கவனம் கொண்ட கலைஞர்கள்...!

சமீபத்தில் வெளியான படங்களில் பளிச் ஆச்சர்யம் கொடுத்த சில நட்சத்திரங்களின் மினி பயோடேட்டா இங்கே...
கவனம் கொண்ட கலைஞர்கள்...!

சமீபத்தில் வெளியான படங்களில் பளிச் ஆச்சர்யம் கொடுத்த சில நட்சத்திரங்களின் மினி பயோடேட்டா இங்கே...
ரம்யா பாண்டியன்
"ஜோக்கர்' படத்தில் மக்கள் ஜனாதிபதிக்கு காதலியாக, மனைவியாக மல்லிகா கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து அசத்திய ரம்யா பாண்டியன், சென்னைப் பெண். ரம்யா சொல்கிறார்:
 "பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நடிகர் அருண் பாண்டியன் என் சித்தப்பா. ஆனால், எனக்கும் சினிமாவுக்கும் துளியும் தொடர்பு கிடையாது. பயோ மெட்ரிக் இன்ஜினியரிங் படித்து விட்டு, பிஸினஸ் மேனேஜ்மெண்ட் வேலைகளில் பிஸியாக இருந்தேன். அப்போதுதான் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "மானே தேனே பொன்மானே', "வளையோசை', "அரைகுறைகள்', "இலை' என நான்கு குறும்படங்களில் நடித்தேன். அதுதான் சினிமா நோக்கி என்னை இழுத்து வந்தது. நான் நடித்த என் முதல் படம் இன்னும் வெளியாகவில்லை. அப்போதுதான் பாலாஜி சக்திவேல் சார் எடுக்க இருந்த புதுப் படத்தின் ஆடிஷனுக்குப் போனேன். அங்கிருந்த ஒரு உதவி இயக்குநர்தான் "ஜோக்கர்' படத்துக்காக பரிந்துரை செய்தார். அதன் பின்புதான் இயக்குநர் ராஜூ முருகனை சந்தித்தேன். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. அடுத்து தாமிரா இயக்கும் படத்துக்காக பேசியிருக்கிறார்கள்.  நல்ல படங்களுக்காக தொடர்ந்து காத்திருப்பேன்.'' 
சிவசங்கரன்
"கிடாரி' படத்தில் அரசியல்வாதியாக வில்லத்தனம் செய்யும் சிவசங்கரன் தயாரிப்பு, விநியோகம் என சினிமாவிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனிதர்...  "சொந்த ஊர் தஞ்சை. "தவசி', "ஏப்ரல் மாதத்தில்',"செல்லமே' உள்பட பல படங்களை தயாரித்த ஜி.ஜெ.சினிமா நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் என் அண்ணன். இந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஜெயபிரகாஷ் எனது நீண்ட நாள் நண்பர். இவர்களோடு நானும் தயாரிப்பு, விநியோகம் என பிஸியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் எங்களின் படத் தயாரிப்புகள் நிறுத்தப்பட, வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தேன். அப்போது என்னை நடிக்க வைப்பதாக ஜெயபிரகாஷ் கூறி வந்தார். ஏதோ விளையாட்டுக்காகத்தான் சொல்கிறார் என நினைத்தேன். அப்போதுதான் சசியின் "கிடாரி' வாய்ப்பு வந்தது. சசியும், ஒளிப்பதிவாளர் கதிரும் உறுதுணையாக இருந்தார்கள். நடிப்பு பற்றி எதுவும் தெரியாத நான் இயக்குநர் பிரசாந்த் முருகேசன் சொல்லிக்கொடுத்தது போல் நடித்தேன். ஏராளமான பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் எந்த வேடத்திலும் நடிக்கத் தயார்.'' 
ரகு  
"தர்மதுரை' படத்தில் வரும் கடைசித் தம்பி. "மன்னிச்சுடுங்கப்பா...'' என விஜய்சேதுபதி நிற்கும் நேரத்தில் இரும்புக் கம்பியை எடுத்து தாக்கும் சகாதேவன்...
 "அப்பாவுக்கு தென்காசி. ஆனால், நான் பிறந்து வளர்ந்தது சென்னை. படித்தது கோவை. பி. இ. புரொடக்ஷன்ஸ் இன்ஜினியரிங் படித்து விட்டு, ஜப்பானில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அதன் பின் அந்த வேலையை துறந்து விட்டு, சென்னைக்கே வந்து விட்டேன். பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் சேர்ந்து நடிப்புக்காக பயிற்சி பெற்றேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். "பூஜை'படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் "சகலகலா வல்லவன்', "சண்ட மாருதம்' என தொடர்ச்சியாக படங்கள். சின்ன சின்ன வேடங்கள். இப்போது "தர்மதுரை' படம்தான் நல்ல அடையாளம் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. கதாநாயகன், சின்ன சின்ன வேடங்கள், வில்லன் என எதையும் பிரித்து பார்ப்பதில்லை. நான் நடிகன். தெரு நாடகமாக இருந்தாலும் நடிப்பேன். நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான். அடுத்து சீனு ராமசாமி சார் வாய்ப்பு தருவதாக சொல்லியிருக்கிறார். காத்திருக்கிறேன்!''
நிவேதா பெத்துராஜ்
"ஒரு நாள் கூத்து' படத்தில் "அட்டக்கத்தி' தினேஷுக்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். காதல், பிரிவு, வலி என ஒவ்வொரு ஃப்ரேமிலும் நேர்த்திக் கூட்டியவர்...
 "நான் அக்மார்க் மதுரைக்கார தமிழ்ப் பெண். பிறந்தது மதுரை. வளர்ந்ததும் படித்ததும் துபாய். இருப்பினும் தமிழ் கலாசாரத்தை எங்கும்  விட்டுக் கொடுக்க மாட்டேன். மாடலிங் எனக்கு பிடித்தமான ஒன்று. அப்போது மிஸ் இந்தியா துபாய் பட்டம் வென்றேன். அந்த புகைப்படங்களை பார்த்த, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் "ஒரு நாள் கூத்து' படத்துக்காக அழைத்திருந்தார். சினிமா பிடிக்கும் என்றாலும், நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருந்ததில்லை. இப்போது நடிகையாகி விட்டதில் மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள் நல்ல ஊக்கத்தை கொடுத்துள்ளது. நல்ல வேடங்களின் மூலம் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். துபாய் வாசியான நான் சினிமாவுக்காக சென்னை வாசியாக மாறி விட்டேன். அதிக படம் என்பது என் குறிக்கோள். அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் தொடங்கி, இப்போது வந்து ஆச்சரியப்படுத்தும் ஹீரோக்கள் வரை எல்லோருடனும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com