விஷாலின் நியாயமற்ற '3 நாள்' பேச்சு!

ஒரு நல்ல படத்தை எந்த விமரிசனத்தாலும் தடுத்துவிடமுடியாது. விமரிசகர்கள் கிழித்த பல படங்கள் தமிழில் நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளன.
விஷாலின் நியாயமற்ற '3 நாள்' பேச்சு!

எந்தக் காலத்தில் இருந்துகொண்டு இப்படிப் பேசுகிறார் என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை. ஒரு படம் வெளியான 3 நாள்களுக்குப் பிறகு விமரிசனம் செய்யுங்கள் என்று முத்தாய்ப்பாகச் சொல்லியிருக்கிறார் விஷால்!

புதுமுகம் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள நெருப்புடா படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ்,ராகவா லாரன்ஸ், தனுஷ், பிரபு, விஷால், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது: 

வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியாகிறது என்றால், அப்படத்துக்கு சில நாள்கள் கொடுங்கள். விமர்சனத்தில் இது மக்களின் கருத்து என்று போடாதீர்கள். தினசரிகளில் விமர்சனத்துக்கு கீழே ஸ்டார்கள் எல்லாம் போடுவார்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். 

சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளத்தில் படங்களைக் கிழித்தெறிகிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதை 3 நாள்கள் கழித்து செய்யுங்கள். முதல் நாளே ஒரு படத்தின் விமரிசனத்தை எழுதினால், அதை தமிழ்நாட்டு மக்களே ஆதரிப்பது போன்று உள்ளது. இந்த கோரிக்கையை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், நடிகர், மனிதர் என்ற அடிப்படையில் உங்கள் முன் வைக்கிறேன் என்றார். 

விஷாலின் இந்தக் கருத்துக்கு விமரிசகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துருவங்கள் 16, மாநகரம், 8 தோட்டாக்கள் போன்ற சமீபத்திய குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் முதல்நாள் விமரிசனங்களால்தான் அதிக கவனம் பெற்றுள்ளன. ஏன் சில படங்கள் அதன் வெளியீட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாகப் பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ ஷோ வழியாகக் காண்பிக்கப்படுகின்றன. இதன் ஒரே நோக்கம், படத்தைப் பற்றி பத்திரிகையாளர்கள் படம் வெளியாவதற்கு முன்பே எழுதி அதனை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதற்காகத்தான். 

இணையப் புரட்சிக்குப் பிறகு எல்லாப் பொருள்களைப் பற்றிய விமரிசனங்கள் உடனுக்குடன் வந்துவிடுகின்றன. இந்நிலையில் சினிமா விமரிசனங்களுக்கு மட்டும் இதுபோன்ற கட்டுப்பாடு விதிப்பது எந்தளவு சரியாக இருக்கமுடியும்? அவருடைய ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், அதற்கு இது தீர்வு இல்லையே! திரையுலகினரே ஒரு படத்தின் விமரிசனத்தை அப்படம் வெளிவந்த அதே நாளில் சமூகவலைத்தளங்களில் எழுதுகிறார்களே! பாராடுவதென்றால் படம் வெளியாவதற்கு முன்பே அதைச் செய்யலாம். திட்டுவதாக இருந்தால் 3 நாள்களுக்குப் பிறகு என்கிற கோரிக்கையில் ஏதாவது நியாயம் உண்டா?

ஒரு நல்ல படத்தை, ரசிகர்களை விரும்பும் படத்தை எந்த விமரிசனத்தாலும் தடுத்துவிடமுடியாது. விமரிசகர்கள் கிழித்த பல படங்கள் தமிழில் நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளன. அதேசமயம் குறைந்த பட்ஜெட்டில், புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்படுகிற நல்ல படங்கள் இதுபோன்ற முதல் நாள் விமரிசனங்களால்தான் பிழைக்கின்றன. எனவே விஷால் சினிமா விமரிசனங்கள் மீது அதிக கவனம் செலுத்தாமல் சினிமாவில் சரிசெய்யவேண்டிய இதர பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com