ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கா இப்படிச் சொன்னார்?

பிரஞ்சு தேசத்து புதிய அலை முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான துரூபாவின் இச்சொற்கள்
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கா இப்படிச் சொன்னார்?

‘The art of creating suspense is also the art of involving the audience, so that the viewer is actually a participant in the film. In this area of the spectacle, film - making is not a dully interplay between the director and his picture, but a three - way game in which the audience too, is required to play.’ - Francois Truffat (6 February 1932 – 21 October 1984)

பிரஞ்சு தேசத்து புதிய அலை முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான துரூபாவின் இச்சொற்கள் உலக திரை ரசிகர்களால் சஸ்பென்ஸ் திரைப்பட மன்னன் என்று அழைக்கப்படும் ஹிட்ச்காக்கை மனத்தில் வைத்து சொல்லப்பட்டதாகும். கொடார்ட் (Jean - Luc Godard) போன்ற தனது சக புதிய அலை இயக்குனர்கள் ஹிட்ச்காக்கின் மீது எதிர்ப்புணர்வையும், அவரது திரைப்படங்களை மட்டுப்படுத்தியும்  எழுதியிருந்த போதும் துரூபா ஹிட்ச்காக்கின் திரைப்படங்களினால் வெகுவாக கவரப்பட்டிருந்தார். அதோடு, ஹிட்ச்காக்குடன் அவரது திரைப்படங்களைப் பற்றி நேரடியாக உரையாடி எழுத்தில் அதனை பதிவும் செய்துள்ளார். 

இங்கிலாந்து நாட்டினரான ஆல்பிரட் ஹிட்ச்காக் தன் வாழ்நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சைக்கோ, தி பேர்ட்ஸ்,  தி ரோப் போன்ற அவரது திரைப்படங்களை அறியாத திரை ரசிகர்களே இருக்க முடியாது எனுமளவுக்கு ஹிட்ச்காக்கினது வீச்சு பரந்து விரிந்துள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராகூட ‘மூடுபனி’ எனும் அவருடைய திரைப்படத்தை சைக்கோ திரைப்படத்தின் பாதிப்பிலிருந்துதான் உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். குற்றமும், அதன் பிறகான குற்றம் இழைத்தவரின் மனப் பதற்றமும், குற்றத்தை மறைக்க அவர் கொள்ளும் பிரயத்தனமும்தான் அவரது மைய திரைக்களன்களாக இருந்துள்ளன. ஹிட்ச்காக்கே குறிப்பிட்டுள்ளதைப் போல பார்வையாளர்களின் நம்பிக்கையின் மீதான விளையாட்டாகவே அவர் தமது திரைப்படங்களை அணுகி உருவாக்கியிருக்கிறார். 

பார்வையாளர்களின் முழு கவனத்தை கோரும்விதமாக தனது பெரும்பாலான திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் தலைகாட்டுவது அவரது வழக்கமாகவே இருந்தது. சாலையை கடப்பவராக, ரயிலில் கிட்டாரை ஏற்றுபவராக, விருந்து அரங்கமொன்றின் ஓரத்தில் அமர்ந்திருப்பவராக ஏதேனும் ஒரு முக்கியமில்லாத காட்சியில் ஹிட்ச்காக் தோன்றுவது வழக்கம். பார்வையாளர்களை உளவியல்ரீதியாக திரைப்படத்துடன் முழுமையாக ஒன்றச்செய்வதே அவரது பிரதான நோக்கமாக இருந்தது. 

சமீபத்தில், ஹிட்ச்காக் என்றொரு திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. சைக்கோ திரைப்படத்தின் உருவாக்க காலத்தில் ஹிட்ச்காக்கிற்கும் அவரது மனைவியான ஆல்மா ரெவிலிக்கும் இடையிலான உறவில் நிலைவிய முரண்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமது. பிரபல நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் ஹிட்ச்காக்காக அப்படத்தில் நடித்திருந்தார்.

உண்மையில், எனக்கு இப்படம் சுத்தமாக பிடிக்கவே இல்லை. காரணம், ஹிட்ச்காக்கினுடைய தோற்றம் மிக பிரபலமானது. அவரையும் அவரது திரைப்படங்களை வித்தியாசப்படுத்தி என்னால் ஒருபோதும் பார்க்க முடிந்ததில்லை. அவரது திரைப்படங்களை பார்க்கும்போது உண்டாகின்ற லேசான நடுக்கமே அவரது புகைப்படங்களை காணும்போது எனக்கு உண்டாகும். ஆனால், அந்தோனி ஹாப்கின்ஸ் மிகவும் பலவீனமாகவும், ஹிட்ச்காக்கை தமது நடிப்பின் மூலம் பிரதியெடுக்க முயல்பவராகவுமே எனக்கு தோன்றினார். அதனால், திரைப்படத்தின் நம்பகத்தன்மையே அடிப்பட்டுவிட்டதாக தோன்றியது. திரைப்படத்துடன் என்னால் ஒன்றவே முடியவில்லை. 

ஆனால், இத்திரைப்படத்தில் சைக்கோவின் திரையிடலின்போது ஹிட்ச்காக் திரையரங்கின் வாசலருகே நின்று, அப்படத்தின் மிகப் பிரபலமான கொலைக்காட்சியின்போது பார்வையாளர்கள் அலறுவதை அக்காட்சியின் பதைபதைப்புக்குள்ளாக்கும் இசைக்கு ஏற்றவாறு தமது கைகளை அசைத்து ரசித்துக் கொண்டிருப்பார். உண்மையாகவே, ஹிட்ச்காக் அவ்விதமாக செய்திருப்பார் என்பதில் துளி சந்தேகமும் எனக்கு இல்லை. பார்வையாளர்களின் மீதான அவரது அணுகுமுறை இவ்வகையில்தான் வெளிப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். 

தமது திரைப்பட வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஹிட்ச்காக் தமக்கான ஒரு முறைமையை கொண்டிருந்தார். Strangers on a Train, The lady Vanishes, Spellbound போன்ற திரைப்படங்களிலேயே அவருடைய மேதைமை வெளிப்பட்டிருப்பதை உணர முடியும். எனக்கு தனிப்பட்ட முறையில், The lady Vanishes மிகமிகப் பிடித்தமான திரைப்படம். 1938ல் வெளியான இத்திரைப்படம் அதன் அபாரமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் இறுதிக்காட்சி வரையிலும் நம்மை ஊகிக்க முடியாதபடி ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கும். பனியில் உறைந்திருக்கும் ரயில் நிலையம் ஒன்றை அறிமுகப்படுத்தியபடி துவங்கும் இத்திரைப்படத்தின் பெரும்பாலான நிகழ்வுகள் ஒரு ரயிலுனுள்ளாகவே அரங்கேறும். அதேப்போல அவருடைய Rear Window திரைப்படத்தின் சம்பவங்கள் ஒரே அறையில் தமது காலில் அடிப்பட்டு நகர முடியாமல் இருக்கும் ஒருவன், தனது பைனாகுலரின் மூலமாக ஜன்னல் வழியே பார்க்கும் காட்சிகளின் மூலமாக நகர்கின்றன. 

பார்வையாளர்களை அச்சமூட்டிய திரைக்கதையினை தேர்வு  கொள்வது மட்டுமல்லாது, அதனை சாத்தியப்படுத்தும் நுட்பங்களையும் ஹிட்ச்காக் முழுமையாக உணர்ந்திருந்தார். அவரே சொல்வதுப்போல, ‘கேமராவினூடாக கதாப்பாத்திரத்தின் பாவனைகளின் மீது அதிக அழுத்தத்தை எளிதாக கூட்ட முடியும். மிக அண்மை காட்சிகளின் மூலமாக, நிகழவிருக்கும் சம்பவமொன்றில் பங்குகொள்ளும் ஒற்றை மனிதர் அல்லது சிறு குழுவினரின் மேல் இத்தகைய அழுத்தத்தை நம்மால் புகுத்த முடியும். வெளியிலிருந்து வந்து கொண்டிருப்பவருக்காக, கதவு திறக்கப்படும் போது, நாம் வெயிலிருப்பவரை காண்பிக்காமல், உள்ளிருக்கும் மனிதரின் உணர்ச்சிகளை காட்சிப்படுத்துவதன் மூலமாக அல்லது ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கும் போது கேமரா அவரை கவனித்துக்கொண்டிருக்கும் மற்றொருவரின் உணர்வுகளை பதிவு செய்யும் போதும் நம்மால் ஒரு பதற்ற சூழலை உருவாக்கிட முடியும். மெளன யுக சினிமாவிலிருந்து நம் காலத்து வளர்ச்சியடைந்த சினிமாவை வேறுபடுத்தி காண்பிப்பது இத்தகைய தனித்துவமான வகைமைகள்தான்’  என்கிறார்.

ஹிட்ச்காக் திரைப்படங்களை இயக்கத் துவங்கும் முன்பாக ஸ்டுடியோவில் திரைப்படங்களுக்கான செட்டுகளை வரைந்துக் கொடுப்பவராக பணியாற்றியிருக்கிறார். நாம் பல பழைய திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். வெளிப்புற காட்சிகள் தனியே படம்பிடிக்கப்பட்டு ஸ்டூடியோவில் அதனை பெரிய திரையில் திரையிட்டு நடிகர்களை திரையின் முன்னால் நடிக்க செய்திருப்பார்கள். இத்தகைய வெளிப்புற காட்சிகளை படம் பிடித்துக் கொடுப்பவராகவும் ஹிட்ச்காக் பணியாற்றியிருக்கிறார். அத்தகைய பணியினில் ஈடுப்பட்டிருந்த காலத்தில் திரைக்கதை எழுத கற்றுக்கொண்டதோடு, உதவி இயக்ககுனராகவும் திரைப்படங்களில் வேலை செய்திருக்கிறார். அதனால், திரைக்கலையின் நுட்பங்களை துவக்கத்திலேயே நன்கு கற்றவர் என்பதோடு தமக்கான பிரத்தியேக திரைமொழியினையும் உருவாக்கிக் கொண்டுள்ளார்.

என்னளவில், ஹிட்ச்காக்கினுடைய காட்சிகளில் மிகவும் பிடித்தமானதென்று சிலவற்றை கூற முடியும். தி பேர்ட்ஸ் திரைப்படத்தில் பறவைகளின் பயங்கரமான தாக்குதல் நடந்து ஓய்ந்தபின், பள்ளியிலிருந்து சிறுமி ஒருத்தியை ஒரு பெண் அழைத்துக் கொண்டு வருவார். சற்று தள்ளி பறவைகள் குவியலாக அமர்ந்திருக்கும். எந்த நொடியும் பறவைகள் தாக்குதலை துவங்கலாம் எனும்படியான அக்காட்சியமைப்பு நமக்கு உண்டாகின்ற பதைபதைப்பு நம்மை அமைதியிழக்கச் செய்து அதீத அச்சத்தை உண்டாக்கிவிடும். கிட்டத்தட்ட இதே வகையில் Northby Nothwest-ல் பரந்த வறண்ட வெளியின் மையத்தில் நாயகன் நின்றிருக்கும்போது விமானம் ஒன்று அவனது தலைக்கு மேலாக பறந்து துரத்தும் காட்சியை சொல்லலாம். சைக்கோ திரைப்படத்தின் கொலைக்காட்சியும் இத்தகையதைப் போன்றதே. 

இக்காட்சிகள் திரைப்படத்தின் முடிவுக்கு சற்றே முன்னதாக பிரயோகிக்கப்பட்டிருக்கும். இக்காட்சிகளின்போது பார்வையாளர்களின் அமைதியிழப்புக்கு காரணம், அவர் முன்னதாகவே அக்காட்சிக்கான குறிப்புகளை கொடுத்திருப்பார் என்பதும் இக்காட்சிகளுக்கு முன்னதாக சில புதிர்களை திரைக்கதையில் அவர் போட்டிருப்பார் என்பதும்தான். பேர்ட்ஸ் திரைப்படத்தில், சிறுமி அழைத்துக்கொண்டு வரும் காட்சியில், பறவைகளை குவியலாக அமர்ந்திருக்கச் செய்வதால் பார்வையாளர்களை அக்காட்சியின் தீவிரம் எளிதாக பற்றிக் கொள்கிறது. அதோடு, பறவைகளின் உக்கிர தாக்குதலும் அப்போதுதான் ஓய்ந்திருக்கும் என்பதால், அக்காட்சியின் தீவிரம் விரைவாகவே பார்வையாளர்களை தொற்றிகிறது. 

‘எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள மேசையின் கீழ் ஒரு வெடிகுண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். குறிப்பாக ஒன்றும் நிகழவில்லை. திடீரென்று ஒரு வெடிச்சத்தம். பார்வையாளர்கள் திடுக்கிடுகிறார்கள். ஆனால் இந்த திடுக்கிடும் உணர்வுக்கு முன்பு அவர்கள் பார்த்தது முக்கியத்துவம் ஏதுமற்ற சாதாரண ஒரு காட்சியை. 

இப்போது சஸ்பென்ஸ் உணர்வு சூழ்நிலை ஒன்றை பார்ப்போம். வெடிகுண்டு ஒன்று  மேசையின் கீழ் உள்ளது என்பது பார்வையாளர்களுக்கு தெரியும். யாரோ ஒருவன் மேசையின் கீழ் வெடிகுண்டு பொருத்தியதை அவர்கள் பார்த்திருக்கக்கூடும். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அது வெடிக்கப் போகிறது என்பதும் அவர்களுக்கு தெரியும். இந்தச் சூழ்நிலையில் அதே சாதாரண உரையாடல், சாதாரண காட்சி மிகுந்த சுவாரஸ்யமானதாக மாறிவிடுகிறது. ஏனெனில் இந்த காட்சியில் பார்வையாளர்களும் பங்கு கொள்கிறார்கள். திரையில் உள்ள பாத்திரங்களை எச்சரிக்கத் துடிக்கிறார்கள். நீங்கள் ஏதோ சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மேசையின் கீழே ஒரு வெடிகுண்டு இருப்பது தெரியாதா என்றெல்லாம் கேட்கத் துடிக்கிறார்கள்’ என்று சஸ்பென்ஸ் பாணி திரைப்படங்களை ஹிட்ச்காக் விளக்குகிறார். 

‘தி ரோப்’ என்ற அவரது திரைப்படம் மிகச் சில நீண்ட காட்சிகளால் படம் பிடிக்கப்பட்டது. ரஷ்ய திரை மேதையான அலெக்ஸாந்தர் சுக்குரோவ் தனது ‘ரஷியன் ஆர்க்’  எனும் திரைப்படத்தை ஒரே நீண்ட நெடிய காட்சியாக பதிவு செய்து திரைப்பட வரலாற்றில் மிகப்பெரும் சாதனை புரிந்துவிட்டார் என்கின்ற போதும், ‘தி ரோப்’ வெளியான காலத்தில் பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக இடைவெட்டு இல்லாமல் நீளும் காட்சிகளை படம் பிடித்தது சாதாரண விஷயமல்ல. அதோடு, இப்படத்தை ஹிட்ச்காக், ஒரு நாடகம் துவங்கி முழுவதுமாக அரங்கேறி முடிவுறுவதைப் போல, இடைவெட்டில்லாமல்தான் உருவாக்க நினைத்திருந்தார். கிட்டத்தட்ட ரஷியன் ஆர்க்கில் சுக்குரோவ் சாதித்ததையே, ஹிட்ச்காக் அப்போது திட்டமிட்டிருந்தாலும், அக்காலத்திய தொழில்நுட்ப வளர்ச்சியினால், இதனை சாத்தியப்படுத்த முடியாமலாயிற்று.

‘சிறுவயதில் என்னை அச்சுறுத்த சில மணி நேரம் எனது தந்தை தனது போலீஸ் நண்பரிடம் சொல்லி, காவல் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டார். அந்த சில மணி நேரங்கள் எனக்குள் உண்டான பதைபதைப்புதான் என் ஒட்டுமொத்த திரைப்படங்களின் மூலம்’ என்று சொல்லும் ஹிட்ச்காக்கிடம் அவரது மீதான பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றான ‘உங்களுக்கு யதார்த்தத்தை பற்றிய பிரக்ஞையே இல்லையா..?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹிட்ச்காக் சொன்ன பதில், ‘இல்லை..  யதார்த்தத்தை நான் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால், ஒருவேளை என்னுடைய திரைப்படங்கள்  உருவாக்கப்படாமல் போயிருக்கலாம். யதார்த்தத்தின் மீதான எனது நேசிப்பை விடவும், திரைப்படங்களின் மீதான எனது நேசிப்பு ஆழமானது’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com