது ஒரு காலத்தில் பறவைகளுக்கானதாக இருந்தது என்பதே ஏறத்தாழ மறந்து விடப்பட்ட இந்தச் சமயத்தில், முகத்தில் அறைந்தாற் போல் கருத்து சொல்லக் கிடைத்த வாய்ப்பு இது. ஆனால்  2.0 படத்தால் அதைச் சரியாகச் சொல்ல இயலவில்லை. 

சந்தேகத்துக்கிடமில்லாமல் 2.0, தொழில்நுட்பத்தின் சாதனை. எந்திரனுக்குப் பிறகான கடந்த பத்தாண்டு வளர்ச்சி பூரிப்படைய வைக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வித்தையைத் தாங்கி நிற்க, அரைத்த மாவையே அரைக்காமல், சற்று அதிகமாக நம்மைக் கவரும் அம்சங்களோடு படம் இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் எழுகிறது. ‘கனவு காண்பதில் இருக்கும் மகிழ்ச்சி, அவை நனவாகும் போது குறைந்துவிடும்’ என்று ரஜினி சமீபத்தில் ஒரு பேட்டியில்  சொன்னார். அதே போல், ஷங்கர் படத்துக்காகக் காத்திருப்பது, படத்தை விடவும் அதிகக் கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது என்றே சொல்லலாம்.

தமிழில்: ப்ரியா கதிரவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com