தனுஷின் ‘தொடரி': சினிமா விமரிசனம்

தேசிய விருது, ஹாலிவுட் நடிப்பு என்று தனது கிராஃபில் மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிற தனுஷுக்கு இத்திரைப்படம் பெரிய பின்னடைவு.
தனுஷின் ‘தொடரி': சினிமா விமரிசனம்

தூய தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்கிற ஏற்பாடு, நடைமுறையில் பல அவல நகைச்சுவைகளை உருவாக்கி கொண்டிருந்தாலும், புதைந்து போன சிலபல நல்ல தமிழ்ச் சொற்கள் பொதுவெளியில் மேலெழுந்து வருவது நல்ல விஷயமே. Train எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு உள்ள நல்ல தமிழ் அகராதிச் சொற்களில் ஒன்று 'தொடரி'. இத்திரைப்படத்தின் மூலம் அது தமிழ் மக்களின் வாயிலிருந்து உதிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்கிற வகையில் இதன் தலைப்பு பாராட்டுக்குரியது.

ஆனால் உடம்பெங்கிலும் வியாதிகளுடன் இருக்கக்கூடிய ஆசாமிக்கு 'ஆரோக்கியசாமி' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போன்று தலைப்பில் மாத்திரம் தூய தமிழ்ச் சொல்லைக் கொண்டிருக்கும் பல திரைப்படங்கள், உள்ளடக்கத்தில் எந்தவொரு தமிழ்க் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்காத அவலமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வரிவிலக்குக்காக நடத்தப்படுகிற நாடகம், அதன் நோக்கத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. 'தொடரி'யும் அவ்வகையிலான ஒரு நாடகமே.

Speed, Unstoppable போன்ற ஆங்கில திரில்லர் வகைமைத் திரைப்படங்களைத் தமிழிலும் உருவாக்கவேண்டும் என்கிற இயக்குநரின் நோக்கமும் ஆர்வமும் நியாயமானதே. ஆனால் பீட்ஸாவில் முருங்கைக்காய் சாம்பாரை ஊற்றி, அதன் மேல் கோங்குரா சட்னியையும் அப்பி வைத்திருக்கிற அந்த விநோதமான கலவைதான் குமட்டவைக்கிறது. 

இதுபோன்ற சாகசத் திரைப்படங்களை இயக்குநர் Spoof செய்ய முயன்றிருக்கிறாரா அல்லது இதன் திரைக்கதை தன்னிச்சையாகவே அவ்வாறாக மாறிவிட்டதா என்பதை இதில் நடித்திருக்கும் பட்டிமன்ற ராஜாவின் தலைமையில் ஒரு விவாதமே நடத்தலாம். 

***

தொடரி திரைப்படம் எதைப்பற்றியது?

தமிழ்த் திரைப்பட நாயகர்களின் ஆதாரமான தகுதிகளில் ஒன்றின்படி இதன் நாயகனான 'பூச்சியப்பன்' ஓர் அநாதை. (தமிழ் ஹீரோவுக்கு இதுவரை இப்படியொரு சாதாரண பெயர் வைக்கப்பட்டதில்லை என்கிற வகையில் இயக்குநருக்குப் பாராட்டு.) தன் மனத்துக்கு உகந்த ஒரு பெண்ணைச் சந்தித்து குடும்பத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவனுடைய வாழ்க்கை லட்சியம். 

தொடர்வண்டியின் உணவகத்தில் (Pantry) வேலையாளாகப் பணிபுரியும் அவன், டெல்லியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஒரு பயணத்தில் தன் கனவு தேவதையைச் சந்திக்கிறான். ரயிலில் பயணிக்கும் ஒரு நடிகைக்கு உதவியாளாக இருக்கிறாள். அவளை எப்படியாவது கவர்ந்துவிடவேண்டும் என்கிற நோக்கோடு, தம்பி ராமையா உள்ளிட்ட சிலரின் கூட்டணியோடு அவன் செய்யும் கோணங்கித்தனமான காட்சிகளுடன் படத்தின் முற்பாதி நகர்கிறது. 

படத்தின் இடைவேளையில்தான் இதன் சிக்கலும் சாகசமும் தொடங்குகின்றன. மனித தவறின் காரணங்களால் 140 கிலோமீட்டர் வேகத்தில் நிற்க வைக்க முடியாத நுட்பக் காரணங்களுடன் ரயில் பறக்கிறது. அதைத் தடுப்பதற்கான சிலபல முயற்சிகள் தோற்றுப் போகின்றன.

ரயிலின் உள்ளேயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் கதி என்ன? பூச்சியப்பனின் காதல் நிறைவேறியதா? இந்த சாகசத்தில் அவனுடைய பங்கு என்ன என்பதைத் திகில் கலந்த நகைச்சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். ஆனால் இது திகிலாகவும் இல்லாமல் அனுபவிக்க முடியாத நகைச்சுவையாகவும் இல்லாமல் நிறுத்த  முடியாத ரயிலைப் போலவே இதன் திரைக்கதையும் திக்கும்திசையும் தெரியாமல் ஓடி, நம் மேலேயே மோதியிருப்பதுதான் பரிதாபம். 


***

நகைச்சுவைகளில் sick joke என்கிற வகைமை உண்டு. அசந்தர்ப்பமான நேரத்தில் விவஸ்தையின்றி வெளிப்படுத்தப்படும் குரூரமான நகைச்சுவை. சமகால நிகழ்விலிருந்து உதாரணமாக ஒன்றை முயன்று பார்க்கலாம். 'சிறையில் ராம்குமார் மின்சார வயரைக் கடித்து இறந்து போனார்' என்கிற செய்தியின் எதிர்வினையாக 'ஜெயில்ல இப்பதான் சிக்கன்லாம் போடறாங்களாமே, அப்புறம் ஏன் வயரைப் போய் கடிக்கணும்' என்று ஒருவர் சொல்வாராயின் அது தோராயமாக 'சிக் ஜோக்' எனும் எரிச்சலூட்டும் நகைச்சுவையின் கெளரவத்தைப் பெறுகிறது. தமிழில் அவ்வாறான வகைமைத் திரைப்படத்தைத் தொடங்கி வைத்தவர் என்கிற பெருமை பிரபு சாலமனைச் சேரும். 

இயற்கை உபாதைக்காக நீங்கள் கழிவறையை நோக்கி ஏறத்தாழ ஓடிக்கொண்டிருக்கும்போது, உங்கள் நண்பர் ஒருவர் வழிமறித்து கிச்சுகிச்சு மூட்டினால் என்ன செய்வீர்கள்? இதன் பிற்பாதி திரைக்கதை அப்படித்தான் இருக்கிறது. முற்பாதி வேறுவகையான கொடுமை.

தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் ரயில் ஒருபுறம். நூற்றுக்கணக்கானவர்களின் உயிர் ஆபத்து ஒருபுறம். இந்தப் பதற்றமான சூழலை இயக்குநர் சித்தரித்துவிட்டு ரணகளத்தின் நடுவே கிளுகிளுப்பாக நகைச்சுவைக் காட்சிகளை, அதிலும் அபத்தமான நகைச்சுவையைத் திணித்திருப்பதை மன்னிக்கவே முடியவில்லை. ரயிலின் ஒரு பெட்டி எரிந்து கொண்டிருக்க, நாயகன் அதன் பின்னணியில் 'போன உசிரு திரும்புச்சு' என்று பாட்டுப் பாடுவது கொடுமையின் உச்சம். உண்மையில் நம் உயிர்தான் போகிறது. 

இயக்குநரின் இதற்கு முந்தைய திரைப்படம் 'கயல்'. ஆழிப்பேரலையில் இறந்துபோகும் பல பிணங்களுக்கு நடுவே காதலர்கள் உணர்ச்சிகரமாக இணையும் காட்சியைப் பல நிமிடங்களுக்கு எவ்வித நுண்ணுணர்வுமின்றிச் சித்தரிப்பார் பிரபு சாலமன். இதிலும் அப்படியே. 

***

பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகியை லூசுத்தனமாகச் சித்தரிக்கும் வழக்கம் எப்படியோ வந்துவிட்டது. ஆண்மைய சிந்தனையுடன் தமிழ் சினிமா இயங்குவதே இதற்குக் காரணம். 

இந்தத் திரைப்படத்தில் நாயகியைத் தாண்டியும் பல கதாபாத்திரங்கள் ஏன் என்றே தெரியாமல் அவ்வாறான பிறழ்வுடன் அலைகிறார்கள். ரயிலில் பயணிக்கும் ஒரு நடிகையைக் கவர்வதற்காக தனுஷைத் தூது அனுப்பும் தம்பி ராமையா. இவரை அனைவரும் மரியாதையின்றிக் கலாய்க்கிறார்கள். ஆனால் இவருக்கு அது புரிவதில்லையாம். 'மைண்ட் வாய்ஸில்' இவர் செய்யும் தொடர் காமெடியை நிறுத்துவதற்கு எவராவது பொதுநல வழக்கு போடலாம்.

மந்திரியின் பாதுகாப்புக்காக வரும் ஒரு கமாண்டோ அதிகாரிக்கு என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. படம் முழுவதும் மூல வியாதியால் அவதிப்படுபவர் போலவே நிலைகொள்ளாமல் தவிக்கிறார். போன் மூலம் மனைவி தரும் டார்ச்சரைச் சகித்துக்கொள்ள முடியாமல் கோபப்படும் ஒரு ரயில்வே பணியாளரும் அதே வகை. (இது போன்றதொரு பாத்திரம் 'மைனா' விலும் வருகிறது). 

இது தவிர, ஹீரோ எந்தப் பெண்ணைப் பார்த்தாவது 'பிடித்திருக்கிறது' என்று சொல்லிவிட்டால் அந்தப் பெண்ணுக்கு உடனே வேறு இடத்தில் திருமணமாகி விடுமாம். சகிக்க முடியாத குரலுடன் இருக்கிற நாயகிக்குப் பெரிய பாடகியாக வேண்டும் என்று ஆசையாம். தனுஷ் 'வைரமுத்து' குரலில் இவரை ஏமாற்றுவது கூட இவருக்குத் தெரியவில்லையாம். (இடையில் வைரமுத்துவையும் பயங்கரமாகக் கலாய்க்கிறார்கள்) கீர்த்தி சுரேஷ் பாடத் தொடங்கியுடன் ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்து விடுமாம். இந்த ரெண்டு பேருக்கும் இப்படியொரு வியாதி. 

இதைக்கூட ஒருமாதிரியாகச் சகித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் பயங்கர பில்டப் தரப்பட்ட கிளைமாக்ஸிலும் இந்த நகைச்சுவையை இணைத்திருப்பது கொடுமையின் ருத்ர தாண்டவம்.

***

மலையாளத் திரைப்படங்களில் 'தமிழர்களை' இழிவாகச் சித்தரிப்பது குறித்து தமிழ்ப் பார்வையாளர்களின் தரப்பிலிருந்து நீண்டகாலமாகப் புகார் இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்திலும் அதுபோன்ற தவறுகள் நிகழ்கின்றன. இன வெறுப்பு, கிண்டல், வன்மம் சார்ந்த உரையாடல்கள் ஆங்காங்கே நிறைய வருகின்றன. போதாக்குறைக்கு மலையாள வசனங்களும் நிறைய. (நான் பார்த்த திரையரங்கில் சப்-டைட்டில் இருந்ததால் தப்பித்தேன்). 

தங்களின் வணிகப் போட்டிக்காக செய்திகளைச் செயற்கையாகப் பரபரப்பாக்குவது குறித்து தொலைக்காட்சி ஊடகங்களை சரமாரியாகக் கிண்டலடிக்கும் காட்சிகள் வருகின்றன. போலவே அரசியல் பிரச்னைகளை அலசும் 'விவாதங்கள்' குறித்தும். இவையெல்லாம் சற்று ரசிக்கும்படியாகவே இருந்தாலும், இயக்குநரும் தம் திரைப்படத்தில் அதே அபத்தங்களைச் செய்துள்ளார் என்பதுதான் முரண்.

‘இத்தனை பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்க அது பத்திய கவலையே இல்லாம நியூஸை சென்சேஷனல் ஆக்கறதிலேயே குறியா இருக்கீங்களே. மனச்சாட்சி இல்லையா?’ என்று ஊடகக்காரர்களை நோக்கி ஒரு காவல்துறை அதிகாரி கேட்கிறார். நியாயம்தான். ஆனால் இயக்குநர் தன்னை நோக்கியும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. விபத்துக்குள்ளாகப் போகிற ஒரு ரயிலின் இடையே மோசமான நகைச்சுவைக் காட்சிகளை இணைத்த குற்றத்துக்காக. ரயிலில் பயணிப்பவர்களே, இணையத்தின் மூலம் தாம் பயணிக்கும் ரயில் ஆபத்திலிருந்து மீட்கப்படும் காட்சிகளை எவ்வித பதற்றமும் இன்றி 20-20 கிரிக்கெட் மாட்ச் மாதிரி ரசிப்பது அபத்தத்தின் உச்சம்.

***

பெரும்பாலான தமிழ்ப் படங்களுக்கான பொதுவான விதிதான் என்றாலும், இத்திரைப்படத்தைப் பொறுத்தவரை மூளையை முழுதாக கழற்றி வைத்தால்தான் சிறிதாவது ரசிக்க முடியும். லாஜிக் என்பது படத்தில் துளியும் இருக்கக்கூடாது என்பதில் முரட்டுப்பிடிவாதமாக இருந்திருக்கிறார்கள். இதில் 'India's First Train Movie' என்கிற பெருமை வேறு. 

படத்தின் சில ஆறுதல்களில் ஒன்று ராதாரவியின் நடிப்பு. வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற மத்திய மந்திரி. தன்னை எவரும் கவனிக்கவில்லை என்கிற சுயபச்சாதாபம். இந்த உணர்வுகளின் மூலம் இந்தப் பாத்திரத்தைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். 'பிரிட்ஜ் இடிந்து விழுந்துடுமா சார்?’ என்று பி.ஏ. கேட்பதற்கு 'அது வெள்ளைக்காரன் காலத்துல கட்டினது. நம்ம கட்டியிருந்தா விழுந்திடும்" என்று நக்கலாகப் பதில் சொல்லும் காட்சியில் திரையரங்கமே அதிர்கிறது. ராதாவின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார்.

தேசிய விருது, ஹாலிவுட் நடிப்பு என்று தனது கிராஃபில் மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிற தனுஷுக்கு இத்திரைப்படம் பெரிய பின்னடைவு. இதன் திரைக்கதையிலுள்ள நம்பகத்தன்மை ஓட்டைகளை அவர் கவனிக்கவேயில்லையா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 

***
படம் முழுவதும் ஓடும் ரயிலில் நிகழ்வதாக, இயக்குநர் தேர்வு செய்திருக்கும் திரைக்கதையின் சவால், நிச்சயம் பாராட்டத்தக்கது. ஆனால் இதை நகைச்சுவைப்படமாகவும் அல்லாமல் சாகசப்படமாகவும் அல்லாமல் குழப்பியிருப்பது பெரிய பலவீனம். ஒளிப்பதிவாளரும் நுட்பக்கலைஞர்களும் என நிறைய உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் நம்பகத்தன்மையில்லாத திரைக்கதையினால் எதையும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. டி.இமான், 'கும்கி'யின் ஹாங்ஓவரிலிருந்து நிச்சயம் வெளியே வரவேண்டும். 

ராஜீவ்மேனன் இயக்கிய 'கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஹாலிவுட் பாணியில் ஒரு சாகசத் திரைப்படத்தை தமிழில் இயக்கும் தீராத தாகத்துடன் இளம் இயக்குநராக அஜித் நடித்திருப்பார். இதேபோன்று, நிற்காமல் வேகமாகச் செல்லும் ஒரு ரயிலை நாயகன் எவ்வாறு கையாள்கிறார் என்றொரு திரைக்கதையை தயார் செய்திருப்பார். அதை ஒரு வெகுஜன ஹீரோவிடம் விவரிக்கும்போது அருகிலிருக்கும் காமெடி நடிகர் (செந்தில்), ‘அதுல எனக்கொன்னும் பாத்திரம் இல்லையா? கொட்டாங்குச்சில தாளம் போட்டு பாட்டுப்பாடற மாதிரி’ என்பார். தமிழ் சினிமாவை உருப்படவே வைக்கமுடியாது என்பதற்கான நிரூபணங்களும் இளம் இயக்குநர்கள் எப்படியெல்லாம் பல சமரசங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதும் அத்திரைப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும். 

பிரபு சாலமன் அவற்றையெல்லாம் 'தொடரி'யின் மூலம் உண்மையாக்கி விட்டாரோ என்று தோன்றுகிறது. 

***

வெற்றிமாறன்களும், மணிகண்டன்களும் தமிழ் சினிமாவை மெல்ல மெல்ல ஓர் அடி முன்னே நகர்த்திக் கொண்டிருக்கும்போது பிரபு சாலமன்கள் நூறு அடிக்குப் பின்னால் இழுத்துச் செல்கிறார்கள்.

ஹாலிவுட் திரைப்படங்களை இங்குப் பார்க்கமுடியாத காலகட்டத்தில் வேண்டுமானால், இதுபோன்ற முதிராத முயற்சிகளை தமிழ்ப் பார்வையாளர்கள் வியந்து பார்க்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் ஆங்கிலப்படங்கள், அதன் தமிழ் டப்பிங் ஆகியவை உலகமெங்கும் ஒரே நாளில் வெளியாகும் இந்தக் காலக்கட்டத்தில் இதுபோன்ற விபரீத முயற்சிகளை எடுப்பதற்கு முரட்டுத்தனமான துணிச்சல் தேவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com