இறுதிகட்டப் பணிகளில் "2.0'
By DIN | Published on : 01st November 2017 11:50 AM | அ+அ அ- |

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் "2.0'. எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டு வந்த இக்காட்சிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. தற்போது இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இத்தகவலை எமிஜாக்சன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட "2.0' உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகும் படமென்பதால், கிராஃபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தமிழகத்தில் நேரடியாக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது.