தேசிய விருது: சுவாரசியமான அம்சங்கள்!

கதாநாயகர்களுக்கு இணையாகப் பாடகர்கள் இங்குக் கொண்டாடப்பட்டாலும் ஆண் பாடகருக்கான முதல் தேசிய விருது, 1994ல்தான் கிடைத்தது.
தேசிய விருது: சுவாரசியமான அம்சங்கள்!

கதாநாயகர்களுக்கு இணையாகப் பாடகர்கள் இங்குக் கொண்டாடப்பட்டாலும் ஆண் பாடகருக்கான முதல் தேசிய விருது, 1994ல்தான் கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுபோல தேசிய விருதுத் தேர்வுகளில் பல சுவாரசிய அம்சங்கள் ஒளிந்துகொண்டுள்ளன.  

64-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்துள்ளது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்துள்ளது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று பேரும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

தமிழ்க் கலைஞர் இந்த வருடம் பெற்றுள்ள தேசிய விருதுகளை முன்வைத்து சில புள்ளிவிவரங்களும் சுவாரசியமான அம்சங்களும்:

**

கடந்த 7 வருடங்களில் 4 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைத் தமிழ்த் திரையுலகம் பெற்றுள்ளது.

தேசிய விருது: சிறந்த பாடலாசிரியர்

2011: வைரமுத்து
2013: நா. முத்துக்குமார்
2014: நா. முத்துக்குமார்
2017: வைரமுத்து

**

வைரமுத்து இதுவரை 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார்கள்.

வைரமுத்து: தேசிய விருதுகள் - 7

பாரதிராஜா - 2*
மணி ரத்னம் - 2
சீனு ராமசாமி - 2
சுரேஷ் கிருஷ்ணா - 1
கே. சுபாஷ் - 1*
(கருத்தம்மா, பவித்ரா படப் பாடல்களுக்கு 1995-ல் விருது வழங்கப்பட்டன)

**

தமிழ் ஒளிப்பதிவாளர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல மதிப்பு உண்டு. நமக்குத் தெரிந்த ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் பாலிவுட்டிலும் கவனம் பெற்றவர்கள். தமிழ்ப் படங்கள் 9 முறை சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. கே.வி.ஆனந்த்துக்கு அவர் முதல் படத்திலேயே (94-ல்) மலையாளப் படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.

80களில் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவில் ஒரு பெரிய மாற்றம் நடந்தது. ரசிகர்கள் பலவிதங்களில் ஆச்சர்யப்படுத்தப்பட்டார்கள். அது தேசிய விருதிலும் எதிரொலித்தது. அந்தப் பத்து வருடக் காலகட்டத்தில் மூன்று தமிழ்ப் படங்கள் சிறந்த ஒளிப்பதிவுக்காகத் தேசிய விருதுகளைப் பெற்றன.

தமிழ்த் திரையுலகம் பெற்ற ஒளிப்பதிவுக்கான தேசிய விருதுகள்.

கே.எஸ். பிரசாத் (தில்லானா மோகனாம்பாள்), சாந்தி நிலையம் (மார்கஸ் பர்ட்லி), லோக்நாத் (அபூர்வ ராகங்கள்), அசோக் குமார் (நெஞ்சத்தைக் கிள்ளாதே), பாலு மகேந்திரா (மூன்றாம் பிறை), பி.சி,ஶ்ரீராம் (நாயகன்), சந்தோஷ் சிவன் (இருவர்), மது அம்பாட் (சிருங்காரம்), திரு (24).

**

உன்னி கிருஷ்ணன், எஸ்பிபி, சங்கர் மகாதேவன், சுந்தரய்யர்.

இதென்ன வரிசை? இந்த நான்கு பேர் மட்டும்தான் சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள். இந்தப் பட்டியலில் டிஎம்எஸ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இடமில்லை.

கதாநாயகர்களுக்கு இணையாகப் பாடகர்கள் இங்குக் கொண்டாடப்பட்டாலும் முதல் தேசிய விருதைப் பெற்ற ஆண் தமிழ்ப் பாடகர், உன்னி கிருஷ்ணன். காதலனின் என்னவளே பாடல் 1994ல் வருகிறவரை 1967ல் இருந்து தொடங்குகிறது இந்த நீண்டத் தவிப்பு! பிறகு இரு வருடங்கள் கழித்து தங்கத்தாமரை பாடி எஸ்பிபியும், மூன்று வருடங்களில் என்னச் சொல்லப் போகிறாய் பாடி சங்கர் மகாதேவனும் தேசிய விருதைப் பெறுகிறார்கள். மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு ஆண் தமிழ்ப் பாடகருக்குத் தேசிய விருது. ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் பாடலுக்கு.

தமிழ்ப் பாடகிகளின் கதையே வேறு. தேசிய விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 1968-லிருந்து விருது ஆரம்பம். முதல் நான்கு விருதுகளில் மூன்று தமிழுக்கு. முதலிரண்டு தேசிய விருதுகளே தமிழுக்குதான் (சுசீலா, கே.பி.எஸ்). இப்படி மொத்தம் 13 முறை தமிழ்ப் பாடகிகளுக்குத் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இதுவரை இளையராஜா இசையமைப்பில் ஒரு ஆண் தமிழ்ப் பாடகரும் தேசிய விருது பெற்றதில்லை ( ஜானகி (இருமுறை), சித்ரா, பவதாரிணி, சாதனா சர்க்கம் ஆகியோர் ராஜா இசையில் பாடி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றவர்கள்.) ரஹ்மான் இசையமைப்பில் மூன்று பேர். தமிழுக்குக் கிடைத்த நான்கு சிறந்த பாடகர்களுக்கான விருதில் மூன்று வைரமுத்து எழுதியவை. ராஜீவ் மேனன் இயக்கிய இரு தமிழ்ப் படங்கள் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை இருமுறையும் சிறந்த பாடகிக்கான விருதை ஒருமுறையும் பெற்றுள்ளன. உன்னி கிருஷ்ணன் குடும்பத்தில் இருவர் திரையிசைத்துறையில் உள்ளார்கள். இருவருமே தேசிய விருது பெற்றுள்ளார்கள்.

**

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்துள்ளது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று பேரும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

1987-ல் நாயகனுக்காக தோட்டா தரணியும் 96-ல் இந்தியனுக்காக தோட்டா தரணியும் 2000-ம் ஆண்டு பாரதி படத்துக்காக கிருஷ்ணமூர்த்தியும் 2010-ல் எந்திரன் படத்துகாக சாபு சிரிலும் 2012-ல் விஸ்வரூபம் படத்துக்காக என்.இளையராஜா உள்ளிட்ட மூவரும், இந்த வருடம் 24 படத்துக்காக மூவரும் இவ்விருதைப் பெற்ற தமிழ்ப்படக் கலைஞர்கள். 


**

கடந்த மூன்று வருடமாக சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்த் திரையுலகம் இந்த வருடம் அதை இழந்துள்ளது.

தேசிய விருது: சிறந்த படத்தொகுப்பு

61-வது தேசிய விருது: சாபு ஜோசப் (வல்லினம்)
62-வது தேசிய விருது: விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
63-வது தேசிய விருது: கிஷோர் (விசாரணை)
64-வது தேசிய விருது: ராமேஷ்வர் பகத் (வெண்டிலேட்டர், மராத்தி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com